அம்பியின் அனுபவங்கள் – 3

(அம்பியின் அனுபவங்கள் தொடர்ச்சி)

வாயைத் துடைத்துக் கொண்டே அந்த அறையை விட்டு வந்த தேவராஜன், “ஒண்ணும் இல்லை. நம்ம ஃப்ரெண்ட்.” என்றார்.

நான் அதைக் கவனிக்காமல் “சரி! சார், நம்ம விஷயம் என்னாச்சு, எவ்வளவு செலவாகும்?” என்றேன்

“ம்! ஹோமத்திற்கு ஒரு பத்தாயிரம் ஆகும். அப்புறம் இராமேஸ்வரம், திருச்செந்தூர், தனுஷ்கோடில போய்ப் பரிகாரம் ஒண்ணு பண்ணனும். உங்களால முடிஞ்சா நீங்க நேரே போய் பண்ணலாம். முடியாத பட்சத்துல பணத்தை எங்ககிட்ட கொடுத்திடுங்கோ. உங்க சார்புல நாங்க பண்ணிடுவோம். அததுக்கு ஆள் இருக்கா என் கிட்ட. என்ன அதுக்கு ஒரு பத்து, பதினஞ்சாயிரம் ஆகும். அப்புறம் முக்கியமா மோதிரம் ஒண்ணு. தங்கத்துல குரு விரல்ல, அதாவது வலது கை ஆள்காட்டிவிரல்ல, கனக புஷ்பராகம் கல் வைச்சுப் போடணும். அப்புறம் மோதிர விரல்ல வெள்ளில, முத்து பதிச்சு ஒரு மோதிரம் போடணும். அவ்வளவு தான் உங்க பிராப்ளம் எல்லாம் சால்வ்டு. கடைசியா, சாமியாரைப் பார்க்கறதும் பார்க்காததும் உங்க இஷ்டம்.”

“என்ன! எல்லாம் சேர்த்தா ஒரு அம்பது, அறுபது ஆயிடும் போல இருக்கே!” என்றேன்.

“அவ்வளவு ஒண்ணும் ஆகாது சுவாமி! நா என்னால முடிஞ்சவரிக்கும், சல்லிசா முடிக்கப் பார்க்கறேன், யூ டோண்ட் வொர்ரி” என்றார்.

“சரி சார், மோதிரம், என் பிரண்டோட அங்கிள் கடைல வாங்கிக்கலாம், ஒண்ணும் பிரச்னை இல்ல, மெதுவாக் காசு கொடுத்தாப் போதும்.”

“சார்! கண்ட இடத்துல வாங்காதீங்கோ! நான் சொல்ற இடத்துல வாங்கினீங்கன்னா, விலையும் சல்லிசு, நம்பகமாகவும் இருக்கும். இல்லன்னா அப்புறம் யாராவது, கண்டத, டூப்ளீகேட்டக் கொடுத்து ஏமாத்திடுவா உங்களை!”

“இல்லை சார்! இதுல ஏமாறதுக்கு இடமே இல்லை. என் பிரண்டோட அங்கிள் ரொம்ப வருஷமா இந்த பிசினஸ் தான் பண்றார். ரொம்ப நம்பகமானவர். நாணயமானவர்”

“எல்லாம் சரி தான் சுவாமின்! கல் எல்லாம் நல்லதா இருக்கனுமில்லையா, நான் சொல்றவா, பூஜை எல்லாம் பண்ணி, அதுக்கு நல்ல பவர் ஏத்தி வச்சிருக்கா, போட்டுண்டேள்னா காரியம் உடனே நடக்கும்”

“பராவாயில்லை சார்! நான் என் பிரண்டோட அங்கிள் கடையிலயே வாங்கிக்கறேன். அவரும் அந்த மாதிரி பூஜை எல்லாம் பண்ணி தான் விக்கிறார்”

“அப்புறம் உங்க இஷ்டம் சுவாமின்! நான் சொல்றதைச் சொல்லிட்டேன், ஏதாவது, எங்கேயாவது வாங்கிப் போட்டு விபரீதமா ஏதாவது நடந்தா நான் பொறுப்பு இல்லை. என்னைக் குறை சொல்லக் கூடாது ஆமா!”

“என்ன சார் பயமுறுத்தறீங்க”

“நான் சொல்றதைச் சொல்லிட்டேன். நான் ஒண்ணும் பயமுறுத்தலை. இப்படித்தான் நமக்குத் தெரிஞ்ச பையன் சொல்லச் சொல்லக் கேட்காம வேற இடத்துல வாங்கிப் போட்டுண்டான். என்ன ஆச்சு? தோஷம் கழிக்காத கல். அடுத்த மாதத்துலயே வண்டி ஆக்சிடெண்டாகி, கால் ஒடிஞ்சு இப்போ ஆசுபத்திரில இருக்கான். எல்லாம் அவா அவா விதி, நாம என்ன செய்ய முடியும்?”

“சரி சார்! அந்த ஜூவல்லரி பேரென்ன?”

ஜூவல்லரி பெயரை சொன்னார்.

முன்பு போன் வந்த போது கிசு கிசுக் குரலில் பேசிய அதே ஜூவல்லரி.

எனக்கு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது.

“ஓகோ! இப்படித்தான் நீங்க ஊர ஏமாத்தறீங்களா?” என்றேன்.

“என்னது நான் ஊர ஏமாத்துறேனா? அய்யோ, என்ன சொல்றே நீ! வைதேகி! வைதேகி” கத்த ஆரம்பித்தார். கண்கள் சிவந்து விட, கைகால்கள் லேசாக நடுங்க ஆரம்பித்தன அவருக்கு.

அதற்குள் ‘வைதேகி’ என அழைக்கப்பட்ட பெண்மணியும், மற்றும் ஒரு திடகாத்திரமான ஆணும் அங்கே வந்து விட, எனக்கு இப்பொழுது உதறல் எடுத்தது.

“என்ன! என்ன!” என்றனர் இருவரும். அதுவும் அந்த திடகாத்திரமான ஆள் வேக வேகமாக என்னை நெருங்கினான்.

எனக்கு உடல் வியர்த்தது. நாக்கு குழறியது. “அது வந்து… அது வந்து.. நான் போயிட்டு அப்புறம் வரேன்.” பதிலைக் கூட எதிர்பார்க்காமல், தேவராஜனுக்கான ஃபீஸ் ஐநூறு ரூபாயை, மேசை மீது வைத்து விட்டு வேகவேகமாக வெளியே வந்தேன் கோழை போல.

தேவராஜன் முதுகிற்குப் பின்னால் என்னை முறைத்துப் பார்ப்பதையும், ஏதேதோ சொல்லித் திட்டுவதையும், நன்கு உணர முடிந்தது. வேகவேகமாய் பஸ் ஸ்டாண்ட் வந்து, பஸ்ஸில் ஏறிய பின்பு தான் எனக்கு உயிர்வந்தது.

நான் செய்தது சரியா, தவறா இன்னமும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் அனுமானித்தது இது தான். இது போன்று ஜோதிடம், ஜாதகம் பார்ப்பவர்களில் பலர், அது பற்றிய முழு அறிவு பெற்றவர்களல்ல. அந்தத் தொன்மையான சாஸ்திரம் பற்றி முழுமையாக அறிந்தவர்களும் அல்ல. எல்லாம் அரைகுறைகள். அவர்களின் நோக்கம் உடல் நோகாமல் உட்கார்ந்த இடத்தில் பணம் சம்பாதிப்பது மட்டுமே. இவர்கள் சைக்காலஜியையும் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர். அதைக் கொண்டு, தன்னிடம் வருபவர்களை ஏமாற்றிப் பணம் சம்பாதித்து வருகின்றனர். இந்தப் போலி ஜோதிடர்களிடம், யாராவது ஜோதிடம் பார்க்க வந்தால், அவர்களைப் பற்றி, அவர்களுக்கே தெரியாமல் பேசி அறிந்து, அவர்களிடமே அதைத் திருப்பிக் கூறுகின்றனர். வந்திருப்பவர்களும், இதனை உணராமல் ஆகா, ஒகோ எனப் புகழ ஆரம்பிக்கின்றனர். இவ்வாறு புகழ்பவர்கள், தங்களுக்குத் தெரிந்தவரிடத்தில், நண்பரிடத்தில் இது போன்ற ஜோதிடர்களைப் பற்றிக் கூற அவர்களும், இவர்களை நாடி வருகின்றனர். ஏமாறுகின்றனர்.

அதே சமயம், ஒரு சில உண்மையான ஜோதிடர்களும் இல்லாமல் இல்லை. ஆனால் அவர்கள் நோக்கம் பணம், புகழ் சம்பாதிப்பதல்ல. நாடி வருபவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டுவது. நெறிப்படுத்துவது தான். பரிகாரம், ஹோமம், மோதிரம் என்று தவறான வழியை இவர்கள் காட்ட மாட்டார்கள். ஆலய தரிசனம், அர்ச்சனை, தீபமேற்றுதல் போன்ற எளிய பரிகாரங்கள் தான் இவர்கள் கூறுவது. ஆனால் இவர்களைப் போன்றவர்களுக்கு செல்வாக்குக் கிடையாது. மக்கள் ஆடம்பரமாக உலா வரும் போலிகளைக் கண்டே ஏமாறுகின்றனர். அப்புறம் பொய், பித்தலாட்டம் என புலம்புகின்றனர்.

என்னைப் பற்றி சோதிடர் கூறியதும் ஒரு வித உளவியல் அனுமானத்தினால் இருக்கலாம். நான் நடந்து வந்ததைப் பார்த்து, என்னிடம் வண்டி இல்லை என முடிவு கட்டியிருக்கலாம். வேலையில் பிரச்னை எனக் கூறியதில் இருந்து, நண்பன், துரோகம் என மேற் கொண்டு சிலவற்றைக் கூறியிருக்கலாம். திருமணம் ஆகவில்லை என்பதை அறிந்து, காதல், ஆசை எனப் பலவற்றிக் கூறியிருக்கலாம். அவை எல்லோருக்கும், எக்காலத்தும் பொருந்தக் கூடியது தானே!. இது போன்றே எனக்கு முன்னால் பார்த்த மாமிக்கும் கூறியிருக்கலாம். “ஐந்துக்கு இரண்டு பழுதில்லை” என்ற பழமொழியைப் போல சிலவற்றை அனுமானித்துக் கூற, அவை சரியாக இருந்திருக்கலாம். மாமியும் ஏமாந்து இருக்கலாம்.

ஆகவே, அன்பர்களே, இந்த சாமியார், ஜோதிடம், வாஸ்து என்று நேரத்தைச் செலவிடுவதற்கு பதில், நம்மையே நாம் நம்ப வேண்டும். அல்லது அனுபவம் வாய்ந்த பெரியோர்களை ஆலோசனை கேட்டு நடந்தால், வாழ்க்கையில் எந்தப் பிரச்னை வந்தாலும் சமாளித்து விடலாம். அதனால் தான் வள்ளுவரும், ‘பெரியாரைத் துணை கோடல்’ என ஒரு அதிகாரம் இயற்றியிருக்கிறார்.

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

இதுவரை இதைப் பொறுமையாகப் படித்த அனைவருக்கும் மிக்க நன்றி.

அன்புடன்
அம்பி

****

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.