ஜோதிடக் கேள்வி – பதில்கள் – பகுதி 1

எனது ஜோதிடம் பற்றிய கட்டுரைக்கு கீழ்கண்ட கேள்விகளை ரஞ்சன் என்பவர் கேட்டிருந்தார். நானும் அவருக்கு அப்போது பதிலளித்திருந்தேன்.

ranjan
rranjan@….l.com
—-  வ/மா/தி at 8:17பிற்பகல்

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள், ஜோதிடம் என்பது உண்மைதான் என்றா? அப்படியானால் கீழ்கண்ட எனது கேள்விகளுக்கு பதில் கூற இயலுமா?

1. ஜோதிடம் உண்மை என்பதற்கு என்ன ஆதாரம்?

2. ஜோதிடம் பார்க்காவிட்டால் என்ன ஆகிவிடும்?

3. ஜோதிடம் பார்த்தும் பலருக்கு அதன்படி பலன்கள் நடக்கவில்லையே அது ஏன்?

4. ஒரே ஜாதகத்திற்கு ஒவ்வொரு ஜோதிடரும் ஒவ்வொரு விதமாகப் பலன் கூறுகிறார்களே அது எப்படி?

5. ராகு, கேது பாம்புகள், கிரஹணத்தின் போது சந்திரனை, சூரியனை விழுங்கும் என்பதெல்லாம் பொய் என்று விஞ்ஞானம் நிருப்பித்திருக்கிறதே அதற்கு என்ன சொல்கிறீர்கள்?

6. சூரியக் குடும்பத்தில் புதிதாக ஏதேனும் கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அப்போது ஜோதிடர்கள் என்ன செய்வீர்கள்?

7. அதது இயற்கையாக நடந்து கொண்டிருக்கும் போது, ஜாதகம் போன்றவற்றை நம்புவது பகுத்தறிவிற்கு முரணாக உள்ளதை அறிவீர்களா?

8. ஜாதகம் பார்த்து, பொருத்தம் பார்த்தும் விவாகரத்துகள் நடக்கின்றன, சிலர் இறந்து போகிறார்கள், மனைவியைக் கொலை செய்கிறார்கள். இதெல்லாம் எப்படி? எதிர்காலத்தில் நடக்கப் போவதைக் கூறுவதுதான் ஜோதிடம் என்றால் எப்படி உங்களால் இவற்றைக் கணிக்க முடியவில்லை.

9. பரிகாரம் என்ற பெயரிலும் யாகம் என்ற பெயரிலும் ஜோதிடர்களும் புரோகிதர்களும் கூட்டுக் கொள்ளை அடித்து வருகிறார்களே, இது நியாயமா?

10. விதிப்படி தான் அனைத்தும் நடக்கும் என்பது இந்து தர்ம சாஸ்திரம். அப்புறம் ஏன் ஜோதிடம்?

11. விஷ்ணு ஆலயங்களில் ஏன் நவக்கிரகங்கள் காணப்படுவதில்லை?

12.பட்சி சாஸ்திரம், சகுனம், ராகு காலம், எம கண்டம் இவையெல்லாம் பைத்தியக்காரத்தனமாக உங்களுக்குத் தோன்றவில்லையா?

13. செவ்வாய் தோஷம், மூலம் என்றெல்ல்லாம் பெண்களை ஜோதிடம் கொடுமைப்படுத்துகிறதே, இது நியாயம் தானா?

14. கிழக்கே சூலம், மேற்கே சூலம் என்றால் என்ன?

15. பிறக்கும் நேரத்தைத் தவறாகச் சொல்லி ஜாதகம் கணித்தால் என்ன ஆகும்? பிறந்த தேதியே தெரியாதவர்களுக்கு எப்படி ஜாதகம் கூறுவீர்கள்?

– இன்னும் நிறையக் கேள்விகள் உள்ளன. முதலில் இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் முழுமையாக/உண்மையாக பதிலளியுங்கள் பார்ப்போம்.

– ரஞ்சன்,

பிரிட்டானியா

அதற்கு எனது அன்றைய பதில்…

அன்பு நண்பரே

என்னை ஒரு ஜோதிடராக நினைத்து இத்தனை கேள்விகள் அடுக்கியுள்ளீர்கள் போலத் தெரிகிறது. முதற்கண் தெரிந்து கொள்ளுங்கள் நான் ஜோதிடன் அல்ல. உண்மைகளைத் தேடும் ஒரு ஆராய்ச்சியாளன், அவ்வளவே! அந்தத் தேடுதலில் ஜோதிடமும் ஒரு அங்கம். அவ்வளவுதான். நம்மைச் சுற்றி இருக்கும் எளிதாகப் புரியாத அல்லது புரிந்து கொள்ள முடியாத பல விஷயங்களை அவதானித்து நான் கட்டுரைகளாகத் தருகிறேன். அதை வைத்துக் கொண்டு என்னை ஜோதிடர் என்றோ அல்லது ஆவிகளுடன் பேசுபவன் என்றோ நினைத்தால் அது அறிவீனம். நான் ஒரு ஆய்வாளன் அவ்வளவே. ஆனாலும் நீங்கள் கேட்ட கேள்விகள் மிக சுவாரஸ்யமானவை. அவற்றிற்கு நேரம் கிடைக்கும் போது நிச்சயம் பதலிளிப்பேன். அதுவரை தயவு செய்து காத்திருங்கள்.

அன்புடன்

ரமணன்

விரைவில் மேற்கண்ட கேள்விகளுக்கான பதில்கள் வரும்.

விரைவில் என்று அன்று சொன்னேன். ஆனால் இவற்றிற்கு பதில்கள் கூற, தகவல்களைத் தேடி ஒப்பு நோக்க மிகவும் தாமதமாகி விட்டது. மேலும் ஒவ்வொரு கேள்வியுமே ஒரு கட்டுரையாக எழுதும் அளவிற்கு ஆழமானது. முக்கியத்துவம் மிக்கது. எனக்குத் தெரிந்த விடைகளை அளிக்க முயற்சிக்கிறேன். முதல் கேள்விக்கான பதில்…

கேள்வி – 1. ஜோதிடம் உண்மை என்பதற்கு என்ன ஆதாரம்?

ஜோதிடம் பொய் என்பதற்கு என்ன ஆதாரம்? விஞ்ஞானப்பூர்வமாக அதை நிரூபிக்க முடியாது அதனால் அதைப் பொய் என்றுதான் சொல்வேன் என்கிறீர்களா? சரி, விஞ்ஞானப்பூர்வமாக எல்லா விஷயங்களையும் விளக்கிவிட முடியும் என்று நம்புகிறீர்களா? அந்த அளவிற்கு இன்னும் விஞ்ஞானம் வளரவில்லை என்பதுதான் உண்மை.

’அறிவியல்’ என்பது நாம் அதுவரை அறிந்து வைத்திருக்கும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து பார்த்து உண்மை காண்பது. இதில் அவ்வாறு அறிந்து வைத்திருக்கும் தரவுகள் நிலையானவை அல்ல. அவை அடிக்கடி மாறக் கூடியவை. உதாரணமாக ஒரு காலத்தில் பூமியை தட்டை வடிவம் என்று சொன்னார்கள். பின்னர் விஞ்ஞானம் வளர அதை ’உருண்டை’ என்றார்கள். இப்போது மேலும் ஆராய்ந்து பூமிப்பந்து கோள வடிவில் (Ellipse) உள்ளது எனச் சொல்கிறார்கள். இப்படி மாறிக் கொண்டே இருப்பதுதான் அறிவியல்.

விளக்கமாகச் சொன்னால் ஒரு காலத்தில் மனித உள்ளுறுப்புக்களைக் கண்டறிய கருவிகளே இல்லை. அதற்காக உள்ளுறுப்புகளே மனிதனுக்கு இல்லை என்று கூறி விட்டார்களா நம் முன்னோர்கள்? பின்னர் எக்ஸ்-ரே வந்தது. ஊடுருவிப் பார்த்து விளக்கம் சொன்னது. அடுத்து அதில் மேலும் முன்னேற்றமாக பல ஸ்கேன் கருவிகள் வந்து தற்போது மூளை, இதயம் என எல்லாவற்றையும் பார்க்கும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது. அந்தக் காலத்தில் உள்ள மனிதர்கள் இக்கருவிகளைப் பற்றி அறிந்திருப்பார்களா…. நிச்சயம் இல்லை. இப்படி மனித உள்ளுறுப்புகளைப் பார்க்க முடியும் என்று சொன்னால் அவர்கள் ஒப்புக் கொண்டிருப்பார்களா? ’பைத்தியம், உளறுகிறது’ என்று திட்டியிருப்பார்கள். இப்படி படிப்படியாக வளர்ந்து கொண்டே இருப்பதுதான் விஞ்ஞானம்.

அறிவியல் இன்று ’உண்மை’ என்று ஒப்புக் கொள்வதே கூட நாளை ’பொய்’ ஆகலாம். கண்டுபிடிக்கப்படும், கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் மாறிக் கொண்டே இருப்பதுதான் விஞ்ஞானம். அதை அடிப்படையாக வைத்து ஜோதிடத்தை ஆராய்ச்சி செய்ய முடியாது.

ஜோதிடம் உண்மை என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், ஜோதிடம் உண்மையில்லை என்பதற்கும் என்ன ஆதாரம் என்ற கேள்விக்கும் நாம் பதில் சொல்ல வேண்டும். ”ஜோதிடப்படி பலருக்கு பலன்கள் நடப்பதில்லை; அதனால் அது பொய்” என்று சொன்னால், ”ஜோதிடப்படி பலருக்கு பலன்கள் நடந்துள்ளன. அதனால் அது உண்மை” என்றும் கூறலாமே! ஆகவே இதை பொதுவாக, எந்த வித முகாந்திரமும் இல்லாமல் அணுக முடியாது.

ஆனாலும் பல்கலைக்கழக அளவில் அதனை ஆய்வு செய்து “ஜோதிடம் விஞ்ஞானம் தான்” என உறுதி செய்துள்ளது மும்பை உயர்நீதி மன்றம் ஆதாரம் வேண்டுவோர் கீழ்க்கண்ட சுட்டியில் பார்க்கலாம்.

ஜோதிடம் ஒரு விஞ்ஞானமே!

வானியல் சாஸ்திரத்தையும், நுணுக்கமான கணித முறைகளையும் அடிப்படையாகக் கொண்டது ஜோதிடம். அதை விஞ்ஞானப்படி நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.

ஏன்…?

(தொடர்கிறேன்)

13 thoughts on “ஜோதிடக் கேள்வி – பதில்கள் – பகுதி 1

  1. மதிப்பிற்குரிய ரமணன் அவர்களுக்கு, அந்த முகவரி தவறாக இருந்தாலும் பரவில்லை ரஞ்சன் கேட்ட கேல்விகளுக்கு, பதில் எழுதி விடுங்கள், இதைப்போலவே சில மனிதர்கள் இத்தகைய கேள்விகளை கேட்டுக்குகொண்டு இருக்கிறார்கள் , அவர்களுக்கு இந்த பதில் போய் சேரட்டும், அனால் சற்று விரைவாக முடித்து விடுங்கள்,

    ”இறைவன் கட்டளை அது என் கடமை ” என நினைத்து செய்யுங்கள்.

    எனக்கு ஜோதிடத்தை பற்றி அறிவதில் ஆர்வம் இல்லை,,,,

  2. இவ்வளவு கேள்விகள் கேட்ட நண்பர் ரஞ்சன் அவர்கள் ஒருநாளாவது இந்த கேள்விகளுக்கு உண்மையாக பதில் தேடி இருந்தால் நிச்சயம் விரைவில் விடை கிடைத்திருக்கும் , இவர் ஜோதிடத்தை கண்மூடித்தனமாக வெறுக்கிறார், கண்ணை திறந்து பார்த்து, அதற்க்கான ஆய்வுகள் செய்து இருந்தால் அவரே ஒரு முடிவுக்கு வந்திருப்பார்,

    நல்ல கேள்விகள்தான், தொடரட்டும் இந்த விளையாட்டு…..!!

    1. என்னத்தச் சொல்ல… இந்த ரஞ்சன் கேள்வி கேடதோட சரி. அப்புறம் ஆளையே காணோம். ஒரு மெயில் அனுப்பிச்சேன். அதுவும் தவறான மெயில் ஐடின்னு திரும்பி வந்திருச்சி. யாரோ விளையாட்டுக் காட்டியிருப்பாங்கன்னுதான் நினைக்கத் தோணுது. ஒருவேளை நான் வருஷக் கணக்கு ஆயி பதில் சொல்றதுனால இந்தப் பக்கமே அவரு வாரதில்லயோ என்னமோ? ஒண்ணுமே பிரியலே போங்க.

  3. what we cannot understand we cannot say it does not exist.mahaperiyaval once said that we spend years to get a degree in a college but when it comes to our darma beliefs astrology etc we want immediate answers without spending time to study our ancient texts.astrology is like probability theory and statistics,they are also trends only.but we believe in statistics .go to an astrologer well versed in it preferably not a professional and he would certainly give you a correct prediction.and the world over every community believes in astrology numerology etc.the very fact the lines in the thumbs of every person varies from every other person.let us not dismiss everything as lies etc

  4. //அதை வைத்துக் கொண்டு என்னை ஜோதிடர் என்றோ அல்லது ஆவிகளுடன் பேசுபவன் என்றோ நினைத்தால் அது அறிவீனம். //

    அறிவீனத்திற்கு இதில் என்ன இருக்கிறது. அவர்கள் உங்கள் எழுத்தைப் படித்ததிலிருந்து புரிந்து கொண்டதை எழுதுகிறார் அவ்வளவே… நீங்கள் விளக்கினால் சரியாப்போச்சு…:))

    இந்த வார்த்தை இடுகைக்குள் பொருத்தமானதாக இல்லை

    1. நண்பரே. இருக்கலாம். ஆனால் நான் இதை நண்பர் ரஞ்சனுக்காக மட்டும் சொல்லவில்லை, ஆவிகளுடன் பேசுவது எப்படி, இறந்து போன என் தாத்தாவிடம் பேச முடியுமா, எனது ரூமில் ஒரு ஆவி சுற்றுகிறது நான் என்ன செய்வது என்றெல்லாம் தொடர்ந்து பல பின்னூட்டங்கள் எனக்கு வந்திருக்கின்றன. ”நான் இவற்றையெல்லாம் எழுதுவதால் நான் ஆவிகளுடன் பேசுபவன் என்று முடிவு கட்டி விடாதீர்கள், அப்படி நீங்கள் புரிந்து கொண்டால் அது அறிவீனம் – தவறான புரிதல்” என்றுதான் சொல்கிறேன். ஆவிகளைப் பற்றி எழுதுவதால் நான் ஆவிகளோடு பேசுபவன் ஆகி விடுவேனா என்ன? அல்லது சித்தர்களைப் பற்றி எழுதினால் எழுதுபவனும் ஒரு சித்தன் என்று ஒருவர் புரிந்து கொள்ளலாமா? (இப்படித்தான் பாவம், எழுத்தாளர் இந்திரா சௌந்திரராஜனைப் பலர் புரிந்து கொண்டிருக்கிறார்கள்)அது தவறான புரிதலா இல்லையா? அதைத் தான் நான் சொல்கிறேன்.

      என் தேடல் அனுபவங்களை நான் பகிர்ந்து கொள்கிறேன். என் அனுபவத்தைச் சொல்கிறேன். அவ்வளவுதான். ஆனால் இதுதான் உண்மை. இது தான் மிக மிகச் சரி என்று நான் தீர்ப்புக் கூற வரவில்லை. என் பார்வையில் என் அனுபவங்கள் – அவ்வளவுதான். இது வேறு ஒருவருக்கு வேறொரு விதமாகவும் இருக்கலாம். ஜோதிடம், ஆவிகள் உலகம், முற்பிறவி, மறுபிறவிகள், இறைநிலை எல்லாவற்றிற்குமே இது பொருந்தும். அவரவரது அனுபவமே உண்மை ஆசான்.

      ஒருவரைப் பற்றிய தவறான புரிதல்கள், தவறான அனுமானங்களையே ஏற்படுத்தும். அதைத் தான் நான் திரும்பத் திரும்ப பல பதிவுகளில் கூறி வந்திருக்கிறேன்.

      தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

    1. நன்றி நண்பரே. இதில் வெற்றி, வாகை என்றெல்லாம் ஒன்றுமில்லை. வெறும் கருத்துப் பரிமாற்றம் அவ்வளவே. இதில் யாரும் வெல்வதுமில்லை, தோற்பதுமில்லை. எல்லாவற்றிற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. அவர் ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்து, தனக்குப் புரிந்தவரையில் வினா எழுப்புகிறார். நான் அந்த ஒரு பக்கத்திலிருந்து ஆய்வு செய்யும் ஆர்வத்தில் மறுபுறம் வந்தவன் என்பதால் எனக்குப் புரிந்ததைச் சொல்கிறேன். அவ்வளவுதான். இதில் உயர்ந்தவர், தாழ்ந்தவர், வெற்றி, தோல்வி எதுவும் இல்லை.

      புரியாதவர்களுக்கு , புரிய வேண்டிய விஷயங்கள் புரிந்தால் சரி. அவ்வளவுதான். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

ramanans -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.