அம்பியின் அனுபவங்கள் – 1

‘அம்பி’ என்றும் ‘கிட்டாம்பி’ என்றும், ‘கிட்டு’ என்றும் செல்லமாக அழைக்கப்படும் நண்பர் கி.மு.வின் (இயற்பெயர் – கிருஷ்ணமூர்த்தி) ஜோதிட அனுபவங்கள்:

‘ஜோதிடத்தில் மெய்நிலை கண்ட ஞானி’ எனஅழைக்கப்படும் ஜோதிடர் தேவராஜனை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சமீபத்தில் சந்தித்தேன்।

தற்பொழுது பார்க்கும் வேலையில் திருப்தி இல்லை, இன்னமும் திருமணமும் ஆகவில்லை। ஆதலால் என்ன செய்தால் பிரச்னைகள் சரியாகும் என அறிவதற்காக ஒரு சுபயோக சுபதினத்தில் அன்னாரைச் சந்திக்க முடிவு செய்தேன்.

அலைபேசியில் தொடர்பு கொண்டு ‘அப்பாயிண்ட்மெண்ட்’வாங்கிக் கொண்டேன்।

‘மதியம் 3 மணிக்கு மேல வாங்கோ’ என்றார் தேவர்।

அவர் வீட்டில்தான் ஜோதிடம் பார்ப்பதால் அவ்வாறே சென்று, அழைப்பானை அமுக்கினேன்। அன்னார் சிறிது நேரம் கழித்து வந்து கதவைத் திறந்தார். ‘வாங்கோ’ எனக் கூறிவிட்டு, வெற்றிலைச் சாற்றைத் துப்பிவிட்டு, துண்டால், வழிந்த சாற்றினைத் துடைத்தவாறே உள்ளே போனார். (எச்சில் இல்லையோ?)

‘அவங்களுக்குப் பார்த்துண்டிருக்கேன்। அப்புறம் நீங்க தான்’ என்றார். உள்ளே சற்றுவயதான மாமியும், 15 வயதுப் பையனும், பாயில் அமர்ந்திருந்தனர். இவர் ஒரு சிறு மேசை மீது அமர்ந்து கை விரலை விரித்தும், மடக்கியும் ஏதேதோ எண்ணத் தொடங்கினார்.

அசிஸ்டெண்ட் யாராவது இருப்பார்கள், கூட்டம் நிறையஇருக்கும் என நினைத்த நான் ஏமாந்து போனேன்। என்னைத் தவிர அங்கு யாருமே இல்லை. இவரும் பார்ட்-டைமாகத் தான் ஜோதிடம் பார்க்கிறாராம். மீதி நேரங்களில் புரோகிதமாம். நல்ல வரும்படியாம். அவரே சொன்னார். அன்று ஒரே நாளில் ஒரு சமாராதனை செய்து விட்டு, மூன்று திவசங்களையும் ‘அட்டெண்ட்’ செய்து விட்டு வந்ததாகப் பெருமையுடன் மாமியிடம் கூறிக் கொண்டிருந்தார். நானும் அசுவாரஸ்யமாய் காதைக் கொடுத்தேன்

“நீங்க இருக்கறது தனி வீடு தானே?”

“ஆமாம் மாமா”

“ம்ம் ஆச்சா! உங்களுக்கு வயத்தில எதாவது வலி கிலி இல்லைன்னா ஏதாவது பிரச்னை இருக்குமே!”

“ஆமாம் மாமா எப்படி இவ்வளவு கரெக்டா சொல்றேள்?”

“நான் எங்க மாமி சொல்றேன்! எல்லாம் ஜாதகம்னா சொல்றது!”

“ஆத்து வாசல்ல வலதுகைப்பக்கம் ஏதாவது மரமிருக்கா?”

“இல்லையே! இடதுகை பக்கம் தான் ஒரு சின்ன வேப்ப மரம்இருக்கு।”

“சரி! சரி! அதாவது உங்க ஆத்துக்கு வெளில, இடதுகைப் பக்கம் சரியா?”

“ஆமா ஆமா”

“ம்ம்… ம்ம்… வெளில இருந்து பார்த்தா நான் சொன்ன மாதிரி வலது கைப் பக்கம்। வீட்டுக்குள்ளேருந்து பார்த்தா இடதுகைப் பக்கம் சரிதான்! ஆச்சா! ம்ம் ம்ம். உங்களுக்கும்..உடம்புல.. இடது புறம்.. வந்து.. வந்து.. மச்சம்…”

“சும்மாச் சொல்லுங்கோ மாமா! நீங்க என் தோப்பனார்மாதிரி!”

“ம்! வேண்டாம் விடுங்கோ! ஒரு சினிமா படம் கூட வந்தது அது மாதிரி! தேவியின் திருவிளையாடல்னு நினைக்கறன். நீலகண்ட தீக்ஷிதர் கதை தெரியுமோல்யோ..”

“புரியறது மாமா, புரியறது. சரிதான்! அய்யய்யோ! எப்படி இவ்வளவு கரெக்டாச் சொல்றேள்।”

“ஜாதகம் சொல்றது மாமி! ஜாதகம் சொல்றது॥”

“ஆமாம் மாமா!! எப்படி இவ்வளவு துல்லியமா எல்லாத்தையும் சொல்றேள்! அய்யோ உங்க கிட்ட ஏதோ தெய்வீகசக்தி இருக்குன்னு நினைக்கிறேன்.”

“ம்ம்! ஹ!ஹ! ஆமா! ஆமா! எல்லாம் அவன் போட்ட பிச்சை। நீங்க ஒண்ணு பண்ணுங்கோ! நாளை மறுநாள் வாங்கோ! நான் எல்லாத்தையும் நன்னா ஒரு தரம் பார்த்து வக்கிறேன்। என்ன பரிகாரம் பண்றது, எப்படிப் பண்றது எல்லாத்தையும் நான் பார்த்துச் சொல்லிடறேன். சரியா!”

“சரி மாமா! இவனோடதச் செத்தப் பாருங்களேன்! சரியாவே படிக்க மாட்டேங்கறான்। ஒரே வம்பு தும்பு.”

“ம்ம்! சரி! சரி! அடடா! ஹஸ்தமா! போ! படிப்பு கஷ்டம் தான்। இவனுக்கும் இவன் அப்பாக்கும் செத்த ஆகாதே!”

“ஆமா மாமா! சரியாச் சொன்னேள்! படிக்கவே மாட்டேங்கறானேன்னு எப்பப் பார்த்தாலும் திட்டிண்டே இருப்பார்.”

“ம்ம்! பையன் சேர்க்கை சரியில்லையே! ஒரே விளையாட்டு, டிவி, ஊர் சுத்தறது.. சரியா?”

“அட! ஆமா மாமா। அய்யோ, கரெக்டா நேரில பார்த்தது மாதிரிச் சொல்றேளே!”

“என்னத்த! எல்லாம் ஜாதகம் சொல்றது மாமி, ஜாதகம் சொல்றது। ஒரு சின்ன தோஷம் வேற இருக்கு। புதன் வீக்காயிட்டான் ஜாதகத்துல। சுக்ரன் வேற சூரியனோட சேர்ந்து மறைஞ்சுட்டான். சின்னதா ஒரு ஹோமம் பண்ணினாச் சரியாப் போயிடும். உங்களால பண்ணமுடியுமா?”

“பண்ணலாம் மாமா! எவ்வளவு செலவாகும்?”

“அது ஆகும்! எல்லாம் நான் பார்த்துக்கறேன்! ஆமா அவர் எங்க வேலை பார்க்கறார்?”

“பேங்கில மாமா! சின்னவ இப்பொதான் டிசிஎஸ்ல வேலைக்குப் போக ஆரம்பிச்சிருக்கா”

“ஆகா! பேஷ்! பேஷ்! எல்லாத்தையும் நான்பார்த்துக்கறேன்! யூ டோன்ட் வொர்ரி! என்ன ஹோமத்துக்கு ஒரு பத்து, பதினஞ்சாயிரம் ஆகும்। அப்புறம் பாருங்கோ! பையன் எப்படி மாறிப் போயிடறான்னு! அப்படியே பொண்ணு ஜாதகம் இருந்தாலும் கொண்டாங்கோ! கைவசம் நிறைய வரன் இருக்கு! நல்லதா ஒண்ணைப் பாத்து முடிக்கலாம், நிதானமா, அவசரமில்லாம. இப்போ பார்க்க ஆரம்பிச்சாதான் அடுத்த வருஷம் குரு மாறறப்போ கல்யாணம் பண்ண சரியா இருக்கும் என்ன சொல்றேள்?!”

“ஆகட்டும் மாமா! உங்களைத் தான் நம்பியிருக்கேன்! நீங்க தான்..”

“ஒண்ணும் கவலைப்படாதீங்கோ! அவருக்கும் உடம்பு சரியாயிடும்! ஆத்துப் பிரச்னை எல்லாம் சரியாயிடும்। நீங்க கவலையே பட வேண்டாம். எல்லாம் நான் பார்த்துக்கறேன்.”

“சரி மாமா! பைசா எவ்வளவுன்னு।”.

“ஆஹா! அதுக்கென்ன? நீங்க கொடுக்கறதைக் கொடுங்கோ! ஒண்ணும் பிராப்ளம் இல்ல।”

“சரி மாமா! நூறு ரூபா வைச்சிருக்கேன்। சரிதானே!”

“ம்ம்। நூறா… பொதுவா நான் ஒரு ஜாதகத்துக்கு எரநூறுல இருந்து ஐந்நூறு வரைக்கும் வாங்குவேன்! இப்போ ரெண்டு பார்த்திருக்கேன் இல்லையா? பரவாயில்லை. நீங்க இப்போ இருக்கறதைக் கொடுங்கோ! பாக்கி அப்புறம் பார்த்துக்கலாம்.”

“இல்ல மாமா! இதுல ஐநூறுரூபா இருக்கு! நான் நாளைக்கு வரப்போ மீதி எடுத்துண்டு வரேன்। வரட்டா?”

“ஆகா பேஷா!”

“செத்த இருங்கோ மாமா! நமஸ்காரம் பண்றேன்। டேய் நீயும் மாமாவைச் சேவியேண்டா?”

“ம்ம்! பரவாயில்லை! பரவாயில்லை! தீர்க்காயுசா இருங்கோ! என்னது! அபிவாதயே சொல்லாம எழுந்துண்டுட்டானே பையன்!”

” அது வந்து இன்னும் பூணூல் போடலை மாமா!”

“அட! ராமா! சட்டு புட்டுன்னு போட வேண்டாமா?। வயசானப்புறம் பூணூல் போட்டு என்ன பிரயோஜனம், பால்யத்தில போடாம?. அதான் பையன் இப்படி இருக்கான்! சரி சரி! பொண்ணு கல்யாணத்தோட பூணூலயும் வச்சிண்டுடலாம், ஒரே செலவாப் போயிடும்! சரியா?”

“சரி மாமா. நான் அவரண்டையும் இதைப் பத்தி சொல்றேன்.

வரட்டுமா?”

“ஆகா!”

மாமியும் பையனும் நகர, நான் உள்ளே அழைக்கப்பட்டேன்।

(தொடரும்)

நன்றி : அம்பி

*****

Advertisements

6 thoughts on “அம்பியின் அனுபவங்கள் – 1

 1. நண்பர் ரமணன்,

  அற்புதமான நடை –
  சொல்லாமலே விளங்கும் உண்மைகள் !

  நம் மக்கள் நிஜம் எது -போலி எது என்று
  தெரிந்து கொள்ள முயற்சியே செய்வதில்லை !
  எனவே பொய்யை வைத்தே பிழைப்பவர்களுக்கு
  இருப்பும், வளர்ப்பும் சுலபமாகி விடுகிறது.

  அவசியம் தொடரட்டும் உங்கள் தொடர் !

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  1. தங்கள் கருத்திற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி காவிரி மைந்தன் அவர்களே! எல்லாப் புகழும் இதை எழுதிய திரு “அம்பி” அவர்களுக்கே!! 🙂

 2. வணக்கம்,
  இந்த தொடரின் ஆரம்பத்திலேயே எந்த ஆன்மீக கருத்துக்களோ ஜோதிட கருத்துக்களோ இடம் பெறவில்லை. மாறாக வார்த்தை ஜாலங்கள்தான் உள்ளது. ஆக, இவைபோன்ற பிரயோஜனமில்லாத (பதிவுகள்) தொடர்கள் தங்களின் தளத்தில் இடம்பெற வேண்டாம். இது எனது அன்பான வேண்டுகோள்.
  —————————-
  26.03.2013 அன்று சதுரகிரியில் இருப்பேன். இதுநான்காவது பயணம். தங்களின் வாழ்த்துகள் வேண்டும். (விருப்பமானவர்களிடம் வாழ்த்துக்களை கேட்டுப்பெறுவதில் தவறில்லை. :)) )
  அன்புடன்,
  பா.முருகையன், வடலூர்.

  1. தங்கள் கருத்துக்கு நன்றி.

   இந்தக் கட்டுரை நகைச்சுவைக்காக எழுதப்பட்டது. நான் அதைப் பகிர்ந்திருக்கிறேன். அவ்வளவே.

   ஆனால், இப்படிப்பட்டவர்களும் இருக்கிறார்கள் தான் இல்லையா?

   சரி, இதை விடுங்கள். உங்கள் சதுரகிரிப் பயணம் வெற்றிகரமானதாக அமையட்டும். இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கு எல்லா நலன்களையும் அளிக்கட்டும்.

   எனக்காகவும், எம் குடும்பம்/ உடல்நலம் சீராகவும் சேர்த்து சுந்தர மஹாலிங்க பிரபுவிடம் பிரார்த்தியுங்கள். நன்றி.

   அன்புடன்
   ரமணன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s