பகவான் ரமணரின் பொன் மொழிகள்

பகவான் ரமணர்

1.         மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதானால் எந்தப் பயனும் இல்லை.

2.         சாதனைக்கு தேவை சத்துவ உணவும் நல்ல சத் சங்கமுமே!. மாமிச உணவு கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். மற்றபடி வேறு விதிகள் என்று எதுவும் இல்லை.

3.         கடவுளை ஒவ்வொருவரும் அவர்களுடைய இதயத்தில் தேடினால், கடவுள் அருளும் அவர்களை நிச்சயம் தேடும்.

4.         கர்த்தா ஒருவன். நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட  கருவிகளே! இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் பணிவு வராமல் போகாது.

5.         தீமைகளைச் செய்யாதீர்கள். புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர். தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்.

6.         மனதை எண்ணங்களிலிருந்து விடுவிப்பதே சாதனையின் நோக்கமாகும்.

7.         குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும் நிலையும் உண்டு.

8.         தியானத்தில் ஆன்ம தியானம் எனப்படுவதே சிறந்தது. அது சித்தியானால் மற்ற தியானங்கள் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ஒவ்வொருவருடைய மனப் பக்குவத்திற்கு ஏற்றவாறு தியான முறைகளைக் கை கொள்ள வேண்டும்.

9.         உணர்வு ஒருமைப்பட்ட தியானத்தின் போது சில வகை ஒலிகள் கேட்கும். காட்சிகள் தெரியும். ஓர் ஒளி ஊடுருவது போல் தோன்றும். ஆனாலும் இவற்றில் மயங்கி தன்னிலை இழந்து விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.

10.       மந்திரங்களை இடைவிடாது சொல்வதால் மனம் அடங்கும். பின் மந்திரம், மனம், மூச்சு என எல்லாம் ஒன்றே என்று ஆகும்.

11.       ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம்.  ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ளத்தான். அதுவே மிகவும் முக்கியம்.

12. இறைவனை, ஞானத்தை ஒவ்வொருவரும் முயன்றுதான் அடைய வேண்டும். There is no any Short Routes to Reach the Feet of God. 

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!

10 thoughts on “பகவான் ரமணரின் பொன் மொழிகள்

  1. உண்மையில் எனக்கு, ஆன்மீக அறிமுகமே “ரமணாஸ்ரமம்” மூலம் தான்.
    ரமணரின் ‘உள்ளது நாற்பது’ படித்துப் பாருங்கள். வெண்பா வடிவம்.
    புரிந்துகொள்வது (எனக்கு) சிரமமானது. ஞான மார்க்கத்தின் சாரம் அது.
    முன்பெல்லாம் திருவண்ணாமலைக்கு இதற்கென்றே சென்று அங்கு அமைக்கப் பட்டுள்ள தியான மண்டபத்தில் அமர்வதும்,தியானிப்பதும் விருப்பமான விஷயமாக இருந்தது. இப்போது ‘டூரிஸ்ட்’ இடமாக மாறிவிட்டதால், அந்த மண்டபத்தில் அமைதி கிடைக்கவில்லை. பகவான் கூறியபடி, அமைதியை “மனதிற்குள் தேடுவதை விடுத்து, மண்டபத்தில் தேடுவானேன்?”

    அவரை அறியாதவர் எவரேனும் இருந்தால் உங்களது கட்டுரை சிறந்த அறிமுகம்.

    அன்புடன்,
    பலராமன்.

    1. உண்மை பலராமன். உள்ளே கடந்து ’கடவுளை’ப் பார்ப்பதை விடுத்து வெளியே ஏன் தேட வேண்டும்?. ஆனால் அது எல்லோருக்கும் சாத்தியமானதில்லை என்பதால் தான் உள்ளை விடுத்து வெளியே தேடுகிறோம். அதில் தவறொன்றுமில்லை.

      ’உள்ளது நாற்பது’ படித்திருக்கிறேன். எனக்குள் ஆன்மீக எழுச்சியை ஏற்படுத்தியவை பகவான் ரமணரின் போதனைகளே! அவற்றின் அருமை பெருமைகளை விவரிக்க வார்த்தைகள் போதாது. ஒவ்வொருவரும் உணர வேண்டிய விஷயம் அது.

      சமயங்களில் அவரது பகவத் வசனாம்ருதத்தில் சில பதில்கள் சம்மட்டி அடியாக இருக்கும். ஆன்மத் தேடல் உள்ளவன் அவசியம் படிக்க வேண்டிய நூல்கள் அவை.

      கடந்த நூற்றாண்டின் ஒப்புயர்வற்ற மாபெரும் ஞானிகள் பகவான் ரமணர் மற்றும் குருதேவர் ராமகிருஷ்ணர். அவர்களது போதனைகளைப் படித்து அவற்றில் சிலவற்றையாவது ஒருவன் பின்பற்ற ஆரம்பித்தால் அவனது ஆன்மா சுடர்விடும் என்பதில் ஐயமே இல்லை.

      உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா!

    2. //. இப்போது ‘டூரிஸ்ட்’ இடமாக மாறிவிட்டதால், அந்த மண்டபத்தில் அமைதி கிடைக்கவில்லை//

      பகவான் கூறியதே உங்கள் கேள்விக்கான பதில்

      அமைதி என்பது வெளியே இருப்பதா? உள்ளே இருப்பதா? அதை உள்ளே தேடுவதா, வெளியே தேடுவதா? ஆன்ம சுயம் பிரகாசம் அடைந்தவனுக்கு எல்லா இடமும் ஒன்றே.

      ஆனாலும் லௌகீக ரீதியாகப் பார்க்கும் போது நீங்கள் கூறுவதை மறுப்பதற்கில்லை, நாம் நமது தேடுதலில் கவனமாக இருப்போம். நன்றி.

    3. ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம் நமக்கு ஆன்மீக வழி காட்ட அவதார் ஆத்மகுரு தோன்றி இருக்கிறார் அவர் எல்லோருடைய அவதாரமுமாக இருப்பது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது அனைவரும் அவரை கண்டு அருளை பெறுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.