ஞான சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்

 

ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்
ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்

காஞ்சிபுரத்தில் வாழ்ந்த வரதராஜ ஜோசியர்-மரகதம் தம்பதியனருக்கு மகவாகத் தோன்றியவர் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள். அவருக்கு மூன்று வயதாக இருக்கும் போது ஒரு கிருஷ்ணர் பொம்மையை அவர் கையால் தொட்டு வாங்க, அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்தக் கூடையில் இருந்த நூற்றுக்கணக்கான பொம்மைகளும் விற்றுத் தீர்ந்து விட்டது. அதனால், ‘தங்கக் கை’ சேஷாத்ரி என்று இவர் அழைக்கப்பட்டார்.

வேதம், பாஷ்யம், ஸ்லோகம் என அனைத்தையும் சிறுவயதிலேயே நன்கு கற்றுணர்ந்த இவர், இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். சிற்றப்பாவால் அன்புடன் வளர்க்கப்பட்டார். ஆனாலும் அவரது கவனம் உலகியலில் செல்லவில்லை. ஆன்மீகத்தையே மனம் விரும்பியது. வடநாட்டிலிருந்து காஞ்சிபுரத்திற்கு வந்திருந்த  பாலாஜி சுவாமிகள் என்பவரிடம் தீட்சை பெற்றார். அதன் பின் மிகக் கடுமையான யோக, தவப் பயிற்சிகளை மேற்கொண்டார். உண்ணாமல், உறங்காமல் மயானத்தில் அமர்ந்து தவம் புரிந்தார். இளம் பருவத்திலேயே ஞான வைராக்ய நிலையை அடைந்தார். அஷ்டமா சித்திகள் உட்பட பல்வேறு ஆற்றல்களும் கைவரப்பெற்றார். தாயின் மறைவுக்குப் பின் அவரது அறிவுரையின் படி திருவண்ணாமலை திருத்தலத்தை வந்தடைந்தார். ஞானியரை ஈர்க்கும் ஞான மலை தன்னுள் இவரை ஈர்த்துக் கொண்டது.

அண்ணாமலை
அண்ணாமலை

சுவாமிகள் அங்கு வாழ்ந்த காலத்தில் தம்மை நாடி வந்தவருக்கு அருளாற்றலை வாரி வழங்கினார். அவரது கை பட்டால் தொட்டது துலங்கியது. அவர் ஒரு கடைக்குள் நுழைந்து பொருட்களை வீசி எறிந்தால் அவர்களுக்கு நல்ல லாபம் கிட்டியது. அவர் ஆசிர்வதித்தாலோ, கட்டியணைத்தாலோ அவர்களது பாவம் நீங்கியது. பித்தரைப் போலவும், மனநிலை பாதித்தவரைப் போன்றும் காட்சியளித்த சுவாமிகள் முக்காலமும் உணர்ந்தவராக இருந்தார். அதேசமயம் குறுகிய நோக்கத்துடனும், தீய எண்ணத்துடனும் தம்மை நாடி வந்தவர்களை விட்டு ஒதுங்கினார். அவர்கள் கண்களுக்குப் படாமல் தனித்திருந்தார். தான் என்ற அகந்தை மிகுந்தவர்களையும், ஆணவம் பிடித்த தீயவர்களையும் மகான் புறக்கணித்தார். உண்மையான பக்தியும், அன்பும் உள்ளவர்களின் ஆன்ம முன்னேற்றத்திற்கு உதவினார். தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு அற்புதங்கள் புரிந்து பலரது கர்மவினைகள் அகல மகான் காரணமாக இருந்தார்.

மகானின் அற்புதம்
சேஷாத்ரி சுவாமிகள் எப்போதும் திருவண்ணாமலையில் உள்ள கம்பத்தடி இளையனார் மண்டப வாசலிலேயே உட்கார்ந்திருப்பார். புதிதாக வந்திருக்கும் பலரும் அவரை யாரோ ஒரு சாதாரண பரதேசி என்றே எண்ணுவர். அவரது அருமை, பெருமை தெரிந்தவர்களோ மகானின் பார்வை எப்போதும் தம் மேல் படும், தமது கர்ம வினை அகலும் என்று காத்திருப்பர்.

ஞான சத்குரு
ஞான சத்குரு

ஒருமுறை மகான் மண்டப வாயிலில் அமர்ந்திருந்தார். அப்போது பக்தர் ஒருவர், சுவாமிகளுக்கு உணவுப் பொட்டலம் ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்து, உண்ணுமாறு வேண்டினார். சிறிது உண்ட சுவாமிகள் உணவை மேலும் கீழும் அள்ளி இறைத்தார்.

’உணவை உண்ணாமல் ஏன் இப்படி இறைக்கின்றீர்கள் சுவாமி’ என்று கேட்டார் பக்தர். 

’பூதங்கள் கேட்கின்றன, தேவதைகள் கேட்கின்றன’ என்று சொல்லிய சுவாமிகள், மேலும் மேலும் உணவை அள்ளிக் கீழே வீச ஆரம்பித்தார்.

தான் மெத்தப் படித்த மேதாவி என்ற எண்ணம் கொண்ட அந்த பக்தருக்கு சுவாமிகளின் செய்கை மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அதேசமயம் பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றியது.

’பூதமாவது, தேவதையாவது? என் கண்ணுக்கு எதுவும் தெரியலையே சாமி’ என்றார் கிண்டலாய்.

‘அப்படியா, சரி வா காட்டுகிறேன்’ என்ற சுவாமிகள், அந்த பக்தரின் புருவ மத்தியில் தனது கட்டை விரலை வைத்து அழுத்தினார். பின் ’இப்பொழுது பார்’ என்றார்.

அங்கே கோரைப் பல்லும், தொங்கிய நாக்கும், பரட்டைத் தலையுமாக மகாக் கோர உருவங்கள் பல நின்று கொண்டிருந்தன. அவை, சுவாமிகள் அள்ளி அள்ளி எறிந்த உணவை வேக வேகமாக உண்டு கொண்டிருந்தன. கிண்டலாகப் பேசிய பக்தரை அவை மிகவும் கோபத்துடன் பார்த்தன. அதைப் பார்த்த பக்தருக்கு மிகுந்த பயமாகி விட்டது. 

“அய்யோ சுவாமி, போதும், போதும். நான் தெரியாமல் கேட்டு விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று கதறினார்.

சேஷாத்ரி சுவாமிகள் சிரித்துக் கொண்டே, “இப்போ புரியுதா, இனிமே இப்படிச் சந்தேகப்பட மாட்டேல்ல…”என்று சொல்லிக் கையை எடுத்தார். உடனே அந்தக் கோர உருவங்கள் மறைந்து விட்டன. சுவாமிகளின் கால்களில் விழுந்து தம்மை மன்னிக்குமாறு வேண்டினார் அந்த பக்தர்.

அதற்கு சுவாமிகள் சிரித்துக் கொண்டே, “பட்டா தான் சில பேருக்கு புத்தி வரும் போல இருக்கு. போ போ. இந்த மலையை தினம் சுத்தி வா. உனக்கு நல்லது நடக்கும்.” என்று சொல்லி விட்டு வேகமாக வெளியே சென்று விட்டார்.

மகா சமாதி
மகா சமாதி

இவ்வாறு தம்மை அணுகிய பல்லாயிரக்கணக்கான மக்களை மலை சுற்ற வைத்த பெருமை இம் மகானுக்குண்டு. அண்ணாமலையில் கால் வைத்த நாள் முதல் தம் இறுதிக்காலம் வரை வேறு எங்கும் செல்லாது, அண்ணாமலையையே தமது இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து முக்தியடைந்த இம் மகானின் குருபூஜை மார்கழி மாதத்து ஹஸ்த நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. தை மாத ஹஸ்தத்தில் ஜெயந்தி விழா நடக்கிறது.

திருவண்ணாமலையில், கிரிவலப்பாதையில், அக்னி லிங்கத்தை அடுத்து, ரமணாச்ரமத்திற்கு முன்னால் இம்மகானின் மகா சமாதி ஆலயம் அமைந்துள்ளது. அங்கு கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட மகானின் சமாதிகளும் அமைந்துள்ளது.

மகான்களைத் தொழுவோம்; மனத் தெளிவு பெறுவோம்.

Advertisements

10 thoughts on “ஞான சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்

 1. தங்களது கட்டுரையை நகல் எடுத்து, எனது MS Word தொகுப்பில் ஒட்ட முடியவில்லையே..ஏன்? நான் அழகி+ எழுத்துருவைப் பயன் படுத்துகிறேன். எனது நண்பர்களுக்கு தங்கள் கட்டுரையை எப்படி நான் அனுப்புவது? விளக்கமாக மின்-அஞ்சல் அனுப்பி உதவ வேண்டுகிறேன்.
  நன்றி. ஆவலுடன் பதிலுக்குக் காத்துள்ளேன்.

  எல்.கே.மதி,
  20/9/2011.

  1. we used latha – unicode font. it’s available with XP and MS Windows new. ஆக நீங்கள் எளிதில் இதனை காபி-பேஸ்ட் செய்ய இயலுமே! வேர்ட் மற்றும் நோட் பேடில் எளிதாக காப்பி-பேஸ்ட் செய்து அனுப்பலாம். என்னுடைய இந்தத் தளத்துக் கட்டுரைகளை காபி-பேஸ்ட் செய்து ஒருவர் புத்தகாமப் போடுவதற்கே ரெடியாக இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படியும் இயலவில்லை என்றால் மீண்டும் மறுமொழியுங்கள் மின்னஞ்சல் அனுப்புகிறேன். நன்றி!

 2. நன்றி ஐயா .
  இப்போத்துதான் ஆரம்பித்துள்ளேன் .
  அருமையான பொக்கிஷம் உங்களின் கருணையான பதிவுகள் .
  எனது மெயில் முகவரியும் தயவுசெய்து இணைத்துக்கொள்ளவும் .
  நமஸ்காரம் .
  அன்புடன் ,
  ஸ்ரீனிவாசன் .
  Perth, Australia.

 3. உங்கள் பின்தொடர முடியாதா? அப்படியானால் உங்களது ஒவ்வொரு பதிவையும் எனக்கு மினஞ்சல் செய்ய முடியுமா ? இரண்டு பதிவை இபோதுதான் படித்தேன். தயவு செய்து எனக்கு தெரியப்படுத்துங்கள்.

 4. அன்பார்ந்த ஐயா,

  வணக்கம். அப்போ பூதம், தேவதைகள் எல்லாம் இருக்குன்னு நீங்க சொல்றீங்க இல்ல. சரி, மகான் கண்ணுக்குத் தெரியுற அவுங்க ஏன் சாதாரண மனுஷங்க கண்ணுக்கு தெரிய மாட்டேங்குறாங்க.. அப்படி என்ன அதுல பெரிய ரகசியம் இருக்கு… எனக்கு இதை நம்ன முடியலை.

  இந்தப் பௌதிக உலகில் எந்த ஒன்றுமே ஏதேனும் ஒரு புலன்கள் வழியாக உணரப்பட்டே நம்மை அடைகின்றன. கண்,காது, வாய், மூக்கு, தோல் என்று இவற்றால் உணரவப்படுவது மட்டுமே நம்மால் அறிய முடிவது. இவற்றுக்கு அப்பாற்பட்டு ஏதாவது இருப்பதாகச் சொன்னால் அவற்றை மெய்ப்பிக்க விஞ்ஞான பூர்வ ஆதாரம் வேண்டும். இல்லாவிட்டால் அதனை உண்மை என்று ஏற்க முடியாது.

  காற்றை நாம் கண்ணால் காண முடியாவிட்டாலும் இலைகள் அசைவின் மூலம் உணருகிறோம். மின்சாரத்தை நாம் நேரடியாகக் காண முடியாவிட்டாலும் விளக்கின் ஒளி, மின்விசிறி, கணிணி, குளிர்சாதனப் பெட்டி என்று பல விதங்களில் அதன் பயன்பாடுகளை உணருகிறோம்.

  நீங்கள் குறிப்பிடும் பேய், பிசாசு, பூதங்கள், தேவதைகளை எப்படி உணர்வது?, அவை எங்கே இருக்கின்றன?, அவையும் நம்மைப் போலச் சாப்பிடுமா? தூங்குமா? குளிக்குமா? காதல், காமம் செய்யுமா? —- அடப் போங்கண்ணே… நிலவுல தண்ணீர் இருக்குன்னு ஆராய்ச்சி பண்ணிச் சொல்லியிருக்காங்க.. நீங்க என்னடான்னா சந்திர லோகம், ஆவிகள் உலகம், பிதிரு உலகம்னு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க.. நினைக்க நினைக்க எனக்கு ரொம்பச் சிரிப்புச் சிரிப்பா வருது. ஹி… ஹி…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s