அம்பியின் அனுபவங்கள் – 2

 

நான் உள்ளே அழைக்கப்பட்டேன்।

“வாங்கோ! சாரி! செத்த லேட்டாயிடுத்து!” என்றார் தேவராஜன்।

“அதனாலென்ன சார்! பரவாயில்லை! ரொம்ப சிம்பிளாயிருக்கீங்களே! மத்த ஜோதிடர் மாதிரி, அசிஸ்டெண்ட், ஆபிஸ், செல்போன் எல்லாம் இருக்கும்னு நினைச்சிட்டு இருந்தேன்” என்றேன்.

“நீங்க நினைக்கிறதில ஒண்ணும் தப்பே இல்லை! இன்னும் சித்த நாள் போனவுடனே நானே ஒரு ஆபிஸ் ஓப்பன் பண்ணலாம்னு தான் இருக்கேன்। பார்க்கலாம்। ஆமா உங்க ஜாதகத்தைக் கொண்டாங்கோ.”

“இந்தாங்க சார்! நீங்க தான் பார்த்துச் சொல்லனும், எங்க போனாலும் ஒரே பிரச்னை. சாண் ஏறினா முழம் சறுக்கினாப் பரவாயில்லை. இங்கே அடி சறுக்கறது. ஏன்னு தான் தெரியலை. நீங்க தான் கொஞ்சம் சரி பண்ணனும். வேலை, உத்யோகம், கல்யாணம்னு எதுவும் இன்னும் சரியா அமையலை”

“கவலைப்படாதீங்கோ, எல்லாம் நான் பார்த்துக்கறேன், ஆகா, பத்தாமிடத்துல சனி, செவ்வாய் சேர்க்கை, உங்களுக்கு உத்யோகத்துல நிறையப் பிரச்னை இருக்குமே”

“ஆமா சார்”

“பாத்தேளா, சரியா சொன்னேனா, இன்னும் கேளுங்கோ, கூட இருக்கறவனே, குழி பறிப்பான், நண்பன் மாதிரிப் பழகிட்டு முதுகில குத்துவான், போட்டுக் குடுப்பான், யாரை நம்பறது, யாரைப் பகைச்சுக்கறதுன்னு ஒண்ணுமே உங்களுக்குத் தெரியாது சரியா?”

“கரெக்ட் சார்! எப்படி இவ்வளவு சரியா சொல்றீங்க?”

“எல்லாம் ஜாதகம் சொல்றதே சார்! இன்னும் கேளுங்கோ, உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை, காதல் திருமணம் பண்ணிக்க ஆசை, ஆனா முடியலை, சரியா, அப்புறம் எல்லார் மாதிரியும் ஒரு வண்டி வாங்கனும்னு ஆசை, ஆனா பொருளாதரம் உதவி இல்லை. குடும்பத்திலயும் சரியான உதவி இல்லை. சரியா?”

“அய்யோ, சார்! எப்படி சார், எல்லாத்தையும் புட்டுப் புட்டு வைக்கிறீங்களே, எப்படி இது?. என்னால நம்பவே முடியலையே” என்றேன் பதட்டத்துடன்.

ஒருவேளை, சுஜாதா கதைகளில் அடிக்கடி வரும் வசனம் போல ஏதாவது இஷிணி மாதிரி தேவதை வந்து என்னைப் பற்றி இவர் காதில் சொல்கிறதா என்ன!, எப்படி இவ்வளவு சரியாகச் சொல்கிறார்! என்னால் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை.

” ம்! ஆச்சா! ம்! ஒண்ணும் பிராப்ளம் இல்ல. ஈசியாச் சரி பண்ணிடலாம், சின்னதா ஒரு நவக்ரஹ சாந்தி ஹோமம் பண்ணனும். அப்புறம் சில பரிகாரங்கள் கோயில்ல போய் பண்ணனும். பண்ணினா எல்லாப் பிரச்னையும் சரியாப் போயிடும்.”

“நிஜமாச் சரியாப் போயிடுமா சார்!”

“அந்தச் சந்தேகமே உங்களுக்கு வேண்டாம். நிச்சயமா சரியாப் போயிடும். அப்புறம் நான் ஒரு யந்திரம் எழுதித் தரேன். அதை வீட்டுல வச்சு பூஜை பண்ணுங்கோ, கல் வச்ச மோதிரம் ஒண்ணும் போடணும். அதையும் போட்டா எல்லாம் சரியாப் போயிடும். அப்புறம் நீங்களே நினைச்சாலும் உங்களாலே கீழே வர முடியாது. அவ்வளவு உசரத்துக்குப் போயிடுவேள்”

“நிஜமாவா சார்?” என்றேன் ஆச்சர்யத்துடன்.

“ஆமாம். நிச்சயமான்னா… எங்க உங்க கையக் காட்டுங்கோ. ஆஹா… ம்! சுக்ர மேடு ரொம்ப ஸ்டாராங்கா இருக்கு, ம் யோகம் தான், அய்யா, மன்மதராசா போல இருக்கே”

“ம்ஹூம், ம்…ம்ம்ம், ஹி, ஹி… ஆமா” என்று உளறிக் கொட்டினேன்.

“சரி! சரி! ஒரு சித்து வேலை பண்ணப் போறேன்! திருவண்ணாமலை போயிருந்தப்போ அங்கே ஒரு சித்தர் சொல்லிக் கொடுத்தது. ஆஹா! சித்தர்கள் எல்லாம் என்னமா பறந்து பறந்து போறா தெரியுமா?”

“நிஜமாவா சார்! நீங்க பார்த்தீங்களா!”

“ஆமா, இல்லியா பின்னே, காத்து வேகம்பாலே அது மாதிரி பறந்து பறந்து… அப்பா! புல்லரிக்கிறது நேக்கு!”

“அய்யோ! நீங்க ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்கனும் சார், சித்தர்களையே நேர்ல பார்த்தேன்னு சொல்றீங்களே, ஆமா என்ன சித்து வேலை பண்ணப் போறீங்க?, வாய்க்குள்ள இருந்து லிங்கம் ஏதாவது எடுக்கப் போறீங்களா?. இல்லை செயின் மாதிரி ஏதாவது காத்துல இருந்து வரவழைக்கப் போறீங்களா?”

“ம்ஹூம்! அதெல்லாம் இல்லை, உங்க கையை நீட்டுங்கோ சொல்றேன்”

கையை நீட்டினேன்.

“ம்! இந்த விபூதி சித்தர் விபூதி! என்ன வாசனை வருதுன்னு பார்த்துட்டுச் சொல்லுங்கோ!”

கையில் சிறிதளவு விபூதியை வைத்தார். நான் முகர்ந்தேன்.

“விபூதி வாசனை தான் வருது சார்”

“அப்படியா, ம்! ம்! இப்போ பாருங்கோ”

ஏதோ மந்திரத்தை முணுமுணுத்தவாறே என் கையில் விபூதியைக் கொட்டினார்.

மீண்டும் முகர்ந்து பார்த்தேன்

“இப்பவும் அந்த வாசனை தான் சார் வருது.”

“நன்னாப் பாருங்கோ சார்! மனோரஞ்சிதம் வாசனை வரலை”

“இல்லையே” என்றேன் சற்றுக் கவலையுடன். இங்கே சென்னையிலேயே பிறந்து வளர்ந்ததால், இந்த மனோரஞ்சிதம் எப்படி இருக்கும், அதன் வாசனை எப்படிப்பட்டது என்றெல்லாம் எனக்குத் தெரியாமல் போய்விட்டது. ஆனால் அவர் கொடுத்த விபூதியில் முன்பு என்ன வாசனை வந்ததோ அது தான் இப்பவும் வந்தது. அது மட்டும் சர்வ நிச்சயம்.

“இப்போப் பாருங்கோ” என்றார் தேவர். முன்பை விடச் சற்று அதிகமாக மந்திரத்தை முணுமுணுத்துவிட்டு, அதிகமான விபூதியைக் கையில் கொட்டினார்.

நான் முகர்ந்து பார்த்து விட்டு விழித்தேன்.

“மல்லிப் பூ வாசனை வரலை” என்றார்.

சந்தேகப்பட்டு மீண்டும் முகர்ந்து பார்த்தேன். மல்லிப் பூ வாசனை வருகிற மாதிரித் தான் இருந்தது! ஒரு வேளை பிரமையோ? ஒன்றும் புரியாமல் சந்தேகப்பட்டு மறுபடியும் நன்கு முகர்ந்து பார்த்ததில், பழைய விபூதி வாசனைதான் அடித்தது.

“இல்லையே சார்! விபூதி வாசனை தான் வரது” என்றேன்.

“போச்சு போங்கோ! சரி, இப்போப் பாருங்கோ நிச்சயம் வேற ஏதாவது வாசனை வரும் குறிப்பா ரோஜாப் பூ வாசனை கண்டிப்பா வரணும்.”

என்னென்னெவோ மாஜிக் மாதிரி விரல்களை ஆட்டி ஆட்டி விபூதியைக் கையில் கொட்டினார். மறுபடியும் முகர்ந்து பார்த்தேன். மூக்குப் பொடி வாடையும், வெற்றிலைப் புகையிலை வாடையும் சற்றே கலந்து அடித்த மாதிரி இருந்தது. தேவர் மூக்கிலும், வாயிலும் அவை குடியேறி இருந்ததனாலோ என்னவோ! மற்றபடி பழைய விபூதி வாடைதான். அதிலும் கூட முன்னைப் போல வாசனை இல்லை. வெகு நேரம் விபூதியைக் கையிலேயே வைத்திருந்தால் வாசனை போய் விட்டதா என்ன! தெரியவில்லை. ஒன்றும் புரியவில்லை. திகைத்துப் போய் அமர்ந்து கொண்டிருந்தேன்.

“என்ன ஆச்சு? இப்பொ தெரியறதா?” என்றார் தேவர்

“இல்லை! ஒண்ணும் இல்லை! எனக்கு ஒரு வாசனையும் அடிக்கலை. சொல்லப் போனா, முன்னை விட விபூதி வாசனை கூடக் கொஞ்சம் குறைஞ்ச மாதிரி இருக்கு!”

“அப்படியா! அப்போ உங்களுக்கு ஏதோ கோளாறு இருக்கு, எல்லாருக்கும் நடக்கிறது உங்களுக்கு நடக்கலைன்னா, என்னத்தச் சொல்றது? ஏதாவது தோஷமா இருக்கலாம்! என்றார்.

“அய்யோ தோஷமா! என்ன சொல்றீங்க நீங்க” என்றேன் அதிர்ச்சியுடன்.

“ஆமா, எனக்கு என்னவோ சந்தேகமாத் தான் இருக்கு, இங்க சுங்குவார் சத்திரம் பக்கத்துல, ஒரு சாமியார் இருக்கார். வெத்திலைல மை தடவிப் பார்த்து எல்லாத்தையும் சொல்லி விடுவார். விருப்பம் இருந்தாப் போய் பாருங்கோ, முதல்ல நான் சொல்ற ஹோமம் எல்லாத்தையும் பண்ணிட்டு, நம்ம வேலையை முடிச்சுட்டுக் கடைசியா அங்க போலாம். நா வேணாலும் துணைக்கு வரேன்” என்றார்.

“சரி! சரி! எவ்வளவு செலவாகும்?”

“ம், பார்த்துச் சொல்றேன்”

அதற்குள் போன் வீரிட்டது. பக்கது அறைக்குள்ளே சென்று அதை அவசரமாக எடுத்து “ஹலோ” என்றார்.

“…………… ஜூவல்லரியா சொலுங்கோ என்ன விசேஷம்?.” உடனே குரலைத் தழைத்துக் கொண்டார்.

நான் அசுவாரசியமாய் வழக்கம் போலக் காதைக் கொடுத்தேன். கிசு கிசு குரலில், அவர் தணிவாகப் பேசினாலும் எனக்கு அவர் பேசுவதை நன்கு கவனிக்க முடிந்தது.

“………………”

“அப்படியா வந்திருக்காளா, எத்தனை பவுன்ல வாங்கப் போறா, ஸ்ட்ரிக்டா சொல்லிடுங்கோ மூணு பவுனுக்குக் குறைஞ்சு போட்டா பிரயோசனப் படாதுன்னு. நானும் இங்க ஏற்கனவே சொல்லித்தான் அனுப்பி இருக்கேன். ஆமா, நல்ல கல்லாப் பார்த்துப் போடுங்கோ, முன்ன ஒரு தடவ பிரச்னை ஆன மாதிரி ஆக வேண்டாம். ஜாக்கிரதை. அப்புறம் போன தடவ மாதிரி லேட் பண்ணாம நம்ம அமௌண்ட சீக்கிரம் செட்டில் பண்ணிடுங்கோ. புரியறதா?!”

“………………………”

“இல்ல வேண்டாம், செக் வேண்டாம் சுவாமி! நீங்க வழக்கம் போலக் கேஷாவே கொடுத்துடுங்கோ, செக்குன்னா நமக்குப் பல பிரச்னை”

“………………………”

“சரி! பரவால்லை, கொஞ்சம் சீக்கிரம் பாருங்கோ, கஸ்டமர் வெயிட்டிங். நான் அப்புறம் பேசறேன்!” போனை வைத்து விட்டு வெளிவந்தார்.

நான் எங்கோ கவனிப்பது போல பராக்குப் பார்த்தவாறு அமர்ந்திருந்தேன்.

(தொடரும்)

Advertisements

2 thoughts on “அம்பியின் அனுபவங்கள் – 2

 1. வணக்கம்

  ஒரு இணைய தளத்தில் உங்களுடைய கட்டுரையைப் பார்த்தேன். அதன் மூலம் தேடி உங்கள் வலைப்பூவை வந்தடைந்தேன். விளக்கங்கள் பெற்றேன். அந்தத் தளத்திலும் பதில் அளித்தேன். இருந்தாலும் அந்தத் தளத்தில் எழுப்பப்பட்டிருக்கும் கீழ்கண்ட வினாக்களுக்கு உங்கள் விரிவான விளக்கத்தை எதிர்பார்க்கிறேன். நன்றி.

  ”சோதி தோன்றிய நாள் கார்த்திகை தீபம்.அந்த சோதி லிங்கத்திலிருந்து பிரம்ம விஷ்ணுக்களுக்கு லிங்கோற்பவர் திருக்காட்சி தந்த இரவே சிவ ராத்திரி. நாத்திகப் போக்கில் அமைந்த படம் கட்டுரை இரண்டுமே சிவபிரானைப் பற்றி அணுவளவும் அறியாத அஞ்ஞானிக்கு உரியவையாக உள்ளன. கோபம் (சீற்றம்) ஆசை ஆகியவையெல்லாம் பிறப்பு இறப்பு உள்ள சீவராசிகளின் குற்றங்கள். எல்லாம் கடந்த பரம்பொருளான எல்லாம் வல்ல பரம சிவம் நிர்குண மூர்த்தி. தானே பரமம் என்று வாதிட்ட பிரம்ம விஷ்ணுக்கள் ஆதியந்தம் இல்லாத அருட்பெருஞ்சோதியின் அடிமுடி காண்பதில் தோல்வியுற்று சோதிலிங்கத்தைத் தொழுதுத் துதித்து வணங்கியபோது அவர்களுக்கு ஈசன் அடி முடி மறைந்துள்ள லிங்கோற்பவராகத் திருக்காட்சி தந்த நாளே மகா சிவராத்திரி. இது லிங்கோற்பவருக்குச் சிறந்த திருவிழா. ஈசன் பெயரால் பொய்யும் புளுகும் எழுதுவது தவறு. தமிழ் நாட்டுத் தமிழ்ப் பத்திரிகையாக இருந்தும் தென்னாட்டுச் சிவ வடிவம் -லிங்கோற்பவரின் படம் வெளியிடாமல் அதைப் பற்றிய கட்டுரை இல்லாமல் உண்மையை மூடி மறைப்பது ஆன்மீகம் அல்ல. நாத்திகமே. திருக்கோயிலுக்குச் செல்லுங்கள் . படம் பிடியுங்கள் .அதை வெளியிடுங்கள்.”

  பதிவுசெய்தவர் மௌனசிவம் 03/08/2013 12:36

  ”சிவராத்திரி என்றால் சிவனிரவு என்றுதான் பொருள். சிவனுக்கு உகந்த இரவு என்று உகத்தல் எங்கிருந்து வந்தது.? திருவிழாப் பெயருக்கே பொருள் தெரியாத போது திருவிழாக் காரணம் மட்டும் எப்படித் தெரியும் ? அதனால்தான் ,கடவுள் என்றால் என்ன எப்படிபட்டது என்று தெரியாமல் கடவுளுக்கும் பிறப்பு இறப்புள்ள மனிதர்களுக்கும் வேறுபாடு தெரியாமல் படத்திலும் கட்டுரையிலும் நாத்திக வாடை வீசுகிறது. ஆன்மீகம் என்ற பெயரில் நாத்திகத்தைப் பரப்புவது சரியல்ல…. பிரம்ம விஷ்ணுக்களுக்குப் பரம சிவம் மான் மழு தாங்கி அபய வரத நான்கு கரங்களுடன் அடி முடி மறைத்து லிங்கோற்பவராகத் திருக் காட்சி தந்த நாளே சிவராத்திரி என்று தென்னாடு உடைய சிவ பரம்பொருளின் மகிமை தெரியாதவர்கள் தமிழர்கள் என்று சொல்லிக் கொளவதற்கும் தகுதி இல்லாதவர்களே.”

  பதிவுசெய்தவர் ஓங்காரேசுவரன் 03/08/2013 13:07

  உங்கள் விளக்கம் என்ன ரமணன் ஐயா? சொல்லுங்கள்

  1. நண்பரே படித்தேன்.

   //சோதி தோன்றிய நாள் கார்த்திகை தீபம்.அந்த சோதி லிங்கத்திலிருந்து பிரம்ம விஷ்ணுக்களுக்கு லிங்கோற்பவர் திருக்காட்சி தந்த இரவே சிவ ராத்திரி.//

   இப்படித்தான் பலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அதையே இதை எழுதியவரும் கூறியிருக்கிறார். இவர்கள் அருணாசல மஹாத்மியம், அருணாசல புராணம் போன்றவற்றை முழுமையாகப் படிக்காதவர்கள் என்பது நன்கு தெரிகிறது.

   // நாத்திகப் போக்கில் அமைந்த படம் கட்டுரை இரண்டுமே சிவபிரானைப் பற்றி அணுவளவும் அறியாத அஞ்ஞானிக்கு உரியவையாக உள்ளன.//

   நான் “அஞ்ஞானி” என்பதில் எனக்கு அணுவளவும் சந்தேகமில்லை. ஆனால் பலர் விண் ஞானிகளாகவும், மெய் ஞானிகளாகவும் பதில் கூறுவதைப் பார்க்கும் போது :-))

   //கோபம் (சீற்றம்) ஆசை ஆகியவையெல்லாம் பிறப்பு இறப்பு உள்ள சீவராசிகளின் குற்றங்கள்.//

   சிவனுக்குக் கோபம் வந்ததே இல்லையா என்ன? மன்மதன் எப்படி அழிந்தான். பார்வதியின் உடல் 52 துண்டாகச் சிதறியது எப்படி? திரிபுரம் அழிக்கப்பட்டது எதனால்? – இந்தக் கேள்விக்கு அந்த “மௌன சிவம்” விடை தருவாரா?

   //ஈசன் பெயரால் பொய்யும் புளுகும் எழுதுவது தவறு. //

   பொய், புளுகா, நான் எழுதியதிலா? நல்ல நகைச்சுவை. ஆனால், பாவம் இந்தக் கருத்தை எழுதியவர் என்ன செய்வார், அந்தக் கட்டுரை நான் எழுதியதில் பாதியை மட்டும் தானே காட்டுகிறது. அவர் புரிதல் அவ்வளவுதான். பாவம்.

   நான் இதை தனிப்பதிவாக, விரிவானதொரு கட்டுரையாக விரைவில் வெளியிடுகிறேன்.

   கவனப்படுத்தியமைக்கு மிக்க நன்றி, மகேஷ்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s