தென்றல் சிறுகதைப் போட்டி 2011

தென்றல் சிறுகதைப் போட்டி 2011

தென்றல் ஆகஸ்ட் இதழ்

வெளிநாட்டுத் தமிழர்களின் கலை, கலாசார, பண்பாட்டு வளர்ச்சிக்குப் பாலமாகத் திகழும் அமெரிக்க மாத இதழான தென்றல் 2011-ம் ஆண்டிற்கான சிறுகதைப் போட்டியை அறிவித்துள்ளது.

உலகளாவிய தமிழர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

முதல் பரிசு – $ 250/- (இந்திய மதிப்பில் ரூபாய் சுமார் 10000/-)

இரண்டாம் பரிசு – $ 150/- (இந்திய மதிப்பில் ரூபாய் சுமார் 6000/-)

மூன்றாம் பரிசு – $ 100/- (இந்திய மதிப்பில் ரூபாய் சுமார் 4000/-)

கடந்த பதினோரு ஆண்டுகளாக அமெரிக்காவில் தமிழ்ச் சேவையாற்றி வரும் தென்றல், படைப்பூக்கமும் தமிழார்வமும் கொண்ட உலகளாவிய தமிழர்களை/ எழுத்தாளர்களை வரவேற்கிறது.

கதைகள் சமூகம், அறிவியல், நகைச்சுவை என பல களங்களில் அமையலாம்.

மேல் விவரங்களுக்குச் சுட்டவும்.

தென்றல் சிறுகதைப் போட்டி 2011

Advertisements

விஷ்ணு தனுசு – 3

பரசுராமர்

 

பரசுராமன் இராமனை நோக்கி, “இராமா, நீ ஒடித்த வில் ஊனமுற்ற வில். அது முன்னமே சிவனுக்கும் விஷ்ணுவுக்கு ஏற்பட்ட போரில் முறிந்து போன ஒன்று. அதை நீ முறித்ததெல்லாம் பெரிய வீரத்தில் சேர்த்தியில்லை. (ஒருவரால் முடியாத ஒரு காரியத்தை வேறொருவர் வெற்றிகரமாக முடித்து விட்டால், அந்த ஒருவர் அந்த வெற்றியையும், வெற்றிச் செயலையும் எப்படி இழித்தும் பழித்தும் கூறுவாரோ அப்படியே பேசுகிறான் பரசுராமனும். ஆனறவிந்தும் அவனுக்கு ஆணவம் அழியவில்லையே, அதுதான் காரணம்)  அப்போரில் வெற்றிபெற்ற விஷ்ணுவின் வில் இதோ இருக்கிறது. இதை உன்னால் வளைக்க முடியுமா?” என்று சவால் விடுகிறான்.

“உலகெலாம் முனிவர்க் கீந்தேன் உறுபகை ஒடுக்கிப் போந்தேன்

அலகில்மா தவங்கள் செய்தோர் அருவரை யிருந்தேன் ஆண்டைச்

சிலையைத் இறுத்த ஓசை செவியுறச் சீறிவந்தேன்

மலைகுவென் வல்லை யாயின் வாங்குதி தனுவை யென்றான்”

”நான் உன் குல க்ஷத்திரிய அரசர்களைக் கொன்று வென்ற உலகம் முழுவதையும் முனிவர்களுக்குக் கொடுத்துவிட்டு, வேறு பகைவர்கள் இல்லையென்று எண்ணி, துறவு பூண்டு ஒரு மலையில் தங்கி தவம் செய்துகொண்டிருந்தேன். நீ வில்லை முறித்த ஓசை என் செவியில் விழுந்தது. அந்த ஆரவாரம் என் தவத்தைக் கலைத்துவிட்டது. ’இன்னும் வீரனான ஒரு ஷத்ரியன் எங்கோ உயிரோடு இருக்கிறான்’ என்று கோபங் கொண்டு இங்கே வந்தேன். நீ ஆற்றல் உள்ளவன் என்றால் உன்னோடு போர் செய்வேன். அதற்கு முன்னால், உன்னால் முடிந்தால் முதலில் இந்த வில்லை வளைத்துப் பார்” என்கிறான் பரசுராமன்.

பரசுராமன்

 

அதைக் கேட்டவுடன் இராமன் முகத்தில் எழும்புகிறது பாருங்கள் ஒரு சிரிப்பு. ஆஹா.. அது தெய்வீகச் சிரிப்பா… அல்லது பாவம் இந்த பிராமணன் என்ற பரிதாபச் சிரிப்பா… எவ்வளவோ செய்கிறோம், இதைச் செய்ய மாட்டோமா? இதெல்லாம் ஒரு விஷயமா என்று எழுந்த கிண்டல் சிரிப்பா….

இராமன்

 

புன்சிரித்த ராமன், பரசுராமனிடம் வில்லைக் கேட்கிறான்.

“…………………………………………….இராமனும் முறுவல் எய்தி

நன்றொளிர் முகத்தன் ஆகி நாரணன் வலியின் ஆண்ட

வென்றிவில் தருக என்னக் கொடுத்தனன் வீரன் கொண்டான்

துன்றுஇருஞ் சடையோன் அஞ்சத் தோள்உற வாங்கிச் சொல்லும்”

செருக்கோடும் தவ வேகத்தோடும் கோபவெறியோடும் தோன்றிய பரசுராமன், தன் கையிலிருந்த விஷ்ணு தனுசை இராமன் கையில் கொடுக்கிறான். இராமன் அதை வாங்கிச் சும்மா அநாயசமாக வளைப்பது கண்டு பரசுராமன் அப்படியே திகைத்துப் போய் நின்று விடுகிறான். ஆச்சர்யமும் நடுக்கமும் கொள்கிறான். ”நாம நினைச்சது மாதிரி இந்தப் பையன் சாதாரண ஆள் இல்லையோ, உண்மையிலேயே சரக்கு உள்ளவன் தானோ” என எண்ணி, தனக்குள் வெட்கி, தலையைக் கவிழ்ந்து கொள்கிறான்.

இராமன் ரதத்தில் இருக்கிறான். உடன் அவன் பிரியத்துக்குரிய காதலி. சும்மா பைக்கில் ஊர் சுற்றும் டுபாக்கூர் காதல்ர்களே சீன் காட்டும் போது ராமன் என்ன செய்திருக்க வேண்டும்? நம்ம சினிமா நாயகர்கள் மாதிரி சும்மா பிளந்து கட்டிருக்கணும் இல்ல. ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை. அப்படிச் செய்திருந்தால் அவன் சாதாரண ராமனாக அல்லவா இருப்பான். அவன் அவதார புருடனல்லவா? அந்தக் கோசலை ராமன், பரசுராமனைப் பார்த்து மெல்ல நகைக்கிறான். பின்,

“” பூதலத் தாசை யெல்லாம் பொன்றுவித் தனை யென்றாலும்

வேதவித் தாய மேலோன் மைந்தன் நீ விரதம் பூண்டாய்

ஆதலில் கொல்லலாகா(து) அம்பிது பிழைப்ப தன்றால்

யாதிதற்(கு) இலக்கமாவது? இயம்புதி விரைவின்”

என்றான்.

“பரசு மாமு, நீ உலகத்திலுள்ள அரச குலத்தாரையெல்லாம் கொன்ற கொலைஞன்; எனவே, என் தண்டனைக்குரியவன். இருந்தாலும் உன்னை நான் மன்னிக்கிறேன். உனக்காக அன்று. உயர்ந்த ஒழுக்கங்களை உடைய மேலோனாகிய உன் தந்தையார் பொருட்டே இந்த மன்னிப்பு. ரிஷி புத்திரனாகிய நீ தவ வேஷத்தோடு விரதம் பூண்டிருக்கிறாய். இனியாவது நீ கொலைத் தொழில் விட்டு நல்வழிப்படுதல் கூடுமென்று நினைக்கிறேன். ஆகையால் உன்னை நான் கொல்லப் போவதில்லை. இந்த வில்லில் தொடுத்த அம்பு வீண் போவதன்று. எனவே இதற்கு இலக்கு யாது? விரைவாகச் சொல்” என்றான்.

என்ன பதில் சொல்வான், பரசுராமன்? எப்போது இராமன் அநாயசமாக நாணேற்றினானோ அப்போதே அவன் கர்வம் அழிந்து விட்டது. ஆணவம் அகன்று விட்டது. இராமன் ஓர் அவதார புருடன் என்ற உண்மையையும் உணர்ந்து விட்டான்.


நீதியாய்! முனிந்திடேல்; நீ இங்கு யாவர்க்கும்

ஆதி; யான் அறிந்தனென்; அலங்கல் நேமியாய்!

வேதியா இறுவதே அன்றி, வெண் மதிப்

பாதியான் பிடித்த வில் பற்றப் போதுமோ?

 

பொன்னுடை வனை கழல் பொலம் கொள் தாளினாய்!

மின்னுடை நேமியன் ஆதல் மெய்ம்மையால்;

என் உளது உலகினுக்கு இடுக்கண்? யான் தந்த

உன்னுடை வில்லும், உன் உரத்துக்கு ஈடு அன்றால்

 

‘எய்த அம்பு இடை பழுது எய்திடாமல், என்

செய் தவம் யாவையும் சிதைக்கவே!’ என,

கை அவண் நெகிழ்தலும், கணையும் சென்று, அவன்

மை அறு தவம் எலாம் வாரி, மீண்டதே.இராமனின் அந்தக் கேள்விக்கு தன் தவமே இலக்கு என்று கூறி தன் கர்வம் அழிந்து அவனை வாழ்த்தித் தொழுது போகிறான் பரசுராமன்.

இராமனை வெல்ல வந்தவனின் மனதை அன்பால் இராமன் வென்று விட்டான். இராமனின் அன்பு நெறி பகைவன மனத்தையும் மாற்றிப் புனிதனாக்கியது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

இராமர் பட்டாபிஷேகம்

 

 

ஓம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்


(புகைப்படங்கள் – நன்றி – கூகிள் இமேஜஸ்)  

***************************