சேரமான் பெருமாள் சாஹிப்?!

இரண்டாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை, தமிழகத்தைத் தோத்திரப்பாடல்களால் மூழ்கச் செய்தவர்கள் இருபத்தேழு திருமுறை ஆசிரியர்கள். இவர்கள் அனைவருமே, முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாகிய சிவ பரம்பொருளால் ஆட்கொள்ளப்பட்டு, அவருடைய கருணை வெள்ளத்தில் மூழ்கித் திளைத்த அருளாளர்கள். தாம் பெற்ற பேரின்பத்தினை நாமும் பெறுதல் வேண்டும் எனும் உயர்ந்த நோக்கத்துடன் இவர்களால் அருளப்பட்டவையே தேவாரத் திருமுறைகள்.

தேவாரத் திருமுறைகளை பதினொன்றாக வகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. சேக்கிழார் சுவாமிகள் பாடிய ‘பெரிய புராணம்’ பன்னிரண்டாவதாகச் சேர்க்கப்பட்டது.

பதினொன்றாம் திருமுறையை அருளிய அருளாசிரியர்கள் பன்னிருவர்:

1.  திருவாலவுடையார்

2.  காரைக்காலம்மையார்

3.  ஐயடிகள் காடவர்கோன்

4.  சேரமான் பெருமாள் நாயனார்

5.  நக்கீர தேவர்

6.  கல்லாட தேவர்

7.  கபில தேவர்

8.  பரண தேவர்

9.  இளம் பெருமான் அடிகள்

10. அதிரா அடிகள்

11. பட்டினத்தடிகள்

12. நம்பியாண்டார் நம்பிகள்.

இவர்களுள் மதுரைத் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுளே திருவாலவுடையார் என்ற கருத்துமுண்டு.

இப்பதினொன்றாம் திருமுறையின் தனித்தன்மைகள்

1. பன்னிரு திருமுறைகளும் சிவபரம்பொருளால் ஆட்கொள்ளப்பட்ட அருளாளர்களால் அருளப்பட்டவை. என்றாலும், சிவபெருமானே அருளிய ‘திருமுகப் பாசுரம்’ இத்திருமுறையில் முதல் பதிகமாக அமைந்துள்ளது தனிச்சிறப்பு.

2.   முதன்முதல் பண் அமைந்த பதிகத்தைப் பாடியருளிய காரைக்காலம்மையாருடைய பாடல்கள் இத்திருமுறையில்தான் அமைந்துள்ளன.

3. திருக்கயிலையில் சிவபெருமானார் திருமுன்பு பாடி அரங்கேற்றப்பட்ட ‘திருக்கயிலாய ஞான உலா’ இதில் இடம் பெற்றுள்ளது. இதைப் பாடியவர் சேரமான் பெருமாள் நாயனார்.

சேரமான் பெருமாள்

சேரமான் பெருமாள் நாயனார்

இவர் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சுந்தரரின் உற்ற நண்பர். சேர நாட்டை ஆண்டவர். சிவனை மறவாத சிந்தையுடையவர். இவர் தினமும் தம்முடைய சிவபூஜையின் முடிவில் நடராஜப் பெருமானாரின் சிலம்பொலி கேட்டு மகிழும் பாக்யம் பெற்றவர். ஒரு நாள் நீண்ட நேரமாகியும் சிலம்பொலி கேட்கவில்லை என்பதால் ’இனி உயிரை மாய்த்துக் கொள்வதே தக்கது’ என எண்ணி உடைவாளைத் தம் கழுத்திற்குக் கொண்டு சென்றார்.

அப்போது திடீரென சிலம்பொலி மிகுதியாகக் கேட்டார்.

”தில்லையில் சுந்தரன் நம்மைத் தீந்தமிழில் பாடி வழிபட்டான். அதிலேயே யாம் மூழ்கி விட்ட காரணத்தால் கால தாமதம் ஆயிற்று” என அசரீரியாய் அருளினார் சிவபெருமான்.

அதைக் கேட்ட சேரமான் உடனே தில்லை சென்று நடராஜர் மீது பொன் வண்ணத் தந்தாதி பாடி வணங்கினார். சுந்தரரைச் சந்தித்து அவருடன் நட்பு பூண்டார். திருவாரூர் மும்மணிக்கோவை என்பதும் சேரமான் இயற்றியதே!

யானையில் சுந்தரர்

சேரமானைப் பற்றி ஒரு கதை உண்டு. சுந்தரரும் சேரமான் பெருமானும் வானுலகம் சென்றனர். இறைவனிடத்திலிருந்து வந்த தேவ வாகனமாகிய வெள்ளை யானையில் சுந்தரர் செல்ல, ஒரு வெள்ளைக் குதிரை மீது ஏறிச் செல்கிறார் சேரமான். இதை அறிந்த ஔவை தானும் விரைவாகக் கைலாயம் செல்ல வேண்டி, விநாயகருக்கான பூஜையை வேகமாக முடிக்க விழைய, விநாயகர் அவரைத் தடுத்து வழக்கம் போல் பூஜை செய்யும் படியும் தாம் அவர்களுக்கு முன்னால் ஔவையைக் கொண்டு சேர்ப்பதாகவும் கூறினார். அவ்வாறே ஔவை விநாயகர் அகவல் பாடி முடித்ததும், விநாயகர் தம் துதிக்கையால் அவரைத் தூக்கிக் கைலாயம் சேர்ப்பித்தார் என்பது அக்கதை.

தமிழகத்தில் உள்ள பல ஆலயங்களிலும் இவ்வரலாறு குறித்த சிற்பங்கள் காணக் கிடைக்கின்றன. ஆனால் அது சுந்தரர் அல்ல; ஒரு சூபி ஞானி என்றும், அவரோடு இணைந்து சேரமான் மெக்கா சென்று விட்டார் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. சேரமான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு சூஃபி ஞானியாகி விட்டார் என்றும் ஒரு கருத்து உள்ளது. ஒரு சிலர் அது ”பள்ளி பாண பெருமாள்” என்னும் சேர மன்னர், அவர் சேரமானுக்கு 200 ஆண்டுகள் பின்பு வாழ்ந்தவர், அவரே இஸ்லாத்தை ஏற்று மெக்காவுக்குப் பயணமானார் என்றும் கூறுகின்றனர். கேரளாவில் அவர் எழுப்பிய மசூதியும் உள்ளது. அதுவே இந்தியாவில் முதன் முதலாக இஸ்லாமியர்களுக்கு என்று ஏற்பட்ட மசூதியாகக் கருதப்படுகிறது. சேரமான் மசூதி என்பதே அதன் பெயர். சேரமான் மாலிக் நகர் என்பதும் அங்கே உள்ளது.

சேரமான் மசூதி
அறிவிப்பு
சேரமான் மாலிக் நகர்

ஆனால் ’சேரமன்னர் வரலாறு’ என்ற நூலை எழுதிய ஒளவை துரைசாமிப் பிள்ளை இது முற்றிலும் தவறான செய்தி என்று மறுக்கிறார். சேர மன்னர் மக்கா சென்றது பற்றிய விவரங்கள், ”கேரளோற்பத்தி” மற்றும் ”கேரள மான்மியம்” போன்ற நூல்களில் காணப்படுகின்றன. ஆனால் அது காலத்தால் பிந்தியது, பெரிய புராண காலத்திற்கு மிக மிகப் பிற்பட்டது. ஆகவே அதனை ஆதாரமாக ஏற்க இயலாது என்கிறார் பிள்ளை.

சேரமான் தர்கா, ஓமன்

அரேபியாவில் உள்ள கடற்கரை நகரான ஜாபரில் அப்துல் ரஹ்மான் சாமுரி என்பவரின் கல்லறை உள்ளது. கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமியராக மாறிய ஒரு ஹிந்து மன்னனின் கல்லறை அது என்று கூறப்படுகிறது. ஓமனில் ஒரு கேரள இந்து மன்னரின் சமாதி இருப்பதாகவும் அது சேரமான் பெருமாளுடையது என்றும் நம்பப்படுகிறது. ஒரு சில ஆய்வாளர்கள் சேக்கிழார் குறிப்பிடும் சேரமான் பெருமாள் வேறு. இஸ்லாத்தை ஏற்று மெக்கா சென்ற சேரமான் வேறு என்று குறிப்பிடுகின்றனர்.

இந்தியாவின் முதல் மசூதி, கொடுங்காளூர், கேரளா

ஆக, சேரமான் என்ற பெயரில் பல மன்னர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதும் அவர்களில் ஒருவர் அக்காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவராக இருந்திருக்கலாம் என்பதும் இதன் மூலம் தெரிய வருகிறது. ஆனால் பெரிய புராணம் கூறும் நபர், கேரள மானுவல் கூறும் நபரும் ஒரே ஆளாக இருக்கும் வாய்ப்பு இல்லை என்பதே நம்புதற்குரியது. இதனை ஆய்வாளர்கள்  ஆராய்ந்து இறுதி முடிவை  அறிவிக்க வேண்டும்.

ஓமனின் உள்ள சேரமான் சமாதி பற்றிய விவரங்களுக்கு… http://www.aulia-e-hind.com/dargah/Intl/Oman.htm

படங்கள் : நன்றி – கூகிள் இமேஜஸ்

******

Advertisements

6 thoughts on “சேரமான் பெருமாள் சாஹிப்?!

 1. // சிவ பரம்பொருள் பித்தராக இருந்தவர் திடீரென இஸ்லாத்தைத் தழுவ என்ன காரணம்? //

  அண்ணே, சேரமான் பெருமானார் இங்கு சித்த மரபில் ஞானவழியில் இறைத்தேடலில் ஈடுபடவில்லை.பக்தி மார்க்கத்தின் வழி இறைத் தேடலில் இருந்தவருக்கு சூஃபி வழி ஞானமார்க்கம் வெகு சீக்கிரம் அந்தப் பாதையை அடைய உதவி இருக்கலாம். இதுவே காரணமாக இருக்க முடியும். இருப்பினும் மேலதிகத் தகவல்கள் இல்லையே. அனுமானமாகவே கூற முடிகிறது.

  1. சார்…

   பெரிய புராண வரலாற்றின்படி சேரமான் பெருமாள் நாயனார் முக்தி அடைந்து விட்டார். கைலாயத்திற்குச் சென்ற அவர், அங்குள்ள இறைவனைக் கண்டு பாடியதுதான் “திருக்கயிலாய ஞான உலா” உலா நூல்கள் இதுவே முதன் முதலில் வெளியான நூலாகக் கருதப்படுகிறது. இது சைவத் திருமுறைகளில் 11ம் திருமுறையாக உள்ளது. அவ்வாறு அவர் ஞான உலா பாடியதும் மன மகிழ்ந்த இறைவன், அந்த நூலை மானுடர்களும் படித்து பயன் தர வேண்டும் என்பதற்காக ”சாஸ்தாவை” அந்த உலா நூல் எழுதப்பட்ட ஓலைச்சுவடியுடன் அனுப்பி வைக்கிறார்.

   சேரமான் அருளிச்செய்த திருவுலாத் தெய்வ வெற்பில்

   நேருறக் கேட்டு முந்நீர் நெடும்புவி உய்யுமாறு

   சீருறு சோலை சூழ்ந்த திருப்பிடவூரை நண்ணி

   ஆரவே சொல்லி வைத்த ஐயனே போற்றி போற்றி

   என்கிறது சிதம்பரம் தல புராணம்.

   சேரமான் வந்த வெள்ளை நிறக் குதிரையில் சாஸ்தாவை பூமிக்கு இறைவன் அனுப்பி வைத்ததாக சேக்கிழார் பெரிய புராணத்தில், வெள்ளானைச் சருக்கத்தில் குறிப்பிடுகின்றார். இறைவனின் ஆணையை ஏற்று சேரமான் சென்ற வெள்ளைக் குதிரையில் வந்திறங்கிய சாத்தன், சேரமானின் பாடல் தொகுப்பை எழுதி வெளியிட்டார். அந்தச் சாஸ்தாவுக்கான கோயில் திருப்பிடவூர் எனப்படும் திருப்பட்டூரில் உள்ளது. இதனை எழுத்தச்சன் கோயில் என்றும் அழைக்கின்றனர். இங்கே கையில் சுவடியுடன் சாஸ்தா உள்ளார். கற்றளியால் ஆன கோயில். வெளியே மிகப் பெரிய கல் யானை வாகனம் அமைந்துள்ளது. இன்றும் ஒவ்வொரு வருடமும் ஆடி சுவாதி தினத்தன்று திருக்கயிலாய ஞானஉலா விழா இவ்வாலயத்தில் சிறப்பாகக் கொண்டாடபடுகிறது. அன்று சுந்தரருக்கும், சேரமானுக்கும் பூஜை நடக்கும். சேரமான் கையில் ஞானஉலா சுவடி வைத்து, கயிலாயத்தில் அரங்கேற்றம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

   இவை புராணம் மூலம் கிடைக்கும் செய்திகள்.

   ஆக, முக்தி அடைந்து விட்ட சேரமானும், சூஃபி ஞானியாக மலர்ந்த சேரமானும் ஒருவராக இருக்க வாய்ப்பு இல்லை என்பதே எனது முடிவு.

   1. குதிரையில் வானுலகம் செல்தல் என்பது சூஃபி வழி ஞானக் குறியீடு. அதுதான் என்னைக் குழப்பியது.இருப்பினும் நீங்கள் சொல்லும் பிற செய்திகளை வைத்துப் பார்க்கும்போது சூஃபி சேரமான் இவர் இல்லை என்ற முடிவிற்கே உறுதியாக வரமுடிகின்றது.

    1. ஆமாம் அப்துல்லா சார்.

     இருவரும் வேறு வேறாகத் தான் இருக்க முடியும். சூஃபி ஞானியான சேரமன்னர் பற்றி இன்னமும் விரிவாகத் தகவல் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

 2. கேரள அரசர் சேரமான் மெக்கா சென்றதும் வரும் வழியில் ஓமன் தேசத்தில் மரணமடைந்ததும் உண்மை. பெரிய புராணக்காலத்திலும் அரேபியாவிற்கும்,தமிழகத்திற்கும் வணிகத் தொடர்புகள் இருந்ததற்கு இலக்கியங்களில் பல்வேறு பாடல்கள் வழி ஆதாரங்கள் உண்டு. இவ்வளவு ஏன் மன்னருக்கு பரிகள் வாங்க வந்து அந்தப் பணத்தில் ஆவுடையாருக்கு கோவில் கட்டிய கதை உங்களுக்குத் தெரியும்தானே! அந்தக் குதிரைகள் கப்பலில் வந்த அரேபிய தேசத்துக் குதிரைகள் என்பதாகத்தானே இருக்கிறது! கோட்டைப்பட்டிணம் கடற்கரைக்கு குதிரைகளை வாங்க வந்தவர்தானே அதற்கும் பத்து கி.மீ முன்னர் ஆவுடையார்கோவிலைக் கட்டினார். இது மாத்திரம் அல்ல.. பொதுவாக குதிரை ஏறி வானுகலம் சென்று இறைவனைக் காணுதல் என்பது சூஃபி வழிக் குறியீடு. முகமது நபிகள் கூட மெகராஜ் என்னும் புனித இரவு நாளில் இறைவன் அனுப்பிய குதிரையில் ஏறி விண்ணுலகம் சென்று திரும்பினார் என இஸ்லாமியப் புராணம் உண்டு. நம்முடைய தமிழ்ச் சமூகத்தில் குதிரை அல்லது யானை ஏறி விண்ணுலகம் செல்லுதல் என்பது எங்கும் இல்லை. இத்தகைய காரணங்களால் இந்த சேரமான்தான் சூஃபி ஞானியாக மாறியவர் என்று நான் கருதுகிறேன். ஆனால் இவையெல்லாம் எது எப்படியோ…. அரபு தேசத்து அல்லாவும், தமிழ் தேசத்து சிவனும் வேறு வேறு நபர்கள் அல்ல என்பதை மட்டும் மிகவும் உறுதியாக நம்புகிறேன் 🙂

  1. //நம்முடைய தமிழ்ச் சமூகத்தில் குதிரை அல்லது யானை ஏறி விண்ணுலகம் செல்லுதல் என்பது எங்கும் இல்லை. இத்தகைய காரணங்களால் இந்த சேரமான்தான் சூஃபி ஞானியாக மாறியவர் என்று நான் கருதுகிறேன்.//

   ம்ம்ம். ஏனோ இதனை என்னால் ஏற்க இயலவில்லை. சிவ பரம்பொருள் பித்தராக இருந்தவர் திடீரென இஸ்லாத்தைத் தழுவ என்ன காரணம்? அது உண்மை என்றால் வரலாற்றில் ஏன் அதற்கான ஆதாரச் சம்பவங்களோ, பின்புலங்களோ காணப்படவில்லை என்பது என் கேள்வி.ஆனால் சேரமான் என்ற பெயரில் வேறு ஒரு மன்னர் இஸ்லாத்தைத் தழுவியிருக்கலாம். ஆனால் சுந்தரர், ஔவை, பெருமிழலைக் குறும்ப நாயனார், இன்னும் பிற நாயன்மார்களோடு சமகாலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படும் சேரமான் பெருமாள் நாயனார்தான் சூஃபி ஞானியாக மாறினார் என்பதை வலுவான காரணங்கள் ஏதுமின்றி என்னால் ஏற்க இயலவில்லை. அதே சமயம் ’இறைவன் ஒருவரே’ என்பதில் எனக்கு மாற்றுக் கருதில்லை. தூய அத்வைதமும் அதுவே!

   // அரபு தேசத்து அல்லாவும், தமிழ் தேசத்து சிவனும் வேறு வேறு நபர்கள் அல்ல//

   ஆம். இருவரும் ஒருவரே!

   ஹிந்துக்கள் கை கூப்பி இறைவனை வணங்குகின்றனர்; இஸ்லாமியர்கள் கை விரித்து இறைவனைத் தொழுகின்றனர்

   ஹிந்துக்கள் கிழக்குத் திசையைப் பார்த்து வணங்குகின்றனர். இஸ்லாமியர்கள் மேற்கு திசை நோக்கி இறைவனைத் தொழுகின்றனர்.

   ஹிந்துக்கள் உருவமாக இறைவனை வணங்குகின்றனர். இஸ்லாமியர்கள்உருவமற்றவனாக இறைவனைத் தொழுகின்றனர்.

   ஹிந்துக்களுக்கு சூரியன் புனிதமானவன். இஸ்லாமியர்களுக்கு சந்திரன் புனிதமானவன்.

   ஹிந்துக்கள் ”ப்ரஹ்மா” என்கின்றனர்; இஸ்லாமியர்கள் ”இப்ரஹிம்” என்கின்றனர்.

   ஹிந்துக்கள் ”ஓம்” என்கின்றனர். இஸ்லாமியர்கள் சொல்வது ”ஆமின்”

   இப்படி வழிபாடுகளில் வேறுபாடுகள் இருப்பதாகத் தோன்றினாலும் சிவனும், அல்லாவும், பரமபிதாவும் ஒருவரே!

   சங்கரரும், இயேசுவும், நபி பெருமானும் இறைத் தூதர்களே!

   ராமகிருஷ்ண பரமஹம்சரே ஒவ்வொரு மதத்தையும் ஆராய்ந்து, அனுபவித்துப் பார்த்துச் சொன்ன பிறகு, நாம் அதை மறுக்க முடியுமா?

   ஒன்று பரம்பொருள்; நாம் அதன் மக்கள்.

   ஓம். ஆமென். ஆமின்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s