இசை கேட்டு எழுந்தோடி…

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவன் இறைவன். அந்த செந்தமிழ்ப் பாடல்களில் பல நம் மனத்திற்கும் நினைவிற்கும் என்றும் இனிமையைத் தரக்கூடியவை. அன்று முதல் இன்று வரை எத்தனையோ இசையமைப்பாளர்கள், எவ்வளவோ இனிமையான பல பாடல்களைத் தந்துள்ளனர். பல்வேறு புதுமைகளைச் செய்துள்ளனர். நம் நெஞ்சை விட்டு என்றும் நீங்காத அவற்றிலிருந்து சில நினைவுகள்.

ஜி.ராமநாதன்
இவர் தன் இசையமைப்பில் பல்வேறு புதுமைகளைச் செய்தவர். பல பிரபலமான பாடகர்களை இசையுலகிற்கு அறிமுகம் செய்தவர். பல்வேறு இசைக் கோர்வைகளை இணைத்து புதிய பல ராகங்களைப் படைத்தவர். அவர் இசையமத்த படங்களுள் ஒன்றுதான் மந்திரிகுமாரி. திருச்சி லோகநாதனும் ஜிக்கியும் இணைந்து பாடியிருக்கும் இந்தப் பாடல் வெளிவந்த காலத்தில் மிகவும் சூப்பர் ஹிட்.

பாடல் ….. உலவும் தென்றல் காற்றினிலே
படம் …… மந்திரிகுமாரி
பாடியவர்கள் ……. திருச்சி லோகநாதன் – ஜிக்கி
இசைமயைத்தவர் ….. ஜி. ராமநாதன்.

இது என்றும் நம் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் பாடல்களில் ஒன்றல்லவா?

சி.ஆர். சுப்பராமன்
பழங்கால இசையமைப்பாளர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடம் பெற்றிருந்தவர் இசை மேதை சி.ஆர். சுப்பராமன். மிகவும் எளிமையான இவர், அனைவரிடமும் அன்போடு பழகக் கூடியவர். அவர் இசையமைத்த தேவதாஸ் பாடல்கள் அப்போது மிகவும் பிரபலம். கதைக்காக மட்டுமல்லாமல் பாடலுக்காகவும் ஓடிய படம் என்று தேவதாஸைச் சொல்லலாம். அதுவும் இந்தப் பாடலை நாம் என்றுமே மறக்க முடியாது.

பாடல் — துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே…
படம் — தேவதாஸ்
பாடியவர் — கண்டசாலா
இசையமைப்பு — சி.ஆர்.சுப்பராமன்

மடப்பள்ளி ராமராவ்
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் ஆந்திராவில் இருந்து வந்தும் பல இசையமைப்பாளர்கள் இங்கு கொடிகட்டிப் பறந்தார்கள். தங்களது இனிய இசையமைப்பாலும், தேர்ந்தெடுத்த குரல்களாலும் அவர்கள் உருவாக்கிய பாடல்கள் காலத்தால் அழியாது நிற்கின்றன. அப்படிப்பட்ட பாடல்களில் இதோ ஒன்று. இதற்கு இசையமைத்தவர் மடப்பள்ளி ராமராவ்.

பாடல் — கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம்
படம் — தாய் உள்ளம்
பாடியவர் — எம். எல்.வசந்தகுமாரி
இசையமைப்பு — மடப்பள்ளி ராமராவ்.

ராஜேஸ்வரராவ்
பல இசையமைப்பாளர்கள் தெலுங்கிலும் சரி, தமிழிலும் சரி அருமையான பாடல்களை வழங்கியிருக்கிறார்கள். பாடலாசிரியர்களும், தங்கள் பாங்கிற்கு சிறப்பாக பாடல்களை இயற்றித் தர, பல அற்புதமான இசைப் பொக்கிஷங்களை இவர்களால் உருவாக்க முடிந்தது. முக்கியமாக ராஜேஸ்வரராவ் பல இனிமையான பாடல்களுக்குச் சொந்தக்காரர். அவர் இசையமைத்த பல பாடல்கள் அழகான கர்நாடக ராகத்தின் சாயலில் அமைந்தும், கேட்பவர்களைப் பரவசப்படுத்தும்படியாகவும் இருக்கும். இதோ அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்று…

பாடல்… மாயமே நானறியேன்
படம் ….. மிஸ்ஸியம்மா
பாடியவர் ….. பி.லீலா
இசை …. ராஜேஸ்வர ராவ்

எஸ்.வி.வெங்கட்ராமன்
எஸ்.வி.வெங்கட்ராமன். கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையில் பாடல்கள் அமைக்கப்பெறும் பொழுது, அதில் உள்ள சங்கதிகள் எனப்படும் ஒலிக்கோர்வைகள் மிக முக்கியமானவை. ஸ்வரம் தவறாமல் பாடுவதும், அதற்கேற்ப இசையமைத்தும் மிக மிக முக்கியம். அதில் மிகவும் கவனம் செலுத்தி, பல ஜாம்பவான்களை தனது இசையில் பாட வைத்த பெருமைக்குரியவர் எஸ்.வி.வெங்கட்ராமன். அதிலும் சகுந்தலை படத்தில் பிரபல கர்நாடக இசைப் பாடகர்களான ஜி. என்.பி – எம். எஸ். சுப்புலட்சுமி குரல்களில் ஒலித்த இந்தப் பாடல், அந்தக் காலத்தின் சிறந்த டூயட் பாடல்களில் ஒன்று.

பாடல் — பிரேமையில்…
படம் — சகுந்தலை
பாடிவர் — ஜி. என்.பி – எம். எஸ். சுப்புலட்சுமி
இசை — எஸ்.வி.வெங்கட்ராமன்

கண்டசாலா.
கண்டசாலா, சிறந்த பின்னணிப் பாடகர் மட்டுமல்ல; மிகச் சிறந்த இசையமைப்பாளரும் கூட. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல சிறந்த பாடல்களை இவர் அளித்திருக்கிறார். கள்வனின் காதலி படத்திற்கு இவர் M.R. கோவிந்தராஜுலு நாயுடுவுடன் இணைந்து இசை அமைத்த பாடல்கள் அக்காலத்தில் சூப்பர் ஹிட். இது கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடல்… வெயில்கேற்ற நிழல் உண்டு..
படம் … கள்வனின் காதலி
பாடியவர் …. கண்டசாலா-பானுமதி
இசை ….. கண்டசாலா – M.R. கோவிந்தராஜுலு நாயுடு

விஸ்வநாதன்-ராமமூர்த்தி
இசையமைப்பில் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்வதர்களுள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணை மிகவும் குறிப்பிடத்தகுந்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து இசையமைத்த பல பாடல்கள் பட்டி தொட்டி என்றும் ஒலித்து கேட்பவர்களை பரவசத்துக்குள்ளாக்கியது. அதுவும் மாலையிட்ட மங்கை படத்துக்கு அவர்கள் இசை அமைத்த பாடல்கள், நடிகர் டி.ஆர்.மகாலிங்கத்தின் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசச் செய்தது. எத்தனையோ பாடல்கள், எத்தனையோ சாதனைகள்…

பாடல்… செந்தமிழ் தேன் மொழியாள்..
படம் – மாலையிட்ட மங்கை
பாடியவர்.. டி.ஆர்.மகாலிங்கம்
இசை… விஸ்வநாதன்-ராமமூர்த்தி

டி. ஆர். பாப்பா
டி. ஆர். பாப்பா. பெயரில் தான் இவர் பாப்பா. ஆனால் இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் நெஞ்சில் என்றும் நீங்காத நினைவலைகளைத் தோற்றுவிப்பதாய் இருந்தன. அதுவும் டவுன்பஸ் படத்திற்காக கவி காமுஷெரீப்பின் பாடலிற்கு அவர் இசை அமைத்திருந்த விதம் மிகவும் சிறப்புற அமைந்திருந்தது. அதிலும் குறிப்பாக இந்தப் பாடல் கேட்பவரின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளச் செய்வதாய் இருக்கிறதல்லவா?

பாடல் — பொன்னான வாழ்வே
படம் — டவுன்பஸ்
பாடியவர்கள் — திருச்சி லோகநாதன், M.S. ராஜேஸ்வரி.
இசை — டி.ஆர். பாப்பா

கே.வி.மகாதேவன்
கே.வி.மகாதேவன். திரை இசைத் திலகம் என்று போற்றப்பட்டவர். இசைக்கும், ராகத்துக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து பாடல்களை அமைத்தவர். பாடல்களில் பழைமையையும் புதுமையையும் சரிவிகத்தில் கலந்து புதியதொரு பாணிக்கு அடித்தளமிட்டவர். அதுவும் பக்திப் பாடல்களுக்கு அவர் இசை அமைத்த பாடல்கள் சாகாவரம் பெற்றவை. அவர் இசையமைத்த பாடல்களுள் இந்தப் பாடல் என்றும் இசை ரசிகர்களின் காதில் மறக்காமல் ஒலித்துக் கொண்டே இருக்கும். காரணம் பாடலைப் பாடியவர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று முப்பெரும் மேதைகளும் இணைந்து பணியாற்றியது தான். அந்தப் பாடல்….

பாடல்.. அமுதும் தேனும் எதற்கு…
படம் — தை பிறந்தால் வழி பிறக்கும்
பாடியவர் — சீர்காழி கோவிந்தராஜன்
இசை — கே.வி.மகாதேவன்.

ஏ. எம். ராஜா
கல்யாண பரிசு. அந்தக் காலத்தில் வெளி வந்து வெள்ளி விழாக் கண்ட படம். இயக்குநர் ஸ்ரீதருக்கு மிகுந்த பெயரையும் புகழையும் வாங்கிக் கொடுத்த படம். ஜெமினி கணேசனின் மறக்க முடியாத நடிப்பும், சரோஜாதேவி வெளிப்படுத்திய முக பாவங்களும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவை. பாடல்களைப் பாடியதோடு மட்டுமல்லாமல், இசையும் அமைத்து தான் ஒரு தேர்ந்த இசை அமைப்பாளர் என்பதை இந்தப் படத்தின் மூலம் நிரூபித்தார் , ஏ. எம். ராஜா அவர்கள். அதுவும் இந்தப் பாடல் காதலில் தோல்வியுற்றவர்களின் உள்ளத்தை உருக்கச் செய்யும் சோக ரசப்பாடல்.

பாடல் — காதலிலே தோல்வியுற்றான்…
படம் — கல்யாண பரிசு
பாடியவர் — ஏ. எம். ராஜாஇசை — ஏ. எம். ராஜா

ஆதி நாராயண ராவ்
ஆதி நாராயண ராவ். குறிப்பிடத்தகுந்த இசையமைப்பாளரான இவர், தனது பாடல்களில் ‘மெலோடி’க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். இரைச்சலூட்டும் அதிக வாத்தியக்கருவிகளைப் பயன்படுத்தாமல், மென்மையான பாடல்களை அமைதியான நல்ல இசையின் மூலம் தந்தவர். இதோ இந்தப் பாடல் அவர் நினைவை என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறதே!

பாடல் — அழைக்காதே…
படம் —- மணாளனே மங்கையின் பாக்கியம்
பாடியவர் — சுசீலா குழுவினர்
இசை — ஆதி நாராயண ராவ்.

S.M. சுப்பையா நாயுடு
S.M. சுப்பையா நாயுடு. தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களுள் குறிப்பிடத் தகுந்தவர். பல அற்புதமான பாடல்களை வெள்ளித் திரைக்குத் தந்தவர். அதுவும் மலைக்கள்ளன் படத்திற்கு அவர் அமைத்திருந்த இசை, அந்தப் படத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், எம்.ஜி.ஆர்., S.M. சுப்பையா நாயுடு என்ற வெற்றிக் கூட்டணி மீண்டும் நாடோடி மன்னன் படத்தில் இணைந்தது. வெற்றிப் பாடல்களைத் தந்தது. அந்தப் பாடல்…

பாடல் — எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்…
படம் — மலைக்கள்ளன்
பாடியவர் — பானுமதி – டி.எம். எஸ்
இசை — S.M. சுப்பையா நாயுடு

தக்ஷிணாமூர்த்தி
தக்ஷிணாமூர்த்தி. தமிழ் திரைப்படத்தின் குறிப்பிடத்தகுந்த இசையமைப்பாளர்களுள் இவரும் ஒருவர். சதா இசை பற்றிய சிந்தனையிலே இருந்த இவர், தமிழில் பல வெற்றிப் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். அவை காலத்தால் மறக்க முடியாதவை. இதோ அவற்றிலிருந்து ஒன்று…
பாடல் — மாசிலா உண்மைக் காதலே….
படம் — அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
பாடியவர் — ஏ. எம். ராஜா
இசை — தக்ஷிணாமூர்த்தி.

இதுவரை பெரிய தேன் குடத்திலிருந்து சில துளிகள் மட்டும் பருகினோம். தொடர்ந்து மீண்டும் சுவைப்போம்.

Advertisements

ஞான சத்குரு ஸ்ரீ ஞானானந்த சுவாமிகள்


”தபோவனத்திற்கு என்னை நாடி வருபவர்களின் வாழ்க்கையை நான் பார்த்துக் கொள்ளுவேன்”.

“கலியுகத்தில் இறைவனை அடைவதற்கு எளிய வழி, பக்தி யோகமும், கர்ம யோகமும் தான்”.

”கலியுகத்தில் நாம சங்கீர்தத்தனமே முக்திக்கு வழி” – இது போன்று பல்வேறு அமுத மொழிகளைத் தம்மை நாடி வந்த பக்தர்களிடையே உபதேசித்து அவர்களை நல்வழிப்படுத்திய மகான் ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள். கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் வரை வாழ்ந்ததாகக் கூறப்படும் இம்மகான் கபீர்தாஸ், ஷிர்டி சாயிபாபா, ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், ராமலிங்க அடிகளார், சற்குரு சுவாமிகள், விட்டோபா சுவாமிகள், ஸ்ரீ அரவிந்தர் எனப் பல மகான்களைச் சந்தித்த பெருமைக்குரியவர்.

gnanandhar 3

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்கள புரி என்னும் ஊரில் வெங்கோபா சாஸ்திரிகள்-சக்குபாய் தம்பதிகளுக்கு மகவாகத் தோன்றினார் ஞானானந்த சுவாமிகள். இயற்பெயர் சுப்ரமண்யம். சிறுவயது முதலே ஆன்மிக நாட்டமும் இறை நம்பிக்கை உடையவராகவும் விளங்கினார். ஒருநாள் தியானத்தின் போது பேரொளியின் தரிசனம் கிட்டியது. அவ்வொளியின் வழிகாட்டலின் பேரில் குடும்பத்தைத் துறந்து தல யாத்திரை மேற்கொண்டவர், பண்டரிபுரத்திற்குச் சென்று அங்கேயே வசிக்கலானார்.

ஒரு முறை பண்டரிபுரம் வந்திருந்த காஷ்மீர் ஜோதிர்லிங்க பீடாதிபதி ஸ்ரீ சிவரத்தின கிரி சுவாமிகள் சுப்ரமண்யத்தை தன்னுடன் அழைத்துச் சென்றார். அவரை தனது சீடனாக ஏற்றுக் கொண்டவர் வேத, வேதாந்தக் கருத்துக்களைக் கற்றுத் தந்தார். பின் தீக்ஷை அளித்து ’ஞானானந்தர்’ என்ற நாமம் சூட்டி மடாதிபதியாக நியமித்தார். அப்பீடத்தின் தலைவராக சிலகாலம் விலங்கிய ஞானானந்தர் குருவின் மறைவிற்குப் பின் வேறு ஒருவருக்குப் பட்டம் சூட்டி, மீண்டும் தல யாத்திரை மேற்கொண்டார்.

இமயமலைக்குச் சென்று பல முனிவர்களையும் ரிஷிகளையும் சந்தித்தார். அற்புத சித்துக்கள் கைவரப்பெற்றார். மூப்பையும், பிணியையும் அகற்றி நீண்ட காலம் வாழ வல்ல காய கல்ப மூலிகையை அம்முனிவர்களின் ஆசியோடு பெற்றுக் கொண்டார். பின் மீண்டும் தல யாத்திரை மேற்கொண்டவர், இலங்கை உட்பட பல இடங்களுக்கும் சென்று இறுதியில் தமிழகம் வந்தடைந்தார்.

தமிழகத்தில் சேலம், கொல்லி மலை, போளூரில் உள்ள சம்பத் கிரி மலை, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் தங்கி தவம் செய்தார். பின் திருக்கோவிலூர் – திருவண்ணாமலை சாலையில் அமைந்திருந்த தபோவனத்தை தமது வாழ்விடமாகக் கொண்டார்.

எப்பொழுதும் சிரித்த முகம். எளிமையான காவி உடை. சற்று பருத்த தேகம். கருணை பொங்கும் கண்கள். அனைவரையும் அரவணைக்கும் தாய் உள்ளம் – என ஸ்ரீ சுவாமிகள் அன்பின் மறு உருவாய் இருந்தார். தம்மை நாடி வருவோரின் மன இருளை நீக்கி அவர்களின் உள்ளத்தில் ஆன்ம ஜோதியை ஏற்றி வைத்தார். மேலும் வந்திருப்பவர்களின் பக்குவ நிலைக்கேற்ப அவர்களுக்கு நல்வழி காட்டினார்.

gnanandhar1

கலியுகத்தில் இறைவனை அடைவதற்கு எளிய வழி, பக்தி யோகமும், கர்ம யோகமும் தான் என சுவாமிகள் வலியுறுத்தினார். அகண்ட நாம பஜனை ஒருவனை ஆண்டவனிடம் கொண்டு சேர்க்கும் என்பதும், நான், எனது என்ற அபிலாஷைகளை விடுத்து ஒருவன் தன் கடமைகளைச் செய்யும் போது அதுவே யோகமும், தியானமும், தவமும் ஆகிறது என்பதும் சுவாமிகளின் அருள் வாக்காகும். சுவாமிகள் வலியுறுத்திய மிக முக்கிய மற்றொரு விஷயம் அன்னதானமாகும். தம் ஆசிரமத்திற்கு வருபவர் யாராயினும் பசியோடு இருத்தல் கூடாது என்று கருதிய ஸ்ரீ சுவாமிகள், தாம் இருக்கும் பொழுதே நித்ய அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்தார். சுவாமிகளின் அக்கருணைச் செயல் இன்றளவும் தொடர்கிறது. “அன்ன விகாரம் அதுவே விகாரம்” என்று கூறும் சுவாமிகள், எப்பொழுது, எந்த நேரத்தில் யார் தம்மை நாடி வந்தாலும், வருபவரின் வயிற்றுப் பசியை முதலில் நீக்கி விட்டே, ஆன்ம பசிக்கு உணவளிக்க வருவார். அப்படிப்பட்ட கருணாநிதியாக, அன்ன பூரணியாக, அன்ன தாதாவாக ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள் விளங்கினார்.

சுவாமிகளிடம் பல்வேறு அற்புதங்கள் செய்யும் ஆற்றல் இருந்தது. ஆனால் அவற்றை அவர் அதிகம் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அவை ஆன்ம முன்னேற்றத்தின் படிநிலைகளில் ஒன்று என்பதே அவரது கருத்து. ஆயினும் சமயங்களில் தம்மை நாடி வந்த் சிலருக்கு அவர்கள் எதிர்காலம் குறித்து, வேலை, தொழில், திருமணம், குழந்தைகள் குறித்து, பின்னால் நடப்பதை முன்னரே தனது ஞான திருஷ்டியால் கணித்து சுவாமிகள் கூறியிருக்கிறார். துன்பங்களில் இருந்து காப்பாற்றி இருக்கிறார். அறவுரைகள் கூறி நல்வழிப்படுத்தி இருக்கிறார்.

சுவாமிகள் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேல் வாழ்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவருக்கு பல முறை பற்கள் முளைத்துக் கீழே விழுந்தது என்றும், ஒரே சமயத்தில் பல இடங்களில் காட்சி அளித்திருக்கிறார் என்றும் அவரது வரலாறு தெரிவிக்கிறது. சுவாமிகளின் முக்கிய சீடராக விளங்கியவர் சுவாமி ஹரிதாஸ் கிரி அவர்கள் ஆவார். இவர் தமது குருநாதருக்கு அருள் புரிந்த பாண்டுரங்கனுக்கு தென்னாங்கூர் என்னும் ஊரில் ஓர் அற்புத ஆலயம் அமைத்துள்ளார். பண்டரிபுர ஆலய அமைப்பில் அமைக்கப்பட்டுள்ள இக்கோயில் கலை அழகும், சிற்ப நயமும் கொண்டு விளங்குகிறது. தன் குரு நாதரின் உத்தரவுப்படி, பஜனைப் பாடல்கள் மூலமும், அன்பர்கள் மூலம் நிதி திரட்டியுமே இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பம்சமாகும். (ஸ்ரீ ஹரிதாஸ் கிரி சுவாமிகள், தாம் முன்னரே அன்பர்களுக்கு அறிவித்திருந்தபடி கங்கையில் குளிக்கும் பொழுது “ஜல சமாதி” ஆகி விட்டார்.)

“பரமஹம்ஸ பரிவ்ராஜக ஆச்சர்யர்” என்று அன்பர்களால் அழைக்கப்பட்ட ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள் மக்களுக்கு பல்வேறு உபதேசங்களையும் செய்துள்ளார். அவற்றுள் கீழ்கண்டவை மிகவும் முக்கியமான உபதேசங்களாகும்.

சுறுசுறுப்பாயிரு; ஆனால் படபடப்பாயிராதே
பொறுமையாயிரு; ஆனால் சோம்பலாயிராதே
சிக்கனமாயிரு; ஆனால் கருமியாயிராதே
அன்பாயிரு; ஆனால் அடிமையாயிராதே
இரக்கங் காட்டு; ஆனால் ஏமாந்து போகாதே
கொடையாளியாயிரு; ஆனால் ஓட்டாண்டியாகி விடாதே
வீரானாயிரு; ஆனால் போக்கிரியாயிராதே
இல்லறத்தை நடத்து; ஆனால் காமவெறியனாயிராதே
பற்றற்றிரு; ஆனால் காட்டுக்குப் போய் விடாதே
நல்லோரை நாடு; ஆனால் அல்லோரை வெறுக்காதே.

உன் மனதிற்கு நீ அடிமையானால் உலகிற்கு நீ அடிமையாவாய். உன் மனம் உனக்கு அடங்கினால் உலகம் உனக்கு அடங்கும்.

ஒவ்வொரு மனிதனின் லட்சியமும் ஆத்ம தரிசனத்தை அடைவதே ஆகும். புலனடக்கம், தியானம், நாம சங்கீர்த்தனம், பொறுமை இவையே அதற்கு உதவி செய்யும்.

உண்மையான ஆன்ம உணர்வு உடைய ஒருவன் குருவைத் தேடி சதா சர்வ காலமும் அலைய வேண்டியதில்லை. குருவே அவனைத் தேடி வருவார். ஆனால் குருவின் அருள் இல்லாமல் ஒருவன் இறை அனுபூதி பெறுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். கடலில் பயணம் செய்ய படகு மட்டும் போதாது. துடுப்பும் வேண்டும். அது போல சம்சாரமாகிய கடலைக் கடந்து, ஞானமாகிய இறைநிலையை ஒருவன் அடைய குருவின் ஆசி அவசியம் தேவை.

gnanandhar 2

ஒரு மனிதனின் மூன்று தீய குணங்களான ஆணவம், கர்மம், மாயை என்பது விலகினால் கடவுளை அடையும் பாதை அவனுக்கு எளிதாகிறது.

ஒருவன் புண்ணிய நதியில் குளிப்பதால் அந்த நதிக்கு எந்தப் பயனுமில்லை. ஆனால் அவன் உடலில் உள்ள அழுக்குகளும், மாசுக்களும் அதனால் விலகுகின்றன. அது போல குரு தரிசனம் செய்வதாலும், மகான்கள், புண்ணிய சீலர்களைத் தரிசிப்பதாலும் ஒருவனின் பாவங்கள், குற்றங்கள், குறைகள் மன மாசுக்கள் விலகி அவனுக்குத் தான் நன்மை உண்டாகின்றதே அன்றி அந்த குருவிற்கு இல்லை.

– இவ்வாறு பல்வேறு உண்மைகளை பக்தர்களுக்கு உபதேசித்து அவர்களை ஆன்ம வழிக்குத் திருப்பிய மகான் ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள் 1974 ஆம் ஆண்டு ஜனவரி 9 அன்று, மகா சமாதி அடைந்தார். திருக்கோவிலூர் அருகே உள்ள தபோவனத்தில் அவரது சமாதி ஆலயம் அமைந்துள்ளது. இன்றளவும் ஆன்ம ஞானம் தேடி வருவோர்க்கு அமுதூட்டும் அருள் ஆலயமாய் அது விளங்கி வருகிறது.

குரு மகான்களைத் தொழுவோம்; குறைகளைக் களைவோம்.

***