அதிசயமான “அவ்வுலகம்”

மரணம், மரணத்தின் பின்னான வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து யார், யாரெல்லாம் நாவல்கள் அதிகம் எழுதியிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. நான் படித்த சில நூல்கள் பாலகுமாரனின் ”காசும் பிறப்பும்” மற்றும் ”சொர்க்கம் நடுவிலே” இரண்டுமே என்னைக் கவர்ந்தவை. அதிகம் கவர்ந்தது “காசும் பிறப்பும்” என்னைப் பொறுத்தவரை பாலகுமாரனின் சிறந்த நாவல்களில் அதுவும் ஒன்று.

சமீபத்தில் படித்து முடித்தது வெ. இறையன்புவின் “அவ்வுலகம்.” இதுவும் மரணம் பற்றிப் பேசும் ஒரு நாவல்தான். ஆனால் ’மரணம்’ என்பதை விட அதன் பின்னான வாழ்க்கையைச் சொல்கிறது சுவாரஸ்யமாய்.

iraiyanbu

வெ. இறையன்பு, நல்ல பேச்சாளர். பாமரருக்கும் மிக எளிதில் தான் சொல்வது புரியக் கூடிய வகையில் பேசக் கூடியவர். அவரது சில பேச்சுக்களை சென்னைத் தொலைக்காட்சியில் கேட்டிருக்கிறேன். நிறுத்தி, நிதானமாகப் பேசுவார். குறிப்பாக மாணவர்கள், இளைஞர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் பேசுவார். அவர் பேசப் பேச அவர் வாசிப்பின் ஆழம் புலப்படும். சிறந்த கட்டுரையாளரும் கூட. ஒரு சில அவரது கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். சுயமுன்னேற்றக் கட்டுரைகள்தான். அவர் எழுதிய நாவல் ஒன்றையும் முன்னர் வாசித்திருக்கிறேன். “சாகாவரம்” என்று நினைக்கிறேன். அதுவும் மரணம், அதன் பின்னான வாழ்க்கை மற்றும் தேடல் பற்றியது. ’நசிகேதன்’ என்ற பாத்திரம் அதில் முக்கியமானதாக வரும். ”அவ்வுலகம்” இவரது மூன்றாவது நாவல். இந்த நாவல் என்னை மிகவும் கவர்ந்து விட்டது.

”பக்கத்து விட்டுத் தாத்தா செத்துப் போயிட்டாராம்மா..?” என்று துவங்குகிறது நாவலின் முதல் வரி.

கதையின் நாயகன் “த்ரிவிக்ரமன்” சந்திக்கும் முதல் மரணம் அது. “செத்துப் போறதுன்னா என்ன?” கேள்விகள் எழும்புகின்றன திரிவிக்கிரமனுக்கு. சிந்தனைகள் விரிகின்றன. அதிலிருந்து ”அவ்வுலகம்” துவங்குகிறது. முதலில் நிதானமாகச் செல்லும் நாவல், பின் வேகம் எடுக்கிறது. ஆற்றொழுக்கான, அழகான நடை. ஜாலங்கள் ஏதுமில்லாத நேர்த்தியான கதை சொல்லும் முறை. நடுநடுவே தனது பணி அனுபவங்களை அல்லது அரசு அலுவலங்களில் நடக்கும் சம்பவங்களாக தான் கேள்விப்பட்டதை ஆங்காங்கே இறையன்பு சேர்த்திருக்கிறார் என்று நினைக்கிறேன். நேர்த்தியான கட்டமைப்பில், குழப்பமில்லாத் தன்மையில் நாவல் அமைந்திருக்கிறது.

avvulakam

வாழ்வில் இழந்த ஒரு நொடியைக் கூட திரும்பப் பெற முடியாது. இது உண்மை. அப்படி திரும்பப் பெறும் வாய்ப்பு ஒருவனுக்குக் கிடைத்தால் அவன் என்ன செய்வான்? அதைத் தான் ”அவ்வுலகம்” என்னும் உலகம் ஒன்றைப் படைத்து அதில் சுவைபடச் சொல்லியிருக்கிறார் இறையன்பு. ”அவ்வுலகம் என்பது இவ்வுலகமல்ல; அது நினைவின் நீட்சியாகவும் இருப்பதுண்டு. கனவின் காட்சியாகவும் அமைவதுண்டு” என்கிறார் நூலின் முன்னுரையில் அவர்.

நாவலில் நடுநடுவே வரும் தத்துவங்கள் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதுடன் சிந்திக்கவும் வைக்கின்றன.

”நம்பிக்கைகள் எல்லாமே ஒரு வகையில் மூட நம்பிக்கைகளே”

”சுவாரசியமில்லாத மனிதர்களின் வெற்றி, மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை ஒரு போதும் தருவதில்லை”

“முட்டாள்தனத்தைக் கொண்டாடுகிற உலகத்தில் புத்தர் புறந்தள்ளப்படுவது இயல்புதான்”

”உணர்ந்தவர்கள் எல்லோரும் புத்தர்களே”

”ஒப்பிடாத வரை உன் வாழ்வு சொர்க்கம். எப்போதும் ஒப்பிட்டு கொண்டேயிருப்பவர்கள் நரகத்திலே உழலுகிறார்கள்”

வாழ்க்கை என்பது ஓர் அற்புதம். அதை வாழ்வாங்கு வாழ முடியாவிட்டாலும், கூடுமானவரை நல்லபடியாகவாது வாழ்ந்து முடிக்க வேண்டும். பிறருக்கு நன்மை செய்கிறோமோ இல்லையோ, பிறரைத் துன்புறுத்தாமல், மனதைப் புண்படுத்தாமல், கெடுதல் செய்யாமல் வாழ முனைய வேண்டும். தவறுதல் மனித இயல்புதான். அதைப் போல திருந்துதலும்தான். இதையெல்லாம் இந்த நாவல் வலியுறுத்துகிறது. இவ்வுலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை ‘அவ்வுலக’ சம்பவங்கள் மூலம் சொல்கிறது இந்நாவல்.

”இருந்து தான், தன்னுணர்வு என்பதற்று, இல்லாமல் போவதுதான் முக்தியா அல்லது எல்லாவற்றிலும் தன்னைக் காணும் நிலையை அடைவதுதான் முக்தியா என்ற சிந்தனை, நாவலின் 28ம் அத்தியாயத்தின் இறுதிப் பகுதியைப் படிக்கும் போது எனக்குள் தோன்றியது. அது மேலும் பல சிந்தனைகளை எழுப்பிக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் இதை அத்வைத தத்துவம் பேசும் ஆன்மீக நாவல் என்று சொல்லலாம். நிலையாமைத் தத்துவம் பேசும் தத்துவ நாவல் என்றும் சொல்லலாம். ஏன், தம்பதியர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதைச் சொல்லும் குடும்ப நாவல் என்றும் சொல்லலாம். எல்லாவற்றிற்கும் இந்நாவல் இடம் தருகிறது, ஏன் நாத்திகத்திற்கும் கூட.

இந்த நூலைப் படிப்பவர் அவர் ஆத்திகரோ, நாத்திகரோ, இதுவரை எப்படி வாழ்ந்திருந்தாலும், மீண்டும் அதை ஒருமுறை பரிசீலிக்க வைத்து, தன் சரி, தவறுகளைப் பற்றிச் சிந்திக்க வைப்பதுதான் இந்த நாவலின் வெற்றி.

திரு. வெ. இறையன்பு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்.

தொடர்புக்கு : http://www.uyirmmai.com

புத்தகத்தை dialfor books மூலம் வாங்கலாம்.

அரவிந்த்

****

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.