காசி – கயா

varanasi
காசி ஒரு புனிதமான நகரம். அதன் பெருமைகளை சொல்லால் வடிக்க இயலாது. ”காசியை அடைந்து அதனால் ஏற்படும் பிரகாசத்தின் மலர்ச்சிக்கு முன்பு, மற்ற எல்லாப் பிரகாசங்களும் மின்மினிப் பூச்சியின் பிரகாசம் போன்று ஆகிவிடுகிறது” என்கிறது காசிக் கலம்பகம். “நான் மதுரபாபுவுடன் காசிக்குச் சென்றிருந்தேன். நாங்கள் இருந்த படகு மணிகர்ணிகையைக் கடந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென்று எனக்குச் சிவ தரிசனம் கிடைத்தது. நான் படகில் விளிம்பில் நின்றபடியே சமாதியில் ஆழ்ந்துவிட்டேன். ‘நான் ஆற்றில் விழுந்துவிடுவேனோ!’ என்று பயந்த படகோட்டி, ‘அவரைப் பிடி! அவரைப் பிடி! என்று ஹ்ருதயரை நோக்கிக் கத்தினான். அந்த மணிகர்ணிகை கட்டத்தில் சிவபெருமான் ஆழ்ந்த சிந்தனையுடன் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்தேன். படகிலிருந்து சிறிது தூரத்தில் சிவபெருமான் நின்றுகொண்டிருந்ததை முதலில் கவனித்தேன். பிறகு அவர் என்னை நோக்கி நெருங்கி வந்து, முடிவில் என்னிடம் ஐக்கியமாகி விட்டார்.” – இப்படிச் சொன்னவர் குரு தேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். ”காசியையும் காசிநாதரையும் கண்டு உருகாத மனம் கல்லால் ஆனதுதான்.” என்கிறார் சுவாமி விவேகானந்தர். இப்படி பல்வேறு ஞானியராலும் மகான்களாலும் போற்றப்பட்ட காசித்தலம் ஒவ்வொருவரும் சென்று தரிசிக்க வேண்டிய தலம்.

ஒவ்வொரு இந்துவும், குறிப்பாக தமிழர்கள் ஒவ்வொருவரும் காசி யாத்திரை மேற்கொள்ள வேண்டுவது அவசியம். காரணம், மனிதன் வாழ்வின் பூரணத்துவத்தை எய்துவது காசி திருத்தலத்தைக் கண்ட பிறகுதான். புனிதம் என்று நினைத்த பலவற்றிற்கு அர்த்தமில்லாமல் போவதும், ’தீட்டு’ என்று கருதி விலக்கப்பட்டவற்றிற்கு பொருள் இல்லாமல் போவதும் காசியில்தான். ஆன்மீகவாதிதான் என்பதில்லை. நாத்திகரும் காசி செல்லலாம். அது அவர்கள் பார்வையை, தெளிவை மேலும் விசாலமாக்கும் என்பதில் ஐயமில்லை. காசி மட்டுமல்ல; கயாவும் ஓர் புனிதத் தலம் தான். அதுவும் கயா நதிக்கரையில் முன்னோர்களுக்கு பிண்டம் வைத்துப் படைப்பது மிகவும் புனிதமான சடங்காகப் போற்றப்படுகிறது. இச்சடங்கு ஏதோ வடவர், ஆரியர் அல்லது பிராமணர்களுக்கு மட்டுமே உரியதல்ல. எல்லோருக்கும் உரியது. இந்தியராகப் பிறந்த ஒவ்வொருவரும், அவர் எந்த ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் கயா சென்று பிண்டம் படைப்பது சிறப்பு. இச்சடங்குகளையே திருக்குறளும் பிற இலக்கியங்களும் “நீத்தார் கடன்” என்று போற்றுகிறது. இப்படி நம் முன்னோர்களையும் வழிபடுவதையும் “தென்புலத்தார்” என்று குறிக்கிறார் வள்ளுவர். ”தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” என்று வழிபாட்டில் அவர்களை வழிபடுவதையே வள்ளுவர் முதன்மையாக வைத்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

பல்குணி தீர்த்தம்
பல்குணி தீர்த்தம்

கயாவில் பல்குனி நதி, விஷ்ணு பாதம், அட்சய வடம் ஆகிய மூன்று முக்கிய இடங்களில் வழிபாடு செய்து, பிண்டம் வைக்க முன்னோர்கள் முக்தி அடைவார்கள் என்பது நம்பிக்கை. இப்படியொரு வரத்தைக் கேட்டுப் பெற்றவன் ஓர் அசுரன். கயாசுரன்.

விஷ்ணு பாதம்
விஷ்ணு பாதம்
அக்ஷய விருக்ஷம்
அக்ஷய விருக்ஷம்

கயாசுரன் ஒரு அரக்கன். இவன் மகாவிஷ்ணுவை நோக்கி கடும் தவம் மேற்கொண்டான். விஷ்ணுவும் அவன் முன் தோன்ற, கயாசுரன் அவரிடம், “என்னுடைய உடல் எல்லா தீர்த்தங்களைக் காட்டிலும் தேவர்கள், முனிவர்கள், கின்னரர், கிம்புருடர், கந்தர்வர்கள், வானவர், சாதாரண மானிடர்கள் ஆகிய அனைவரைக் காட்டிலும் எனது உடல் புனிதமாக வேண்டும். என்னைத் தொடுபவர்கள் அக்கணமே புனிதம் பெற வேண்டும் ” என்று வரம் கேட்க, விஷ்ணுவும் அவ்வாறே அருள் புரிந்தார். அதுமுதல் மக்கள் பலரும் கயாசுரனின் உடலைத் தொட்டு தங்கள் பாவங்களைக் போக்கிக் கொண்டனர். இதனால் எமதர்மராஜனின் பணி பாதிக்கப்பட்டது. பூமியில் சுமை அதிகரித்தது. எமன் பிரம்மாவிடம் முறையிட, பிரம்மா விஷ்ணுவிடம் இதைத் தெரிவித்தார். உடனே விஷ்ணு, பிரம்மாவிடம் “ நீ கயாசுரனின் சென்று உன் உடல் பவித்ரமானது. அதில் யக்ஞம் செய்ய வேண்டும் எனக் கேள்” என்றார். பிரம்மாவும் அதன்படி சென்று கயாசுரனிடம் கேட்க, அவன், ”ஒரு நல்ல காரியத்துக்கு என் உடல் பயன்படுமானால் அது எனக்கு மகிழ்ச்சியே” என்று கூறி வடக்கே தலை வைத்து, தெற்கே கால் நீட்டி தன் உடலை கீழே கிடத்தினான். அவனது உடல் மீது பிரம்மா வேள்வியைத் துவக்கினார். வேள்வி உச்சக் கட்டத்தை எட்டும்போது, அசுரனின் தலை அசையத் துவங்கியது.

கயாசுரன்

பிரம்ம தேவனின் ஆணைக்கேற்ப கயாசுரன் தலை மீது ஒரு கல்லை வைத்தான் எமன். அப்போதும் அசுரன் உடல் அசைவது நிற்கவில்லை. பின் விஷ்ணு கதாதரராகத் தோன்று தன் கதாயுதத்தால் அவன் மார்பை அழுத்தி, தனது பாதத்தை அவன் மீது வைத்து அவன் தலை ஆட்டத்தை நிறுத்தி அவனை பாதாள லோகம் அனுப்பினார். அதற்கு முன் அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, கயாசுரன், ”இத்தலம் என் பெயரால் விளங்க வேண்டும். இங்கு வந்து பிண்டம் போட்டுச் சிரார்த்தம் செய்பவர் அனைவருக்கும் எந்தப் பாவமும் அண்டாமல் முக்தி கிடைக்க வேண்டும்” என்று வேண்ட, விஷ்ணுவும் அவ்வாறே அருளினார். அதுமுதல் இங்கு பிண்டம் வைத்து முன்னோர்களை வழிபாடு செய்வது தொடர்கிறது.

கயாசுர வதம் - கதாதரர்
கயாசுர வதம் – கதாதரர்

முதலில் பல்குணி நதி, பின் விஷ்ணு பாதம், அதன் பின் அக்ஷய வடம் ஆகிய இடங்களில் பிண்டம் அளிக்க வேண்டும். பல்குணி நதியில் நீர் அதிகம் இருக்காது. மழைக்காலம் போன்ற சமயங்களில்தான் தண்ணீர் ஓடும். நதியின் எதிரே சீதா மாதா ஆலயம் உள்ளது. கயையில் மடங்கள், சத்திரங்கள் உள்ளன. எல்லா பிரிவினருக்கும் ஏற்றபடி சிரார்த்த காரியங்கள் செய்து தர அங்குள்ள சத்திர, மடங்களின் மேனேஜர் ஏற்பாடு செய்து தருகின்றார். அவர்களே பல்குணி நதி, விஷ்ணு பாதம், அக்ஷயவடம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று பிண்டம் போட உதவி செய்கின்றனர். கயையில் தங்கள் முன்னோர்களுக்கு மட்டுமல்லாமல், உறவினர்கள், நண்பர்கள், ஆசையுடன் வளர்த்த மிருகங்கள், செல்லப் பிராணிகள், மரம், செடி, கொடிகள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருக்கும் பிண்டம் அளிக்கலாம். அவ்வாறு அளிக்கப்படும் பிண்டத்தால் அவர்கள் நற்கதி பெறுவார்கள் என்பது நம்பிக்கை. 

விஷ்ணு பாதம்
விஷ்ணு பாதம்

 

Advertisements

4 thoughts on “காசி – கயா

    1. வரம் நல்லது தான். அப்புறம் எல்லோருமே கயாசுரனைத் தொட்டுப் புனிதமடைந்து விட்டால் கர்மாவுக்கு வேலை ஏது? பாவ, புண்ணியங்களுக்குச் சமயம் ஏது? இறைவனுக்கு ருக்கும் ஒரே பொழுது போக்கான சிருஷ்டித் தொழில் பாதிக்கப்பட்டு விடாதா? எல்லோரும் புனிதமடைந்து விட்டால், எல்லாரும் நல்லவராக விட்டால் அப்புறம் கடவுளுக்கு அங்கே வேலை ஏது? அதனால்தான் இந்த வதம்.

  1. தமிழகத்தில் இருந்து அங்கு சென்ற ஒருவர் திரும்பி வரும்போது தீவிர நாத்திகராய் திரும்பினார். செல்லும்போது மழித்த முகத்துடன் இருந்த அவர் திரும்பியதும் வாழ்நாள் முழுவதும் ஒரு ஞானிபோல் தாடியுடன் இருந்தார். ஞானிகள் சொல்லும் சாதி இல்லை,மதமும் இல்லை, கடவுள் சிலையிலும் இல்லை என்பதைத்தான் அவரும் சொன்னார்!! # பெரியார்

    1. ஆமாம். அப்துல்லா சார். அங்கே கண்ட காட்சிகளும், அவர் பெற்ற அனுபவங்களும் அவரை நாத்திகவாதி ஆக்கிவிட்டன. ஆனால்… பெரும்பாலானவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு மனிதர் பெரியார். இன்றைக்குப் பலர் சுயநலத்திற்காக அவர் பெயரைப் பய்ன்படுத்தி வருகின்றனர். அவர் சொன்ன விஷயங்களைக் கை விட்டு விட்டு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.