ஜோதிடக் கேள்வி – பதில்கள் – பகுதி – 6

 

முந்தைய பகுதிகள் இங்கே…

 

பரிகாரங்கள் தொடர்ச்சி…

 

அக்காலத்தில் இது போன்ற யாகங்கள், ஹோமங்கள் எல்லாம் ஜோதிடப் பரிகாரங்களாகச் சொல்லப்படவில்லை. இவை பின்னால் நடுவில் சிலர் பிழைப்பிற்காகப் புகுத்தியது. உண்மையான பரிகாரங்கள் என்ன தெரியுமா?

1) ஆலயங்களில் நெய் தீபம் ஏற்றுதல்…

2) ஆலய இறைவனை வழிபாடு செய்து வலம் வருதல்

3) ஆலயத்தைச் சுத்தமாக வைத்திருத்தல், அப்பணிகளில் உதவுவதல்

4) நந்தவனத்தைப் பராமரித்தல், விருட்சங்களை வளர்த்தல்

5) ஆலயத்தை அண்டி வசிப்பவர்களுக்கு உதவுவதல் (அன்னதானம்)

6) ஏழைகளுக்கு வசதி இருப்பின் உடை, உணவு போன்றவற்றை அளித்தல் (வஸ்திர தானம்)

7) ஏழைகளது நோய் தீர்க்க உதவுதல் (சஸ்திர தானம்)

8) அவர்களது கல்வி உயர்வுக்கு உதவுதல் (வித்யா தானம்)

9) திருமணமாகதவர்களுக்கு பொன் அளித்து உதவுதல் (மாங்கல்ய தானம்)

10) ஆதரவற்ற வறியவர்களைத் தங்க வைத்துப் பராமரித்தல் (சத்திரம், மடம் அமைத்தல்)

11) தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல், குளம் போன்றவை அமைத்தல்

12) ஆதரவற்று இறப்போர்களுக்கு அந்திமக் கிரியைகள் செய்தல்

இவையும் இவை போன்ற சிலவுமே ஒருவனின் பாவம் போக்க உதவும் உண்மையான பரிகாரங்கள். இவற்றை உண்மையான ஈடுபாட்டோடு ஒருவன் செய்யும் போது அவன் கர்மவினைகள் குறைகின்றன. (கவனிக்க; கர்மவினைகள் முற்றிலும் மறைவதில்லை. அவற்றின் வீரியங்கள் குறைகின்றன. ஏனென்றால் கர்மாவை ஒருவன் அனுபவித்துத் தீர்க்க வேண்டும் என்பதுதான் விதி. Every Action has an Equal and Opposite Reaction. That’s True.

சுருக்கமாகச் சொன்னால், மழை பெய்யும் பொழுது குடை எடுத்துக் கொண்டு நனையாமலும் செல்லலாம். அல்லது நனைந்து கொண்டும் செல்லலாம். அது போன்றது தான் பரிகாரங்களும். குடை பிடித்துச் செல்வதால் தலை நனையாது. ஆனால் உடலில் ஈரம் படாமல் செல்ல முடியாது. அது போல பரிகாரங்கள் போன்றவை ஓரளவு நம்மைக் காக்கும். ஆனால் முழுக்க முழுக்க நமது கர்மாக்களை நசிந்து போகச் செய்து விடாது.

மேலும் பாவங்களை வேண்டுமானால் பரிகாரங்கள் மூலம் ஓரளவு அதன் வீரியத்தைக் குறைத்துக் கொள்ளலாம். ஆனால் சாபங்களை அனுபவித்துத் தான் தீர்க்க வேண்டும்.

பரிகாரங்கள் பல செய்தும் ஒருவருக்குப் பலன்கள் சரிவர நடக்கவில்லை என்றால் அதற்கு ஜோதிடர், ஜோதிடம், ஊழ்வினை, சாபங்கள் என பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றின் பலம், பலவீனம் பொருத்தே ஒருவரது உயர்வும், தாழ்வும் அமைகிறது.

அதனால் தான் எல்லோரும் எப்போதும் நல்லதே சிந்திக்க வேண்டும், நல்லதே செய்ய வேண்டும். நல் வழியே நடக்க வேண்டும் என அனைத்து மதங்களும் போதிக்கின்றன.

நம் நாளைய வாழ்வின் நல்லது கெட்டதுகளுக்கு நாம் இன்று செய்யும் செயல்களே காரணமாக அமைகின்றன. ஆனால் நாம் அவற்றை முழுமையாக உணர்வதில்லை. இதில் நாளை என்பது வருங்காலமாக இருக்கலாம். அல்லது கர்மாக்களைக் கழிந்தும் முடியாமல் எஞ்சியிருக்கும் கர்மாக்களைக் கழிக்க மீண்டும் எடுக்கும் மறுபிறவியாகவும் இருக்கலாம்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா!

(தொடர்கிறேன்)

ஜோதிடக் கேள்வி – பதில்கள் – பகுதி 1

எனது ஜோதிடம் பற்றிய கட்டுரைக்கு கீழ்கண்ட கேள்விகளை ரஞ்சன் என்பவர் கேட்டிருந்தார். நானும் அவருக்கு அப்போது பதிலளித்திருந்தேன்.

ranjan
rranjan@….l.com
—-  வ/மா/தி at 8:17பிற்பகல்

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள், ஜோதிடம் என்பது உண்மைதான் என்றா? அப்படியானால் கீழ்கண்ட எனது கேள்விகளுக்கு பதில் கூற இயலுமா?

1. ஜோதிடம் உண்மை என்பதற்கு என்ன ஆதாரம்?

2. ஜோதிடம் பார்க்காவிட்டால் என்ன ஆகிவிடும்?

3. ஜோதிடம் பார்த்தும் பலருக்கு அதன்படி பலன்கள் நடக்கவில்லையே அது ஏன்?

4. ஒரே ஜாதகத்திற்கு ஒவ்வொரு ஜோதிடரும் ஒவ்வொரு விதமாகப் பலன் கூறுகிறார்களே அது எப்படி?

5. ராகு, கேது பாம்புகள், கிரஹணத்தின் போது சந்திரனை, சூரியனை விழுங்கும் என்பதெல்லாம் பொய் என்று விஞ்ஞானம் நிருப்பித்திருக்கிறதே அதற்கு என்ன சொல்கிறீர்கள்?

6. சூரியக் குடும்பத்தில் புதிதாக ஏதேனும் கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அப்போது ஜோதிடர்கள் என்ன செய்வீர்கள்?

7. அதது இயற்கையாக நடந்து கொண்டிருக்கும் போது, ஜாதகம் போன்றவற்றை நம்புவது பகுத்தறிவிற்கு முரணாக உள்ளதை அறிவீர்களா?

8. ஜாதகம் பார்த்து, பொருத்தம் பார்த்தும் விவாகரத்துகள் நடக்கின்றன, சிலர் இறந்து போகிறார்கள், மனைவியைக் கொலை செய்கிறார்கள். இதெல்லாம் எப்படி? எதிர்காலத்தில் நடக்கப் போவதைக் கூறுவதுதான் ஜோதிடம் என்றால் எப்படி உங்களால் இவற்றைக் கணிக்க முடியவில்லை.

9. பரிகாரம் என்ற பெயரிலும் யாகம் என்ற பெயரிலும் ஜோதிடர்களும் புரோகிதர்களும் கூட்டுக் கொள்ளை அடித்து வருகிறார்களே, இது நியாயமா?

10. விதிப்படி தான் அனைத்தும் நடக்கும் என்பது இந்து தர்ம சாஸ்திரம். அப்புறம் ஏன் ஜோதிடம்?

11. விஷ்ணு ஆலயங்களில் ஏன் நவக்கிரகங்கள் காணப்படுவதில்லை?

12.பட்சி சாஸ்திரம், சகுனம், ராகு காலம், எம கண்டம் இவையெல்லாம் பைத்தியக்காரத்தனமாக உங்களுக்குத் தோன்றவில்லையா?

13. செவ்வாய் தோஷம், மூலம் என்றெல்ல்லாம் பெண்களை ஜோதிடம் கொடுமைப்படுத்துகிறதே, இது நியாயம் தானா?

14. கிழக்கே சூலம், மேற்கே சூலம் என்றால் என்ன?

15. பிறக்கும் நேரத்தைத் தவறாகச் சொல்லி ஜாதகம் கணித்தால் என்ன ஆகும்? பிறந்த தேதியே தெரியாதவர்களுக்கு எப்படி ஜாதகம் கூறுவீர்கள்?

– இன்னும் நிறையக் கேள்விகள் உள்ளன. முதலில் இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் முழுமையாக/உண்மையாக பதிலளியுங்கள் பார்ப்போம்.

– ரஞ்சன்,

பிரிட்டானியா

அதற்கு எனது அன்றைய பதில்…

அன்பு நண்பரே

என்னை ஒரு ஜோதிடராக நினைத்து இத்தனை கேள்விகள் அடுக்கியுள்ளீர்கள் போலத் தெரிகிறது. முதற்கண் தெரிந்து கொள்ளுங்கள் நான் ஜோதிடன் அல்ல. உண்மைகளைத் தேடும் ஒரு ஆராய்ச்சியாளன், அவ்வளவே! அந்தத் தேடுதலில் ஜோதிடமும் ஒரு அங்கம். அவ்வளவுதான். நம்மைச் சுற்றி இருக்கும் எளிதாகப் புரியாத அல்லது புரிந்து கொள்ள முடியாத பல விஷயங்களை அவதானித்து நான் கட்டுரைகளாகத் தருகிறேன். அதை வைத்துக் கொண்டு என்னை ஜோதிடர் என்றோ அல்லது ஆவிகளுடன் பேசுபவன் என்றோ நினைத்தால் அது அறிவீனம். நான் ஒரு ஆய்வாளன் அவ்வளவே. ஆனாலும் நீங்கள் கேட்ட கேள்விகள் மிக சுவாரஸ்யமானவை. அவற்றிற்கு நேரம் கிடைக்கும் போது நிச்சயம் பதலிளிப்பேன். அதுவரை தயவு செய்து காத்திருங்கள்.

அன்புடன்

ரமணன்

விரைவில் மேற்கண்ட கேள்விகளுக்கான பதில்கள் வரும்.

விரைவில் என்று அன்று சொன்னேன். ஆனால் இவற்றிற்கு பதில்கள் கூற, தகவல்களைத் தேடி ஒப்பு நோக்க மிகவும் தாமதமாகி விட்டது. மேலும் ஒவ்வொரு கேள்வியுமே ஒரு கட்டுரையாக எழுதும் அளவிற்கு ஆழமானது. முக்கியத்துவம் மிக்கது. எனக்குத் தெரிந்த விடைகளை அளிக்க முயற்சிக்கிறேன். முதல் கேள்விக்கான பதில்…

கேள்வி – 1. ஜோதிடம் உண்மை என்பதற்கு என்ன ஆதாரம்?

ஜோதிடம் பொய் என்பதற்கு என்ன ஆதாரம்? விஞ்ஞானப்பூர்வமாக அதை நிரூபிக்க முடியாது அதனால் அதைப் பொய் என்றுதான் சொல்வேன் என்கிறீர்களா? சரி, விஞ்ஞானப்பூர்வமாக எல்லா விஷயங்களையும் விளக்கிவிட முடியும் என்று நம்புகிறீர்களா? அந்த அளவிற்கு இன்னும் விஞ்ஞானம் வளரவில்லை என்பதுதான் உண்மை.

’அறிவியல்’ என்பது நாம் அதுவரை அறிந்து வைத்திருக்கும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து பார்த்து உண்மை காண்பது. இதில் அவ்வாறு அறிந்து வைத்திருக்கும் தரவுகள் நிலையானவை அல்ல. அவை அடிக்கடி மாறக் கூடியவை. உதாரணமாக ஒரு காலத்தில் பூமியை தட்டை வடிவம் என்று சொன்னார்கள். பின்னர் விஞ்ஞானம் வளர அதை ’உருண்டை’ என்றார்கள். இப்போது மேலும் ஆராய்ந்து பூமிப்பந்து கோள வடிவில் (Ellipse) உள்ளது எனச் சொல்கிறார்கள். இப்படி மாறிக் கொண்டே இருப்பதுதான் அறிவியல்.

விளக்கமாகச் சொன்னால் ஒரு காலத்தில் மனித உள்ளுறுப்புக்களைக் கண்டறிய கருவிகளே இல்லை. அதற்காக உள்ளுறுப்புகளே மனிதனுக்கு இல்லை என்று கூறி விட்டார்களா நம் முன்னோர்கள்? பின்னர் எக்ஸ்-ரே வந்தது. ஊடுருவிப் பார்த்து விளக்கம் சொன்னது. அடுத்து அதில் மேலும் முன்னேற்றமாக பல ஸ்கேன் கருவிகள் வந்து தற்போது மூளை, இதயம் என எல்லாவற்றையும் பார்க்கும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது. அந்தக் காலத்தில் உள்ள மனிதர்கள் இக்கருவிகளைப் பற்றி அறிந்திருப்பார்களா…. நிச்சயம் இல்லை. இப்படி மனித உள்ளுறுப்புகளைப் பார்க்க முடியும் என்று சொன்னால் அவர்கள் ஒப்புக் கொண்டிருப்பார்களா? ’பைத்தியம், உளறுகிறது’ என்று திட்டியிருப்பார்கள். இப்படி படிப்படியாக வளர்ந்து கொண்டே இருப்பதுதான் விஞ்ஞானம்.

அறிவியல் இன்று ’உண்மை’ என்று ஒப்புக் கொள்வதே கூட நாளை ’பொய்’ ஆகலாம். கண்டுபிடிக்கப்படும், கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் மாறிக் கொண்டே இருப்பதுதான் விஞ்ஞானம். அதை அடிப்படையாக வைத்து ஜோதிடத்தை ஆராய்ச்சி செய்ய முடியாது.

ஜோதிடம் உண்மை என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், ஜோதிடம் உண்மையில்லை என்பதற்கும் என்ன ஆதாரம் என்ற கேள்விக்கும் நாம் பதில் சொல்ல வேண்டும். ”ஜோதிடப்படி பலருக்கு பலன்கள் நடப்பதில்லை; அதனால் அது பொய்” என்று சொன்னால், ”ஜோதிடப்படி பலருக்கு பலன்கள் நடந்துள்ளன. அதனால் அது உண்மை” என்றும் கூறலாமே! ஆகவே இதை பொதுவாக, எந்த வித முகாந்திரமும் இல்லாமல் அணுக முடியாது.

ஆனாலும் பல்கலைக்கழக அளவில் அதனை ஆய்வு செய்து “ஜோதிடம் விஞ்ஞானம் தான்” என உறுதி செய்துள்ளது மும்பை உயர்நீதி மன்றம் ஆதாரம் வேண்டுவோர் கீழ்க்கண்ட சுட்டியில் பார்க்கலாம்.

ஜோதிடம் ஒரு விஞ்ஞானமே!

வானியல் சாஸ்திரத்தையும், நுணுக்கமான கணித முறைகளையும் அடிப்படையாகக் கொண்டது ஜோதிடம். அதை விஞ்ஞானப்படி நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.

ஏன்…?

(தொடர்கிறேன்)