சித்தயோகி சிவஸ்ரீ படே சாஹிப்

எத்தனையோ மகான்கள் இம்மண்ணில் அவதரித்து மக்களின் நலன் ஒன்றையே தமது குறிக்கோளாகக் கொண்டு உழைத்திருக்கின்றனர். தம்மை நாடி வரும் மக்களின் வல்வினைகளைப் போக்கி வாழ்வு சிறக்க வகை செய்திருக்கின்றனர். அப்படிப்பட்ட மகான்களில் ஒருவர் சிவ ஸ்ரீ படே சாகிப். பிறப்பால் இஸ்லாமியராகக் கருதப்படும் இம்மகானின் புனித வராலாறு மதம் கடந்து மனிதம் போற்றுவதாய் உள்ளது.

நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள். அது போல இம்மகான் எங்கு, எப்போது தோன்றினார் என்பது குறித்து சரிவர அறிய இயலவில்லை. ஆனால் பல வெளிநாடுகளில் வசித்து பின்னர் இந்தியா நோக்கி, குறிப்பாக தமிழகத்தை நோக்கி வந்து வாழ்க்கை நடத்தியவர் என்பது தெரிகிறது. தமிழகத்தில் சில காலம் வசித்தவர் பின்னர் புதுச்சேரிக்குச் சென்று வசித்தார். கிட்டத்தட்ட நூற்றிற்கும் மேற்பட்ட சித்தர்களும், மகான்களும் புதுவையிலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் ஜீவ சமாதியில் எழுந்தருளியுள்ளனர். புதுச்சேரியை அடுத்த திருக்கனூரில் சில காலம் வசித்து வந்த மகான், பின்னர் கண்டமங்கலம் அருகே உள்ள சின்னபாபு சமுத்திரம் பகுதியை தனது இருப்பிடமாக அமைத்துக் கொண்டார்.

நடுத்தர உயரம். சிவந்த நிறம். தலையில் ஒரு குல்லா. இடுப்பில் ஒரு அரையாடை. அருள் பொங்கும் முகம். கருணை ததும்பும் விழிகள். சதா ஏதேனும் மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருக்கும் வாய் என அவரது தோற்றம் மக்களுக்கு வியப்பைத் தந்தது. மகானோ மகா மௌனியாய் விளங்கினார். யாரிடமும் எதுவும் பேசமாட்டார். அவரது விழி நோக்கமே அவரை நாடி வருபவர்களுக்கு அரு மருந்தாய் விளங்கியது. தம்மை நாடி வருபவர்களின் நோய் நொடிகளைத் தீர்ப்பதில் மகான் தன்னிகரற்று விளங்கினார். விபூதி கொடுத்தே பலரது நோய்களைக் குணமாக்கினார்.

சின்னபாபு சமுத்திரத்தில் இருக்கும் மகான் அவ்வப்போது அருகில் உள்ள திருக்கனூருக்குச் செல்வார். சில சமயங்களில் மகான் எங்கு இருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது கூட யாருக்கும் தெரியாது. திருக்கனூரில் இருக்க மாட்டார். சின்னபாபு சமுத்திரத்திலும் இருக்க மாட்டார். சூட்சும உடலில் உலவிக் கொண்டிருப்பார். பல்வேறு சித்துக்கள் கைவரப் பெற்ற இவர், ஒரே சமயத்தில் பல்வேறு இடங்களில் காட்சி அளித்துள்ளார்.

ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் அமர்ந்திருப்பார். அருகில் ஒரு மண் கலயமும், சிறு பானை மற்றும் கொட்டாங்குச்சிகளும் இருக்கும். அதில் சில பச்சிலைகளும், புனித நீரும் இருக்கும். தம்மை நாடி வருபவரின் குறைகளை செவிமடுத்துக் கேட்பார். சிலரை அருகே உள்ள மகிழ மரத்தை அப்பிரத்ட்சணமாகச் சுற்றி வரும் படி சாடையாகக் கூறுவார். அவ்வாறு அவர்கள் சுற்றி வந்ததும் அவர்களின் கண்களையே உற்றுப் பார்ப்பார். சிலர் அந்த கருணை விழிகளின் தீட்சண்யம் தாங்காது மயங்கி விழுவர். சிறிது நேரத்தில் விழித்து எழுந்ததும் தமது நோய் முற்றிலுமாக நீங்கி இருப்பதை அறிந்து மகானை வணங்கி மகிழ்வர். சிலர் மகானை வணங்கி விபூதிப் பிரசாதம் பெற்று அணிந்ததுமே தமது நோய் நீங்கியதை அறிந்து மகானைத் தொழுவர். மற்றும் சிலருக்கு மகான் தன் கையால் ஒரு சிறு கொட்டாங்குச்சியில் நீரை அளிப்பார். அதை அருந்தியதுமே அவர்களைப் பீடித்திருந்த நோய்கள் விலகி விடும். குறைகள் அகன்று விடும். சிலருக்கு தமது கைகளால் தீண்டி ஆசிர்வதிப்பார். சிலருக்கு தாம் இமயமலைக் காடுகளில் சுற்றித் திரிந்த போது கண்டறிந்த பச்சிலைகளை அளித்து நோய் தீர்ப்பார். இவ்வாறு பலதரப்பட்ட மக்களின் நோயினை நீக்கும் ஒரு மகாபுருஷராக மகான் சிவஸ்ரீ படே சாகிப் விளங்கி வந்தார்.

’சாஹிப்’ என்றால் உயர்ந்தவர் என்பது பொருள். ’படே’ என்றால் பெரிய என்பது பொருள். தன் பெயருக்கேற்றவாறி மிகப் பெரிய சித்தயோகியாக, தவ புருஷராக விளங்கி வந்தார் சிவ ஸ்ரீ படே சாஹிப். சிவ ஸ்ரீ என்னும் அடைமொழிக்கேற்ப, இமயமலையில் தாம் தவம் செய்து கொண்டிருந்த காலத்தில் பல ஆண்டுகளாக, பல அடிகள் ஆழத்தில் புதைந்திருந்த உளி படாத “நிஷ்டதார்யம்” என்னும் கல்லை தனது ஆழ்நிலை தியானத்தின் மூலம் கண்டறிந்து, அதனை இறையருளால் வெளிக் கொணர்ந்து அழகிய லிங்கமாக உருவாக்கி, தம்மை நாடி வரும் மக்கள் வழிபடுவதற்காக, தாம் வசித்த இடத்திற்கு அருகிலேயே அருணாசலேஸ்வரர் ஆலயமாகப் பிரதிஷ்டை செய்தார்.

மகானின் அற்புதங்கள்
ஒருமுறை கட்டிலோடு ஒரு சிறுவனை நான்கு அன்பர்கள் வேகவேகமாக தூக்கிக் கொண்டு வந்தனர். மகானின் அருகே வந்ததும் கட்டிலை இறக்க முற்பட்டனர். அவ்வளவுதான் மகான் மிகுந்த சீற்றத்துடன் அருகில் உள்ள ஒரு கம்பினை எடுத்து வந்தவர்களை விரட்டத் தொடங்கினார். அவர்களும் பயந்து போய் கட்டிலை அப்படியே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். கட்டிலில் படுத்திருந்த சிறுவனும் பயந்து போய் மகானிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேகமாக ஓட ஆரம்பித்தான். மகானும் வேக வேகமாக அவனைத் துரத்த, அவனும் வேக வேகமாக ஓட ஆரம்பித்தான். உடனே மகான் அமைதியாக அருகில் உள்ள மரத்தடியில் அமர்ந்து விட்டார்.

மகான் ஏன் இப்படிச் செய்தார் என்று புரியாமல் ஓடிக் கொண்டே திரும்பிப் பார்த்தவர்கள், தங்களைத் தொடர்ந்து கட்டிலில் தூக்கி வந்த சிறுவனும் ஓடி வருவது கண்டு ஆச்சர்யம் கொண்டனர். அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். காரணம், பிறந்தது முதல் இதுநாள் வரை நடக்கவே நடக்காத, கால்கள் செயலிழந்த சிறுவன் அவன். அவனைக் குணப்படுத்தவே அவர்கள் மகானிடம் அவனைத் தூக்கிக் கொண்டு வந்தனர். தங்களிடம் கோபப்படுவது போல் நடித்து சிறுவனின் குறையைப் போக்கிய மகானின் கால்களில் வீழ்ந்து அனைவரும் வணங்கினர் மகானோ ஏதும் அறியாதவர் போல் எங்கேயோ பார்த்துக் கொண்டு மரத்தடியில் அமைதியாக வீற்றிருந்தார்.

இவ்வாறு பற்பல அற்புதங்களை நிகழ்த்தி மக்களுக்கு பல்வேறு நன்மைகள் புரிந்த மகானின் ஜீவ சமாதி விழுப்புரம் – பாண்டிச்சேரி சாலையில் சின்னபாபு சமுத்திரம் அருகே அமைந்துள்ளது. வியாழக்கிழமை தோறும் இந்து, இஸ்லாமிய மக்கள் இங்கே திரளாக வந்து வழிபடுகின்றனர். மனநோய், செய்வினை, ஏவல் கோளாறுகள் போன்றவை நீங்கும் தலம் என ஆலய அறிவிப்பு தெரிவிக்கின்றறது. இது இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சமாதி ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மகான்களைத் தொழுவோம்; மன வளம் பெறுவோம்.

5 thoughts on “சித்தயோகி சிவஸ்ரீ படே சாஹிப்

  1. சென்ற மாதம் எங்கள் குருநாதராகிய சித்தர் சுவாமிகளின் அருளால் சிவஸ்ரீ படே சஹேப் சுவாமிகளின் சமாதிக்கோயில் வழிபாடு கிடைக்கப் பெற்றேன்.

    1. மிக்க மகிழ்ச்சி ஐயா. அங்கெல்லாம் செல்லவும் வணங்கவும் கொடுப்பினை இருந்தால்தான் முடியும். தீராத வினை தீர்க்கும் மகான் அவர். அங்கு ஓரிரவாவது தங்க நேர்ந்தால் அது மேலும் நன்மையைத் தரும். வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி.

  2. மிக்க மகிழ்ச்சி இவர் போன்ற இன்னும் பல பெரிய மகான்களைப் பற்றி தெரிந்துகொள்ள ஆவல் , தயவு செய்து வெளியிடவும்.

    1. தங்கள் கருத்திற்கு நன்றி. இந்த வலைப்பூ ஆரம்பிக்கப்பட்டதன் உண்மையான நோக்கமே அதுதான். எல்லாம் இறையருள்தான் தீர்மானிக்க வேண்டும். தங்கள் வருகைக்கு என் நன்றி!

பி.செண்பகராஜா -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.