சில நேரங்களில் சில நினைவுகள் – 2

அப்போதுதான் நான் சென்னையிலிருந்து கிராமத்திற்குச் சென்றிருந்த காலம். கிராமமே பிடிபடவில்லை.பள்ளி விட்டு வீடு வந்தால் மாலையில் மரக் குதிரையில் ஏறி விளையாடியும், கண்மாய்க் கரைகளில் சுற்றி விட்டும் வருவேன்.(அந்தக் கண்மாய்க்கு எதிரேதான் ’சுடலை’ இருக்கும். அங்கே இறந்தவர்கள் பயன்படுத்திய பல பொருட்கள் அள்ளி வீசப்பட்டிருக்கும். ஏன் என்று காரணம் புரியாத வயது) சிலோன் வானொலி கேட்பதையும், பெரியவர்கள் அரட்டை அடிக்கும் போது கூட இருந்து கேட்பதையும் தவிர பொழுது போக்க வழியில்லை.இப்போது மாதிரி அதிக வீட்டுப்பாடங்களும் கிடையாது. அப்பா பெட்டியில் சேகரித்து வைத்திருக்கும் புத்தகங்களை எடுத்துப் படித்தால் திட்டுவார். “இதெல்லாம் உனக்குப் புரியாது” என்பார்.அதனால் அவர் இருக்கும்போது அவற்றைப் படிக்கவும் வழியில்லை.

பக்கத்து வீட்டில் அழகுராஜ் வசித்து வந்தார். அவர் பி.ஏ.பட்டதாரி. சொந்தமாக இருந்த ரைஸ்மில்லை நிர்வாகம் செய்து வந்தார். அவர், அவர் மனைவி, குழந்தை கார்த்திகா எங்கள் வீட்டருகே வசித்தனர். நாங்கள் வசித்த வீடும் அவர்களுடையதுதான். பெரிய வீடு. மாதம் 100 ரூபாய் வாடகை. அழகுராஜின் அம்மா, தங்கை, அழகுராஜின் அக்காள் மகன் ஆகியோர் சற்று தள்ளி வேறு ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.

ஒருநாள் பின் மாலை நேரம். அழகுராஜின் அம்மா ஆண்டாத்தாள் வந்தார்.

”தம்பி என்ன பண்ணுறே?” என்றார்.

“சும்மா படம் வரைஞ்சி விளையாடிக்கிட்டு இருக்கேன்”

“சரிப்பா.. அழகுராசு மாமனார் வீட்டுக்குப் போயிருக்கு. ராஜாப் பய வயலுக்குப் போனவன் இன்னும் வரலை. அப்படியே சினிமாவுக்குப் போயிட்டானோ என்னவோ! நா கொஞ்சம் கடைத் தெரு வரைக்கும் போயிட்டு வரணும். நீ கொஞ்சம் வீட்ல போயி இருக்கியா. ராணி தனியா இருக்கு. அவளோட விளையாடிக்கிட்டுரு” என்றார்.

நானும் “சரி” என்று சொல்லி, வீட்டிலும் சொல்லி விட்டு ஆண்டாத்தாள் வீட்டுகுப் போனேன்.

கதவு திறந்துதான் இருந்தது.

”ராணி”, ”ராணி” என்று கூப்பிட்டேன்.

பதிலில்லை.

அந்தக் கால வீடு. நான்கைந்து கட்டுக்களைக் கொண்டது. ஒருவேளை கூப்பிட்டது காதில் விழுந்திருக்காதோ என்று நினைத்து, கத்திக் கொண்டே உள்ளே சென்றேன்.

வீட்டின் கடைசி கட்டில் ராணி உட்கார்ந்திருந்தாள். கைக்கு மருதாணி வைத்துக் கொண்டிருந்தாள்.

”என்ன அப்படிக் கத்துறேன், காதுல விழலை?” என்றேன்.

“இல்லை. யாரோ எங்கயோ கத்துறாங்கன்னு நினைச்சேன்”என்றாள்.

மங்கிய நாற்பது வாட்ஸ் பல்ப் வெளிச்சம் அந்த அறையை நிறைத்தது. அவள் பாட்டுக்கு ஏதோ பாடலைப் பாடியவாறே மருதாணி வைத்துக் கொண்டிருந்தாள்.

”அம்மத்தா அனுப்பிச்சிச்சா? போம்போது எங்கிட்ட சொல்லிட்டுப் போச்சு. நான் வேணாம்னேன் கேட்கலை. எனக்கனென்ன பயம்” என்றாள்

“பேய், பிசாசு பயம் உனக்கில்லையா?” என்றேன் வியப்புடன்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை” என்றாள் கண்களை அகலவிரித்து. அந்த மையிட்ட கண்களைப் பார்க்க சற்று பயமாகத் தான் இருந்தது.

”எதுனா புக்ஸ் இருக்கா? என்றேன்.

”பாட புக்ஸ்தான் இருக்கு. நம்ம ரெண்டு பேருக்கும் அது ஒண்ணுதானே!”

“ஆமா. வேற ஏதாவது கதை புக்ஸ் இல்லை?..”

“அண்ணன் புக்ஸ் எல்லாம் அந்த அலமாரில இருக்கு. அதுல எதுனா இருக்கும். நான்லாம் படிக்கறதில்லை.”

அதைக் குடைந்ததில் “சாலையில் விழுந்த சாகசக்காரி” என்ற நாவல் கண்ணில் பட்டது. அடுத்துத் தேடியதில் சில வரலாற்றுப் புத்தகங்கள், தமிழ்வாணனின் எண் ஜோதிடம், ரேஸ் பற்றிய புத்தகங்களோடு ஒரு புத்தகம் இருந்தது. அதன் தலைப்பே என்னைக் கவர்ந்தது.

“தேவை ஒரு பாவை”

அட்டை பிய்ந்து போன ”ராணி” முத்து அது.

அங்கேயே அதைப் படிக்க ஆரம்பித்து, பின் வீட்டிற்குச் சென்று படித்தது, அதில் வரும் மனநோயாளி, அவன் பெண்களை தேடித் தேடிக் கொண்டு தன் வீட்டின் ஓர் அறையில் அவர்களை ’பாடம்’ செய்து வைப்பது என்று பல விஷயங்கள் இன்னமும் ஞாபகம் இருக்கின்றன.

பேயும் இல்லை, பிசாசும் இல்லை என்று சொன்ன ராணிக்கு சில மாதங்களிலேயே பேய் பிடித்தது, அது போக மறுத்தது எல்லாம் தனிக் கதை.

அந்த “தேவை ஒரு பாவை” நாவல் ஏனோ நினைவில் தங்கி விட்டது.அதன் பிறகு அதே எழுத்தாளரின் “ஒரு பெண்ணின் அனாடமி”, ”ஒரு கார், ஒரு ஸ்ட்ரா, ஒரு ப்ரா” போன்ற நாவல்களையும் படித்திருக்கிறேன். மிகச் சிறந்த எழுத்து, சிந்தனையை மேம்படுத்திய எழுத்து என்றெல்லாம் இல்லாவிட்டாலும் பொழுதுபோக்க உதவிய ஓர் எழுத்து என்று தாராளமாகச் சொல்லலாம். அவரது கதைகள் திரைப்படங்களாக வெளிவந்தும் அவருக்கு புகழைத் தந்தன. “இளமை எழுத்தாளர்”, ”பச்சை எழுத்தாளர் (!)” என்றெல்லாம் அவருக்குப் புகழ். வெறும் உரையாடல்களிலேயே கதையை நகர்த்திக் கொண்டு போவார். அந்தக் காலத்தில் அவர் எழுத்துக்கு அவ்வளவு ரசிகர்கள் இருந்திருக்கின்றனர். தாயைப் பார்த்துக் கொள்ள ஆள் வேண்டும் என்பதற்காக திருமணமே செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழ்க்கை நடத்தியவர்.

“திருமணமாகால் எப்படி சார் இவ்வளவு செக்ஸியாக எழுதுகிறீர்கள்?” என்று ஒருவர் கேட்டதற்கு, “கொலையைப் பற்றி எழுத வேண்டுமானால் கொலைகாரனாக இருக்க வேண்டுமா என்ன?” என்று பதில் தந்தவர் அவர்.அவருடைய முதல் சிறுகதையையும், நேர்காணலையும் தனது ஊஞ்சல் இதழில் வெளியிட்டு கௌரவம் செய்திருந்தார் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்.

அவர் எழுதிய அந்த ஜூன் 16ம் நாள் லீனா, மீனா, ரீனாவாகிற்று. அதற்கு முன்னால் நந்தா என் நிலா, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது போன்றவை திரைப்படங்களாகின.எழுதிக் குவித்தவர். சிங்கும், லிங்கும் ஒரு முன்னோடி துப்பறிவாளவர்கள். சிங்கின் இயற் பெயர் துரைசிங்கம் (சிங்கம் பட சூர்யா உடனே ஞாபகத்திற்கு வருவாரே!)

நிறைய செக்ஸியாக எழுதுவார் என்று பெண்களிடம் கெட்ட பெயர். இவர் கதைகளுக்கு ஜெ. வரையும் ஓவியம் ரொம்பவே “தூக்கலாக” இருக்கும். கொஞ்சம் இல்லை நிறையவே ஓவிராக வர்ணிப்பார். இவர் எழுத்துக்கு பாமரர் முதல் படித்தவர்கள் வரை நிறைய ரசிகர்கள் உண்டு.

இவர் ஆசிரியராக இருந்த ஊதாப்பூ மாத இதழின் “அந்தரங்கம்” பகுதி பிற்கால அந்தரங்க ஆலோசனைகளுக்கு, ஆலோசனை நிகழ்ச்சிகளுக்கு முன்னோடி மற்றும் வழிகாட்டி. நல்ல மனிதர். கணிணி வல்லுநரும் கூட. கணிணியில் அப்டேட்டாக இருந்தார். எழுத்துருக்களை எல்லாம் அவரே உருவாக்கியிருக்கிறார். சிங்கப்பூர், மலேசியாவிற்குச் சென்று நிறைய சாப்ஃட்வேர்களை வாங்கி வந்து ஏதாவது ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார். புதுமை விரும்பி.

சில வருடங்களுக்கு முன்னால் திரிசக்தி நூல் வெளியீட்டு விழாவின் போது, நடக்க முடியாமல் சற்றே சிரமப்பட்டு வந்த அவரைச் சந்தித்து ஒரு ’ஹலோ’ சொல்லியிருக்கிறேன். முகவரி அட்டையைக் கொடுத்து ”வாருங்கள், சாவகாசமாகப் பேசிக் கொண்டிருக்கலாம்” என்றார். ஏனோ அந்தச் சந்திப்பு நடக்கவே இல்லை.

PushpaThangadurai

”திருவரங்கன் உலா” தந்த ஸ்ரீ வேணுகோபாலனுக்கு – புஷ்பா தங்கதுரைக்கு – என் அஞ்சலிகள்!!

அரவிந்த்


****

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s