சவால் : எழுத்து

கீழ்கண்டவை பிரபல எழுத்தாளர்களின் சிறுகதை/நாவல்/குறுநாவலிலிருந்து எடுத்தாளப்பட்ட சிறு பத்திகள். இவற்றைப் படித்து யார் அந்தப் பிரபல எழுத்தாளர்கள் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

10/10 சரியாகக் கண்டுபிடித்தால் நீங்கள் “புத்தக வித்தகர்”

7/10 என்றால் நீங்கள் ”புத்தகப் புழு”

5/10 என்றால் நீங்கள் “புத்தகப் பூச்சி”

அதற்கும் கீழே என்றால் … நீங்களும் என்னைப் போன்ற ஆசாமிதான் என்று அர்த்தம்

 🙂

****

1)

….. மனசுக்குள் பூவை அள்ளித் தூவுகிற இந்தக் கிராமத்து அந்யோன்யம், நீராய் பாய்ந்து பரவுகிற கூட்டுழைப்புத் தோழமை. அன்பையும் கருணையையும் சுமந்து நிற்கிற மனுசத் தன்மை.

பூவனம் ஒன்றும் விசேஷமாய் சிலிர்த்துப் போய் விடவில்லை. இதெல்லாம் சகஜம், மீன் குஞ்சுகள் நீந்துவதைப் போல.

பண்டிகை போன்ற நல்ல நாள்களில் வீடுகளில் அதிசயமாய் தோசைக்குப் போடுவார்கள். சோளத் தோசை, பாவாடையில் திரிந்த அந்த நாளில் பூவனத்துக்கு சந்தோஷம் பிடிபடாது. கும்மாளத்தில் தெருவெல்லாம் கால் பாவாமல் ஓடித் திரிவாள். “எங்க வீட்ல தோசை… எங்க வீட்ல தோசை…” என்று எல்லாச் சிறுமிகளிடமும் பெருமையாய் சொல்லிச் சொல்லி மகிழ்ந்து போவாள்.

****

2)

பாஸ்கர ராவ் மாடியில் நின்று சுற்றுமுற்றும் பார்த்தார். மனம் திருப்தியுற உதடுகளில் புன்னகை அரும்பியது. மூன்று மாதங்களாக ஓர் இடம் நல்ல இடம் என்று தெருத் தெருவாக அலைந்து பேப்பர் – விளம்பரங்களையெல்லாம் பார்த்துப் பதில் போட்டு போனில் காத்திருந்து பேசியதெல்லாம் ஒரு கனவு போலக் கலைந்து போயிற்று. கைகளைப் பின்னுக்குக் கட்டிக் கொண்டு பச்சை வர்ண மொசைக் தரையில் மெதுவாக நடந்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு வரையில் விசாலமான தோட்டத்துடன் தன் ஆபிஸ் அமையுமெனப் பாஸ்கர ராவ் நினைக்கவே இல்லை. அலைந்து களைத்துச் சோர்ந்து இனி தன்னால் ஆகக் கூடியதொன்றுமில்லையென நம்பிக்கையிழந்தபோது ரங்கநாதனிடமிருந்து போன் வந்தது. அவர் பெரிய மகனுக்கு அசோக் நகரில் வீடு கட்டி முடித்தபோது, இவருக்குத் தன் ஆபிஸை நல்ல இடத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும் போலத் தோன்றியது.

 ****

3)

கிருஷ்ணன் கோவில் அர்ச்சகர் தபால் ஆபிசில் நுழைந்தார். கூர்ந்து கவனித்தான். எழுபத்தி மூன்று நாற்பத்தியேழு.

அர்ச்சகர் கையில் ஒரு நீள உறை. எழுந்து பின்னால் சென்றான். அர்ச்சகர் தபால் பெட்டியருகே சென்று விட்டார்.

“வேய்”

சட்டென்று திரும்பி நின்றார்.

“இங்கே வாரும்”

“இதெ போட்டுட்டு வந்துடறேன்”

“போடமெ வாரும்”

அர்ச்சகர் ஸ்தம்பித்து நின்றார்.

”வாரும் இங்கே” – ஒரு அதட்டல்.

அர்ச்சகர் தயங்கித் தயங்கி வந்தார்.

நல்ல கனமான சரீரம். மொழுமொழுவென்று உடம்பு. உடம்பு பூராவும் இலேசாக எண்ணெய் தடவியது போல் மினுமினுப்பு. வளைகாப்புக்குக் காணும்படி வயிறு.

***

4) 

ரெண்டுபேரும் கிணற்றில் குதித்து தொட்டுப் பிடித்து விளையாடினார்கள். ஆழத்துக் போய் அடுக்குக் குமிழ்விட்டு வெளியே வந்து வேடிக்கை பார்த்தார்கள். மாரி ஒரு தடவை குசுவைத் தொடுத்து வந்து குமிழைக் கண்டுபிடித்தான். கண் சிவக்கக் குளித்து விட்டு கழுதைகளுக்குப் பின்னால் பேச்சுப் போட்டுக் கொண்டே நடந்தார்கள்.

“நெதமும் இந்தப் பக்கந்தான் கழுத மேப்யா”

அப்படியில்ல. ஊரச் சுத்தி மந்தையிலயும் மேப்பேன்”

“மந்தையில வெளையாட முடியாதே”

“ஒத்தயில கெடந்துக்கிட்டு எங்கதான் வெளையாட முடியிது”

“தொணைக்கு ஆருமில்லையா”

“கழுததான் தொண. நல்லது பெல்லதுக்கு அசலூரு வண்ணாரு குடும்பத்தோட வந்தா உண்டு. இல்ல நாங்க போகணும். ரெண்டு நாளைக்கு கொவட்டுப் பெயகளோட வெளையாடலாம். அதுக்குப் பிறகு எல்லோரும் கலஞ்சு போயிருவாக. வெளையாட்டு எச்சுக்கெடக்கும்”

***

5)

மறுநாள் சம்பளதினம். எப்படியாவது ஆஃபிசுக்கு போயாக வேண்டும். எண்பது பைசாவுக்கு எந்த வழியும் புலப்படவில்லை. பழைய பேப்பர்களையும் ஏற்கனவே போட்டாகி விட்டது. அன்று டிக்கெட்டே எடுக்காமல்தான் ஆஃபிஸ் வந்தேன். ITO நிறுத்தத்தில் அடிக்கடி செக்கிங் இருக்கும் என்பதால் ITO ஃப்ளை ஓவருக்கு முன்னால் இருக்கும் சிக்னலிலேயே இறங்கி விடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பஸ் நிற்கவில்லை. நிறுத்தத்தில் இறங்கவே எனக்குப் பயமாக இருந்தது. பிறகு அடுத்த சிக்னலில் நின்றபோது இறங்கி, திரும்பி ஐ.டி.ஓவுக்கு நடந்து வந்து ஆஃபிசுக்கு வர மிகுந்த கூட்டமாக இருந்த பஸ்ஸாகப் பார்த்து ஏறினேன். இருந்தாலும் பயம் தான். அடிக்கொருதரம் முன்னாலும் பின்னாலும் பார்த்துக் கொண்டேன். காக்கி உடை முன் கேட் வழி ஏறினால் பின் கேட் வழியாக உடனே இறங்கி விட வேண்டும்: காக்கி பின் கேட் வழி ஏறினால் முன் கேட் வழியாக இறங்கி விட வேண்டும். இரண்டு பக்கமும் இரண்டு காக்கி உடைகள் ஏறினால், அவ்வளவுதான், எத்தனை நாள் ஜெயிலில் போடுவார்கள் என்று யோசித்தேன். மாட்டினால் அவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கக் கூடாது. ‘அனவசியமாக என்னிடம் பேசிக் கொண்டிருக்காதே; என்ன தண்டனையோ அதைக் கொடு’ ‘ஏன் டிக்கெட் எடுக்கவில்லை?’ ‘சொல்ல முடியாது; என்ன தண்டனையோ அதைச் சீக்கிரம் கொடு.’

***

6)

அருக்காணி புடைவைத் தலைப்பை வாயில் திணித்தபடி சிரிப்பை அடக்கிக் கொண்டு அடுப்பருகே உட்கார்ந்து கொண்டாள். கேசவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அசிங்கமான மங்குணிக்கு இப்படி ஓர் அழகான பெண்ணா? அந்தத் திருத்தமான முகமும், பட்டாம் பூச்சிகளாய்ச் சிறகடிக்கிற அந்த விழிகளும் எள்ளுப்பூ மூக்கில் பளிச்சிடுகிற அந்த நத்தும் சதைப்பிடிப்பான அந்த இதழ்களும்..

“என்ன தம்பி, ரோசனை பண்றேங்க? என்னிக்குக் கண்ணாடிக் கூண்டுக்குள்ளாற போகப் போறீங்க.” மங்குணி தன் பல நாள் தாடியைச் சொறிந்து கொண்டே கேட்டான்.

“அடுத்த வாரம் திங்கட் கிழமை.”

“தகிரியமாப் போங்க, தம்பி உசிருக்கு ஒண்ணும் ஆவாது. அதுக்கு நான் க்யாரண்டி. நான் முந்திச் சொன்னமாதிரி எல்லா விஷப் பாம்புக்கும் அந்த மூலிகை வேரை அரைச்சுப் பால்லே கலந்து குடுத்து அதனோட வாயைக் கட்டினேன்… அதுங்க பாட்டுக்குச் சொம்மா ’பொசுக் பொசுக்’குன்னு சீறும். ஆனா, கொத்தாது. நீங்க பாட்டுக்கு அதுங்க கூடக் குளந்த மாதிரி விளையாடலாம். ஒங்க கையில வேரையும் கட்டிடறேன். அதுங்க பக்கத்திலேயே வராது. அப்புறமென்ன? அம்பது நாளென்ன அஞ்சு வருஷம்கூட அதுங்ககூட வாசம் பண்ணலாம்.”

****

7)

பிரபாகர் சிரித்தார்.

அவர் பார்வை அறையில் தேடி படுக்கை கட்டக் காத்திருக்கும் வலுவான கயிற்றின் மேல் நிலைத்தது. மெதுவாகச் சென்று அதை எடுத்துக் கொண்டு கையில் அதைச் சுற்றிக் கொண்டே ஷைலஜாவை நெருங்கினார்.

ஷைலஜா வீறிட்டாள். மிக உரக்க வீறிட்டாள்.

அந்த அறை ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட அறை, அத்தனை ஜன்னல்களும் மூடி திரை மறைத்த அறை.

ஷைலஜாவின் அலறல், மூடிய கதவைக் கடந்து ஹாலிலேயே கேட்டது. ஹாலைக் கடந்து தோட்டத்தில் அது இன்னும் மெலிசாகத்தான் கேட்டது. தோட்டத்தைத் கடந்து தெருவில் அது கேட்கக் கூட இல்லை.

***

8)

சிலமணிநேரங்களுக்குப் பின் அதைப்பற்றிக் கேட்பதற்காக நான் தலைமைக் குமாஸ்தாவை உள்ளே அழைத்தேன். அவர் கண்களில் தெரிந்த திடத்தைப் பார்த்ததும் தெரிந்துவிட்டது, அவர் எடுத்த முடிவல்ல அது. அவருக்குப் பின்னால் ஒரு அமைப்பே இருக்கிறது. அதனுடன் நான் மோதமுடியாது. நான் தன்னந்தனியானவன். மோதி இன்னும் சிறுமைப்பட்டால் என்னால் எழவே முடியாது. சாதாரணமாக ஏதோ கேட்டேன். அந்த சிறிய கண்களில் சிரிப்பு ஒன்று மின்னி மறைந்ததோ என எண்ணிக்கொண்டேன்.

ஆம்புலன்ஸில் அம்மாவை ஏற்றிக்கொண்டு கோபாலப்பிள்ளை ஆஸ்பத்திரிக்குச் சென்றேன். இளம் டாக்டர் ஆம்புலன்ஸிலேயே ஏறிக்கொண்டார். நான் மாணிக்கத்திடம் ‘ரைட் பாக்கலாம்’ என்றேன். ‘நானும் வரேன் சார்.. அங்க ஒரு ரிப்போர்ட் குடுக்கறேன்.’ ‘வாங்க’ என்று ஏற்றிக்கொண்டேன். ‘யூரின் வெளியே எடுத்தாச்சு சார்… டிரிப்ஸ் போகுது. கிட்னி வேலைசெய்றமாதிரியே தெரியலை. நாலஞ்சுநாளா எங்கியோ காய்ச்சல் வந்து கெடந்திருக்காங்க.’ நான் ஒன்றும் சொல்லாமல் இன்னொரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டேன்.

***

9)

தேவகி, என் கல்லூரித் தோழன் ராமமூர்த்தியின் சொந்தத் தங்கை. ஆறுபேர் பிறந்த குடும்பத்தின் ஒரே பெண் குழந்தையான கடைக்குட்டி. தாய், தந்தை உள்பட அத்தனைபேரும் சிவப்பாக இருக்கும் குடும்பத்தில் இவள் மட்டும் தவறிப் போய்க் கன்னங்கரேலென்று பிறந்தாள். ”வீட்டில் எல்லோரும் அவளை ’அது’ ‘இது’ என்றுதான் குறிப்பிடுவார்கள்” என்று எங்களிடம் சொல்லி வருத்தப்படுவான் ராமமூர்த்தி. அவனுக்கு தங்கையிடம் அபாரப் பிரியம்.

தேவகி அப்படி நினைக்கவில்லை. மற்றவர்களிடம் காட்டும் அதே தொல்லையை ராமமூர்த்தியிடமும் காட்டினாள். பெரும்பாலும் ஒற்றைச் சொற்களில்தான் பேசுவாளாம்.

தகப்பனார் கிருபா நகர் வட்டத்தின் கீர்த்தி பெற்ற புரோகிதராக இருந்தார். நன்கு சம்பாதிக்கவும் செய்தார். கடைசிப் பிரசவத்தில் பெண் குழந்தை பெற்றெடுத்த தாயார்க்காரி, குழந்தைக்குப் பெயரிடும் வைபவத்துக்கு முந்தினநாள் இரவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட பிறகு, மறுமணம் என்ற யோசனையே இல்லாமல் வாழ்க்கை நடத்தினவர். 

****

10)

மிஷின்… ஜெர்மன் மிஷின். கல் ஆந்திராவினுடையது. பலகை போக வேண்டிய இடம் ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ். அறுத்து பாலிஷ் செய்பவர்கள் எல்லோரும் அநேகமாய் தமிழர்கள்.

அறுப்பதைப் போலவே பளபளப்பாக்குவதையும் இயந்திரமே செய்தது. இருதயம் போலவும், வட்டமாகவும், செவ்வகத்தின் மீது வைத்த அரை வட்டம் போலவும் பலகைகள் வெட்டப்பட்டன. முகம் தெரியும் வண்ணம் பளபளப்பாய் பாலிஷ் ஏற்றப்பட்டன.

கருங்கல்லில் தாமரை இதழ்கள் போல வளைவாய் கல்வெட்டி… அதை துளையிட்டு கம்பி போட்டு முறுக்கி அந்தக் கம்பிகளில் கருஞ்சாந்து போல வஜ்ஜிரம் கொட்டிப் பூசி கெட்டிப்படுத்தி ஒரு தாமரைப் பூவாய் ஒரு ஜப்பான் புத்த மடாலயத்திற்கு ஏற்றி அனுப்ப… அந்த கருங்கல் தாமரையைப் பார்த்துவிட்டு ஜப்பான் அரசாங்கம் பாராட்டுப் பத்திரம் அனுப்பியது.

***

மேற்கண்ட பத்திகளை எழுதிய எழுத்தாளர்கள் யார், யார் என்பது 02.05.2012 அன்று வெளியாகும்

இதனை வாசித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

– பாலா -Ar.