சில நேரங்களில் சில நினைவுகள் – 3 – சத்திரம்

இரா.முருகன் எழுதிய விஸ்வரூபம் நாவலில் திருக்கழுகுன்றத்தில் இருக்கும் ஒரு சத்திரம் முக்கிய இடம் பெறுகிறது. அதே போல கரிச்சான் குஞ்சு எழுதிய ‘பசித்த மானுடம்’ நாவலிலும் சத்திரம் வருகிறது. புதுமைப்பித்தனின் ’சித்தி’யிலும் கூட சத்திரம் வருவதாக ஞாபகம். இன்னும் பலர் ’சத்திரம்’ பற்றி எழுதியிருக்கக் கூடும். நினைவிலில்லை. ஆனால் ”சத்திரம்” என்றவுடன் எனக்கு நாங்கள் வசித்த ’அழகாபுரி’ ஊரின் சத்திரம்தான் நினைவுக்கு வருகிறது.

அப்போது நான் சின்னப்பையன். 11-12 வயது இருக்கும். அதுநாள்வரை சென்னையில் பாட்டி வீட்டில் தங்கிப் படித்து விட்டு 6ம் வகுப்பில் படிப்பதற்காக என் பெற்றோர்கள் வசித்த அந்த ஊருக்கு வந்தேன். அங்கேதான் அப்பா, அம்மா, தம்பி, தங்கை, பாட்டி எல்லோரும் இருந்தார்கள். அதுநாள்வரை நகரத்தில் அதுவும் – சென்னையின் புகழ்பெற்ற திருவல்லிக்கேணியில் – இருந்து விட்டு குக்கிராமத்திற்கு வந்தது, கண்ணைத் திறந்து காட்டில் விட்ட மாதிரி ஆகி விட்டது. நிஜமாகவே அது ஒரு பட்டிக்காடுதான். வந்து செல்வதே சில பஸ்கள்தான். அதுவும் நேரத்திற்கு வராது. வந்தாலும் நிற்காது. இரவு எட்டு மணிக்கு மேல் அந்த வழியாக எந்தப் பேருந்தும் வராது. அப்படி ஒரு கிராமப் பகுதி.

அந்த ஊரில் ஒரு சத்திரம் இருந்தது. அழகான சத்திரம். தர்மம் வளர்த்த நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்குச் சொந்தமானது. சத்திரத்துக்கு அருகில் ஒரு சிவன் கோவில் உண்டு. நகரத்தார்கள் கட்டிய கோயில். அதன் அதிரே ஒரு பாசி பிடித்த குளம். குளக்கரையில் அழகான மரங்கள். சிவன் கோவிலிலிருந்து சற்று தொலைவில் நகரத்தார் இனத்தைச் சேர்ந்த ஒரு பெரியவரின் சமாதி ஆலயம் இருந்தது. எப்போதாவது ஒருமுறை அங்கே பூஜை நடக்கும்.

சிவன் கோயில் மட்டும் காலையில் சில மணிநேரம், மாலையில் சில மணிநேரம் திறந்திருக்கும். பெரும்பாலும் அங்கு பக்தர்கள் யாரும் வழிபட வந்து நான் பார்த்ததில்லை. விடுமுறை நாளில் விளையாடப் போகும் எங்களையும் குருக்கள் ஏதாவது சொல்லி பயமுறுத்தி அனுப்பி விடுவார். அவரே குருக்கள்; அவரே சுயம்பாகம். அவரே சமைத்து, அவரே நைவேத்யம் செய்து அவரே எடுத்துப் போய் விடுவார்.

சத்திரம் மிக நீண்டது. அதற்கு ஒரு கணக்குப் பிள்ளை உண்டு. அவரை எல்லாரும் மானேஜர் என்றுதான் அழைப்பார்கள். மற்றபடி ஒரு மணியக்காரர் (அவரே சமையல்காரரும் கூட), ஒரு உதவியாளர் உண்டு.

அமாவாசை, ஏகாதசி அல்லது ஏதாவது விசேஷ தினங்கள் என்றால் அதற்கு முந்தைய நாள் மாலை மணியாரர் வீட்டுக்கு வந்து விடுவார். ”நாளைக்கு அமாவாசை. ஒரு பண்ணண்டு மணிக்கெல்லாம் சத்திரத்துக்கு வந்துடுங்கோ. நான் பேர் சேர்த்துண்டுடறேன்” என்பார்.

“இல்லை. அவன் வேலைக்குப் போய்டுவான். குழந்தைக எல்லாம் ஸ்கூலுக்குப் போயிடும். நாங்க மட்டும் எப்படி வர்றது?” என்பாள் பாட்டி.

“அப்படிச் சொல்லப்படாது. மாசத்துக்கு ஒரு தடவை தானே! நீங்களாவது அவசியம் வர்றணும்” என்பார்.

பாட்டியும் அம்மாவிடம் கலந்து பேசிவிட்டு ’சரிப்படாது’ என்று மறுத்து விடுவாள்.

அந்தச் சத்திரம் யாரோ ஒரு செட்டியாரின் நினைவாக ஸ்தாபிக்கப் பெற்றது. தினம் பத்து பேருக்குக் குறையாமல் அன்னதானம் நடக்கும். விசேஷ நாட்களில் 30 பேராவது வருவார்கள். அவர்களுக்கு அதிதி வந்தனமாகச் சாப்பாடு. பின் வெற்றிலை, பாக்கு கொடுப்பார்கள். அவ்ளோதான். பெரும்பாலும் பள்ளி இருக்கும் என்பதால் எங்களால் அந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாது. எப்போதாவது அந்த விசேஷங்கள் விடுமுறை நாளில் வந்தால் கொண்டாட்டம்தான். நாங்கள் இருப்புக் கொள்ளாமல் 11 மணிக்கெல்லாம் சத்திரத்துக்குப் போய் விடுவோம்.

சாப்பிடுவதற்காக அல்ல; விளையாட.

2

சத்திரம் மிகப் பெரிது. வாசலில் ஒரு பெரிய இரும்பு கேட். அது பெரும்பாலும் திறந்தே இருக்கும். உள்ளே நுழைந்தால் ஆனை அடிக்கல் பதித்த ஐம்பது, அறுபது அடிகளுக்கும் மேலான மிகப் பெரிய திறந்த வெளி. அதன் எல்லையில் தடுக்கப்பட்ட திறந்த அறையில் அழகாக வேலைப்பாடுகள் எல்லாம் செய்து மூடப்பட்ட ஒரு வண்டி. (அதை குதிரை ஓட்டுமா அல்லது மாடு ஓட்டுமா, இல்லை மனிதன் இழுத்துச் செல்வானா என்பது தெரியாது) அதை ஒட்டி உள்ளே நீண்ட மிகப் பெரிய திண்ணைகள். அழகழகான தூண்கள். ஆங்காங்கே சின்னதாக ஒரு மாடப் பிறை. அதில் சின்னதாக விபூதி, குங்குமச் சம்புடம் இருக்கும். நீண்ட, எப்போதும் அடைத்திருக்கும் சன்னல்கள். எட்டடிக்கும் மேலான உயரமான நிலை மற்றும் கதவுகள். அதுமாதிரிக் கதவுகளையோ, பிரமாண்டமான திண்ணைகளையோ அதுவரை சென்னையில் பார்த்திராத எனக்கு, அந்த நிலை மற்றும் கதவுகளில் இருக்கும் அழகான வேலைப்பாடும் அதில் இருக்கும் கஜ லக்ஷ்மியும் பார்க்க ஆச்சரியமாக இருக்கும். எம்பி எம்பி லக்ஷ்மியைத் தொட முயற்சி செய்வேன். எட்டாது. (இன்னமும் கூட ’லக்ஷ்மி’ எட்டாமல் தான் இருக்கிறாள்)

ஏதோ எழுதிக் கொண்டே எல்லாரையும் அதட்டிக் கொண்டிருக்கும் மேனேஜர், ‘இந்தா வரேன்… இந்தா வரேன்’ என்று எங்களைப் பார்த்துக் கத்துவார். உடனே வாசலுக்கு ஓடி விடுவோம். அங்கே கொஞ்ச நேரம் விளையாடி விட்டு, அந்த அதிஷ்டானத்திற்குப் போவோம். அது பூட்டியிருக்கும். அதை ஒட்டி இடிந்த, கோட்டை போன்ற பகுதி இருக்கும். (அதுவும் ஒரு காலத்தில் சத்திரத்தின் பகுதியாக இருந்திருக்கலாமோ என்னவோ?!) அங்கே, இங்கே சுற்றி விட்டு குளத்திற்குப் போவோம். மற்ற பசங்கள் எல்லாம் குதித்து, குளித்து நீச்சல் அடித்துக் கொண்டிருப்பார்கள். நீச்சல் தெரியாத நான் “ஞே” என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.

1

கையோடு கொண்டு வந்திருக்கும் தாள்களைக் கிழித்து குளத்து நீரில் கப்பல் விடுவோம். அது சரியாகப் போகாது மீண்டும் கரைக்கே வரும். போரடித்துப் போய் குளக்கரையை ஒட்டிய தோப்புக்குப் போவோம்.

4

பச்சைப் பசேல் என்று மிகவும் பசுமையாக இருக்கும் அந்த இடம். மிகப் பெரிய மரங்கள் சூழ்ந்து நிழலாக இருக்கும். ஆனால் கீழே எல்லாம் இலை, தழைக் குப்பைகள், அட்டைப் பூச்சிகள் இருக்கும் என்பதால் விளையாட முடியாது. முள் குத்தினாலும் வலியைப் பொறுத்துக் கொண்டு ”கறுப்பு-சிவப்பு” மணிகளைப் (குண்டுமணி) பொறுக்கிப் பையை நிரப்பிக் கொள்வோம். அதற்குள் மணி 12 ஆகி இருக்கும். ஒரே ஓட்டமாக ஓடி சத்திரத்தை அடைந்தால், நிறையப் பேர் வந்து காத்திருப்பார்கள். பெரும்பாலோர் வயதான ஆச்சிகள். ஒரு சில அப்பச்சிகள். திருநீறு பூசிய பலரது முகத்தில் பசி தெரியும்.

’என்ன இன்னும் கூப்பிடலே?’ என்று தங்களுக்குள் பேசிக் கொண்டு காத்திருப்பார்கள். யாரும் உள்ளே வந்து தொந்தரவு செய்யாமல் இருக்க மணியக்காரர் கதவைச் சார்த்தி வைத்திருப்பார்.

12.30-1.00 மணியைப் போல வெளியே வருவார்.

”எல்லாம் கை, கால் அலம்பிண்டு வாங்கோ” என்பார்.

சிலர் கிணற்றடிக்குச் சென்று கை, கால் அலம்புவர். சிலர் குழாயடிக்குச் சென்று பித்தளை பைப்புகளைத் திறந்து முகம், கை, கால் கழுவித் தயாராவர்.

உள்ளே நுழைந்தால் ஆச்சிகளும் அப்பச்சிகளும் இன்னபிறரும் ஹாலில் ஓரிடத்தில் அமர, மற்றவர்கள் அதனை ஒட்டிய வேறிடத்தில் அமர வைக்கப்படுவர். இலை எல்லாம் போடப்பட்டு, தண்ணீர் வைக்கப்பட்டு எல்லாம் தயாராக இருக்கும்.

மானேஜர் வந்து ஒருமுறை உள்ளே வந்து எல்லோரையும் பார்த்து விட்டுப் போவார் (உருப்படிகளை எண்ணுவார் போல)

அவர் போன பின் ’ம்ம்ம்’ என்பார் மணியக்காரர்.

உடனே பரிமாறத் தொடங்குவார் உதவியாளர். பாயசத்தில் ஆரம்பித்து ஒவ்வொன்றாக வர சாதம் மட்டும் பெரும் பட்டையாக வரும்.

’பட்டைச் சாதம்’ என்பதை அப்போதுதான் முதன் முதலாகப் பார்ப்பதால் எனக்கு அது மிகவும் வியப்பாக இருக்கும். பெரியவர்களுக்கு பெரிய பட்டை. எங்களைப் போன்ற சிறுவர்களுக்கு காபி டபராவில் அடித்த சின்னப் பட்டை.

”எதையும் எறியக் கூடாது” என்று பசங்களை மிரட்டிக் கொண்டே மணியக்காரர் சாம்பார் வாளியைத் தூக்கி வருவார். அவரால் குனிய முடியாது என்பதால் நின்ற வாக்கிலேயே சாம்பாரை ஊற்றுவார். கொட்டாங்குச்சியால் செய்யப்பட்டிருக்கும் மிக நீண்ட மரக் கரண்டி அது. நின்றவாக்கிலே ஊற்ற அவருக்கு அது சௌகரியமாக இருந்தது. சிறுவர்களாகிய எங்களுக்குத் தான் சட்டை, ட்ராயர் எல்லாம் நனைந்து விடும். ஒருமுறை ஊற்றினால் ஊற்றியதுதான். திரும்பக் கொண்டு வரமாட்டார். எந்த ஒன்றுமே திரும்பக் கேட்டால் கிடைக்காது. அதுபோல சாப்பிட்டு முடித்ததும் வந்து இலையைப் பார்ப்பார். ஏதாவது மீதம் இருந்தால் திட்டுவார். எரிந்து விழுவார். அவருக்குப் பயந்து கொண்டே கசக்கும் பாகற்காயில் ஆரம்பித்து, பிடிக்காத எல்லாவற்றையும் விழுங்கி வைத்திருக்கிறேன்.

அந்த ஊரில் இருந்த மூன்று வருடங்களில் சத்திரத்தில் ஒரு நான்கைந்து முறை சாப்பிட்டிருப்போம். நாளடைவில் செல்வதை நிறுத்தி விட்டோம்.

சத்திரத்து மணியாரருக்கும் திடீரென கண்ணில் பிரச்சனை வந்து விட்டது. பெங்களூரில் வேலைபார்த்த அவர் மகன் வந்து அவரை அழைத்துக் கொண்டு போய் விட்டார் என்ற செய்தி வந்தது. அதன் பிறகு விளையாடக் கூட சத்திரம் பக்கம் செல்வதில்லை.

பின்னர் அப்பாவுக்கு வேறு ஊருக்கு மாற்றல் ஆக, நாங்களும் அங்கிருந்து கிளம்பி விட்டோம்.

சில மாதங்களுக்கு முன்னால் குன்றக்குடி செல்லும்போது அந்த ஊர் வழியாகப் போனோம். சிவன் கோவில் மிக அழகாகப் பெயிண்ட் எல்லாம் அடிக்கப்பட்டு ‘பளிச்’ என்று தெரிந்தது. தோப்பும் தரை எல்லாம் சுத்தமாக முன்னைவிட மிக அழகாகக் காட்சி அளித்தது. குளம் வழக்கம் போலவே பாசி பிடித்து, கொஞ்சம் கொஞ்சம் தண்ணீருடன் ஆனால் அழகாக இருந்தது.

சத்திரம்தான் முற்றிலும் இடிந்து போய்க் கிடந்தது.

3

 

நன்றி : அரவிந்த்

படங்கள் : கூகிள்

****

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s