ஒரு குட்டிக் கதை

ஒரு ஊரில் ”எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்” என்று ஒருவன் இருந்தான். உண்மையிலேயே அவனுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் தனக்கு பல விஷயங்கள் தெரியும் என்று அவன் நினைத்ததாலும், அப்பாவி ஊர் மக்களும் அப்படியே நம்பியதாலும் தன்னை பெரிய “அறிவாளி” ஆக அவன் நினைத்துக் கொண்டான். ’எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்’ என்று தன்னைத் தானே அழைத்துக் கொண்டான்.

ஒருமுறை வயலில் சில உழவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வழிதவறிய கழுதை ஒன்று வந்தது. அந்த மக்கள் அதுவரை கழுதையைப் பார்த்திராததால் ஆச்சரியத்துடன் அதனை நோக்கினர். திடீரென கழுதை கத்திக் கொண்டே வேகமாக ஓடியது. அப்போது அதன் முதுகில் கட்டியிருந்த மூட்டை அவிழ்ந்து விழுந்தது. அதில் இருந்த பூசணிக்காய்கள் விழுந்து உடைந்து சிதறின. அதைப் பார்த்த மக்கள் பயந்து போயினர். ஏனென்றால் அவர்கள் அதுவரை பூசணியையும் பார்த்ததில்லை என்பதால். உடனே ’எல்லாம் தெரிந்த ஏகாம்பர’த்தை அங்கே அழைத்து வந்தனர். நடந்ததை விவரித்தனர். ’எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்’ தனக்கு எல்லாம் தெரிந்த மாதிரி தலையை ஆட்டி” இது ஒண்ணுமில்லைப்பா; இது குதிரையோட முட்டை. நீங்க பார்த்தது அந்த குதிரையோட குட்டி” என்றான். மக்களும் அவனை, “ஆஹா.. ஆஹா… எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்” என்று போற்றிப் புகழ்ந்தனர்.

மற்றொருநாள் விடியற்காலை ஊருக்கு வெகு தொலைவில் யானை ஒன்று ஆடி அசைந்து செல்வதைப் பார்த்தனர் மக்கள். அதுவரை யானையை அவர்கள் பார்த்திராததால் எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்தை வரவழைத்துக் காண்பித்தனர். உடனே ஏகாம்பரம், “அட, பயப்படாதீங்கய்யா! இது ஒண்ணுமில்லை. அந்தா சூரியன் வந்தவுடனே போகுதில்ல இருட்டு. அதோட மீதிதான் இது. சூரியன் வாரவும் வேகமாப் போவுது” என்றான்.

சில நாட்கள் சென்றன. வயலில் மக்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். ’எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்’ அங்கே மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான். அப்போது திடீரென ஒரு பாம்பு வந்தது. அது கூட்டத்தில் புகுந்து வளைந்து, நெளிந்து வேகமாகச் சென்றது.

அதைப் பார்த்து பயந்த மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினர். ’எல்லாம் தெரிந்த ஏகாம்பர’த்திடம் வந்து ’ஆத்தி, எங்களுக்கு ரொம்பப் பயந்து வருதே! என்ன அது?’ என்று கவலையுடன் கேட்டனர்.

உடனே ஏகாம்பரம் நெஞ்சை நிமிர்த்தி, தலையை உயர்த்தி, குரலை எழுப்பி “ அது ஒண்ணுமில்லீங்கய்யா.. அது ஒரு பூச்சி. அது பேரு கோணக்க மாணக்க தையக் குட்டி” என்றான் கன கம்பீரமாக .

உடனே மக்கள், ”ஆஹா.. ஓஹோ..” என்று கரவொலி எழுப்பி அவனை தோளில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடினர்.

எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களால் நிறைந்தது இவ்வுலகம்

வாழ்க, எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள்!!!

***

– அரவிந்த்

Advertisements

One thought on “ஒரு குட்டிக் கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s