சில நேரங்களில் சில நினைவுகள் – 1 – தீபாவளி


diwa1

தீபாவளி என்றதும் புத்தாடைகளும் பட்டாசு, மத்தாப்பு, இனிப்புகளும்தான் எல்லாருக்கும் நினைவுக்கு வரும். காலம் மாறி, சம்பிரதாயங்கள் மாறினாலும் உற்சாகம் மாறாத பண்டிகை தீபாவளி. ஒவ்வொருவருக்கும் தீபாவளி ஏதாவது ஒரு விதத்தில் முக்கியமான பண்டிகையாக இருக்கிறது. அதிலும் தலைதீபாவளியை யாராலும் மறக்க முடியாது. ”எதிர்பார்த்த மாதிரி தலை தீபாவளி அமையவில்லை, மாமனார் வீட்டில் சரியான கவனிப்பு இல்லை” என்பது அன்று முதல் இன்றுவரை பழைய மற்றும் புது மாப்பிள்ளைகளின் பல்லவியாக இருக்கிறது. ”உங்களுக்கு இதுவே அதிகம்” என்ற மனைவிமார்களின் முணுமுணுப்பும் தொடர்கதைதான்.

இரு வேறு தீபாவளிகளை என்னால் மறக்க முடியாது. ஒன்று நான் சிறுவனாக கிராமப் புறத்தில் இருந்தபொழுது கொண்டாடியது. மற்றது நகரத்தில் இளைஞனாக வசித்த பொழுது பாடி க்ரூப்பில் மெஷின் ஷாப் ஷட்டவுனில் விடிய விடிய வேலை பார்த்துக் கொண்டாடியது. நகரங்களைவிட கிராமப்புறங்களில் தீபாவளிக் கலகலப்பு சற்றுக் குறைவுதான். என்றாலும் கோலாகலத்துக்குப் பஞ்சமில்லை.

கிராமத்தில் நாங்கள் வசித்த வீடு மிகவும் பெரியது. வாசலில் பெரிய திண்ணை. அதில் நான்கு பெரிய தூண்கள். திண்ணையை ஒட்டி வெளியே இடப்புறம் கொஞ்சம் காலி இடம். அதில்தான் லஷ்மி மாடு கட்டப்பட்டிருக்கும். தீபாவளி சமயத்தில் மாட்டை அவிழ்த்துக் கொண்டு போய் கொல்லையில் கட்டி விடுவார்கள். வெடிச் சத்தத்தில் மாடு மிரண்டுவிடும் என்ற பயம்தான். அதற்காக பெரிய அணுகுண்டு எல்லாம் வெடிக்க மாட்டோம். வெறும் வெங்காய வெடிதான். அதிலும் சிலது வெடிக்கும். சிலது வெடிக்காது. உருண்டையாகச் சின்னப் பந்து போல் இருக்கும் அந்த வெடியை ‘கல்வெடி’ என்றும் சொல்வார்கள். ஓங்கித் தரையில் அடித்தால் ‘டமார்’ என்ற சத்தத்தோடு வெடிக்கும். ஆனால் எங்களைப் போன்ற சிறுவர்களுக்கு அதை எல்லாம் வெடிக்க அனுமதியில்லை. சித்தப்பாக்களும், மாமாக்களும் தான் மாறிமாறி வெடித்து மாமிமார், சித்திமார் முகங்களை என்னவோ பெரிய சாதனை செய்து விட்டது போலப் பார்ப்பார்கள்.

தாத்தா விடியற்காலையில் எழுந்து குளித்து விட்டு விஷ்ணு சகஸ்ரநாமத்தையும், திருவடிப் புகழ்ச்சியையும் பாராயணம் செய்து கொண்டிருப்பார். பாட்டி அடுக்களையில் கமகமவென்று வாசனையாக லேகியம் கிளறிக் கொண்டிருப்பாள். அம்மா கந்தரப்பம், வெள்ளையப்பம், இட்லி என்று பலகாரங்களைச் செய்து கொண்டிருப்பாள். அப்பா புதிய துணிமணிகள், பட்டாசுகள், லட்டு, மிக்சர், அதிரசம் என தின்பண்டங்கள் எல்லாவற்றையும் சுவாமி படங்களின் முன்னால் வைத்து, ஒழுங்குபடுத்திக் கொண்டிருப்பார். எல்லோரும் எழுந்து தயாரானதும் பாட்டி ஒவ்வொருவராகப் பெயர் சொல்லி அழைத்து, தலைக்கு எண்ணெய் தேய்ப்பார். அதுவும் மாப்பிள்ளைகள் என்றால் கொஞ்சம் ஸ்பெஷலாக நிறைய எண்ணெய் தேய்க்கப்படும். எண்ணெய் ஒழுக, ஒவ்வொருவராகக் குளிப்பதற்கு ஆயத்தமாவார்கள்.

சின்னப் பையன்களை எல்லாம் முற்றத்தில் வைத்தே, கொதிக்கக் கொதிக்க தலையில் வெந்நீரை ஊற்றி மணி மாமா குளிப்பாட்டுவார். அவருக்குச் சற்று பருத்த சரீரம். வேஷ்டியை நன்றாக மடித்துக் கொண்டு ‘வாங்கடா பயலுகளா’ என்று அதட்டலான குரலில் அழைத்து, தண்ணீரைச் சொம்பில் மொண்டு மொண்டு ஊற்றுவார். ‘ஆ, ஊ’ என்று சூடு தாங்காமல் குழந்தைகள் கத்தினாலும் பலனிருக்காது. சித்தி பையன் சீனிவாசனுக்கும் மணி மாமாவுக்கும் எப்போதுமே சற்று ஆகாது. மாமாவின் பருத்த சரீரத்தைப் பற்றி ‘மணி குண்டா! மணி குண்டா’ என்று அடிக்கடி அவர் காது படவும், படாமலும் கேலி பேசுவது அவன் வழக்கம். சந்தர்ப்பம் வாய்த்த சந்தோஷத்தில் மாமா வெந்நீரை மொண்டு மொண்டு ஊற்ற, சீனிவாசனின் காது, மூக்கு என எல்லா பாகங்களுக்குள்ளும் தண்ணீர் போய், சூடு தாளாமல் அவன் கத்திக் கொண்டிருந்தான். எப்படியாவது இந்த மாமாவைப் பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றியது அன்று தான். அதற்கு அந்தத் தீபாவளியன்றே சந்தர்ப்பமும் வாய்த்தது.

OLYMPUS DIGITAL CAMERA

எல்லோரும் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். குழந்தைகளுக்கு மட்டும் மத்தாப்பும் புஸ்வாணமும் தான். குழந்தைகள் குதூகலத்துடன் புஸ்வாணம் கொளுத்திக் கொண்டிருக்க, குழந்தைகளோடு குழந்தையாய் மாமாவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார். ‘பவர் டோன்’ என்று ஒரு வெடி. பார்க்க புஸ்வாணம் மாதிரி இருக்கும். மத்தாப்பு போல் பூமழை பொழிந்துவிட்டு திடீரென்று வெடிக்கும். அந்த வெடியை மாமா வைத்திருந்த புஸ்வாணத்தோடு கலந்து வைத்து விட்டான் சீனிவாசன். வழக்கம் போல் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, ஒவ்வொரு புஸ்வாணமாகக் கொளுத்தி, கம்பீரமாக அதன் அருகில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் மாமா. அடுத்து அவர் அதே கம்பீரத்துடன் பவர் டோனைப் பற்ற வைக்கப் போக, தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சீனிவாசன் நமட்டுச் சிரிப்புடன் உள்ளே ஓடிப் போக, அந்த ’பவர் டோன்’ புஸ்வாணம் மாதிரி பூ மழை பொழிந்து விட்டு, திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அவ்வளவு தான்; அதிர்ச்சியில் வேட்டி நழுவியது கூடத் தெரியாமல் வீட்டிற்குள் ஓடிவந்த மாமாவின் முகம் மனைவி அறைந்த மாதிரி ஆகி விட்டது. (மனைவி = பேய் என்று நீங்கள் பொருள் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல) அன்று முதல் இன்றுவரை மாமாவுக்கு தீபாவளி என்றாலே ஒருவித பயம். இருந்தாலும் அந்த சீனிவாசனையே பிற்காலத்தில் தனது மாப்பிள்ளையாக்கிக் கொண்டது அவரது பெருந்தன்மையா இல்லை பயமா இல்லை வேறு ஏதேனும் லௌகீகக் காரணங்களா என்பது இதுவரை யாருக்கும் புரியாத புதிர்.

தீபாவளியில் சிறுவர்கள் செய்யும் குறும்புக்கு அளவே இல்லை. நாயின் வாலில், மாட்டின் வாலில், கழுதையின் வாலில் வெடியைச் சுற்றிக் கட்டி, அதனைப் பற்ற¨வைத்து விட்டு விரட்டி விடுவது; தெருவில் யாராவது போகும்போது வெடி வைத்திருப்பது போல் பாவனை செய்வது; வேண்டுமென்றே வானத்தில் ஏதோ ராக்கெட் தெரிகிறாற் போல் கையைச் சுட்டிக் காட்டி, எல்லோரையும் பார்க்க வைத்து ஏமாற்றுவது என்று சிறுவர்களின் குறும்புகளுக்கு அளவே இல்லை. ஒருமுறை இப்படித்தான், வெள்ளை வெளேர் வேஷ்டி சட்டையுடன் தீபாவளிக்கு வந்திருந்தார் தூரத்து உறவினர் ஒருவர். அவர் வெளியில் நின்று கொண்டு மாமாவுடன் பேசிக் கொண்டிருக்கும் சமயம், சப்தம் போடாமல், சிறுவர்கள் எல்லோரும், மாட்டுச் சாணத்தைக் குவித்து, அதில் லஷ்மி வெடியைச் சொருகிப் பற்றவைத்து விட்டார்கள். உறவினரின் ‘வெண்ணிற ஆடை’ அன்று ‘வண்ண ஆடை’யாக மாறி விட்டது. உறவினர் மற்றும் மாமாவின் முகமெல்லாம் நல்ல தொழு உரம்!

இன்னொரு முறை, சீனிவாசன் ஹார்லிக்ஸ் பாட்டிலில் வைத்துப் பற்ற வைத்த ராக்கெட், வானத்தில் பாயாமல், சரிந்து, சாதுவாக நடந்து வந்து கொண்டிருந்த பரம வைதீகரான ஒரு சாஸ்திரிகளின் வேஷ்டியை நோக்கிப் பாய, அவர் என்னமோ வெடிகுண்டு தாக்கியது போல் ’அய்யோ அம்மா’ என்று அலறி, சீனிவாசனை ‘கட்டைல போறவனே! கடன்காரா! உருப்படான்!’ என்பது போன்ற வசைச் சொற்களால் அர்ச்சித்து, மாமாவிடம் புகார் செய்ய, சீனிவாசன் அடிவாங்கப் பயந்து கொண்டு, பரண் மேல் ஏறி ஒளிந்து கொள்ள, அவனைப் பிடிக்க மாமாவும் ஏற முயற்சித்து, குண்டு உடம்பால் முடியாமல் போக, ஒரே களேபரம்தான்.

கிராமத்தில், கூட்டுக் குடும்பமாக, உறவினர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து ஒருவரையொருவர் வாழ்த்திக் கொண்டாடிய தீபாவளி எங்கே! இன்று அபார்ட்மெண்ட் அடுக்குகளில், ஒண்டுக் குடித்தன சந்துகளில், ஊருக்குப் போகவும் வழியில்லாமல், அங்கிருப்பவர் இங்கு வரவும் லீவ், டிக்கெட் கிடைக்காமல், கடையில் வாங்கிய இனிப்புகளுடனும், தொலைக்காட்சி அபத்தங்களுடனும், செல்போன், ஃபேஸ்புக் வாழ்த்துக்களுடன் நகரங்களில் கொண்டாடப்படும் தீபாவளி எங்கே!

diva 3

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

 நன்றி : அரவிந்த்

****

Advertisements

4 thoughts on “சில நேரங்களில் சில நினைவுகள் – 1 – தீபாவளி

  1. ஆம் தீபாவளி இப்போது இனிப்பதில்லை நமது கால தீபாவளி வேறு இப்போது வேறு இப்போது டி வி யே கதியாகிவிட்டது கட்டுரை மிகவும் அருமை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.