புதையலைத் தேடி…

“நீ என்ன சொல்றே, உங்க வயலுக்குள்ள புதையல் இருக்கா. ஐ’ம் சாரி என்னால நம்ப முடியல” என்றேன், ராகவிடம்.

ராகவ், என் நெருங்கிய நண்பன். சிறுவயது முதல் இருவரும் இணைந்து ஒன்றாக, ஒரே பள்ளியில் படித்தவர்கள். பின் கல்லூரி, வேலை, திருமணம் என்று இருவரும் வேறு வேறு திசையில் போய் விட்டோம். சமீபத்தில் சந்தித்தபோதுதான் என்னிடம் இப்படிச் சொன்னான் ராகவ்.

“இல்லை ஜக்கு, நான் சொல்றது நெஜம். எங்க தாத்தா ஒரு பெரிய ஜமீன்னு நான் உன்கிட்ட முன்னமே சொல்லி இருக்கேன்ல.”

“ஆமா, அதுக்கென்ன இப்போ?”

”அவரோட பழைய டைரி, டாகுமெண்ட்ஸ்னு எல்லாம் ’ஞாபகமா இருக்கட்டும்’னு அப்பா பரண்மேல கட்டிப் போட்டிருக்கார்”

“சரி”

“நா எதேச்சையா ஊர்லேர்ந்து வந்தவன், சும்மா பொழுது போகலைன்னு பரண் மேல ஏறி பழையக் குப்பையக் கிளறிப் பார்த்தேன். அதுல தான் இந்தப் பொக்கிஷம் கிடைச்சுது” என்று சொல்லி ஒரு பழுப்பு நிற நோட் புக்கைக் காட்டினான் ராகவ்.

ஆவலுடனும், அரைகுறை நம்பிக்கையுடன் அதை வாங்கித் திறந்தேன்.

“டேய், பார்த்துடா, அந்தக் காலத்து நோட்டு. அமுக்கினா பொடிப் பொடியா உதிரும். பாத்து” என்றான் பதட்டத்துடன்.

மெல்ல கவனமாக அதைத் திறந்தேன். அந்தக் கால மொழிநடையில் அதில் ஏதேதோ எழுதப்பட்டிருந்தது. டைரிக்குறிப்பு மாதிரி இருந்தது. ஒரு பக்கத்தில்…

சுபானு புரட்டாசி-19, ஞாயிறுக் கிழமை, 05.10.1823 – வடலூர் இராமலிங்கம் பிறப்பு.

கம்பன் பிறந்த நாள் 06.02.0886 புதன்கிழமை

கி. சேஷய்யா சாஸ்திரி பிறப்பு 22.03.1828 சனிக்கிழமை

– என்று எழுதி இருந்தது.

“இதெல்லாம் உண்மைதான்னு எப்படிடா நம்பறது?” என்றேன்.

“உண்மைதாண்டா, நாள், கிழமை, தேதி, வருஷம் எல்லாமே பக்காவா சரியா இருக்கு. என்கிட்ட இருக்குற தௌசண்ட் இயர் கம்ப்யூட்டர் பஞ்சாங்கத்துல போட்டு செக் பண்ணிட்டேன்.” என்றான்.

கொஞ்சம் நம்பிக்கை வந்தவனாக பக்கங்களைப் புரட்டிக் கொண்டே வந்தேன். ”அழகர் மலையின் மேலுள்ள ராக்காயி கோயில் என்பது கண்ணகி கோயில்தான். திருப்பதியில் இருப்பது பெருமாள் அல்ல முருகன்; கம்பன் வழிபட்ட காளியே நாட்டரசன் கோட்டையில் காளியாக, கண்ணுடை நாயகியாக உள்ளாள்; அங்கேதான் கம்பனின் சமாதி உள்ளது” – என்றெல்லாம் விவரங்களைப் படிக்க படிக்க எனக்குள் ஆர்வம் அதிகரித்தது.

என்னிடமிருந்து நோட்டை வாங்கிய ராகவ், ”முதல்ல இதைப் படி. இதுல தான் விஷயமே இருக்கு” என்று சொல்லி ஒரு பக்கத்தைக் காட்டினான்.

அதில் ”தேவர் மலை என்று ஈண்டு ஓர் மலையுண்டு. இம்மலைபற்றி, ’காக்கை மூக்கு நிழலிலே கலம் பொன்’ என்று பெரியோர்கள் கூறக் கேட்டதுண்டு. இம்மலையின் உச்சி காக்கையின் மூக்குப் போன்று இருக்கும் என்றும், அதன் நிழல் வீழும் இடத்திலெல்லாம் கலம் பொன் புதையல் இருப்பதாகவும் ஐதீகம். ஆனால் நிழல், எப்பொழுது, எந்தெந்த இடத்தில், எந்தெந்த நேரத்தில் விழும், அதிலே எவ்வெவ்விடத்திலே புதையல் உண்டு என்பதை இதுகாறும் யாரும் அறிந்திலார்.” என்று எழுதி இருந்தது.

”அதுக்கென்ன இப்போ, அதான் யாராலயும் கண்டு பிடிக்க முடியாதுன்னு எழுதியிருக்காரே!. அதுவும் அந்த மலை எங்க இருக்கோ, யாருக்குத் தெரியும்?” என்றேன் சற்றே சலிப்புடன்.

“அந்த மலை எங்க சொந்த ஊர் கிட்டதான்டா இருக்கு. அதைச் சுத்தி உள்ள இடம் எங்களுக்குச் சொந்தமான பூர்வீக நிலம். அதுனால நாம அந்தப் புதையலைக் கண்டுபிடிக்க முடியும், ரொம்ப ஈசியா.” என்றான் ராகவ் கண்களில் ஆர்வம் மின்ன.

அவனது அந்த ஆர்வம் எனக்கும் தொற்றிக் கொண்டது. ”சொல்லு நா என்ன செய்யணும்” என்றேன் ஆர்வத்துடன்.

”ஒரு வாரம் ஆபிஸுக்கு லீவ் போட்டுட்டு இன்னிக்கே என்னோட எங்க ஊருக்குப் புறப்படணும்” என்றான்.

நானும் உற்சாகத்துடன் சம்மதித்தேன்.

*****

ராகவ் வீட்டு மாடியில் நாங்கள் நின்று கொண்டிருந்தோம். கூடவே ராகவின் சித்தி பையன் சின்னராசும் நின்று கொண்டிருந்தான். இரவோடு இரவாகப் புறப்பட்டு விடியற்காலையில் ஊருக்கு வந்தாகி விட்டது. வந்ததும் வராததுமாக மொட்டை மாடி விஜயம். ராகவின் வீடு பழமையான அந்தக் காலத்து ஓட்டு வீடு. அதை அப்படியே விட்டு விட்டு பின்னால் உள்ள காலி இடத்தில் பெரியதாக வீடு கட்டியிருந்தார் அவன் அப்பா.

“அதோ பாரு, அதுதான் தேவர் மலை” என்று சுட்டிக் காட்டினான் ராகவ்.

சற்று தூரத்தே அந்த மலை தெரிந்தது. அதன் உச்சியில் மட்டும் கொஞ்சம் தள்ளி தனியாக ஒரு பெரிய பாறை இருந்தது. இங்கிருந்து பார்ப்பதற்கு அது வித்தியாசமாக, தலையில்லாத ஏதோ ஒரு உருவத்தைப் போலத் தெரிந்தது.

“அந்தப் பாறை இருக்கே. அதோட உச்சியத்தான் காக்கா மூக்கும்பாங்க. அதோட நிழல் காக்காவோட மூக்கு மாதிரி இருக்குமாம். அதான் அந்தப் பேரு” என்றான் ராகவ்.

நான் கொஞ்சம் சிலிர்ப்போடு அந்த மலையைப் பார்த்தேன்.

“ஆமா, உங்கப்பாக்கு இந்த விஷயம் தெரியுமா? அவர் ஏன் புதையல எடுக்க முயற்சி செய்யலை?” என்று கேட்டேன்.

“அவருக்குத் தெரியும். ஏன் எங்க தாத்தா காலத்துலேர்ந்தே நிறைய பேர் முயற்சி பண்ணியிருக்காங்க. அங்கங்க சில ஆடி ஆழம் தோண்டிப் பாத்திருக்காங்க. ஆனா யாருக்கும் எதுவும் கிடைக்கலை. எங்கப்பாவும் முயற்சி பண்ணிப் பார்த்திட்டு, எதுவும் கிடைக்காததுனால அப்படியே விட்டுட்டார்.”

“பின்னெ நமக்கு மட்டும் அது எப்படிக் கிடைக்கும்னு நம்பறே”

“அதைத் தோண்டி பார்த்தவங்கெல்லாம் சரியாத் தோண்டிப் பார்க்கலைன்னு நான் நினைக்குறேன். அங்கங்க தோண்டிப் பார்த்துட்டு கிடைக்கலன்ன உடனே அதை அப்படியே விட்டுட்டாங்க. ஏன் சொல்றேன்னா, சூரியன் ஆறு மாசத்துக்கொரு தடவை தன்னோட பாதையை மாத்திக்கிறான். அதுக்கேத்த மாதிரி பாறையோட நிழலும் மாறி மாறி விழும். அதை சரியாக் கவனிச்சுத் தோண்டணும். இவங்க அப்படித் தோண்டினதா எனக்குத் தெரியலை. அதுனால நாம என்ன செய்யப் போறோம்னா நாம அங்கங்க தோண்டப் போறதில்லை. டிராக்டர, வச்சி ஃபுல்லா நிலத்தையே தலைகீழாப் புரட்டிப் போடுவோம். ஜேசிபி வச்சு முயற்சி பண்ணிப் பார்ப்போம். ஏதாவது கிடைக்காமயா போயிடும்?.”

“சரி, ஊர்க்காரங்க எதுவும் பிரச்னை பண்ண மாட்டாங்களா?”

“மாட்டாங்க. அது எங்களுக்குச் சொந்தமான நிலம். அதுமட்டுமில்ல. இப்பப் புதையல நம்புற அந்தப் பழைய தலைமுறைங்கல்லாம் ஏதும் இல்லை. எல்லாம் நம்பள மாதிரி பகுத்தறிவு பேசுற இளவட்டப் பசங்க. அதுனால ஒரு பிரச்னையும் வராது!”

“ம்ம்ம்” என்றவாறு நான் சற்று யோசித்தேன்.

“என்ன யோசனை, மலைக்கு எப்ப போகலாம்” என்று கேட்டான் ராகவ்.

“இப்பவே” என்றேன் நான் உற்சாகமாய்.

****

மோட்டார் பம்ப்செட்டில் பாய்ந்து வந்த ஜில் தண்ணீரில் அலுப்பு தீரக் குளித்துவிட்டு, ராகவின் அம்மா தந்த சூடான தோசையும் சாப்பிட்டுவிட்டு நாங்கள் மலைக்குப் புறப்பட்ட போது 9.00 மணிக்கு மேல் ஆகி இருந்தது. அந்தக் காலை வேளையிலேயே சூரியன் எங்களை நெருப்பாய்ச் சுட்டான்.

மலையின் நிழல் முழுக்க முழுக்க ராகவின் வயல்களின் மீதே விழுந்து கிடந்தது. ’டேய், இதுல உச்சியோட நிழல் எங்க விழும்னு எப்படிடா கண்டு பிடிப்பே..” என்றேன்.

“கவலையே வேண்டாம். எப்படியிருந்தாலும் உச்சியோட நிழல் இந்த வயலுக்குள்ளதான எங்கேயாவது விழுந்தாகணும். அதான் டிராக்டர் இருக்கு. ஜேசிபி வேற நிக்குதே, ஃபுல்லா தோண்டிப் பாத்துறலாம்.”

அவன் கை சொடுக்க, ஒருபுறம் டிராக்டர் மெல்ல உழ ஆரம்பித்தது. மறுபக்கம் ஜேசிபி நிலத்தை அங்குலம் அங்குலமாகத் தோண்ட ஆரம்பித்தது.

மதியம் கடந்து மாலை ஆனது. மண் குவிந்ததுதான் மிச்சம். வேறு ஒன்றும் கிடைக்கவில்லை. அதற்குள் மாடு, ஆடு மேய்க்கும் சிறுவர்களிலிருந்து, பெரியவர்கள் வரை ஆங்காங்கே வந்தமர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

“எதுக்குப்பா இப்படித் தோண்டுறே! தென்னங்குழிக்குக் கூட இவ்ளோ ஆழம் வேண்டாமே” என்றார் ஒரு பெரியவர்.

“இல்லை பெரிவரே! இதுல வெளிநாட்டுத் தென்னை நடப் போறேன். அதுக்கு இப்படி நல்லா ஆழமாத் தோண்டி நட்டு வச்சா ஒரே வருஷத்தில காய்ச்சிரும். அதான் ஆழமாத் தோண்டுறேன்” என்றான் ராகவ்.

ஊர் வேடிக்கை பார்த்ததோடு சரி. வேறு எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ஆண்டாண்டு காலமாகப் புதையலைத் தேடித் தேடி அலுத்து விட்டது காரணமாக இருக்கலாம். அல்லது ஊரிலேயே பரம்பரை பரம்பரையாக பெரிய ஜமீன் குடும்பம் இவர்களுடையது என்பதும் காரணமாக இருக்கலாம். எப்படியோ இராப்பகலாக அலுக்காமல் சளைக்காமல் வயல் முழுக்கத் தோண்டிப் பார்த்தயிற்று. அன்றைக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை. இப்படியே ஐந்து நாட்கள் ஆனது. ஒரு பயனுமில்லை. மணல் வண்டி வண்டியாய்க் குவிந்ததுதான் மிச்சம்.

ஆறாம் நாள் உடல் களைப்பால் நான் போகவில்லை. ஓய்வெடுத்துக் கொண்டேன். ஆனால் அன்று தோண்டும் போது மட்டும் ஏதோ ஓரிடத்தில் பெரிய பானை மாதிரி ஏதோ ஒன்றிரண்டு கிடைத்ததாக ராகவ் சொன்னான். ”அதை அப்படியே உடைச்சுப் போட்டுட்டேன். அதில ஒண்ணுமே இல்லை. இங்கே புதையலும் இல்லை, கிதையலும் இல்லை. எல்லாம் ஏமாற்று வேலை. அந்தக் காலத்துக் கிழட்டு முட்டாப் பசங்க, பொழுது போகாம புதையல், கிதையல்னு ஏதேதோ சொல்லிக் கிறுக்கி வெச்சிருக்காங்க” என்றான் சலிப்புடன் ராகவ், இரவு மொட்டை மாடியில்.

மறுநாள் விடியற் காலையில் கிளம்ப வேண்டும் என்பதால் சீக்கிரமே படுத்து விட்டேன். வானில் நட்சத்திரங்கள் ஜொலித்தன. நிலவு அலைபாய்ந்து கொண்டிருந்தது. தூரத்தே மலை தெரிந்தது கறுப்பு நிற அரக்கனாய்…

“ஆமா, மலையோட அந்தப் புறம் என்ன இருக்கு ராகவ்?” என்றேன் கொட்டாவியை அடக்கியவாறே!

“அது அரசாங்கப் புறம்போக்கு நிலம்டா. ஒரு காலத்துல அங்கே ஏரி இருந்துச்சாம். இப்ப வெறும் தரிசாத்தான் கிடக்கு. நாளைக்குக் காலையில சீக்கிரம் எழுந்துக்கணும். இப்போ ஒறங்கு” என்றான் ராகவ், வாயை அகலத் திறந்தவாறே!

****

அதன்பிறகு நான் ஊருக்குத் திரும்பி வந்தது, பதவி உயர்ந்து பாங்கில் மேனேஜராகி, ஆபிசராகி, எங்கெங்கெல்லாமோ ஊர் சுற்றி ரிடயரானது, இப்போது சிங்கப்பூரில் மகன் வீட்டில் வாழ்ந்து வருவது எல்லாமே தனிக்கதை. இந்த இடைப்பட்ட காலத்தில் ராகவின் தொடர்பு விட்டுப் போய் விட்டது. அவன் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து, எம்.எல்.ஏ ஆகி, எம்.பி.ஆகி, ராகவேந்திரர் என்று நியூமராலஜிப்படி பெயரை மாற்றிக் கொண்டு, மந்திரி ஆகி, ஏகப்பட்ட எஞ்சியனிரிங், மெடிக்கல் காலேஜ்கள் என்று வளர்ந்து இப்போது நகரின் புகழ்பெற்ற கல்வித் தந்தைகளுள் ஒருவனாக இருக்கிறான்.

அடிக்கடி அவனை டிவியில் பார்க்கும்போது, இவற்றில் எல்லாம் ஆர்வம் காட்டாத, எப்போதும் நக்கலாகவே என்னைப் பார்த்துச் சிரிக்கும் மனைவியிடமும், சதா செல்போனில் யாருடனாவது கதைத்துக் கொண்டிருக்கும் பேரன், பேத்திகளிடமும் ’இவன் என் ஃப்ரெண்ட் தெரியுமா?’ என்று சொல்லி வீண் பெருமைப்படுவது வழக்கம்.

அன்றும் அப்படித்தான், பொழுதுபோகாமல் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தேன். எதேச்சையாகச் சேனலை மாற்றிக் கொண்டே வரும்போது ஏதோ ஒரு சேனலில் ‘தேவர் மலை’ என்ற குரல் காதில் விழுந்ததால். மாற்றுவதை நிறுத்தி விட்டு, அப்படியே அதைப் பார்க்க ஆரம்பித்தேன்.

”தேவர் மலைன்னு அழைக்கப்படற இந்த மலை கிட்டத்தட்ட 400 அடி உயரம் கொண்டதுங்க. இந்த மலையோட சுவாரஸ்யம் என்னன்னா, அதோட உச்சி நிழல் விழற பகுதியில புதையல் இருக்குங்குற நம்பிக்கைதான். அந்த நம்பிக்கை காரணமா பலபேர் பல ஆண்டு காலமாக அதை எடுக்க முயற்சி பண்ணியிருக்காங்க. ஆனா, யாருக்கும் எதுவும் கிடைக்கலை. பட், சமீபத்துல தொல்பொருள் இலாகா இந்தப் பகுதியில அகழ்வாராய்ச்சி செஞ்சப்போ ஏகப்பட்ட முதுமக்கள் தாழிகளைக் கண்டுபிடிச்சிருக்காங்க. தாழிகள் மட்டுமல்லாமல், ஏகப்பட்ட மண் கலயங்கள், குடுவைகள், ஜாடிகள்னு பலதும் கிடைச்சிருக்கு. இதுல முக்கிய விஷயம் என்னென்னா ஆயிரக்கணக்கான செப்புக் காசுகள் ஒவ்வொரு தாழிலயும் இருக்கறதுதான். இதோட பழமையையும் காலத்தையும் கணிச்சிப் பாக்கறப்போ இதுதான் இதுவரைக்கும் இந்தியாவில கிடைச்சதிலேயே தொன்மையான முதுமக்கள் தாழிகள் அப்படிங்குற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்திருக்காங்க.” – என்றது டிவி குரல்.

நான் சிறுவயதில் ராகவுடன் சென்ற தேவர் மலையையும் அதன் சுற்றுப் புறத்தையும் காட்டினார்கள். மலை, நான் சிறுவயதில் பார்த்த மாதிரி இல்லை. ஆங்காங்கே வெடி வைத்துப் பாளம் பாளமாகப் பிளந்திருந்தார்கள். ’ராகவேந்திரர் கிரஷர்ஸ்’ என்ற பெயர் பொறித்த லாரிகள் ஜல்லிக் கற்களுடன் வரிசை வரிசையாக மலையை ஒட்டி நின்று கொண்டிருந்தன.

முதுமக்கள் தாழிகளையும், செப்புக் காசுகளையும் அதை அகழாய்வு செய்து எடுத்த இடங்களையும் டிவியில் காட்டிய போது நான் திடுக்கிட்டேன். அந்த இடம், நாங்கள் டிராக்டர் வைத்து உழுது நிலத்தைப் புரட்டிப் போட்ட இடத்திற்கு எதிர்புறத்தில், சூரியன் மேற்குத் திசைக்குப் போகும் போது மலையின் நிழல் விழும் இடத்தில், ஒரு காலத்தில் ஏரி இருந்ததாக ராகவால் கூறப்பட்ட மலையின் மறுபுறத்தில் இருந்தது.

***********

Advertisements

5 thoughts on “புதையலைத் தேடி…

  1. இவர்கள் ஏறிய போட்டில் இவர்களுக்குப் பின் ஒரு 27-3௦ மதிக்க தக்க இளைஞன் ஏறினான். சிறிது தூரம் செல்லும் வரை அவன் ஸ்ருதியை உற்றுப் பார்த்துக் கொண்டு வந்தான். வஜ்ராவேலுவுக்கு கோவமாக வந்தது. என்னவென்று கேட்க நினைத்த போது “ஸ்ருதி, நீங்க… நீ…. ஸ்ருதி தானே? நான் கண்ணன்” என்றான் அவன். தன் அழகான கண்களை அகலமாக விரித்த ஸ்ருதி, “கண்ணன்? வாவ்…. எத்தன நாள் ஆச்சு உன்னப் பார்த்து. எங்க இருக்க? என்ன பண்ற? கல்யாணம் ஆயிடுச்சா?” என்று கேள்வி மேல் கேள்விகளை அடுக்கினாள். பின்னர் திடீரென்று ஏதோ உறைத்தது போல இவர் பக்கம் திரும்பி, “என்னங்க, இவன் கண்ணன் என் school and collage mate. கண்ணன் இவர் என் husband Mr. Vajravelu என்று பரஸ்பர அறிமுகம் செய்து வைத்தாள். வஜ்ரவேலு அவள் கணவன் என்று கேட்ட கண்ணன் முகம் மாறியது. இருந்தும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் “hello sir” என்று சொல்லி கை கொடுத்தான். பின்னர் ஒரு ஐந்து நிமிஷம் ஸ்ருதியும் அவனும் பேசிக் கொண்டு இருந்தார்கள். ஏற்கனவே கலவர உணர்வில் இருந்த வஜ்ரவேலு அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்று கவனிக்கவில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s