இப்படியும் ஒரு மகன்…

”புத்” என்னும் நரகத்தைக் கடக்க உதவுவதால் ஒவ்வொருவருக்கும் “புத்திரன்” தேவை என்கிறது சாஸ்திரம். அப்படிப்பட்ட புத்திரனும் ’ஸத்புத்திரனாக’ இருக்க வேண்டும்; அப்போதுதான் பூரண பலன் கிடைக்கும் என்றும் அது சொல்கிறது. ஆனால், எல்லோருக்கும் அப்படிப்பட்ட ’ஸத்புத்திரர்கள்’ வாய்ப்பது அரிதல்லவா?. எப்படியோ பிறக்கும் மக்கள், நல்லவர்களாக இல்லாவிட்டாலும் கெட்டவர்களாக இல்லாமல் இருந்தால் சரி என்பதே பலரது விருப்பம். மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தைஎன்நோற்றான் கொல்லெனும் சொல் ” என்ற குறளில் வள்ளுவர் சொல்லியிருப்பதும் ஈண்டு கருதத்தக்கது.

அப்படிப்பட்ட ஒரு வித்தியாமான மகன்தான் பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான தர்மன்.

பாண்டவர்கள் வனத்தில் வசித்து வந்த காலம். முனிவர்களுக்கு உதவியாக பாண்டவர்கள் தொண்டு புரிந்து வந்தனர். ஒருநாள் யாகம் செய்ய அக்னியை உண்டாக்கும் அரணிக் கட்டை ஒன்று, ஒரு மானின் கொம்பில் சிக்கிக் கொண்டு விட்டது. அது இல்லாவிட்டால் அக்னி உண்டாக்க முடியாது. அக்னி இல்லாவிடில் வேள்வி செய்ய இயலாது. ஆகவே அதனை மீட்க பாண்டவர்கள் முயன்றனர். ஆனால் அந்த மான் அவர்களுக்குச் சிக்காமல் அங்கும், இங்குமாய் ஓடி எங்கோ ஒளிந்து விட்டது.

காட்டுக்குள் அம்மானைத் தேடி ஓடி அலைந்து திரிந்ததில் அனைவருக்கும் நல்ல தாகம். அதனால் நீர் நிலையைத் தேடினர். நகுலன் ஒரு மரத்தின் மீதேறிப் பார்க்கும் போது சற்று தொலைவில் ஒரு நீர் நிலை தெரிந்தது. உடனே அவன் தண்ணீர் எடுத்து வரப் புறப்பட்டான். ஆனால் அவன் சென்று வெகு நேரமாகியும் வரவில்லை. அதனால் என்ன ஆயிற்று என்று பார்க்க அடுத்து சகாதேவன் சென்றான். அவனும் வரவில்லை. தொடர்ந்து அர்ஜூனன் சென்றான். அவனும் திரும்பவில்லை. யாராலும் வெல்லப்பட முடியாத தன் சகோதரர்களுக்கு என்ன ஆயிற்றோ என்று மிகவும் கவலைப்பட்டார் தர்மர். அப்போது தர்மரைத் தேற்றிய பீமன், தான் சென்று தம்பியரோடும், தண்ணீரோடும் திரும்ப வருவதாகக் கூறிச் சென்றான். ஆனால் அவனும் திரும்பி வரவில்லை.

நேரம் ஆக ஆக மிகவும் பதட்டம் கொண்ட தர்மர் தானும் அவர்களைத் தேடிக் கொண்டு கிளம்பினார். கடைசியில் நீர் நிறைந்த ஒரு பொய்கையை அடைந்தார். அங்கே, ஆங்காங்கே தனது தம்பிகள் கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்தார். அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. இது ஒருவேளை துரியோதனின் சூழ்ச்சியாக இருக்கலாமோ என்று கருதினார். பின்னர் மிகுந்த நாவறட்சியால் நீர் அருந்த பொய்கைக்குள் இறங்க ஆரம்பித்தார்.

அப்போது த்டீரென ஒரு அசரீரி ஒலித்தது. ”குந்தி புத்திரனே! இது என் பொறுப்பில் உள்ள குளம்; என் கேள்விகளுக்கு பதில் சொல்லி விட்டு நீ நீர் அருந்தலாம். உன் சகோதரர்கள் என் கேள்வியை அலட்சியப்படுத்தியதால்தான் இந்த நீரை அருந்தி இறந்து விட்டார்கள்.” என்றது அசரீரி.

திகைத்துப் போன தர்மர், ”என் சகோதரர்கள் இறப்பிற்குக் காரணமான உன் நோக்கம் என்ன, நீ யார் என்பதை அறிய விழைகிறேன். அது தெரிந்த பிறகுதான் உன் கேள்விகளுக்கு பதில் சொல்வேன்” என்றார்.

உடனே அவர் முன் உடனே பயங்கர உருவத்துடன் ஒரு யக்ஷன் தோன்றினான். அவன் கேள்விகளைக் கேட்கக் கேட்க தர்மரும் சளைக்காமல் பதில் சொல்ல ஆரம்பித்தார். (மஹாபாரதத்தில் இப்பகுதி யஷப் பிரச்னம் என அழைக்கப்படுகிறது. மிக விரிவான பல்வேறு உட்பொருள்களை உடையது. சாம்பிளுக்கு சில கேள்விகள் மட்டும் இங்கே)

யக்ஷன்: மனிதனுக்கு எப்போதும் துணை எது?

தர்மர்: தைரியம்.

யஷன்: பூமியை விடத் தாங்கும் திறன் கொண்டது எது ?

தர்மர்: ஒரு தாயின் மனது.

யக்ஷன்: ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தவர் யார் ?

தர்மர்: தந்தை.

யக்ஷன்: மனிதன் அலட்சியம் செய்ய வேண்டியது ?

தர்மர்: கவலையை

யக்ஷன்: மிகவும் வேகமானது ?

தர்மர்: மனித மனம்

யக்ஷன்: இறக்கும் நிலையில் உள்ளவனின் துணை ?

தர்மர்: அவன் செய்த தர்மம்.

– இப்படிப் பல கேள்விகள் கேட்ட யக்ஷன், இறுதியாக ஒரு கேள்வி கேட்டான். ”இந்த உலகில் ஆச்சரியம் எது?” என்ற அவனது கேள்விக்கு தர்மர், ”இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் மரணம் நிச்சயம் என்பது தெரிந்தும், அது என்னவோ தனக்கு மட்டும் வராது என்பது போல் மனிதன் ஆணவத்துடன் செயல்படுவதே இந்த உலகின் மாறாத ஆச்சரியம்” என்றார்.

அதைக் கேட்ட யக்ஷன் மிக மகிழ்ந்து, ”யுவனே, நீ தாராளமாக இந்தக் குளத்தில் நீர் அருந்தலாம். இந்த விஷம் உன்னை ஒன்றும் செய்யாது. அது மட்டுமல்ல. உன் சகோதரர்களில் ஒருவரை உயிர்ப்பித்தும் தருகிறேன். யார் வேண்டும் கேள்” என்றான்.

இந்த இடத்தில் சற்றுநேரம் யோசித்தார் தர்மர்.

”பீமன் மிகப் பெரும் வீரன், அவனைக் காப்பாற்றுவதா? அர்ஜூனன் மாபெரும் ஆற்றல் உள்ளவன் அவனை உயிர்ப்பிப்பதா? சகாதேவன் சகல சாஸ்திரங்களும் அறிந்த பண்டிதன், அவனைக் காப்பதா? இல்லை, எங்கும், எப்போதும், எல்லோருக்கும் துணையாக வரும் இளவல் நகுலனைக் காப்பதா? ” – இவர்களில் யாரைக் காப்பாற்றுவது என்று புரியாமல் திகைத்தார் தர்மர்.

பின்னர் தெளிந்து, “ யக்ஷனே, நகுலனை உயிர்ப்பித்துத் தா! அதுபோதும்” என்றார்.

யக்ஷனுக்கு ஒரே ஆச்சரியம்! ”பீமன், அர்ஜூனன் போன்ற வீரர்களை விடுத்து, சாஸ்திரங்களில் தேர்ந்த சகாதேவனை விடுத்து நகுலனை உயிர்ப்பிக்கக் கேட்கிறாயே, தர்மா! அதன் காரணத்தை நான் அறியலாமா?” என்கிறான்.

உடனே தர்மர், “யக்ஷனே! என் தந்தைக்கு குந்தி, மாத்ரி என்று இருமனைவியர். நானும் அர்ஜுனனும் பீமனும் குந்திக்குப் பிறந்தவர்கள். நகுலனும் சகாதேவனும் மாத்ரிக்கு பிறந்தவர்கள். குந்தி புத்திரர்களில் மூத்தவனாகிய நான் உயிரோடு இருக்கிறேன். அதுபோல மாத்ரி மைந்தர்களில் மூத்தவனாகிய நகுலன் உயிரோடு இருக்கட்டும். அதுதான் நியாயம். தர்மமும் கூட. அதனாலேயே அவனை உயிர்ப்பிக்குமாறு கேட்டேன்” என்றார்.

”எந்த நிலை வந்தாலும் தர்மம் பிறழாத ஒருவனைக் கண்டால் உன் சாபம் நீங்கும்” என்பது அந்த யக்ஷனுக்கு விதிக்கப்பட்டிருந்த சாபம். அதன்படி தர்மம் வழுவாத தர்மரைக் கண்டதன் மூலம் சாபம் நிவர்த்தியானது யக்ஷனுக்கு. அவன் மகிழ்ச்சியோடு, தர்மரின் சகோதர்கள் நால்வரையுமே உயிர்ப்பித்துத் தந்தான்.

– இது மகாபாரதம் கூறும் கதை.

தர்மருக்கு தன் தாய் வயிற்றில் தன்னுடன் பிறந்த அர்ஜூனன், பீமனைக் காப்பாற்றுவதா அல்லது மாற்றாந் தாய் வயிற்றில் பிறந்த நகுல, சகாதேவனைக் காப்பாற்றுவதா? இதில் யார் முக்கியம், யாரை உயிர்ப்பிக்கச் செய்தால் அது தர்மப்படி சரியாக இருக்கும் என்ற பெரிய கேள்வியும் அதனால் உயிர் பிழைக்காதவர்கள் சார்பாக மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற சங்கடமும் ஆரம்பத்தில் ஏற்பட்டது. இதுதான் தர்ம சங்கடம்.

ஒருபோதும் தர்மம் வழுவாமல் வாழ்ந்ததனால் தான் தர்மர் ”தர்ம புத்திரர்” என்று அழைக்கப்பட்டார். இப்படிப்பட்ட, தர்மத்தின் தலைமகனை தம்  மகனாகப் பெற்ற தாய் குந்தி, பாக்கியவதி அல்லவா? 

****

Advertisements

3 thoughts on “இப்படியும் ஒரு மகன்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.