ஞான சரஸ்வதி ஆலயம்

ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை – தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே
இருப்பள் இங்கு வாராதிடர்.

– என்று கம்பர் வாணியைப் புகழ்கிறார். அப்படிப்பட்ட ஆற்றல் மிக்க கலைமகள், சரஸ்வதி என்றும் கலைவாணி என்றும் போற்றப்படுகிறாள். இவளே சகல கலைகளுக்கும் தாய். ஞானத்தின் உறைவிடமான இவளே சகல வித்தைகளுக்கும் அதிபதி. அதனால் இவளே ஸ்ரீவித்யா. பிரம்மனின் மனைவியாகப் புகழப்பெறும் சரஸ்வதி சகல சாஸ்திரங்களும் அறிந்தவள். அவளை வழிபடுவதால் கல்வியும், ஞானமும் கை கூடும். அப்படிப்பட்ட சரஸ்வதியை வழிபடுவதற்கென்று சில ஆலயங்களே தமிழகத்தில் அமைந்துள்ளன. சில ஆலயங்களில் சரஸ்வதி தனிச் சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். பிரம்ம சாபத்தால் ஊமையாகப் பிறந்த கலைவாணியின் சாபம் நீங்கிய வாணியம்பாடியின் அதிதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள சரஸ்வதி தேவி இதில் குறிப்பிடத் தகுந்தவள். அதுபோல சில ஆலயங்கள் சரஸ்வதி வழிபாட்டிற்க்கென்றே எழுப்பட்டவையாகவும் உள்ளன. இவற்றுள் ஒட்டகூத்தரால் வழிபடப்பட்ட கூத்தனூர் ஸ்ரீ சரஸ்வதி ஆலயம் குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சரஸ்வதிக்கு தனியாக எழுப்பப்பெற்ற ஆலயம் மயிலாடும்பாறையில் இருக்கும் ஸ்ரீ ஞானசரஸ்வதி ஆலயமாகும்.

gnana saraswathi temple

நியூயார்க் வல்லப விநாயகர் ஆலயம், பிட்ஸ்பர்க் வெங்கடேஸ்வரா ஆலயம், ஹூஸ்டன் மீனாட்சி ஆலயம், சென்னை அறுபடை முருகன் ஆலயம் போன்ற ஆலயங்களை எழுப்பியவர் அமெரிக்காவில் வசிக்கும் டாக்டர் அழகப்பா அழகப்பன். இவருக்கு முருகனுக்கு ஓர் ஆலயம் அமைக்குமாறு மீனாட்சி நாடியில் உத்தரவு வந்தது. அந்த ஆலயம் முருகனின் ஏழாம் படை வீடாக புகழ்பெற்று விளங்கும் என்றும் நாடி சொன்னது. அதன்படி ஆலயம் அமைக்க பிள்ளையார்பட்டி – குன்றக்குடி சாலையில் உள்ள மயிலாடும் பாறையைத் தேர்ந்தெடுத்தார் டாக்டர் அழகப்பா அழகப்பன். மயில்கள் அதிகம் வசித்ததாலும், அங்குள்ள ஓர் குன்றில் மயில்கள் வந்து ஆடுவதாலும் அப்பகுதிக்கு மயிலாடும் பாறை என்பது பெயர். காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்கள், குன்றக்குடி வழியாக பழநிக்கு காவடி எடுத்து செல்லும்போது, மயிலாடும்பாறையில் காவடி ஆடிவிட்டு, ஓய்வெடுத்து செல்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் மண்டகப்படி விழாவில் பங்குனி உத்திரத்தன்று குன்றக்குடி ஸ்ரீ ஷண்முகநாதப் பெருமான் இந்தக் குன்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அப்படிப்பட்ட பெருமை மிக்க அந்தக் குன்றின் எதிரே உள்ள இடத்தை வாங்கிய அழகப்பன், அதற்கு ”விசாலாட்சி அழகப்பன் தோட்டம்” என்று பெயரிட்டதுடன் அங்கேயே நாடியில் வந்த உத்தரவுப்படி ”ஜோதி சக்தி சொரூப வேல் சன்னதி”யை நிர்மாணித்தார்.

அறுபடை வீடுகளும் நம் உடலில் உள்ள ஆறு சக்கரங்களைக் குறிக்கிறதாம். திருப்பரங்குன்றம் : மூலாதாரம், திருச்செந்தூர் : சுவாதிட்டானம், பழனி : மணிபூரகம், சுவாமிமலை : அநாகதம், திருத்தணி : விசுத்தி, ஆக்ஞை : பழமுதிர்ச்சோலை. ஏழாவதாக இருக்கும் சஹஸ்ராரத்தின் அமைவிடமே மயிலாடும்பாறை என நாடியில் வந்துள்ளது. ஆக, இங்கு வந்து வழிபட ஞானம் பெருகும் என்பது நாடியில் வந்திருக்கும் நல்வாக்கு. இங்கே முருகனின் ஆயுதமான வேல் தான் முருகனாக வழிபடப்படுகிறது. முருகனுக்கு ஆலயம் அமைத்தது போக எஞ்சியுள்ள இடத்தில் ஞான சரஸ்வதிக்கு ஆலயம் அமைக்க நாடியில் உத்தரவு வரவே அங்கு “ஞான சரஸ்வதி” எழுந்தருளினாள்.

gnana saraswathi

“ஞான சரஸ்வதி” இங்கே ஞான சொருபீணியாக, ஒரு கையில் ஞான கங்கையுடனும் மற்றொரு கையில் ஜபமாலையுடனும், கீழ்க்கரங்களில் சுவடியுடனும், ஞான முத்திரையும் காட்டி அருள்பாலிக்கிறாள். பார்க்கப் பார்க்க பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் பேரழகுடன் விளக்குகிறாள். பிரம்ம சொரூபிணியாக, சிவ ஞானத்தை அருளும் அம்பிகையாக இங்கு விளங்குகிறாள் அன்னை சரஸ்வதி இவளைப் போற்றி வணங்குவதால் கல்வி, வியாபாரத்தில் தடை, திக்குவாய் நீங்குதல், அறிவு மந்த நிலை மாறி பிரகாசித்தல் போன்ற பலன்கள் கிடைக்கின்றன. அதுமட்டுமல்ல; ஞானத்தை அள்ளித் தரும் ஞானாம்பிகையாகவும் இவள் விளங்குகிறாள். இவளை வணங்குவதன் மூலம் ஆன்மீக எண்ணங்கள் வலுப்பெறுவதுடன், நல்லுயர்வும் கிடைக்கிறது.

இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில், அமைதியான சூழலில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. வெகு அருகிலேயே குன்றக்குடி ஷண்முகநாதன் ஆலயம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயம் மற்றும் குபேரர் ஆலயம் ஆகியன அமைந்துள்ளன. குன்றக்குடியில் இருந்தோ, பிள்ளையார்பட்டியில் இருந்தோ ஆட்டோவில் இங்கு வரலாம். இங்கு வந்து வழிபடும் குழந்தைகளுக்கு “அக்ஷராப்யாசம்” செய்யப்படுவதுடன் தேன் கொண்டு நாவில் சரஸ்வதி மந்திரமும் எழுதப்படுகிறது.

படிகநிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ் பூந்தாமரைபோற் கையும் – துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி.

– என்று கலைமகளைப் புகழ்ந்து பாடுகிறார் கம்பர். அந்த அளவுக்குக் கல் மனம் கொண்டோரையும் கலைஞனாக மாற்றும் தன்மை கொண்டவள் ஞான சரஸ்வதி. ஞாபக சக்தியை பலமடங்கு அதிகப்படுத்தி நம் முன்னேற்றத்தை துரிதப்படுத்த ஞான சரஸ்வதி வழிபாடு உதவுகிறது. தேர்வு பயம் நீங்கவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும், எதிலும் முதன்மை பெற்று விளங்கவும் ஸ்ரீ ஞானசரஸ்வதி வழிபாடு உதவும். பள்ளி, கல்லூரி விடுமுறைக்காலமான இப்போது குழந்தைகளுடன் மயிலாடும் பாறை சென்று ஸ்ரீ ஞான சரஸ்வதியை வழிபட்டு வாழ்வில் எல்லாம் வளமும், நலனும் பெறுவோமாக!

கோயில் அமைவிடம் : மயிலாடும்பாறை (குன்றக்குடி – பிள்ளையார்பட்டி நடுவில் உள்ளது)

திறந்திருக்கும் நேரம் : காலை 7.00 மணி முதல் 12.00 வரை. மதியம் 4.30 முதல் 7.30 வரை

சிறப்பு : ஞான சரஸ்வதி மற்றும் சக்தி சொரூப ஞான வேல்

பலன் : ஞானம், அறிவு கிட்டும். வாழ்க்கையில் உயர்வு உண்டாகும்.

******

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s