”வெளியேற்றம்” – யுவன் சந்திரசேகர்

வாழ்க்கை எனும் சுழலில் சிலரால் மிக எளிதாக நீந்தி அக்கறை செல்ல முடிகிறது. சிலரால் சுழலில் சிக்கி தவித்து, இளைத்து, எப்படியாவது மீண்டு விட மாட்டோமா என மூச்சுக்குமுட்டி, மோதி மீள முடிகிறது. சிலர் நீந்தவும் தெரியாமல், மூழ்கவும் விருப்பமில்லாமல் தத்தளித்து சுழலுக்குள்ளேயே சிக்கிச் சின்னாபின்னமாகின்றனர். அந்த விதத்தில் பார்த்தால் வாழ்க்கை என்பது ”இப்படித்தான்” என்று வரையறை செய்ய இயலாததாக உள்ளது. அப்படிப்பட்ட வாழ்க்கைச் சூழலிலிருந்து வெளியேறும் சிலரது வாழ்க்கை பற்றிப் பேசுகிறது  யுவன் சந்திரசேகர் எழுதி  உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள  “வெளியேற்றம்” புதினம்.

வெளியேறுதலும் வெளியேற்றப்படுதலுமே மனித அனுபவத்தின் சாரமாக இருக்கின்றன. குடும்பம், நம்பிக்கைகள் மற்றும் தம்மைப் பிடித்திருக்கும் ஏதெனும் ஒன்றிலிருந்து மனிதர்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்புகள்தாம் அந்த வெளியேற்றத்தை நிகழ்த்துகின்றன. அவை சில சமயம் தண்டனையாகவும் சில சமயம் விடுதலையாகவும் உருக்கொள்கின்றன.” என்கிறது நூலின் பின் அட்டை. உண்மைதான். ஆனால் அது விடுதலையா அல்லது தண்டனையா என்பதை வெளியேறுபவரால் அவ்வளவு எளிதில் அறிந்து கொள்ள முடிவதில்லை. காரணம், சமயங்களில் அந்த விடுதலைகளே தண்டனைகளாகவும் ஆகிவிடக் கூடும் என்பதினால் தான்.

வெளியேற்றத்தின் கதை என்ன?

சில பிரச்சனைகளால் சிலர் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். அவர்கள் யார், அவர்களுக்கு இருக்கும் பிரச்சனை என்ன, ஏன் வெளியேறுகிறார்கள், அவர்கள் யாரைச் சந்திக்கிறார்கள், அதன் பின் அவர்கள் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதை வாழ்வின் பல்வேறு தரிசனங்களோடும் தத்துவச் சிக்கல்களோடும், வித்தியாசமான வாழ்வியல் அனுபவங்களோடும் கலந்து சொல்வதுதான் வெளியேற்றத்தின் கதை. ஆனால்… கிட்டத்தட்ட 500 பக்கங்கள் உடைய இப்புதினத்தை இவ்வாறு ஓரிரு வரிகளில் குறிப்பிடுவது முறையில்லை. இப்புதினத்தின் கதையைச் சற்றே விரிவாகப் பார்த்தால்தான் இது கூறும் பல செய்திகளை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.

சந்தானம் – சித்ரா மனமொத்த தம்பதியர். சந்தானம் ஒரு எல்.ஐ.சி. முகவர். இனிமையான இல்லற வாழ்க்கை. இரு குழந்தைகள். வாழ்க்கையில் சலிப்பு ஏற்படும் நாற்பது வயதைக் கடந்தவர் சந்தானம். இல்லற வாழ்க்கையின் அலுப்பு அவருக்கும் இருக்கிறது. ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சந்தானம் திருவண்ணாமலை செல்கிறார். லாட்ஜில் தங்குகிறார். அங்கு மற்றோர் அறையில் இருக்கும் ஒரு நபர் தமது வித்தியாசமான செயல்பாட்டால் சந்தானத்தைக் கவர்கிறார். மெல்ல அவருடன் பரிச்சயம் ஏற்படுகிறது. கணபதி என்னும் பெயர் கொண்ட அவர் தனது கதையைச் சொல்லத் தொடங்குகிறார். கேட்க கேட்க சந்தானத்துக்கு அதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. கணபதி யாரைச் சந்திக்கக் காத்திருக்கிறாரோ அவரை தானும் சந்திக்க விரும்புகிறார் சந்தானம். இருவரும் சேர்ந்து அண்ணாமலை ஆலயத்துக்குச் செல்கின்றனர். அங்கு அவர்களுக்கு ஏற்படும் அனுபவம் புதினத்தின் முதல் திருப்புமுனை. ஆர்வத்தால் உந்தப்பட்ட சந்தானம், கணபதியின் மனைவியைச் சந்திக்கிறார். அவர் சொல்லும் அனுபவங்களும், நபர்களும் மேலும் பிரமிப்பைத் தருகின்றனர். அவர்களைச் சந்திக்க விழைகிறார். தேடல் தொடர்கிறது. ஹரிஹர சுப்ரமணியத்தில் தொடங்கி மன்னாதி, சிவராமன், ராமலிங்கம், பால்பாண்டி, குற்றாலிங்கம், வைரவன், கோவர்த்தனம், ஜய்ராம், ஆனாருனா என்று பல தரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கிறார் சந்தானம். அமைப்பிலிருந்து வெளியேறிய அவர்களின் வாழ்க்கை கதைகளாகவும் சம்பவங்களாகவும், அனுபவங்களாகவும் விரிகிறது. இந்தத் தொடர்ச் சங்கிலியில் தானும் ஒரு கண்ணியாக அல்லாமலேயே அந்தச் சங்கிலியின் மூலத்தை அறிய விழைகிறார் சந்தானம். அதன் முழுமையை அறிய அவர் காசிக்குச் செல்ல நேர்கிறது. அங்கு அவருக்குக் கிடைக்கும் அனுபவம், தரிசனம் என்ன, அதுவரையான பயணத்தில் சந்தானம் அறிந்து கொண்டது, தெரிந்து கொண்டது என்ன, புரிந்து கொண்டது எது என்பதை மிக விரிவாகச் சொல்கிறது ”வெளியேற்றம்”

இது கதைச் சுருக்கம் மட்டுமே. இந்நாவல் முன்னும் பின்னுமாக ஊற்று, புனல், இடைமுகம், யாத்திரை, சங்கமம் என பல்வேறு பாகமாக விரிகிறது. முதலில் நாம் சந்திக்கும் வாழ்க்கையின் சவால்களைச் சந்திக்க இயலாது தோற்று, பின்தங்கி, அஞ்சி வெளியேறும் நபர்களையே பின்னால் வேறொரு பரிணாமம் பெற்றுச் சந்திக்க நேரும் போது ஒரு வாசகனாக அடையும் அந்த பிரமிப்பும், அனுபவமும் வாசித்தே அறிய வேண்டிய ஒன்று. பாத்திரங்களோடு நாமும் பயணிக்கும் உணர்வை, நாவலோடு நாமும் வாழும் உணர்வை ஏற்படுத்துகின்றது யுவனின் எழுத்து.

யுவன் சந்திரசேகர்

’வெளியேற்றம்’ மிக ஆழமாக, சுவாரஸ்யமாக பல மானுடர்களின் வாழ்க்கையை கண்முன் விரிக்கிறது. ஒருவிதத்தில் பார்த்தால் இது தத்துவம் பேசுகிறது. மறுபுறத்தில் இது வாழ்க்கையை, அதன் வலியை, வேதனையை, இன்பத்தை, ஒரு நொடியில் மலரும் அதன் ஆனந்தத்தை, ஏன் வாழ வேண்டும், என்பதற்கான மனிதனின் விழைவை நோக்கத்தை மிக அற்புதமாகச் சொல்கிறது. பல்வேறு பிரச்சனைகளால் சிக்குண்டு, மீளும் வழி அறியாது, திகைத்து, வெறுத்து, விடுதலை விரும்பி, மாற்றத்தைத் தேடி வீட்டை விட்டு வெளியேறும் சிலரது வாழ்வைப் பற்றிக் கூறுவதால் இந்நூலுக்கு ”வெளியேற்றம்” என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கிறதுதான். ஆனால் உண்மையில் “வெளியேற்றம்” என்ற இந்நாவலின் தலைப்பு வீட்டை விட்டு வெளியேறிச் செல்லும் சிலரது வாழ்வையோ அல்லது அவர்களது செயல்பாடுகளையோ குறிக்கவில்லை.  பின் அது எதைக் குறிக்கிறது?

அதை பின்னால் பார்ப்போம்.

(தொடரும்)

அரவிந்த்

****

1 thoughts on “”வெளியேற்றம்” – யுவன் சந்திரசேகர்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.