கிருஷ்ணா.. கிருஷ்ணா…

அவர் ஒரு வடநாட்டு பக்தர். கிருஷ்ண பகவானையே தனது வழிபடு கடவுளாகக் கொண்டிருப்பவர். எப்போதும் கிருஷ்ண நாமத்தையே சொல்லிக் கொண்டிருக்கும் அவர், முதன் முறையாக ரமணாச்ரமம் வந்திருந்தார். ஆச்ரமத்திலேயே தங்கிக் கொள்ள அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

தினந்தோறும் காலை பகவான் கட்டிலில் சும்மா அமர்ந்திருப்பதும் அவரைச் சுற்றி அமர்ந்திருப்பவர்கள் எல்லாம் பாடுவதும், மந்திரங்கள் கூறுவதுமாக இருந்த நிலை, அந்த வடநாட்டு பக்தருக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. “என்ன இது! இவர் ஏன் சும்மாவே அமர்ந்திருக்கிறார்! எல்லாரும் ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவர் எதையும் பார்ப்பது மாதிரியோ, கேட்பது மாதிரியோ தெரியவில்லையே. எங்கோ பார்த்துக் கொண்டல்லவா அமர்ந்திருக்கிறார். பஜனை, ஆரத்தி என்று எதுவுமே இல்லையே!” என்றார் அருகில் இருந்த டங்கன் க்ரீன்லீஸ் என்ற வெளிநாட்டு பக்தரிடம்.

டங்கன் அவரிடம், “பகவானின் நிலை நமது சிந்தனைக்கு அப்பாற்பட்டது. அவ்வளவு சீக்கிரம் புரிந்து விடாது. தொடர்ந்து பகவானை வந்து தரிசியுங்கள். உங்களுக்குப் புரியும்” என்றார்.

பக்தரோ, “என்னமோ.. எனக்குத் திருப்தியா இல்ல. இங்க வந்ததுக்குப் பதிலா ப்ருந்தாவனம் போயிருக்கலாம். அங்கே க்ருஷ்ணன் இருக்கான். நிறைய பக்தர்கள் வருவாங்க. ஆடிப் பாடி பஜனை பண்ணி அவனை வணங்கற திருப்தியும் சந்தோஷமும் இங்க இல்ல. பக்தியோட ரசம் அதை அனுபவிச்சங்களுக்குத் தான் புரியும். நீங்க வெளிநாட்டுக்காரர் உங்களுக்கு அதெல்லாம் எதுவும் புரியாது” என்றார்.

டங்கனும் புன்சிரிப்புடன் பதில் பேசாமல் மௌனமானார்.

அந்த வடநாட்டு பக்தர் தொடர்ந்து ஆசிரமத்திலேயே தங்கி இருந்தார். உணவு உண்பதற்கு மட்டும் சமையல் கூடத்திற்குச் செல்வார். பகவானை தரிசிக்காமல் அறைக்குத் திரும்பி விடுவார். இப்படியே இது தொடர்ந்து கொண்டிருந்தது.

சில நாட்கள் சென்றன.

“இனிமேல் இங்கிருப்பதில் பயனில்லை. ஊருக்குக் கிளம்ப வேண்டியதுதான்” என்று முடிவு செய்தார் அந்த பக்தர். அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டார். நண்பரிடம் “நான் உங்க பகவான் கிட்டேயிருந்து தப்பிச்சுட்டேன். நேரே இப்போ பிருந்தாவனம் தான் போகப் போறேன். ஆகா, அதை நினைக்கவே ஆனந்தமா இருக்கு” என்றார் உற்சாகத்துடன்.

டங்கன் அவரிடம், “பகவானைப் பத்தி நீங்கள் என்ன நினைத்தாலும் சரி, அவரிடம் சொல்லாமல் ஊருக்குக் கிளம்புவது எனக்குச் சரியாகப் படவில்லை. அவரோட விருந்தினராத்தான் நாம இங்க、தங்கியிருக்கோம். அதனால போகும்போது ஒரு வார்த்தை சொல்லிட்டு போறதுதான் மரியாதை” என்றார்.

வடநாட்டு பக்தருக்கும் அவர் சொல்வதில் இருக்கும் நியாயம் புரிந்தது.

மறுநாள் நாள் மாலைநேரம். அவர் கிளம்பும் வேலை வந்தது. பகவானிடம் விடை பெறுவதற்கேற்றவாறு மரியாதை நிமித்தமாக கையில் ஆரஞ்சுப் பழங்கள் அடங்கிய ஒரு கூடையுடன் அவர் ஹாலுக்கு வந்தார்.

அப்போது பகவானும் அங்கிருந்து மாலை உலா புறப்படுவதற்காக வெளியே வந்தார்.

ramanan

பக்தரின் அருகே வந்தவர், ஒரு நிமிடம் அவரை உற்று நோக்கியபடி அங்கேயே நின்றார்.

பக்தரும் பகவானை நேருக்கு நேராகப் பார்த்தார். பகவானின் சுடர் விடும் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தவர், “கிருஷ்ணா.. கிருஷ்ணா..” என்று கத்தியபடியே அப்படியே வேரற்ற மரம் போல் கீழே விழுந்தார். அவர் கையிலிருந்த பழங்கள் உருண்டோடின. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. அவரோ “கிருஷ்ணா.. கிருஷ்ணா. ஐயோ உன்னைப் புரிஞ்சிக்காமப் போயிட்டேனே. உன்னைப் போய் திட்டினேனே” என்று கண்களில் கண்ணீர் பெருகக் கதறிக் கொண்டிருந்தார்.

பகவானோ “சரி சரி போ!” என்று சொல்லிவிட்டு மலையை நோக்கி நடந்து சென்று விட்டார்.

அருகில் உள்ளவர்கள் அந்த பக்தரைக் கைத்தாங்கலாகத் தூக்கினர். அவர் பயணம் செய்வதற்குத் தயாராக குதிரை வண்டியும் வந்து நின்றது. அப்போது அங்கே வந்த டங்கன் க்ரீன்லீஸைப் பார்த்தவுடன் அந்த பக்தர், “என் கிருஷ்ணனைப் பாத்துட்டேன். இது போதும். என் ஜென்மத்துக்கு இது போதும். மீரா ஏன் இவ்வளவு பிரியமா இருக்கான்னு இப்போ எனக்கு புரிஞ்சுடுச்சு. வாழ்க்கையோட பலன் கிடைச்சுடுச்சு. கிருஷ்ண தரிசனம் வேணும்னு ஏக்கத்தோட இங்க வந்தேன். அந்த தரிசனம் எனக்குக் கிடைச்சுடுச்சு. இப்போ நான் நிம்மதியா ஊருக்குப் போறேன்” என்று சொல்லி, உணர்ச்சிப் பெருக்குடன் கண்கலங்கியவாறே விடைபெற்றார்.

அதைக் கேட்ட டங்கன் க்ரீன்லீஸ், தன் வாழ்க்கையில் முதன் முறையாக பக்தியால் கண்ணீர் விட்டு அழுதார்.

ஸர்வம் கிருஷ்ண மயம் ஜகத்!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!

Advertisements