நானிலம் போற்றிய ஸ்ரீ நாராயண குரு

மனிதர்கள் தங்களுக்குள் மதத்தாலும், சாதியாலும் பிரிந்து மனம் வேறுபட்டு நின்ற காலத்தில் ’மனிதர்கள் எல்லோரும் சகோதரர்களே! அவர்களுக்கு ஒரு சாதி, ஒரு மதம், ஒரு தெய்வம் போதும்’ என்ற அறைகூவலை எழுப்பி, தீண்டாமை வேற்றுமையை, பிரிவினையைப் போக்கப் பாடுபட்ட மகான் ஸ்ரீ நாராயண குரு.

1854ஆம் ஆண்டு, ஆகஸ்டு 28 அன்று கேரளாவில் தோன்றிய நாராயணகுரு ஆன்மீகத்துறை மட்டுமல்லாது கல்வித்துறையிலும் பல்வேறு சீர்த்திருத்தங்கள் செய்தவர். உயர்சாதியினர்க்கு எதிராக கல்வி, பொருளாதாரம், ஆன்மீகம் என அனைத்திலும் தாழ்த்தப்பட்டவர்கள் வலிமை பெற்று விட்டாலே போதும் சமச்சீர் சமுதாயம் உருவாகி விடும் என்ற எண்ணம் கொண்டவர். அதற்காகவே உழைத்தவர். கல்வி கற்பது அனைவரது உரிமை என்று சொல்லி, சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டிருந்தவர்கள் கல்வி கற்பதற்காக பல்வேறு கல்விக்கூடங்களை உருவாக்கியவர். சாதி, மத பேதமில்லாமல் அனைவரும் வந்து தரிசித்துச் செல்வதற்காக சிறந்த வழிபாட்டுத் தலங்களை ஏற்படுத்தியவர்.

narayana guru 2

இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட இம்மகானை மகாத்மா காந்தி, கவி தாகூர், வினோபாஜி, ராஜாஜி உட்பட பலர் சந்தித்து அளவளாவியுள்ளனர். இவரைத் தேடி வந்து தரிசித்து, தனது பல சந்தேகங்களுக்கு விடைபெற்றுச் சென்றுள்ள மகாத்மா காந்தி, ஸ்ரீ நாராயண குருவை ’ஓர் அவதார புருஷர்’ என்று குறிப்பிடுகிறார். கவி தாகூரோ, “பாரத தேசத்தில் தோன்றிய மாகரிஷிக்களில் ஸ்ரீ நாராயணகுருவும் ஒருவர். ஞானம் வாய்ந்த பரமஹம்சர்” என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார்.

நாராயண குரு ஆரம்பகாலத்தில் கன்யாகுமரி அருகே உள்ள மருத்துவாமலையில் சில காலம் தங்கி தவம் செய்து வந்தார். பெரும்பாலும் மௌனமாக தவத்தில் ஆழ்ந்திருப்பதும், விழித்திருக்கும் போது யாரேனும் உணவு கொடுத்தால் உண்பதும் அவர் வழக்கம். இல்லாவிட்டால் அம்மலையில் உள்ள கிழங்குகளை உண்பார். சமயங்களில் பட்டினியாகவும் இருந்து விடுவார்.

ஒருநாள்…. காலை முதல் நீண்ட தவத்தில் ஆழ்ந்திருந்தார் நாராயண குரு. அவர் கண் விழித்தபோது நள்ளிரவாகி விட்டிருந்தது. கடுமையான இருள் வேறு எங்கும் சூழ்ந்திருந்தது. நாராயண குருவுக்கோ நல்ல பசி. காட்டின் உள்ளே சென்று கிழங்குகளைத் தேடி உண்ண முடியாத நிலை. சோர்வுற்று அவர் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது அங்கே ஒரு மனிதன் வந்தான்.

அவன் ஒரு பிச்சைக்காரன். தொழுநோயாளியும் கூட. ”என்ன சாமி பசிக்குதா, இதோ என்கிட்ட சாப்பாடு இருக்குது. நீ இதையெல்லாம் சாப்பிடுவியா?” என்றான்.

அதைக் கேட்ட நாராயண குரு மிகவும் மனம் வருந்தினார். அவன் நிலைக்காக மனம் இரங்கினார். பின் அவனிடம், ”அப்பா, உணவு கொடுப்பவர் உயிர் கொடுப்பவர் அல்லவா? நீ எனக்கு அமிர்தத்தை அல்லவா கொண்டு வந்திருக்கிறாய். வா, இரண்டு பேரும் சேர்ந்தே சாப்பிடலாம்” என்று சொல்லி, எந்த வித மன வேறுபாடும் இல்லாமல் அவனுடன் அமர்ந்து அந்த உணவை உண்டார். பின் இருவரும் உறங்கச் சென்றனர்.

மறுநாள் நாராயண குரு கண் விழித்தெழுந்து பார்த்தபோது அந்தத் தொழுநோயாளியைக் காணவில்லை. தன் மன உறுதியைப் பரிசோதிக்கவே அந்தத் தொழுநோயாளியை இறைவன் அனுப்பியிருக்கிறான் என்பதை உணர்ந்த குரு, இதுபோன்று மனதாலும், உடலாலும் தாழ்வுற்றுக் கிடப்பவர்களை முன்னேற்றுவதே தன் வாழ்நாள் லட்சியம் என்று உறுதி பூண்டார்.

******

அக்காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கோயிலில் நுழையும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது. அந்த நிலைமையை தனது செயல்பாடுகள் மூலம் மாற்றிய நாராயண குரு, கேரளா மட்டுமல்லாது, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என பல இடங்களிலும் அனைத்து சாதி மனிதர்களும் வந்து வழிபாடுமாறு புதிய ஆலயங்களை நிர்மாணித்தார். கேரளாவின் கோட்டாறு போன்ற சில இடங்களில் சிறு தெய்வ வழிபாடும், உயிர்ப்பலி கொடுப்பதும், மது வகைகளைப் படைத்து வணங்குவதும் அதிகம் புழக்கத்தில் இருந்தது. அதுகண்டு மிகவும் மனம் வருந்திய நாராயண குரு, அப்பகுதி மக்களைச் சந்தித்து இது போன்ற செயல்களின் விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்தார். உயிர்ப்பலியால் ஏற்படும் பாவங்களைப் பற்றியும், மது குடிப்பதால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும் விரிவாக விளக்கிய அவர், அவர்களை மனமாற்றி, அந்தச் சிறு தெய்வங்களின் சிலைகளை அகற்றி விட்டு சிவன், சக்தி போன்ற தெய்வங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு செய்தார்.

narayana guru stamp

*****

ஒருமுறை நாராயணகுரு குளம் ஒன்றில் குளித்துக் கொண்டிருந்தார். அந்தக் குளம் உயர் சாதியினருக்கானது. நாராயண குரு குளித்ததால் குளம் அசுத்தமாகி விட்டது எறு கருதிய அவர்களில் சிலர் நாராயண குருவைத் தாக்க ஓடி வந்தனர். அமைதியாக அவர்களை எதிர்கொண்ட குரு, “ இப்போது என்ன நடந்து விட்டது? குளம் தீட்டுப்பட்டுவிட்டது என்று கருதித்தானே என்னை அடிக்க வருகிறீர்கள். என்னைத் தொட்டு அடிப்பதால் உங்களுக்கும் தீட்டு ஏற்பட்டு விடாதா? “ என்று கேட்டார். பொருள் பொதிந்த அவர் கேள்விக்கு விளக்கம் கூற முடியாத அவர்கள் தலையைக் குனிந்தவாறு திரும்பச் சென்றனர்.

******

ஆல்வாய், வர்க்கலை உட்பட பல இடங்களில் ஆசிரமம் நிறுவி மக்கள் பணியாற்றிக் கொண்டிருந்தார் நாராயணகுரு. பக்தர்கள் பலரும் அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு நாடி வந்தனர். சிலர் சீடர்களாக ஆகினர்.

ஒருமுறை வர்க்கலை சிவகிரி ஆசிரமத்தில் நாராயண குரு தங்கியிருந்தார். அப்போது அங்கே பணியாற்றி வந்த ஒருவரை ஆசிரமப் பணத்தைக் கையாடல் செய்து விட்டார் என்று கூறி குருவின் முன் கொண்டு வந்து நிறுத்தினர் பக்தர்கள். அந்த நபரோ தனது செயலுக்கு வெட்கி, மனம் வருந்தி, அவமானப்பட்டு, கண்ணீருடன் தலை குனிந்து நின்று கொண்டிருந்தார். அந்த நபருக்கு மிகக் கடுமையான தண்டனைகளை குரு வழங்குவார் என்றெண்ணிக் காத்திருந்தனர் பக்தர்கள்.

narayana guru coin

குரு அந்த மனிதனைப் பார்த்தார். இல்லாமையாலும், அதிக பொருட்தேவையாலும் தான் அவன் திருடியிருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டார். ’திருடுதல் தகாது. அது மகத்தான பாவச் செயல்’ என்று அவனுக்கு அறிவுரை கூறியவர் அன்று முதல் அவனை ஆசிரமத்தின் பொருள் காப்பாளராக நியமித்து விட்டார்.

திருடன் பொருளாளராக ஆனது மட்டுமல்ல; அன்று முதல் நேர்மையான மனிதனாகவும் வாழத் தொடங்கினார்.

*****

நாராயண குரு தம் இறுதிக்காலத்தில் மிகக் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார். ஆனாலும் மக்கள் பணிகள் எதையும் அவர் நிறுத்தவில்லை. உடல் நலிவுற்றபோதும் கூட மக்களைச் சந்திப்பதையும், அவர்கள் கூறும் குறைகளைச் செவிமடுப்பதையும், ஆறுதல், அறிவுரை கூறுவதையும் தனது வழக்கமாக வைத்திருந்தார்.

ஒருநாள்…. குருவைப் பார்க்க வெகுதொலைவில் இருந்து ஒரு மனிதர் தன் மகளுடன் வந்திருந்தார். அந்தப் பெண்ணிற்கு வாத நோயினால் கால்கள் செயல்படாமல் இருந்தது. அதனால் நடக்க இயலாமல் மிகவும் கஷ்டப்பட்டாள். நாராயண குருவைப் பார்த்தால் எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கையில் வந்திருந்தார் அந்த மனிதர். ஆனால் அது குரு ஓய்வெடுத்துக் கொள்ளும் நேரம் என்பதால் ஆசிரமத் தொண்டர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

உள்ளே தனதறையில் தியானத்தில் அமர்ந்திருந்த குரு திடீரென தன் பணியாளர்களுள் ஒருவரை அழைத்தார். “நம்மைப் பார்க்க யாரோ வந்துள்ளனர். உடனே அவர்களை உள்ளே அழைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டார்.

உடனே பணியாளர் வெளியே சென்று பார்த்தார். அந்த மனிதர் காத்திருப்பதை அறிந்தார். ஆச்சரியத்துடன் அவரை உள்ளே அழைத்து வந்தார். தவழ்ந்தவாறே அவரது மகளும் குருவைத் தரிசிக்க வந்தாள். இருவரும் குருவைப் பணிந்து வணங்கினர். கண்ணீருடன் தனது குறையை நாராயண குருவிடம் முறையிட்டார் பக்தர்.

அவரையும், அந்தப் பெண்ணையும் கனிவுடன் பார்த்த நாராயண குரு, ”இந்தப் பெண் எழுந்து நடப்பாள்” என்று அன்போடு கூறிவிட்டு தியானத்தில் ஆழ்ந்து விட்டார்.

சற்று நேரத்தில், அதுவரை நடக்க இயலாதிருந்த அந்தப் பெண் மெல்ல எழுந்து நடந்தது மட்டுமல்ல; உணவுக்கூடத்திற்குச் சென்று உணவையும் கேட்டு வாங்கி உண்டாள்.

மகானின் மகத்தான கருணையையும், அவரது அற்புத ஆற்றல்களையும் எண்ணி வியந்தனர் பக்தர்கள்.

guru samadhi

இவ்வாறு மாமனிதராய் வாழ்ந்து மகத்தான தொண்டு புரிந்த இம்மகான் செப்டம்பர் 20, 1928ல் கேரளத்தில் மகா சமாதி அடைந்தார். அவர் மறைவிற்குப் பின், அவரது நினைவைப் போற்றும் வகையில் இந்திய, இலங்கை அரசுகள் அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவம் செய்தன. 2006இல் ஸ்ரீ நாராயண குருவின் 150வது பிறந்த நாளின் போது இந்திய அரசு அவர் நினைவாக நாணயம் ஒன்றை வெளியிட்டுச் சிறப்புச் செய்தது.

சாதி, மதம், இனம், மொழி என எல்லாவற்றையும் கடந்து, எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, மக்கள்பால் மனிதநேயம் மிக்கவர்களாக இருப்பதால் தான் இதுபோன்ற புனிதர்கள் மகான்கள் என்றழைக்கப்படுகின்றனர் இல்லையா?.

மகான்களைப் போற்றுவோம்! மனித நேயம் வளர்ப்போம் !!

*****

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.