வசைக்கவியும் ஆசுகவியும்

   தமிழுக்கு என்று ஒரு சிறப்புண்டு. அது தான் “சொல் பலிதம்”. ஒருவரை வாழ்த்தினாலும், தூற்றினாலும், உடன் பலித்துவிடும் ஆற்றல் வாய்ந்ததாகச் சில சொற்கள் மாறிவிடுகின்றன. இதற்கு, பாடும் பாடல் மட்டுமல்லாது அதைச் சொல்லும் நபரும் முக்கியமானவராக விளங்குகிறார்.

எத்தனையோ புலவர்கள், எத்தனையோ பாடல்கள்…. ஔவையாரிலிருந்து, கண்ணதாசன் வரை எத்தனை எத்தனையோ நிகழ்வுகள்.

வாழ்த்துதல், வைதல், புகழ்வது போலப் பழித்தல், பழிப்பது போலப் புகழ்தல், தூற்றுதல், சபித்தல் எனப் பல படிநிலைகளாக, இவை காணப்படுகின்றன.

இறந்தவரை உயிர்ப்பித்தல், பட்ட மரத்தைத் துளிர்க்க வைத்தல், மண் மாரி பொழியவைத்தல், கோயில் கதவைத் திறக்க வைத்தல், கொல்ல வந்த யானையையும் பின் வாங்க வைத்தல், ஊர், கோயில், நாடு, நகரம் நாசமாகச் செய்தல், இறந்துபடச் செய்தல், முள்ளுடைக் காட்டின் முது நரி ஆக்குதல், கடவுளையே ஏவலாக வேலை கொள்ளல் எனப் பல அற்புதங்கள், பல நபர்களால் செய்யப்பட்டு இருக்கின்றன.

இவை எல்லாம் இறை ஆற்றலா, இல்லை சொல்லாற்றலா, இல்லை பாடும் நபரின் உள்ள உறுதியா? அல்லது தமிழின் வலிமையா? ஆராயப் புகுந்தோமானால் பல உண்மைகள் தெரியவரும்.

இறை ஆற்றல் என்பது சில இடங்களில் ஏற்குமாறு இல்லை. ஏனெனில், அந்த இறைவனின், ஆலயத்தையே, வழிபாடு இல்லாமல் தூர்ந்து போகுமாறு, கவி காளமேகம் பாடிச் சபித்துள்ளார். இன்னமும் அந்தக் கோயில் அந்த நிலையில் தான் உள்ளது. வழிபாடுகள் ஏதும் இல்லை. அதே சமயம், அந்த இறையையே, மோர் கொண்டு வரக் கம்பரும், திருமணம் பேச, காதல் தூது செல்ல, பொன், பொருள் தேவைக்கு எனச் சுந்தரரும், மயில் மீது ஆடுமாறு அருணகிரியும் எனப் பலரும், பலவாறாகப்  பயன்படுத்தி இருப்பதைப் பார்க்கும் பொழுது, இறை ஆற்றல் இல்லாமல் இவை நடந்திருக்குமா என்பதும் ஆராயப்பட வேண்டியதாகிறது.

‘ஆசுகவி வீசு புகழ்க் காளமேகம்’ என்று புகழ் பெற்றவர் காளமேகப் புலவர். வசைக்கொரு “காளமேகம்” என்றும் புகழப் பெற்றவர். மேகம் மழை பொழிவது போல் இவர் கவி மழை பொழிவதால் இப்பெயர் பெற்றுள்ளார். மேலும் “ஜவ்வாதுப் புலவரும்” வசைபாடுவதில் புகழ் பெற்றவரே. “வசைக் கவி ஆண்டான்” என ஒருவர் இருந்ததாகவும் தெரிய வருகின்றது. இன்னும் பலர்… இரட்டைப் புலவர்கள் முதல் பாடுவார் முத்தப்பர் வரை என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அறம் வைத்துப் பாடியதால், மூன்றாம் நந்திவர்மன் உயிர் துறந்த கதையையும் உண்டு

ஆக, தமிழுக்கு இத்தகைய ஆற்றல் உண்டு என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது. இக்காலத்திலும், இவ்வாறு வசை பாடுபவர்கள் உள்ளனரா என்பது பற்றித் தெரியவில்லை.

ஒரு கதை உண்டு. நாம் பேசும் போது நல்லதையே பேச வேண்டுமாம். நம்மைச் சுற்றி சில தேவதைகள் இருக்குமாம். அவை நாம் என்ன சொன்னாலும் “ததாஸ்து” சொல்லிவிடுமாம். (‘அப்படியே ஆகட்டும்’ என்பது பொருள்). நாம் ஏதும் தீய வார்த்தைகளைப் பேசினாலோ, திட்டினாலோ, இந்தத் தேவதைகள், “ததாஸ்து” சொல்லிவிடுமாம். அதனால், அந்த வார்த்தைகள் பலித்து, அந்தத் தீய நிகழ்வுகள் உடனே நடந்துவிடுமாம். அதனால் தான் பெரியோர்கள் நல்லதையே பேச வேண்டும், நினைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள் போலிருக்கின்றது.

இனி, வரலாற்றில் சில அற்புத நிகழ்வுகள், தமிழால் நடந்ததை, தமிழ் நடத்தியதை, அதன் மூலம் தமிழ் பெற்ற  சிறப்பை, பெருமையை சற்றே உற்று நோக்குவோமா?
1. நக்கீரர்

தமிழ்ச் சங்கத் தலைமைப் புலவராக நக்கீரர் கோலோச்சிக் கொண்டிருந்த காலம். தமிழும், தமிழர் அறமும் போற்றப்பட்ட காலம். இந்நிலையில், ஆங்கே விஜயம் செய்தான் ஒரு வடமொழிப் புலவன். அவன், தமிழை, நீசர் பாஷை என்றும், தமிழ் தீயவர்கள் மொழி என்றும், தமிழ் சிறப்பிழந்த மொழி என்றும், வடமொழி அளவிற்குச் சொல்லாட்சி மிக்கது அல்ல என்றும் இழிவாகப் பேசி இருக்கிறான்.

நக்கீரர் பலவாறு அறிவுறுத்தியும் அவன் திருந்தவில்லை. மேலும் இழித்தும், பழித்தும் தூற்றியுள்ளான். அவ்வளவுதான்! நக்கீரருக்கு வந்தது கோபம். வெளிப்பட்டது பாடல் வசையாக!

    “ஆரிய நன்றுதமிழ்  தீதென  உரைத்த
     காரியத்தாற் காலக் கோட்பட்டானைச் – சீரிய
     அந்தண் பொதியில கத்தியனார் ஆணையாற்
     செந்தமிழே தீர்க்க ஸ்வா கா”

அவ்வளவுதான். அந்த வடமொழிப் புலவன் உடல், தீயிற் பட்டால் போல எரிய ஆரம்பித்து விட்டது. தான் இறக்கப் போவதை உணர்ந்த அச்சத்துடன், அவன், நக்கீரரை வணங்கித் தம் பிழை பொறுக்குமாறு வேண்ட, நக்கீரரும் மனம் இறங்கி, பாடலை மாற்றிப் பாடினார்.

அது…

   “முரணில் பொதியன் முதற்புத்தேள் வாழி
    பரண கபிலரும் வாழி – மரணியல்
    ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோடன்
    ஆனந்தஞ் சேர்க்க ஸ்வா கா!”
 

********

Advertisements

2 thoughts on “வசைக்கவியும் ஆசுகவியும்

  1. ஐயா,

    உங்கள் தளத்திற்கு இன்று கூகுள் தேடல் மூலம் வந்தேன். எல்லா படைப்புகளும் மிகவும் தரமாக நன்றாக இருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள் ஐயா. குறிப்பாக இலக்கியம், இசை குறித்து நிறைய எழுதுங்கள். உங்களது அமானுஷ்ய, பக்தித் தகவல்கள் யாவும் அருமை. வாழ்க வளமுடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.