சுத்தானந்தம்

சுத்தானந்த பாரதியார் யோக பிரம்மச்சாரி. ‘கவியோகி’ என்று போற்றப்பட்டவர். சுதந்திரப் போராட்ட வீரர். இவர், 11-05-1897ல், சிவகங்கையில் ஜடாதர அய்யருக்கும், காமாட்சி அம்மாளுக்கும் நான்காவது மகனாகப் பிறந்தார். இயல்பிலேயே இவருக்கு கவி எழுதும் ஆற்றலும் ஆன்மிகத் தேடலும் இருந்தது.“பாரத சக்தி மகா காவியம்” என்ற காவிய நூலை இயற்றினார். ஆன்ம தாகத்தால் இந்தியாவின் பல இடங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். சித்தாரூடர், ஞானசித்தர், மேஹர் பாபா, ஷிர்டி பாபா, சேஷாத்ரி ஸ்வாமிகள், அரவிந்தர், அன்னை என பல மகான்களை, ஞானிகளைச் சந்தித்து ஆசி பெற்றார். பி.வி.நரசிம்ம சுவாமிகள் எழுதிய பகவான் பற்றிய நூலைப் படித்தது முதல் அவரைச் சந்திக்க ஆர்வம் கொண்டிருந்தார். பகவானைச் சந்தித்து விட்டு வந்த வ.வே.சு. ஐயரின் புகழ் மாலை, அவரை உடனடியாக அண்ணாமலைக்குச் செல்லும்படித் தூண்டியது. ஆன்மிகப் பயணமாக மைசூருக்குச் சென்றவர், உடன் அங்கிருந்து அண்ணாமலைக்குப் புறப்பட்டு வந்தார்.

நண்பர் ஒருவரின் இல்லத்தில் தன் சாமான்களை வைத்துவிட்டு, உடனே மலையை நோக்கிச் சென்றார். பகவான் தவமிருந்த இடங்கள், குகைகளையெல்லாம் கண்டதும், தன் நிலை குறித்து வெட்கமும், பகவானின் ஆன்ம சாதனை குறித்து பெருமிதமும் தோன்றியது. “அந்தோ வாழ்வை வீணாக்கினோம்! நிலை தெரியாது அலைந்தென்னபயன்? தன்னையறியாது பிறருக்கு அறிவு புகட்டும் மடமையினும் மடமை வேறில்லை! சர்வசக்தியின் இச்சையால் அனைத்தும் அததன் இயல்பின்படி நடக்க, நாம் குறுக்கிடுவதேன்?!” என்றெல்லாம் மனதுள் எண்ணினார்.

ஆச்ரமத்தை அடைந்தார். கணபதி முனிவரைக் கண்டு வணங்கினார். பகவான் அங்கு தன் கண்ணுக்குக் காணப்படாததால், “பகவான் எங்கே?” என்று வினவினார்.

sudha

முனிவர், “அங்கே” என்று வலப்புறம் சுட்டிக் காட்டினார்.

வலப்புறம் திரும்பிப் பார்த்தார். அங்கே முதலில் வெட்ட வெளி மட்டுமே அவர் கண்ணுக்குத் தெரிந்தது. பின்னர் திருநீற்றுக் குவியலைக் கண்டார். அடுத்து மிகப் பெரிய ஜோதி அவர் கண்களுக்குப் புலப்பட்டது. ஒன்றும் புரியாமல் குழம்பி மீண்டும் கணபதி முனிவரைப் பார்த்தார். பின் மீண்டும் வலப்புறம் பார்த்தபொழுது பகவான் அங்கே கால்களை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்திருப்பது புலப்பட்டது.

மஹர்ஷி ரமணர்
மஹர்ஷி ரமணர்

பகவானை வணங்கித் தொழுதார்.

உடனே பகவான், “பாரதியா, பராசக்தி எழுதியிருக்கிறார்” என்று கணபதி முனிவரிடம் சொல்லி அறிமுகப்படுத்தி, அவரை வரவேற்றார்.

உடன் மூர்ச்சையானார் சுத்தானந்த பாரதி.

பின் கண் விழித்து எழுந்தபொழுது பகவான் அவரையே பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டார். பகவான் அப்போது சிவ சொரூபமாகக் காட்சி அளித்தார். அது பற்றி சுத்தானந்த பாரதியார், “மனிதனில்லை கண்டது! ஒரு ஜோதிர்லிங்கத்தையே கணணாரக் கண்டது. பகவானுடைய தலை லிங்கம்போன்றது. சுகாஸனத்திலிருந்த கால்கள் ஆவுடை போன்றன. மூன்று மடிப்புகளுடன் உயர்ந்த ‘பொன்னர் மேனி’ லிங்கத்தின் உடல்போன்றது. இக் காட்சி மனமயக்கமல்ல! அப்படியே கண்டது. ஸத்குருவும், ஜோதிமலையும், ஜோதிர்லிங்கமும் ஒன்றெனத் தெளிந்தது. விருப்பு வெறுப்பற்ற விமலனே முன்னின்முன்!” என்று தனது ‘ஸ்ரீ ரமண விஜயம்’ நூலில் பதிவு செய்திருக்கிறார்.

திகைத்து நின்று கொண்டிருந்த சுத்தானந்தரிடம், பகவான் அவரிடம், “பாரதி இங்கு சாப்பிடுமா?” என்று அன்போடு வினவினார். சுத்தானந்த பாரதியும் தலையசைத்தார். அவருக்கு பேச்சே வரவில்லை. பின் மெள்ள மெள்ள தன் இயல்பு நிலைக்குத் திரும்பினார். பகவானோடு ஆச்ரமத்தில் பல மாதங்கள் தங்கி, அவர் செல்லுமிடமெல்லாம் கூடவே சென்று, பல கேள்விகள் எழுப்பி, பல சந்தேகங்களைக் கேட்டு நிவர்த்தி செய்து கொண்டு பகவானின் வாழ்க்கை வரலாற்றை ‘ஸ்ரீரமண விஜயம்’ என்ற தலைப்பில் தமிழில் எழுதினார். அதுதான் தமிழில் வெளியான பகவானின் முழு முதல் தெளிவான வாழ்க்கை வரலாற்று நூலாகும்.

ரமண பகவான் காலத்திலேயே, அவர் தம் வாழ்க்கை வரலாற்றை முதன் முதலில் எழுதிய பெருமைக்கு உரியவர் சுத்தானந்த பாரதியார். ரமணரால் சரிபார்க்கப்பட்டு வெளியாகிய அந்த நூலே ரமணரைப் பற்றி தமிழர்கள் பலரும் பரவலாக அறியக் காரணமானது. ரமணர் வழி நின்று வாழ்வாங்கு வாழ்ந்தவர் சுத்தானந்தர். தன் இறுதிக் காலத்தில் “சுத்தானந்த யோக சமாஜம்” என்னும் அமைப்பை நிறுவி, தனித்த யோக வாழ்வை மேற்கொண்டு வாழ்ந்தவர், 7-3-1990ல், தமது 93ம் வயதில் மஹாசமாதி அடைந்தார்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீரமணாய!