பாஸா.. பெயிலா?

ராமச்சந்திரன். திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். அவருக்கு கணக்கு மட்டும் சரியாக வரவில்லை. மற்றப் பாடங்களில் நன்கு மதிப்பெண் பெற்றார். ஆயினும் கணக்கில் அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை.

பள்ளிக்கு எதிரே ஒரு சத்திரம் இருந்தது. அங்கே சில சமயம் சேஷாத்ரி சுவாமிகள் வந்து உட்கார்ந்து கொள்வதுண்டு. அவரிடம் மாணவர்கள் சென்று தாங்கள் ‘பாஸா’ ‘பெயிலா’ என்று கேட்பது வழக்கம். அவரும் சிலரிடம் ‘பாஸ்’ என்பார். சிலரை ‘பெயில்’ என்று சொல்வார். இது அவருக்கு ஒரு விளையாட்டு. ஆனால் அவர் சொன்னபடியேதான் எப்பொழுதும் நடக்கும் என்பதால் அவர் அங்கு வந்தால், அவரைச் சுற்றி எப்பொழுதும் மாணவர்கள் கூட்டம் இருக்கும்.

seshu

ஒருநாள் மகான் அங்கே உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தார் ராமச்சந்திரன். அவர் அருகே சென்று வணங்கினார்.

“எனக்கு கணக்கு சரியாக வரவில்லை. மகான்தான் அருள் புரிய வேண்டும்” என்று மகானை வணங்கிக் கண்ணீர் சிந்தினார்.

“போ.போ எல்லாம் நன்னா வரும்” முதுகில் தட்டிக் கொடுத்த மகான் போய் விட்டார்.

அதன்படியே ராமச்சந்திரன் அந்த ஆண்டு கணக்கில் முதன்மையாகத் தேறினார். பிற்காலத்தில் அரசில் உயர்பதவியும் வகித்தார்.

இப்படி பலருக்கு அவர்களது வருங்காலம் குறித்து உரைத்திருக்கிறார் மகான் சேஷாத்ரி.

முக்காலமும் அறிந்தவர் அவர்!!

ஸத்குருவே சரணம்!!!

வணங்குகிறவன் யார், வணங்கப்படுபவன் யார்?

விரூபாஷிக் குகையில் பகவான் ரமணர் தங்கியிருந்தபோது மகான் சேஷாத்ரி சுவாமிகள் அடிக்கடி அங்கே வந்து செல்வார். இருவரும் ஒருவரை ஒருவர் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பர். சில சமயம் அரிதாக ஏதாவது ஆன்மீக விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பர். அவ்வாறு ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும் போது அருணாசலத்தைப் பற்றிப் பேச்சு திரும்பியது.

அடுத்தவர் மனதில் நினைப்பதை எளிதில் ஊகித்தறியும் சேஷாத்ரி சுவாமிகளால், ரமணரின் மனதில் என்ன இருக்கிறது என்பதை உணர முடியவில்லை. ஏனென்றால், தான், தனக்கு என்று தனித்த எந்த சிந்தனையும் அற்ற பரப்ரம்ம நிலையிலேயே ரமணர் எப்பொழுதும் இருந்து வந்தார்.

உடனே சேஷாத்ரி சுவாமிகள், “இது என்ன நினைக்கிறதோ தெரியவில்லையே!” என்றார் மகரிஷியைச் சுட்டிக் காட்டி.

ரமணரோ வழக்கம்போல் பதில் ஏதும் பேசாமல் இருந்தார்.

“அருணாசலேஸ்வரரை வணங்கினால் நற்கதி கிடைக்கும். முக்தி உண்டு” என்றார் சேஷாத்ரி சுவாமிகள்.

ramana seshan

“சரிதான். வணங்குகிறவன் யார்?, வணங்கப்படுபவன் யார்?” என்று எதிர் வினா எழுப்பினார் ரமணர்.

“அதுதானே தெரியவில்லை” என்றார் சேஷாத்ரி சுவாமிகள் எல்லாம் தெரிந்திருந்தும் ஒன்றுமே தெரியாதவரைப் போல.

உடனே ரமணர், பிரம்ம சூத்திரம், ஞான வாசிட்டம் போன்ற நூல்களிலிருந்தெல்லாம் அத்வைத தத்துவத்தை சிறப்பாக விளக்கிக் கூறி, ‘அகம் பிரம்மாஸ்மி” என்ற கருத்தையும் விளக்கி, “சர்வம் பிரம்ம மயம்” என்ற உண்மையை அழகாக நிலைநாட்டினார்.

இதைக் கேட்டு மிகவும் மனம் மகிழ்ந்த சேஷாத்ரி சுவாமிகள், ரமணரை வாழ்த்தி விட்டு, அண்ணாமலையை மேலும் பல முறை வணங்கிவிட்டுச் சென்றார்.