எது துறவு?

பகவானின் பால்ய கால நண்பர்களுள் விளாசேரி ரங்கய்யரும் ஒருவர். பகவானின் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவருக்கு இல்வாழ்க்கையில் சொல்லொணாத் துன்பங்கள். அதனால் மிகவும் மனம் வருந்தினார். பகவானைத் தரிசிக்க ஆச்ரமம் வந்தார்.

பகவானுடன் பேசிக் கொண்டிருந்தபோது, “பகவான், வாழ்க்கை ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. சந்நியாசம் வாங்கிக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்” என்றார்.

உடனே பகவான் தன் அருகில் இருந்த புத்தக அலமாரியிலிருந்து ‘பக்த விஜயம்’ என்னும் நூலை எடுத்துக் கொடுத்து, அதில் வரும் ‘விட்டோபா’ என்ற பக்தரின் கதையைப் படிக்குமாறு அறிவுறுத்தினார்.

அவர் படித்து முடித்ததும் பகவான், “விட்டோபா, தன் குடும்பத்தை விட்டுவிட்டுக் காடு நோக்கிப் போனபோது, அவர் மகன் ஞானதேவ் தேடி வந்தான். ‘ஒருவன் மனம் காட்டுக்குப் போனாலும் வீட்டுக்குப் போனாலும் அது கூடவே செல்கிறது’ என்றான். ‘ஞானத்தை வீட்டிலிருந்தேயும் கூட ஒருவரால் அடைய முடியும்’ என்று அறிவுறுத்தினான். உண்மையை உணர்ந்த விட்டோபாவும் வீடு திரும்பினார். ஆகவே எங்கே இருந்தாலும் ஒன்றுதான். மனம் தான் எல்லாவற்றிற்கும் காரணம்!” என்றார்.

உடனே ரங்கையர், பகவானிடம், “அப்படியானால் நீங்கள் ஏன் சந்நியாசி ஆனீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு பகவான், “என்ன செய்வது? அது என் பிராரப்தம். குடும்பப் பாரம் சுமப்பது கடினமானதுதான். ஆனால் ஞானம் பெற இதுவே ரொம்ப எளிதான வழி!” என்றார்.

ரங்கையரும் உண்மை உணர்ந்தார். மனம் தெளிந்தார். நாளடைவில் பகவானின் கருணையினால் அவரது எல்லாப் பிரச்சனைகளும் படிப்படியாக விலகின. வாழ்வில் மேன்மையடைந்தார். எப்போதும் பகவானையே துதித்து வாழ்வில் நிறைவடைந்தார்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீரமணாய!

ஸ்ரீ ஸ்கந்த விஜயம் -1

ஸ்கந்தன் என்றும் முருகன் என்றும் சுப்ரமண்யன் என்றும் போற்றப்படும் குமரக் கடவுள் குன்றிருக்கும் இடமெல்லாம் குகனிருக்கும் இடமாய் எழுந்தருளி காட்சி அளிக்கின்றான். அத்தகைய பெருமை மிக்க முருகப்பெருமானின் விசேஷ சன்னதிச் சிறப்பு வாய்ந்த சில தலங்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

ஆறுமுகப் பெருமான்

1. தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி – தீர்த்தத் தொட்டியில், விருப்பாச்சி ஆறுமுகநாயனார் கோயில் உள்ளது. இத்தலத்து முருகனை நாக சுப்பிரமணியர் என்கின்றனர்.  ராகு கேதுவினால் ஏற்படும் தோஷங்களை இவர் நீக்குவதாக ஐதீகம். ராகு – கேது, காலசர்ப்ப தோஷம், நாக தோஷம் போன்றவற்றால் பாதிக்கப்படும் அன்பர்கள் இவருக்கு அபிஷேக, அர்ச்சனை செய்து பலனடையலாம். கருவறையில், நாகத்தின் மத்தியில், வலதுபுறம் திரும்பிய மயிலுடன் நின்ற கோலத்தில் இவர் காட்சியளிக்கிறார். கோயிலுக்கு அடியில் ‘தீர்த்தம்’ ஒன்று வற்றாமல் எப்போதும் சுரந்தபடியே இருக்கிறது. இதன் பெயராலேயே இத்தலம் ‘தீர்த்தத் தொட்டி’ எனப்படுகிறது. பங்குனி உத்திரத்தன்று இவரை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. பங்குனி உத்திரத்தன்று இங்கு வெகு சிறப்பாக விழாக்கள் நடைபெறுகிறது.

2. முருகனுக்கு பொதுவான வாகனமாக மயில் இருந்தாலும், இந்திரன் கொடுத்த யானை மற்றும் அன்னம், ஆடு, குதிரை ஆகியவையும் வாகனங்களாக இருந்து வருகின்றது. திருப்பரங்குன்றத்தில் இந்த நான்கு வாகனங்களையும் காணலாம். திருவிழாக்காலங்களில் சுப்பிரமணியர் இந்த வாகனங்களில் எழுந்தருளுகிறார். சில கோயில்களில் கோழி வாகனமும் உண்டு. சங்க இலக்கியமான பரிபாடலில் முருகனின் வாகனமாக ‘மேடம்’ எனும் ஆடு குறிப்பிடப்பட்டுள்ளது.

3. மதுரையில் இருந்து திருச்சி செல்லும் வழியில் உள்ள ஊர் வெள்ளிமலை. இங்குள்ள முருகன் கோயிலில் தல விருட்சமான கல்லத்தி மரத்தின் அடியில் வேல் மட்டும் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. இக்கோயிலில் பங்குனி உத்திரத்தன்று பக்தர்கள் பாறையில் அங்கப் பிரதட்சணம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இங்கு வேண்டிக்கொண்டால் ஆணவம் நீங்கி பணிவு குணம் வரும் என்பது நம்பிக்கை. முருகன் இங்கும் ஆணவ,கன்ம,மாயா மலங்களை நீக்கி ஞானம் தருவதாக ஐதீகம்.

ஷண்முக நாதன்

4. எட்டுக்குடி சவுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் சிலையில் ஒரு சிறப்பு உண்டு. இங்குள்ள சன்னதியில் உள்ள மயிலின் கால்கள் சேர்த்து இணைக்கப்பட்டும், அதன் நகம் பின்னப்பட்டும் இருக்கிறது.  ஐந்தரை அடி உயரத்தில் இருக்கும் இந்த முருகனின் சிலை வடிக்கப்படும்போது சிலையில் ரத்த ஓட்டமும், வியர்வையும் தோன்றியதாம். எனவே, முருகன் மயிலுடன் பறந்து விடுவாரோ என அச்சம் கொண்ட சிற்பி, மயிலின் கால்களை சேர்த்து கட்டிய நிலையில் சிலை வடித்தாராம். மயிலின் கால் நகத்தை பெயர்த்தும் விட்டாராம். இதனால்,  சிலையில், மயிலின் நகம் பெயர்ந்து இருக்கிறது. இதை தரிசிப்பதால் நமது பாவங்கள் அனைத்தும் பறந்தோடி விடும் என்பது நம்பிக்கை.

5. கரூர் அருகே உள்ள ஊர் வெண்ணெய் மலை. இத் தலத்தில் முருகன் தனியாக வேல், மயில், வள்ளி, தெய்வானை இல்லாமல் காட்சி தருகின்றார்.

(தொடரும்)