திருத்தளிநாதர்

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது ஆன்றோர்களின் திருவாக்கு. மனிதர்கள் மேன்மைடையும் பொருட்டே மகரிஷிகளாலும், மகான்களும், மன்னர்களாலும், மக்கள் நலம் கொண்டோராலும் ஆலயங்கள் உருவாக்கப்பட்டன. அவ்வாலயங்களில் காலமாறுபாட்டால் பல உருத் தெரியாமல் சிதைந்து அழிந்து பட்டாலும் நிலைத்து நின்று நலம் சேர்த்து வருபவை பல. அவற்றுள் ஒன்று சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூரில் அமைந்துள்ள திருத்தளிநாதர் ஆலயம். வான்மீகி மகரிஷி இங்கு புற்று வடிவில் அமர்ந்து தவம் செய்து வழிபட்டதாகவும், அதனாலேயே இத்திருத்தலத்திற்கு ‘திருப்புத்தூர்’ என்று பெயர் வந்ததாகவும் ஆலய வரலாறு கூறுகின்றது. காலப்போக்கில் இப்பெயர் மருவி தற்போது திருப்பத்தூர் என்று அழைக்கப்படுகிறது. இங்கு உறைந்திருக்கும் இறைவன் புத்தூரீசர் என்றும் திருத்தளிநாதர் என்றும் அழைக்கப்படுகின்றார். அன்னை சிவகாமி அம்பாளாக, சௌந்தரநாயகியாக அருள் பாலிக்கிறார்.

tiru 1

இத்தலத்து இறைவனை திருநாவுக்கரசர் வந்து வழிபட்டுள்ளார். அவர்,

மின்காட்டுங் கொடிமருங்குல் உமையாட் கென்றும்
விருப்பவன் காண் பொருப்புவலிச் சிலைக் கையோன் காண்
—————————————————–
—————————————————–
தென்காட்டுஞ் செழும்புறவின் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண் அவன் என் சிந்தையானே

என்று தமது திருப்புத்தூர் திருத்தாண்டகத்தில் புகழ்ந்து பாடியுள்ளார்.

ஞான சம்பந்தப் பெருமானும்,

நெய்தல் ஆம்பல் கழுநீர் மலர்ந்து எங்கும்
செய்கண் மல்கு சிவனார் திருப்புத்தூர்த்
தையல் பாகம் மகிழ்ந்தார் அவர் போலும்
மையுள் நஞ்சம் மருவும் மிடற்றாரே
(திருப்புத்தூர்ப் பதிகம்: 7)
என்று தொழுதேத்தியிருக்கிறார்.

பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இத் திருத்தலத்தில் உமாதேவியும், மகாலட்சுமியும் பூஜித்து அருள் பெற்றுள்ளனர். இந்திரனின் மகன் ஜயந்தன் வந்து வழிபட்ட பெருமையும் இத்தலத்துக்கு உண்டு.

ஆலய வரலாறு

திருத்தளிநாதர் இங்கு எழுந்தருள அன்னை ஸ்ரீ மகாலட்சுமியே முக்கியக் காரணம். ஈசனாகிய இறைவன் பல்வேறு தாண்டவங்களை நிகழ்த்தினான். அவற்றில் கௌரி தாண்டவமும் ஒன்று. அதனைக் காண விரும்பிய ஸ்ரீ மகாலட்சுமி இறைவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். அவருக்கு இறைவன் காட்சி தந்து, கௌரி தாண்டவம் ஆடிக்காட்டிய இடமே இவ்வாலயமாகும். அதனால் தான் திரு (மகாலட்சுமி) வழிபட்ட ஆலயம் என்னும் பொருள் தரும்படியாக இவ்வாலயம் ‘திருத்தளிநாதர்’ ஆலயம் என்று அழைக்கப்படுவதாகத் தலபுராணம் கூறுகின்றது. இங்குள்ள ஸ்ரீ மகாலட்சுமியை வணங்குபவர்களுக்கு வளமும், நலமும் கிட்டும் என்பது நம்பிக்கையாகும்.

tiru 2

ஆலயச் சிறப்பு

இத் திருத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் ஸ்ரீ யோக நாராயணர் சன்னதி. . யோக நரசிம்மரை நாம் அறிவோம். யோக ஆஞ்சனேயரையும் அறிவோம். ஏன் யோக தட்சிணாமூர்த்தியையும் அறிவோம். ஆனால் ஸ்ரீமன் நாராயணனே யோக நிலையில் வீற்றிருப்பது இத் திருத்தலத்தின் சிறப்பம்சம். பிருகு முனிவரால் ஏற்பட்ட சாபம் நீங்க விஷ்ணு இங்கே வந்து இறைவனை வழிபட்டு சாப நிவர்த்தி ஆனதாக வரலாறு.

yoga bairavar

யோக பைரவர்

இங்கு இருக்கும் பைரவர் சன்னதியும் சிறப்பு வாய்ந்ததாகும். உலகில் தோன்றிய முதல் பைரவ மூர்த்தம் இதுதான் என இவ்வாலயக் குறிப்பு கூறுகின்றது. இங்குள்ள பைரவர் ‘ஆதி பைரவர்’ என்று அழைக்கப்படுகின்றார். பொதுவாக பைரவர் கையில் சூலத்துடனும், நாய் வாகனத்துடனும், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதே மரபு. ஆனால் இங்குள்ள பைரவர் அமர்ந்த நிலையில், யோக நிஷ்டையில் காணப்படுகின்றார். அதனால் ‘யோக பைரவர்’ என்று அழைக்கப்படுகின்றார். இந்திரன் மகன் ஜெயந்தனைக் காப்பதற்காக இவர் திரு அவதாரம் செய்ததாகக் கோயில் குறிப்பு கூறுகின்றது. சஷ்டி, அஷ்டமி நாட்களில் இவருக்குச் சிறப்பு ஆராதனை, அபிஷேகம், வழிபாடு, யாகங்கள் செய்யப்படுகின்றன. பைரவருக்குப் புனுகு சார்த்தப்பட்டு, வடைமாலை அணிவிக்கப் பெற்று, அவருக்கு மிகவும் உகந்ததான சம்பா சாதம் தினம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இவரது வழிபாட்டில் கலந்து கொண்டாலோ அல்லது இங்கு வந்து நியமத்தோடு வேண்டிக் கொண்டாலோ சத்ரு பயம், ஏவல், பில்லி, சூனியம் போன்ற தொல்லைகள், வியாபாரக் கஷ்ட நஷ்டங்கள், வேலை பற்றிய பிரச்னைகள் நீங்குவதாக நம்பிக்கை. அர்த்தசாம வழிபாட்டிற்காக பூஜை மணியடித்து விட்டால் (பூஜகர், பரிசாரகர் தவிர) அதன் பின் யாரும் பைரவர் இருக்கும் பகுதிக்குச் செல்லக் கூடாது என்பது தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கப்படும் ஐதீகம். பைரவர் அவ்வளவு உக்ரமானவராகக் கருதப்படுகிறார். உக்ரத்தைத் தணிக்க பைரவரைச் சங்கிலியால் பிணைத்து வைத்தலும் உண்டு.

மற்ற சிறப்புகள்

இங்கு யோக பைரவர், யோக நாராயணர் ஆகியோர் உள்ளனர். ஸ்ரீ மகாலட்சுமியும், வால்மீகி முனிவரும் தவம் செய்துள்ளனர். அந்த வகையில் யோகத்துக்கும் தவத்துக்கும் இதுவோர் அற்புதமான திருத்தலமாகும். வாசுகி, கார்கோடகன் ஆகிய நாக இனங்களும் வந்து பூஜித்து வழிபட்ட தலம். ஆதலால் சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அது நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

கோயிலுள் உள்ள ஆடல்வல்லானின் உருவமும் சிவகாமி அம்மையின் அழகும் கண்டு இன்புறத்தக்கது. அழகான சிற்ப வேலைப்பாடு அமைந்த ஐந்து இசைத் தூண்களூம் இங்குள்ளன. துர்க்கையும் தனிச் சன்னதியில் வீற்றிருக்கின்றாள். ஸ்ரீ விநாயகரும் வன்னி மரத்து விநாயகராக எழுந்தருளியிருக்கிறார். ஸ்ரீ முருகப் பெருமானும் தனிச்சன்னதியில் அருள் பாலிக்கின்றார். அவரை,

வேலை தோற்க விழித்துக் காதினில்
ஓலை காட்டி நகைத்துப் போதொரு
வீடுகாட்டி யுடுத்தப் போர்வையை – நெகிழ்வாகி
————————————————–
————————————————–
சேல றாக்கயல் தத்தச் சூழ்வய
லூர வேற்கர விப்ரர்க் காதர
தீர தீர்த்த திருப்புத் தூருறை – பெருமாளே.

என அருணகிரிநாதர் தம் திருப்புகழில் புகழ்ந்து பாடியிருக்கிறார். நாவுக்கரசர், சம்பந்தர், அருணகிரிநாதர் போன்றோர் வந்து வழிபட்டிருப்பதன் மூலம் இவ்வாலயத்தின் தொன்மையையும், பெருமையையும் அறிந்து கொள்ள முடிகிறது. பாண்டிய மன்னர்கள் பலரும் இத் தலத்திற்குத் திருப்பணி செய்துள்ளனர். மருதுபாண்டியர்களால் ஆராதிக்கப் பெற்ற தலம். பல்வேறு கல்வெட்டுக்களும் காணக்கிடைக்கின்றன. தலவிருட்சம் கொன்றை. தீர்த்தங்கள் திருத்தளி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம்.

இத்தகைய சிறப்பு மிக்க, புராதனமான இந்த ஆலயம், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேருந்து நிலையத்தின் அருகில், திருப்பத்தூரிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் பிள்ளையார்பட்டி, குன்றக்குடி செல்லும் மார்க்கத்தில் உள்ளது. சமீபத்தில் தான் இவ்வாலயக் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பான முறையில் நடந்தேறியது. பிள்ளையார்பட்டி, குன்றக்குடி செல்பவர்கள் இவ்வாலயத்தையும் தரிசித்து வருதல் சிறப்பு.

******

 

ஸ்ரீ பைரவ வழிபாடு – 9

ஸ்ரீ பைரவரைத் துதிக்கும் சில ஸ்லோகங்கள்/துதிகள் இங்கே…

பைரவர்

 

இத்தகைய ஸ்தோத்திரங்களினால் நம் தீராத வினைகள் எல்லாம் தீர்ந்து நன்மை விளையும் என்பது ஐதீகம். கொடிய வல்வினைகளையும் நொடியில் போக்கும் தன்மை கொண்டவை இந்த ஸ்தோத்திரங்கள். ஆனால் இவற்றைத் துதிக்கும் முன் கீழ்கண்டவை சரியாக இருந்தால்தான் பூரண பலன் கிட்டும்.

1. இவற்றைத் துதிப்பவர்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

2. தினம்தோறும் குளித்து முடித்து விட்டு பக்தியுடனும் ஆச்சாரத்துடனும் இந்த ஸ்தோத்திரங்களைச் சொல்லி இறைவனைத் தொழ வேண்டும்.

3. புறதூய்மையோடு அகத்தூய்மையும் மிக அவசியம்.

4. தொடர்ந்து 48 நாட்கள் தடையில்லாமல் நம்பிக்கையோடு சொல்லி வர பலன் நிச்சயம்.

5. மந்திரங்களை சரியாக உச்சரிக்க இயலாதவர்கள் குருமார்கள் மூலம் சரியான உச்சரிப்பைக் கேட்டறிந்து  அதன் படி பாராயணம் செய்யவும்.

 

இனி பாராயண மந்திரங்கள்

 

காசி கால பைரவர்

 

 

1. ஆதி சங்கரர் அருளிய கால பைரவாஷ்டகம்

தேவராஜஸேவ்யமானபாவனாம்க்ரிபங்கஜம்
வ்யாலயக்யஸுஉத்ரமின்துஷேகரம் க்ருபாகரம் .
நாரதாதியோகிவ்ரு‍ந்தவந்திதம் திகம்பரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         

பானுகோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம்
நீலகண்டமீப்ஸிதார்ததாயகம் த்ரிலோசனம் .
காலகாலமம்புஜாக்ஷமக்ஷஷுஉலமக்ஷரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         

ஷூலடம்கபாஷதண்டபாணிமாதிகாரணம்
ஷ்யாமகாயமாதிதேவமக்ஷரம் நிராமயம் .
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம்
காஷிகாபுராதிநாதகாலபைரவம் பஜே ..          

புக்திமுக்திதாயகம் ப்ரஷஸ்தசாருவிக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோகவிக்ரஹம் .
வினிக்வணன்மனோக்யஹேம கிங்கிணீலஸத்கடிம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         

தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்கனாஷனம்
கர்மபாஷமோசகம் ஸுஷர்மதாயகம் விபும் .
ஸ்வர்ணவர்ணஷேஷ்ஹபாஷஷோபிதாம் கமண்டலம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         

ரத்னபாதுகாப்ரபாபிராமபாதயுக்மகம்
நித்யமத்விதியமிஷ்டதைவதம் நிரம்ஜனம் .
ம்ரு‍த்யுதர்பனாஷனம் கராலதம்ஷ்ட்ரமோக்ஷணம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         

அட்டஹாஸபின்னபத்மஜாண்டகோஷஸம்ததிம்
த்ரு‍ஷ்டிபாத்தனஷ்டபாபஜாலமுக்ரஷாஸனம் .
அஷ்டஸித்திதாயகம் கபாலமாலிகாதரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         

பூதஸம்கனாயகம் விஷாலகீர்திதாயகம்
காஷிவாஸலோகபுண்யபாபஷோதகம் விபும் .
நீதிமார்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         

          பல ச்ருதி ..
காலபைரவாஷ்டகம் படம்தி யே மனோஹரம்
க்யானமுக்திஸாதனம் விசித்ரபுண்யவர்தனம் .
ஷோகமோஹதைன்யலோபகோபதாபனாஷனம்
ப்ரயான்தி காலபைரவாம்க்ரிஸன்னிதிம் நரா த்ருவம்

இதி ஸ்ரீமத் சங்கராசார்ய விரசிதம்
ஸ்ரீ காலபைரவாஷ்டகம் சம்பூர்ணம் ..

 

2. ஸ்ரீ பைரவர் காயத்ரி மந்திரங்கள்

ஒம் ஷ்வானத் வஜாய வித்மஹே !

சூல ஹஸ்தாய தீமஹி !

தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!

 

ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே

ஸ்வாந வாஹாய தீமஹி

தந்நோ பைரவ: ப்ரசோதயாத்

 

ஓம் திகம்பராய வித்மஹே

தீர்கதிஷணாய தீமஹி

தந்நோ பைரவ: ப்ரசோதயாத்

 

3. சொர்ணாகர்ஷண பைரவ மந்திரம்

 

ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம்

ஹ்ரூம்ஸக: வம் ஆபத்துத்தாரணாய

அஜாமிலா பத்தாய லோகேஸ்வராய

ஸ்வர்ணாகர்ஷண பைரவாய

மம தாரித்தர்ய வித்வேஷணாய

ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம:

 

4.ஸ்ரீ பைரவ த்யானம்

 

ரக்த ஜுவால ஜடாதரம் சசிதரம்

ரக்தாங்க தேஜோமயம்

ஹஸ்தே சூலகபால பாச டமரும்

லோகஸ்ய ரக்ஷா கரம்

நிர்வாணம் ஸுநவாகனம்

திரிநயனஞ்ச அனந்த கோலாகலம்

வந்தே பூத பிசாச நாதவடுகம்

ஷேத்ரஷ்ய பாலம்சிவம் .

 

எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்யும் தன்மை மிக்க ஸ்ரீ பைரவரை முறைப்படித் தொழுது வணங்க நம் தீரா வினைகள் அனைத்தும் தீரும்.

 

ஓம் ஸ்ரீ பைரவாய நமஹ!

 

பைரவர்