சுவாமி விவேகானந்தரின் இறுதி நாட்கள்…

 

ramakrishnar1

“தான் யாரென்பதை நரேந்திரன் உணர்ந்து கொண்டு விட்டால், அதன் பின் அவனால் கொஞ்ச நேரம் கூட இந்த உடலில் ஒட்டிக் கொண்டிருக்க முடியாது!” இது குருதேவர் ராமகிருஷ்ணர் ஒருமுறை சீடர்களிடம் சொன்னது. அந்தக் கூற்று பிற்காலத்தில் உண்மையானது. தான் யாரென்பதை உணர்ந்து கொண்டு விட்ட விவேகானந்தரின் ஆன்மா அந்தக் கூட்டை உதறி விட்டுச் செல்ல விரும்பியது. ஒருமுறை தன்னைக் காண வந்திருந்த ஜோஸபின் மெக்லியாடிடம் இது பற்றி விவேகானந்தர் கூறும்போது, “”நான் வெகு விரைவில் இறந்து போய் விடுவேன். நாற்பதாண்டுகள் வரை கூட நான் உயிரோடு இருக்க மாட்டேன்.”” என்றார். அது கேட்டு வருந்திய மெக்லியாட் அதற்கான காரணத்தைக் கேட்ட போது, “”ஒரு பெரிய மரத்தின் நிழலானது, தன் கீழ் உள்ள செடிகளை வளரவிடாது. ஆகவே நான் மற்றவர்களுக்கு வழிவிட்டுத் தான் ஆக வேண்டும்”” என்று கூறினார். அதாவது தான் மட்டுமே அல்லாது சக துறவிகளும் உயர்நிலைக்கு வர வேண்டும் என்றும் அதற்கு தான் வழிவிடுபவனாகவும், வழிகாட்டியாகவும் அவசியம் இருந்தாக வேண்டும் என்று அவர் தெரிவித்தார்..

ஜூலை 2 அன்று சுவாமிகளின் வேண்டுகோளுக்கு இணங்க அவரைச் சந்திக்க சகோதரி நிவேதிதை விஜயம் செய்தார். அன்று ஏகாதசி திதி. சுவாமிகள் உபவாசம் இருக்கும் நாள். ஆனாலும் அவர் நிவேதிதைக்கு மதிய உணவைத் தாமே பரிமாற இருப்பதாகவும், அவர் அவசியம் அதனை ஏற்றுக் கொள்ள வேன்டும் என்றும் வேண்டிக் கொண்டார். சீடரான தாம் தான் அவருக்குப் பணிவிடை செய்ய வேண்டுமேயன்றி, குருவான அவர் அல்ல என்று நிவேதிதை மறுத்தும் கேளாதவராய், அவருக்கு மதிய உணவைப் பரிமாறினார் சுவாமிகள். பின் அவர் கையைத் தண்ணீர் ஊற்றிக் கழுவி, அதனை துண்டால் துடைத்தும் விட்டார். அது கண்ட நிவேதிதைக்கு ஆச்சர்யமாகவும் அதே சமயம் அதிர்ச்சியாகவும் இருந்தது. இப்படியெல்லாம் அவர் செய்வதற்கான காரணம் புரியாமல் திகைத்தார். அவரிடம் அது பற்றிக் கேட்கவும் செய்தார். அதற்கு அவர், “இது ஒன்றும் புதிதல்ல நிவேதிதை. இயேசுநாதர் கூட தன் சீடர்களுக்கு இவ்வாறு செய்திருப்பது தான் உனக்குத் தெரியுமே!” என்றார். அது கேட்ட நிவேதிதை திகைத்தார். ஆனால் இயேசு தன் வாழ்வின் கடைசி நாட்களில் தானே அப்படிச் செய்தார் என்று மனத்துள் நினைத்த அவர் குழம்பினார். பின் இனம் புரியாத சோக உணர்வுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் நிவேதிதா.

இரண்டு நாட்கள் கழிந்தன. அது 1902 ஆம் வருடம், ஜூலை மாதம் நான்காம் தேதி. தேவிக்கு மிகவும் பிடித்தமான வெள்ளிகிழமை நாள். அதிகாலை எழுந்து கொண்ட சுவாமி விவேகானந்தர், வழக்கத்திற்கும் மாறாக கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் வரை தனித்திருந்து தியானம் செய்தார். பின் தேவியைக் குறித்து சில பாசுரங்களைப் பாடினார். காலையில் சக சீடர்களுடன் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தார். பின் என்றும் இல்லாத அதிசயமாக மதியம் உணவுக் கூடத்தில், அனைத்து சகோதரத் துறவிகளுடனும், சீடர்களுடனும் ஒன்றாகச் சேர்ந்து அமர்ந்து உணவு உண்டார். பின் சிறிது நேரம் அவர்களுடன் நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருந்தார். அடுத்து பிரம்மச்சாரிகளுக்கும், இளந்ததுறவிகளுக்கு கிட்டத்தட்ட மூன்றுமணி நேரம் வரை வேதாந்த பாடம் நடத்தினார். வடமொழி இலக்கணத்தைக் கற்பித்தார். மாலை நேரம் ஆனதும் சக துறவியான பிரேமானந்தருடன் உலாவுவதற்காக வெளியே சென்றார். வெகு நேரம் உலாவி விட்டு வந்த பின் சக சீடர்களுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பின் தனது அறைக்குச் சென்ற அவர், தான் தனித்து அமர்ந்து தியானம் செய்யப் போவதாகவும், தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் சீடர்களிடம் கேட்டுக் கொண்டார். அதன்படியே தனது அறைக்குள் சென்று தியானத்தில் ஈடுபட்டார்.

vivekananda at medation

சிறிது நேரம் சென்றது. அப்போது இரவு எட்டு மணி இருக்கும். வெளியே மற்ற சீடர்கள் அமர்ந்து வேதபாராயணம் செய்து கொண்டிருந்தனர். தன் சீடர் ஒருவரை உள்ளே அழைத்த விவேகானந்தர், அறையின் ஜன்னல் கதவுகளைத் திறந்து விடுமாறு சொன்னார். கங்கை நதியைப் பார்த்தவாறே சிறிது நேரம் உட்கார்ந்து தியானம் செய்தார். பின் தான் படுத்துக் கொள்ளப் போவதாகவும் சற்று நேரம் தமக்கு விசிறிக் கொண்டிருக்குமாறும் சீடரிடம் வேண்டிக் கொண்டார். பின் மெல்லப் படுக்கையில் சாய்ந்தார். சற்று நேரம் சென்றிருக்கும். மூச்சை ஆழமாக இழுத்து வெளியே விட்டார் சுவாமி விவேகானந்தர். அதுவே அவரது இறுதி மூச்சாய் அமைந்தது. அதன் பிறகு அவரது உடலிலிருந்து எந்தஅசைவுமில்லை. சலனமுமில்லை. சீடரோ அதை அறியாது தொடர்ந்து விசிறிக் கொண்டே இருந்தார்.

ஆனால் அதே சமயம் சென்னையில் தியானத்தில் அமர்ந்திருந்த ராமகிருஷ்ணானந்தரின் காதுகளில் அந்தக் குரல் ஒலித்தது. “” சசி, நான் என் உடம்பை விட்டுவிட்டேன்!””. அது சுவாமி விவேகானந்தரின் குரல் தான் என்பதையும், அவர் மறைந்து விட்டார் என்பதையும் உணர்ந்த ராமகிருஷ்ணானந்தர் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானார். பின் வெகுநேரம் கழித்தே சுவாமிகள் சமாதி நிலை எய்திவிட்ட விஷயம் பேலூரில் உள்ள மற்ற சீடர்களுக்குத் தெரிய வந்தது. சொல்லொணா வேதனையுடன் அவர்கள் அவரது திருவுடலைச் சூழ்ந்து நின்றனர். சோகத்துடன் அவரது உடல் சமாதிக்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தனர். சுவாமி விவேகானந்தருக்கு அப்போது 39.

இன்று சுவாமி விவேகானந்தரின் 111வது நினைவு நாள். அவரது நினைவைப் போற்றுவோம். ஓம்.

***

Advertisements

One thought on “சுவாமி விவேகானந்தரின் இறுதி நாட்கள்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s