வினை தீர்க்கும் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர், நங்கைநல்லூர்

தீராத வினை தீர்க்கும் தெய்வங்களில் தலைமையானவர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர். ’நாளை என்பதே இல்லை நரசிம்மனிடத்தில்’ என்பது ஆன்றோர் வாக்கு. வேண்டியவர்களுக்கு வேண்டிய வரம் அருளும் வரப்ரசாதியான ஸ்ரீ நரசிம்மர், பிரகலாதன் வேண்டுகோளுக்கிணங்கி, ஹிரண்யனை வதம் செய்வதற்காக ஸ்ரீஅகோபிலத்தில் தோன்றியவர். பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிரசித்தி பெற்ற பல தலங்களில் யோக நரசிம்மராக, உக்ர நரசிம்மராக, சிம்மாசலராக என தோற்றங்களில் காட்சி தருகிறார். அவற்றில் சிறப்பானதொரு கோலம் சாந்த மூர்த்த கோலம். அக்கோலத்தில், உக்ரம் தணிந்தவராக, சாந்தமூர்த்தியாக தாயார் ஸ்ரீ லக்ஷ்மி தேவியுடன் எழுந்தருளியுருக்கும் தலம்தான் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம், நங்கைநல்லூர்.

lakshmi narasimhar - nanganallur

அந்நியப் படையெடுப்பின் போது பல ஆலயங்கள் தரை மட்டமாகின. பல அழித்தொழிக்கப்பட்டன. சில மூர்த்தங்கள் பக்தர்களால் மறைத்து வைத்து ஆராதிக்கப்பட்டன. இப்படி பல விதங்களிலும் பாதிப்புக்குள்ளான ஆலயங்கள் பின்னர் மெல்ல மெல்ல வெளித் தோன்றி சிறப்புப் பெறலாயின. நங்கை நல்லூர் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயமும் அவ்வாறு பூமிக்குள் இருந்து வெளித்தோன்றி சிறப்புப் பெற்றதுதான். சில பணிகளுக்காக பூமியைத் தோண்டும் போது முதலில் மணி, தூபக்கால், தீபத்தட்டு போன்றவை வெளிப்போந்தன. இவை பல நூறு ஆண்டுகளுக்கு முற்ப்படவை என்பதும், குறிப்பாக இவற்றில் இருக்கும் முத்திரைகள் ”வைணவம்” சம்பந்தப்பட்டவை என்பதும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வெளிப்படுத்தினர். பின்னர் மெல்ல மெல்ல அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டதில் சாந்த சொரூபரான ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் வெளிப்பட்டார். பின்னர் அந்தப் பகுதிகள் கவனமாகத் தோண்டப்பட்டதில் அங்கு பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட ஒரு பழமையான ஆலயம் புதையுண்டிருந்ததைக் கண்டறிந்தனர். இதைக் கண்டுபிடிக்கக் காரணமானவர் முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஸ்ரீ அஹோபில மடம் அழகிய சிங்கர் இவ்வாலயத்தை ஆய்வு செய்து புதிய அடிக்கல் நாட்டினார். ஆலயத்தின் பண்டைய வரலாறும் பக்தர்களுக்குத் தெரிய வந்தது.

ஆலய வரலாறு
தேவாதி தேவர்களால் தொழப்பட்டவர் ஜமதக்னி முனிவர். மிகப் பெரும் ஆற்றல் கொண்ட அவர், அவதார புருஷரான பரசுராமரின் தந்தையும் கூட. அவர், பிரகாலதனுக்கு காட்சி தந்தருளிய ஸ்ரீ நரசிம்மரை தாமும் தரிசிக்க விரும்பினார். அதற்காக சோலைகள் சூழ்ந்த “தக்ஷிண தீபாலயம்” என்ற பகுதியைத் தேர்ந்தெடுத்து உக்ர யாகம் புரியத் துவங்கினார். அவரது தவ வேள்வியின் அனல் தேவலோகத்தைச் சுட்டது. வைகுந்தத்திலும் நுழைந்து தகித்தது. தவம் கண்டு மகிழ்ந்த ஸ்ரீ நரசிம்மர், வேள்வியின் நடுவே உக்ர நரசிம்மராகத் தோன்றி ஜமதக்னியை ஆசிர்வதித்தார். வேண்டும் வரத்தைக் கேட்டார். அதற்கு ஜமதக்னி முனிவர், “ ஐயனே, நான் பெற்ற இந்த இன்பத்தை இந்த உலக மக்கள் அனைவரும் பெற வேண்டும். ஆகவே இங்கேயே நீங்கள் சாந்த சொரூபத்துடன், தாயாரோடு எழுந்தருள வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார். ஸ்ரீ நரசிம்மரும் சாந்த சொரூபினராகி அவ்வாறே வரம் அளித்தார். “தக்ஷிண தீபாலயம்” என்று அழைக்கப்பட்ட அப்பகுதி, நங்கையுடன் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் எழுந்தருளியதால் ”நங்கைநல்லூர்” என்று அழைக்கப்பட்டது. பின்னர் மருவி நங்கநல்லூர் ஆனது.

தலச் சிறப்பு
பல வகைகளில் சிறப்புப் பெற்றதாக இவ்வாலயம் விளங்குகிறது. ஆலயத்தில் இருக்கும் ”ஸ்ரீ சுதர்சனர்” சன்னதி மிகுந்த சக்தி வாய்ந்தது. சுதர்சன யந்திரம் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால் தீய பாதிப்புகள் உடையவர்கள், மன பாதிப்புக்கு உள்ளானவர்கள் இங்கு வந்து இறைவனை வழிபட்டு தியானம் செய்ய நற்பலன் கிடைக்கிறது. ஸ்ரீ சுதர்சனரின் மறுபுறத்தில் யோக நரசிம்மர் பஞ்ச முக ஆதிசேஷனின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். நாங்கு வேதங்களும் நான்கு சக்கரங்களாக இவரது திருக்கரங்களில் காட்சி அளிக்கின்றன. சுற்றிலும் அஷ்ட லக்ஷ்மியர் அனுக்ரஹப் பார்வையுடன் எழுந்தருளியுள்ளனர். ஸ்ரீ சுதர்சனர், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர், அஷ்ட லக்ஷ்மி தேவிகளை வலம் வந்து வழிபட தோஷங்கள் நீங்கி வளம் பெரும் என்பது நம்பிக்கை. ஸ்ரீ சுதர்சனர் சன்னதி எதிரே உள்ள அலங்கார மண்டபத்தில் பிரயோகச் சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆலயம் அகழாய்வு செய்யப்பட்ட போது கிடைத்த மஹாவிஷ்ணுவின் பிரயோகச் சக்கரமே இங்கு பிரார்த்தனைச் சக்கரமாக உள்ளது. இறைவனை வேண்டி இந்தப் பிரார்த்தனைச் சக்கரத்தின் மீது கைகளை வைத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கின்றனர் பக்தர்கள்.

lakshmi narasimha 2

ஆலயத்தில் இருக்கும் ஆஞ்சநேயர் சன்னதி விசேஷமானது. வெளிநாட்டுக்குச் செல்வதில் தடை, பிரச்சனைகள் உள்ளவர்கள் இவரை வேண்டிக் கொண்டு வழிபட்டால் அந்தத் தடையை நீக்கி, ஒளியேற்றுகிறார் என்பது இவருக்கு இருக்கும் சிறப்பு. ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ தேசிகர், ஆழ்வார்கள், பூதேவி, ஸ்ரீதேவி சமேத ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள், ஸ்ரீமத் ஆண்டாள் ஆகியோர் வெளிப்ப்ரகாரத்தில் காட்சி தருகின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் தூண் வடிவில் உள்ள கருவறையில் தாயாருடன் காட்சி தருகிறார். திருக்கரங்களில் சங்கு, சக்கரத்துடன், ஒரு கை அபய ஹஸ்தம் காட்ட, மற்றொரு கை ஸ்ரீ லக்ஷ்மி தேவியை அணைத்துக் கொண்டிருக்க, எழிலே உருவாக, கருணை பொங்கும் முகத்துடன், கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர். ஐந்தடி உயர முள்ள சிலா விக்ரகம். திருமுடியில் அழகான கிரீடம். கழுத்தில் பெரிய நீலக்கல் பதித்த மாலை பிரகாசிக்கிறது. இரண்யனை பிரதோஷ காலத்தில் சம்ஹாரம் செய்ததால் இங்கு பிரதோஷ பூஜை விசேஷமாக நடைபெறுகிறது. அவருக்கு இருபுறமும் ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் சன்னதியும், ஸ்ரீ கோதண்ட ராமர் சன்னதியும் பொலிவுடன் காணப்படுகிறது. வெளியே இருக்கும் கண்ணாடி மண்டபமும் தனிச் சிறப்பு வாய்ந்தது. ஸ்ரீ காஞ்சி மஹாப் பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், இங்கு வந்து வழிபட்டு, இவ்வாலய இறைவனை ”வினை தீர்க்கும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்” என அழைத்துச் சிறப்புச் செய்துள்ளார். அதற்கேற்றவாறு இங்கு வந்து வழிபட்டு தங்கள் வினைகளை நீக்கிக் கொண்டவர்கள் ஏராளம். ஏராளம்.

இங்கு பிரம்மோற்சா விழா, விடையாற்றி உற்சவம், கருட சேவை போன்றவை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தை மாதம் தோறும் நடக்கும் “திருமாங்கல்யச் சரடு உற்சவம்” எனப்ப்டும் “திருக்கல்யாண உற்சவம்” வெகு சிறப்பானது. அன்றைய தினம் கல்யாண கோலத்தில் தாயாரும், எம்பெருமானும் காட்சி தருகின்றனர். ஆயிரக்கணக்ககில் திருமாங்கல்யச் சரடு தாயாருக்கு சாற்றப்பட்டு பின்னர் அவை சுமங்கலிகளுக்கும், கன்னிப் பெண்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இவற்றை அணிவதன் மூலம் திருமண பந்தம் நீண்டு வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்பதும், மணமாகாத பெண்களுக்கு உடனடியாக வரன் கூடும் என்பதும் ஐதீகம். திருமணத் தடை, காரியத் தடை, வேலை, தொழில் பிரச்சனைகளுக்கு இங்கு வந்து, அதற்கேற்ற முறைப்படியான வழிபாடுகளைச் செய்ய, அவை நீங்குகின்றன என்பது கண்கூடு. வழிபாட்டு முறைகளை ஆலயப்பட்டர் தெரிவிப்பதற்கேற்ப, முறை வழுவாது செய்து வந்தால் பலன் நிச்சயம்.

ஆலயம் மிக ஏகாந்தமான சூழலில், நல்லதிர்வுகளோடு, மந்திர சித்தியோடு விளங்குகிறது. இவ்வாலயத்தை கிருஷ்ண பக்த ஜனசபா அறக்கட்டளை மிகச் சிறப்பாக நிர்வகித்து வருகிறது.

ஆலய அமைவிடம்
ஆலயத்தை நங்கநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோ மூலம் அடையலாம். மூவரசம்பட்டு பேருந்து நிறுத்தத்திலிருந்தும் ஆலயத்திற்கு எளிதில் செல்லலாம். பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் இருந்தும் ஆட்டோ மூலம் ஆலயத்தை அடைய இயலும்.

lakshmi narasimhar1

ஆலய முகவரி
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நவநீத கிருஷ்ணன் ஆலயம்
எம்.எம்.டி.சி. காலனி,
நங்கைநல்லூர்,
சென்னை – 600 061

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரைத் தொழுவோம்; லட்சோப லட்சம் நன்மைகளை பெறுவோம்.

****

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.