சத்குரு ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்

மகான்களாலும் சிததர்களாலும் சிறப்பு பெற்ற பூமி பாரத பூமி. தான், தனது என்ற நினைவொழித்து வாழ்ந்தவர்கள் அப்புனிதர்கள். அவர்களில் யோகிகள், சித்தர்கள், முனிவர்கள், ஞானிகள், அவதூதர்கள் என்று பல பிரிவினர் உண்டு. தான் வேறு, பிரம்மம் வேறு என்ற வேறுபாடு எதுவும் இல்லாமல், தானே அதுவாகவும், அதுவே தானாகவும் மாறி, இந்த உலகில் வாழ்ந்தாலும் அது குறித்த பிரக்ஞை எதுவுமில்லாமல் வாழ்ந்து மறைந்த மகா ஞானிகள் மிகப் பலர். அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்.

மதுரையில் வாழ்ந்த சோமநாத அவதானி – பார்வதி அம்மாளுக்கு மகவாகத் தோன்றிய சதாசிவ பிரம்மேந்திரரின் இயற்பெயர் சிவராம கிருஷ்ணன். வேதப் பயிற்சியை உள்ளூர் சாஸ்திரிகளிடம் கற்றுக் கொண்ட அவர், திருவிசை நல்லூர் குருகுலத்திற்குச் சென்று ராமபத்ர தீக்ஷிதர் என்ற ஞானியிடம் மேற்கல்வி பயின்றார். சகல சாஸ்திரங்களையும் விரைவிலேயே கற்றுத் தேர்ந்தார்.

இல்லற வாழ்வை ஏற்றுக் கொள்ளுமாறு அன்னை வற்புறுத்த, சிவராம கிருஷ்ணனின் மனமோ துறவறத்தை நாடியது. இதை அறிந்த குரு, அவரை யோகீந்திரர் ஸ்ரீ பரம சிவேந்திரரிடம் அழைத்துச் சென்றார். அவர், சிவராம கிருஷ்ணனை பல விதங்களிலும் பரீட்சை செய்து, துறவுக்குத் தகுதியானவர்தான் என்பதை முடிவு செய்த பின் மந்திர தீக்ஷை அளித்து, ’சதாசிவ பிரம்மேந்திரர்’ என்ற தீக்ஷா நாமத்தைச் சூட்டியருளினார்.

குருவின் சார்பாக நாட்டின் பல இடங்களுக்கும் திக் விஜயம் செய்து, பல வாதங்களில் வென்று குருவிற்குப் பெருமை தேடிக் கொடுத்தார் சதாசிவர். பின் குருவின் கட்டளைப்படி மைசூர் சென்ற அவர் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாகப் பொறுப்பேற்றார். சமஸ்தானத்திற்கு வரும் பண்டிதர்களை பல்வேறு கேள்விகள் கேட்டும், தர்க்கித்தும் வாதங்களில் வென்றார். நேருக்கு நேர் வாதிப்பது மட்டுமல்லாமல், தான் கூறுவது மட்டுமே சரி என்று வாதித்தும் (ஜல்பா வாதம்), பிறர் கூறுவது எதுவாக இருந்தாலும் அது அனைத்துமே தவறு என்றும் (விதண்டா வாதம்) வாதித்து பல பண்டிதர்களின் வெறுப்புக்கு ஆளானார்.

sadasivan-1

இத்தகவல்கள் பிற சீடர்கள் மூலம் குரு ஸ்ரீ பரம சிவேந்திரரின் கவனத்துக்கு வந்தது. தான் போதித்த ஆன்ம ஞான யோகப் பயிற்சிகளில் கவனம் செலுத்தாது வெற்று வாதுச் செயல்களில் சதாசிவ பிரமேந்திரர் கவனம் செலுத்துவது கண்டு குரு வருந்தினார். அவரது ஆன்ம அது வளர்ச்சிக்கு உதவாது என்று நினைத்த அவர், சீடரைத் தடுத்தாட் கொள்ள எண்ணினார். சக சீடர் ஒருவரிடம், “ குருநாதர் தங்களை தரிசிக்க விரும்புகிறார்” என்று சதாசிவரிடம் கூறும்படித் தகவல் சொல்லி அனுப்பினார்.

சீடர் மூலம் சதாசிவ பிரம்மேந்திரர் தகவல் அறிந்தார். அவர் மனம் பதை பதைத்தது. சீடனான தன்னைப் போய் குரு, “தரிசனம் செய்ய வேண்டும்” என்று சொன்னதன் உட் பொருளை நினைத்துச் சிந்தித்தார். மனம் வருந்தினார். உடன் சமஸ்தானப் பதவியைத் துறந்து விட்டு குருவை நாடி வந்தது வணங்கினார். வாய் புதைத்து நின்றார். ”வெறுமனே வாயில் கை பொத்தி நின்றால் போதுமா? ஊரார் வாயை அடக்கக் கற்ற நீ உன் வாயை அடக்கக் கற்கவில்லையே. முதலில் உன் வாயை அடக்கு” என்றார் குரு சற்றே கோபத்துடன். அவ்வளவு தான். அந்த ஒரு சொல் தீயாய் சதாசிவரின் உள்ளத்தைச் சுட்டது. அந்தக் கணம் முதல் இனி பேசுவதில்லை என்று மனதுக்குள் முடிவு செய்த சதாசிவ பிரம்மேந்திரர், குருவின் பாதத்தைத் தொழுது வணங்கி, மௌன யோகியாய் அவ்விடம் விட்டு அகன்றார்.

sad1

மனிதர்கள் நடமாட்டம் அற்ற காடு, மலைப் பகுதிகளில் சென்று வசிக்க ஆரம்பித்தார். தீவிர யோக சாதனைகளில் ஈடுபட்டார். தவத்தின் விளைவாய் தான், தனது என்ற எண்ணங்கள் நீங்கி ஸ்திதப் பிரக்ஞன் ஆனார். அதுமுதல் சதா பிரம்ம நிலையில் லயித்திருப்பது சதாசிவ பிரம்மேந்திரரின் வழக்கமானது. ஊன் இல்லை. உறக்கம் இல்லை. உணவு இல்லை. உடை இல்லை ஆசை, அபிலாஷைகளைத் துறந்த அவதூதராக நடமாடத் துவங்கினார்.

****

ஒருமுறை கொடுமுடியில் காவிரி ஆற்றின் குறுக்கே இருந்த பாறையில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார் சதாசிவ ப்ரமேந்திரர். தூரத்தே இருந்து அவர் தவம் செய்வதை மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மகானை அடித்துச் சென்றுவிட்டது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் வெள்ளத்தினால் அவர் அடித்துச் செல்லப்பட்டு விட்டார் என்றே மக்கள் கருதினர். பல நாட்கள் கழித்து வெள்ளம் வடிந்தது. அப்போது வீடு கட்ட மணல் எடுப்பதற்காக வந்த சிலர் ஆற்றின் ஒருபுறத்தில் தோண்டினர். அப்போது திடீரென மண்வெட்டியில் இருந்து ரத்தமாக வந்ததைக் கண்டு அஞ்சிய அவர்கள் மேலும் தோண்டிப் பார்த்த போது,. உள்ளே அமர்ந்த நிலையில் கண்களை மூடி சதாசிவர் தவம் செய்து கொண்டிருப்பது தெரிந்தது. அவர் தலை மீது மண்வெட்டி பட்டு, அந்தக் காயத்திலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. மக்கள் கூக்குரல் கேட்டுக் கண் விழித்த சதாசிவர், ரத்தம் வழிந்த தலையைத் துடைத்து விட்டுக் கொண்டார். உடனே ரத்தம் வருவது நின்று விட்டது. காயமும் ஆறியது. எதுவுமே நடக்காதது போல் அவ்விடம் விட்டு வேகமாகச் சென்று விட்டார் சதாசிவர்.

****

புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் காட்டுப் பகுதியில் சுவாமிகள் ஒருமுறை சுற்றிக் கொண்டிருந்தார். மகானைப் பற்றிக் கேள்விப்பட்ட புதுக்கோட்டை மன்னர், எப்படியாவது மகானிடம் பேசி, தன்னோடு அரண்மனைக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். அதனால் மகான் செல்லுமிடமெல்லாம் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். இப்படியே பல நாட்கள் கடந்தன. மன்னனும் ஊன், உறக்கமின்றி மகானையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார். மகான் சதாசிவர் மனம் இரங்கவே இல்லை.

sad2

பின் ஒருநாள், ”என்னுடன் வராவிட்டாலும் பரவாயில்லை எனக்கு நீங்கள் மந்திர தீக்ஷை அளித்தால் போதும்” என சதாசிவரைத் தொழுதார் மன்னர். உளம் இரங்கிய சதாசிவரும், மணலில் தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை எழுதிக் காண்பித்தார். அம்மந்திரத்தையே தனக்கான உபதேசமாகக் கொண்ட மன்னர், அவர் கைப்பட்ட அம்மணலை தமது ஆடையில் எடுத்துச் சேகரித்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றார். அவர் வரைந்து காட்டிய அக்ஷரங்களைக் கொண்டு ஒரு யந்திரம் ஸ்தாபித்து, அம்மணலை ஒரு தங்கச் சிமிழுக்குள் வைத்து பூஜை செய்து வரலானார். (இன்றளவும் புதுக்கோட்டை அரண்மனையில் அந்தச் சிமிழ் பாதுகாக்கப்பட்டு, பூஜை செய்யப்பட்டு வருகிறது.)

இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவராகக் கருதப்படும் இம்மகான் “மானஸ ஸஞ்சரரே”, “சர்வம் ப்ரம்ம மயம்”, “பிபரே ராமரஸம்”, “ப்ரூஹி முகுந்தேதி” போன்ற பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும், “பிரம்ம சூத்ர வ்ருத்தி”, “ப்ரம்ம தத்வ பிரகாசிகா”, “யோக சுத்தாகரா”, “ஆத்ம வித்ய விலாஸம்” போன்ற பல நூல்களையும் எழுதியிருக்கிறார்.

பல்வேறு அற்புதங்கள் புரிந்து, பலரது ஆன்ம ஞானம் சிறக்கக் காரணமாக இருந்த மகான் சதாசிவ பிரம்மேந்திரர், 1753-ம் ஆண்டில் சித்திரை மாதத்து தசமி திதி அன்று, கரூரை அடுத்த நெரூரில், ஜீவ சமாதி ஆனார். அவரது சமாதி ஆலயம் தீராத வினைகள் தீர்க்கும் திருக்கயிலாயமாக விளங்கி வருகிறது.

குரு மகான்களைத் தொழுவோம்; குறைகளைக் களைவோம்.

****

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s