டாக்டர் இயான் ஸ்டீவன்சனின் முற்பிறவி – மறுபிறவி ஆராய்ச்சிகள்

டாக்டர் இயான் ஸ்டீவன்சன்
டாக்டர் இயான் ஸ்டீவன்சன்

டாக்டர் இயான் ஸ்டீவன்சன், கனடாவில் பிறந்தவர். அடிப்படையில் ஒரு உளவியல் நிபுணரான இவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். முற்பிறவி-மறுபிறவி பற்றிய விஷயங்களில் இவருக்கு ஆர்வம் ஏற்பட அதுபற்றி தீவிரமாக ஆராய்ந்தார். உலகெங்கும் பயணம் மேற்கொண்டார். முற்பிறவி ஞாபகங்கள் வந்ததாகக் கூறப்படுபவர்களைச் சந்தித்தார். அவர்கள் கூறும் முற்பிறவிகள் பற்றியும், அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள், மனிதர்கள் குறித்தும் ஆராய்ந்தார். பல்வேறு பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டார். முடிவில் சிலருக்கு மட்டும் முற்பிறவி நினைவுகள் ஏற்படுவது உண்மையே என்றும் அதற்கான காரணங்கள் பல இருக்கின்றன என்றும் கூறி அது பற்றிய பட்டியல்களையும் வெளியிட்டார்.

முற்பிறவி, மறுபிறவி பற்றி பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் ஸ்டீவன்சன் எழுதியிருக்கிறார். அதில் குறிப்பிடத் தகுந்தது, ’Twenty Cases Suggestive of Reincarnation’ என்பதாகும். அமெரிக்காவின் புகழ்பெற்ற பேராசிரியர்களும், மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் டாக்டர் ஸ்டீவன்சனின் ஆய்வு முடிவுகளை ஏற்றுக் கொண்டதுடன், அவர் முறைப்படி ஆய்வு செய்து அவற்றை நீருபித்திருப்பதாகவும், இதில் ஐயப்பட ஏதுமே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் அவர் உருவாக்கிய முற்பிறவி – மறுபிறவி பற்றி ஆய்வு செய்யும் ஆராய்ச்சித்துறை இன்றளவும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

பர்மாவில் டாக்டர் ஸ்டீவன்சன்
பர்மாவில் டாக்டர் ஸ்டீவன்சன்

தனது ஆராய்ச்சிக்காக அமெரிக்கா, ஜப்பான், சீனா, பர்மா, இலங்கை என உலகின் பல பகுதிகளுக்கும் சென்றவர், இந்தியாவிற்கும் வந்து இச் சம்பவங்கள் பற்றி ஆராய்ந்து கூறியுள்ளார். தமிழகத்திற்கும் வருகை புரிந்துள்ளார்.

டாக்டர் இயான் ஸ்டீவன்சன் ஆராய்ச்சி செய்துள்ள சம்பவங்களிலிருந்து ஒன்றைப் பார்ப்போம்.

இப்ராஹிமின் மறுபிறவி
லெபனான் நாட்டில் உள்ள கோர்னெல் என்னும் வசித்து வந்தான் இமத் இலவர் எனும் சிறுவன். அவனுக்கு இரண்டு வயதாக இருக்கும் போதே சம்பந்தமில்லாத பல பெயர்களை உச்சரிக்கத் தொடங்கினான். பெற்றோர்கள் குழந்தை ஏதோ வேடிக்கையாகப் பேசுகிறது என பேசாமல் இருந்து விட்டனர். ஆனால் அவன் வளர வளர அவனது நடவடிக்கைகள் மிக வித்தியாசமாக இருந்தன. ஜமீலா என்ற பெயரையும், மஹ்மூத் என்ற பெயரையும் அடிக்கடி உச்சரித்தான். ஒருமுறை தெருவில் ஒரு வயதான பெரியவர் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவர் முற்பிறவியில் தனது வீட்டிற்கு அருகாமையில் வசித்தவர் என அடையாளம் கண்டு கொண்டு அவரைப் பின் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தான். பின்னர் வலுக்கட்டாயமாக அவனது குடும்பத்தாரால் வீட்டிற்குத் தூக்கி வரப்பட்டான்.

வயது ஆக ஆக தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது என்றும், இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் என்றும் அவன் சொல்ல ஆரம்பித்தான். தனது பெயர் இப்ராஹிம் என்றும் தான் வசித்த நகரத்தின் பெயர் க்ரீபீ என்றும் கூறியவன், 1949 ஆம் ஆண்டு, டி.பி.நோயால் தான் இறந்து விட்டதாகவும், தனது மனைவி, குழந்தைகளைப் பார்க்க உடனே தன் கிராமத்துக்குப் போக வேண்டும் என்றும் அழுது அடம் பிடிக்க ஆரம்பித்தான்.

இந்தச் சம்பவங்கள் அவன் பெற்றோருக்கு மட்டுமல்லாது அவன் வசித்த கிராமத்துவாசிகளுக்கும் மிகுந்த வியப்பைத் தந்தது. தகவல், முற்பிறவி- மறுபிறவி பற்றி ஆய்வு செய்யும் டாக்டர் இயான் ஸ்டீவன்சன் கவனத்துக்குச் சென்றது. அவர் உடன் புறப்பட்டு கோர்னெல் வந்து சேர்ந்தார். சிறுவனுடன் பேசி அவன் கூறும் தகவல்கள் அனைத்தையும் ஒரு குறிப்பேட்டில் குறித்துக் கொண்டார்.அவர் மேலும் ஆய்வு செய்யத் தொடங்கிய போது அந்த ஊருக்கு சுமார் 25 மைல் தொலைவில் ’க்ரீபீ’ என்ற கிராமம் இருப்பதை அறிந்து கொண்டார். பின் தனது ஆய்வைத் தொடர்வதற்காக சிறுவன் மற்றும் அவன் பெற்றோருடன் ’க்ரீபீ’ கிராமத்தை நோக்கிக் காரில் புறப்பட்டார். வழியிலேயே மிக அதிகமாக முற்பிறவியின் தாக்கத்திற்கு உட்பட்ட சிறுவன் இமத், தான் வசித்த வீடுபற்றி, கெர்மில் என்ற பெயர் கொண்ட தனது மனைவி பற்றி, தன்  குழந்தைகள் பற்றி என ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாகக் கூற ஆரம்பித்தான். கிராமத்தை அடைந்ததும் தன் வீட்டை சரியாக அடையாளம் காட்டியதுடன், வயதான தன் மனைவி மற்றும் குழந்தைகளையும் அடையாளம் கண்டு கொண்டான். தன்னுடைய புகைப்படத்தையும், தன்னுடைய சகோதரன் புகைப்படத்தையும் மிகத் தெளிவாக அடையாளம் காட்டினான்.

தன்னோடு முற்பிறவியில் ராணுவத்தில் பணியாற்றிய நண்பரைச் சந்தித்து பழைய அனுபவங்களைப் பற்றிப் பேசினான். அது மட்டுமல்லாமல் தன்னுடைய முற்பிறவி மாமா, நண்பன் மஹ்மூத், தனக்கு மிகவும் விருப்பமான, நெருக்கமான தொடர்பில் இருந்த விலைமாது ஜமீலா என அனைவரையும் அவனால் அடையாளம் கண்டு கொண்டு பேச முடிந்தது.

இவ்வாறு சிறுவன் இமத் தனது முற்பிறவி பற்றிக் கூறிய  57 கருத்துக்களில் 51 கருத்துக்கள் மிக மிகச் சரியாக இருந்தது என்றும், மீதி ஆறும் அவன் சிறுவன் என்பதால் அவனால் சரியாக விளக்கிச் சொல்ல முடியாமல் ஏற்பட்ட கருத்துப் பிழைகளே என்றும் கூறுகிறார் டாக்டர் இயான் ஸ்டீவன்சன். இரண்டு குடும்பத்தினரும் ஒருவரையொருவர் அது வரை சந்தித்ததில்லை, ஒருவரைப் பற்றி மற்றொருவர் கேள்விப்பட்டதுமில்லை. அப்படியிருக்க சிறுவன் இமத், இப்ராஹிமாகிய தனது முற்பிறவியைப் பற்றி விளக்கிக் கூறி, தெள்ளத் தெளிவாகத் தான் தான், அவனது மறுபிறவி என்பதை நிரூபித்திருக்கிறான் என்று தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார் டாக்டர் இயான் ஸ்டீவன்சன்.

இந்தியாவில் ஸ்டீவன்சன்
இந்தியாவில் ஸ்டீவன்சன்

வெளிநாடுகளில் மட்டும் தான் என்பதல்ல; இந்தியாவிலும் பல்வேறு மறுபிறவிச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. முற்பிறவி-மறுபிறவிகள் பற்றி ஆராய்வதற்காக, இந்தியாவில், பரிதாபாத் நகரத்தில் Reincarnation Research Foundation என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. பெங்களூரில் உள்ள National Institute of Mental Health & Neurosciences (NIMHANS) அமைப்பும் முற்பிறவி-மறுபிறவி உண்மைகள் பற்றி ஆய்வு நடத்தி வருகிறது. அது பற்றி விரிவான பல ஆய்வுகளை மேற் கொண்டிருக்கிறது. டாக்டர் இயான் ஸ்டீவன்சனும் இந்தியாவிற்கு வருகை தந்து பல ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். அவருடன் இணைந்து நிம்ஹான்ஸின் (NIMHANS) Clinical Psychology துறைத் தலைவர், பேராசிரியர் டாக்டர் சத்வந்த் பஸ்ரிச்சா அவர்களும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தைப் பின்னர் பார்ப்போம்.

 

Advertisements

4 thoughts on “டாக்டர் இயான் ஸ்டீவன்சனின் முற்பிறவி – மறுபிறவி ஆராய்ச்சிகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s