மாற்றான்

முன்குறிப்பு : மாற்றான் திரைப்படத்திற்கும் இச்சிறுகதைக்கும் எந்தவிதச் சம்பந்தமுமில்லை 

வரிசை மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. நான் அதில் கடைசி  ஆளாக நின்று கொண்டிருந்தேன். பலர் வருவதும் போவதுமாக அந்த இடமே சற்று பரபரப்பாக இருந்தது. ஆனாலும் அமைதி. எங்கும் ஒரே அமைதி. ஒரு வித ரம்மியமான சூழ்நிலை அங்கே நிலவியது. மனதிற்கு இதம் தரும் ஒரு மணம் எங்கும் பரவி இருந்தது.

வரிசையில் நின்றவர்கள் ஒவ்வொருவர் முகத்திலும் ஒவ்வொரு விதமான பாவனை. சிலர் மகிழ்ச்சியோடு மற்றவருடன் பேசிக் கொண்டிருந்தனர். சிலர்  சற்றே கலங்கிய விழிகளுடன்  ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்தனர். நானும் எதுவும் புரியாமல் சுற்று முற்றும் பார்த்தேன்.

“ம் ம்  சீக்கிரம் போங்க… நேரமாகுதுல்ல..” வாட்ச்மேன் போன்று இருந்த ஒருவர் கத்தினார்.

வரிசை சற்றே வேகமாகியது. எனக்கு ஏனோ அழுகையாக வந்தது. பெற்றோரையும் குடும்பத்தாரையும் இது நாள் வரை பிரிந்தே இராத எனக்கு, மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. மனம் பழைய நினைவுகளை அசை போட்டது.

கிராமத்துப் பள்ளிக்கூடம், ஆங்கிலம் அழகாகக் கற்பித்த அருளாந்து வாத்தியார், நண்பன் பாண்டியன், சுந்தரம், மண் தரை டூரிங் டாக்கீஸ், மந்தையம்மன் கோவில் கூழ் ஊற்றும் திருவிழா, ராத்திரியில் நடக்கும் அரிச்சந்திர மயான காண்டம்.. அம்மா பண்ணும் பணியாரம், அப்பா வாங்கி வரும் கடலை மிட்டாய்.. என்று ஏதேதோ நினைவுகள் ஒவ்வொன்றாய் வந்து மனத்தை ஆக்ரமித்தன. கிராமத்திலேயே பிறந்து, வளர்ந்து, படித்ததால் வெளி உலகம் அவ்வளவாகப் பரிச்சயமில்லை. இதோ இப்பொழுது தான் முதன் முறையாக எல்லோரையும் விட்டுப் பிரிந்து வந்திருக்கிறேன். அதுதான் ஒருவிதக் கலக்கம். அச்சம். “யாரேனும் நண்பர்கள் இருந்தால் எப்படி இருக்கும்?,” எண்னியது மனது. வரிசையை உற்றுப் பார்த்தேன். எல்லாம் பெரும்பாலும் என் வயதொத்த இளைஞர்கள். பல்வேறு மொழிகள் காதில் கேட்டன. வெவ்வேறு இடங்களிலிருந்து வந்திருக்கிறார்கள் எனத் தெளிவாகத் தெரிந்தது.

“டாங்.. டாங்” மணி அடித்தது.

“ம்,ம் சீக்கிரம் போங்க. நேரமாகுது” வாட்ச்மேன் போன்ற அந்த மனிதர் மீண்டும் கத்தினார். வரிசை, ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் இரண்டாகப் பிரிந்து, பெரிய வெண்மை நிறக் கட்டடத்தை நோக்கி  வேகமாக நகர்ந்தது. எனக்குப் பின்னாலும் கூட்டம் மெல்ல மெல்லச் சேர்ந்தது. தெரிந்த முகம் ஏதாவது தெரிகிறதா என்று  உற்று உற்றுப் பார்த்தேன். ம்ஹூம்.

இப்பொழுது மணி வேறு விதமாக ஒலிக்கத் தொடங்கியது. கூட்டம் அப்படியே தேங்கி நின்றது. ‘முதல்ல ஃபர்ஸ்ட் பேட்ஜ்க்கு கவுன்சிலிங். அதுக்கு அப்புறம் தான்பா இவங்களுக்கு’ வாட்ச்மேன் போன்ற அந்த மனிதர், தன்னைப் போன்று உடையணிந்து கொண்டிருந்த இன்னொரு உயரமான மனிதரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

“ம். இன்னும் எவ்வளவு நேரமாகுமோ தெரியலை. சீக்கிரம் எல்லாம் முடிஞ்சு ரிசல்ட் என்னன்னு தெரிஞ்சா நிம்மதியா இருக்கும்.” முன்னாள் நின்று கொண்டிருந்த நபர் என்னிடம் சொன்னார். நானும்  ஆமோதிப்பது போலத் தலையை ஆட்டினேன்.

இதுவோ புதிய இடம். புதிய மனிதர்கள். புதிய சூழ்நிலை. வருங்காலம் எப்படி இருக்குமோ? மனது சற்றே அச்சப்பட்டது. பார்க்கலாம். பாட்டி அடிக்கடி சொல்வது போல் நடப்பது எல்லாம் நன்மைக்கே! எனக்கு நானே  ஆறுதல் சொல்லிக் கொண்டேன்.

அந்த உயரமான ஒரு மனிதர் வந்து, ஒவ்வொருவரிடமும் பெயர் முதலியனவற்றை விசாரித்து, தனது பதிவேடு போன்ற ஒன்றில் குறித்துக் கொண்டு போனார்.

சிறிது நேரம் கழிந்தது. முதல் வரிசை ஆட்கள் ஒவ்வொருவராக வெளியே வந்தனர். பலர் முகத்தில் ஒருவித மகிழ்ச்சி தென்பட்டது. ஒரு சிலரிடம் இனம் புரியாத சோகமும் இருந்தது. மறுபடியும் அந்த இடம் பரபரப்பானது. வரிசை மறுபடியும் முன்னேறத் தொடங்கியது.

‘ஏய்! காந்தன் சௌக்யமா?  இங்க எப்படி?’ குரல் கேட்டுத் திரும்பினேன். முத்து நின்று கொண்டிருந்தான். என் சிறு பருவத்து நண்பன். என்னுடன் கிராமத்தில் ஒன்றாகப் படித்தவன். அவன் அப்பாவுக்கு மாற்றல் ஆனதால் சிறுவயதிலேயே மதுரைக்குச் சென்று விட்டான். அதற்கப்புறம் தொடர்பு விட்டுப்போனது. அவனை நான் அங்கே எதிர்பார்க்கவேயில்லை. ஒரு துணை கிடைத்து விட்டது என்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம். ‘ஏய், நீ எங்க இங்கே?’ என்று ஆச்சர்யத்துடன் வினவினேன்.

‘நான் இங்க வந்து ரெண்டு வருஷம் ஆச்சு. இது தான் எனக்கு ஃபைனல் இயர்.’ என்றான் முத்து.

“அப்பாடா, உன் துணையாவது கிடைச்சுதே! அப்போ நான் இனிமே உன்கூடவே தங்கிக்கலாம் இல்லையா!, தனியா என்ன பண்றதுன்னு புரியாம முழிச்சிகிட்டு இருந்தேன். உன் துணை கிடைச்சுது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு!. ஆமா வீட்ல எல்லாரும் சௌக்யமா?” என்றேன்.

“ம். எல்லாரும் சௌக்யம் தான், ஆனா என்னால தான் அவங்க கூட ரொம்ப நாள் இருக்க முடியாமப் போச்சு. ஸ்கூல் முடிச்சவுடனேயே இங்க வந்துட்டேன். இது தான் லாஸ்ட் இயர். ஆனா நாம ஒண்ணாத் தங்க முடியாது காந்தன். நீ ஜூனியர்  இல்லையா?. அதுனால நீ வேற செக்ஷன், நான் வேற செக்ஷன். பட் நாம அடிக்கடி மீட் பண்ணிப் பேசலாம். பழகலாம். ஒண்ணும் கவலைப் படாதே! நாங்கள்லாம் இருக்கோம்ல. பார்த்துக்கறோம்.” என்றான் முத்து.

“சரிப்பா, ரொம்ப நன்றி! ஆனா இந்த வீட்டுக் கவலைதான் எனக்கு. நான் சின்ன வயசுலேர்ந்து வீட்டைப் பிரிஞ்சதே இல்லையே. அது தான் மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு” என்றேன் நான் மன வருத்தத்துடன்.

“ம். ஃபர்ஸ்ட் அப்படித்தான்பா இருக்கும். அப்புறம் எல்லாம் போகப் போக சரியாயிடும். டோண்ட் வொர்ரி. அதுவும் இங்க வந்துட்டல்ல. புதுப் புது விஷயம். புதுப் புது ஃப்ரெண்ட்ஸ்னு நிறைய என்ஜாயபிளா இருக்கும். சொல்லப் போனா கொஞ்ச நாள்ல வீட்டையே மறந்துடுவன்னா பார்த்துக்கயேன்” என்றான் முத்து.

“ம். பார்க்கலாம்” என்றேன் அரைகுறை மனதுடன். மனதுக்குள் இருந்த இனம் புரியாத கவலை இன்னும் அதிகமானதே தவிரக் குறையவில்லை.

“காந்தன். ரொம்ப பயப்படாதே, வீட்டுக்குப் போகணும்னு  ஆசைப்பட்டா, அனுமதி வாங்கிட்டுப் போய் பார்த்துட்டு வரலாம். அது தவிர அதுக்குன்னு இங்க நிறைய சலுகை, டைம்லாம் தருவாங்க, மாசம் ஒருமுறை கண்டிப்பா உன் வீட்டுக்குப் போய் பார்த்துட்டு வரலாம். சோ, யூ டோண்ட் வொர்ரி” என்றான்.

‘மாசம் ஒரு முறையா, பரவாயில்லையே!’ என்று ஆச்சரியப்பட்டேன். அதே சமயம் கவலையும் வந்தது.

“இவங்க எல்லாம் என் ·ப்ரெண்ட்ஸ்”- சிலரை அறிமுகப்படுத்தினான். பரஸ்பரம் கை குலுக்கிக் கொண்டோம். எல்லாரும் என்னைப் போன்றே இளைஞர்கள். துடிப்பாக இருந்தார்கள். என் தோளைத் தட்டி  ஆறுதல் கூறினார்கள்.

“சரிப்பா, எங்களுக்கு லேட்டாகுது, பிரேயர் ஹாலுக்குப் போகணும். சரியான நேரத்துக்குப் போகல்லேன்னா விசாரணை, அது இதுன்னு நிறைய ஃபார்மாலிட்டிஸ் இருக்கு. நாங்க வரோம். அப்புறம் பார்க்கலாம்.” சொல்லி விட்டு, முத்து தன் நண்பர் குழாமுடன் சென்று விட மீண்டும் நான் தனிமையானேன்.

வரிசை நகர்ந்து நகர்ந்து, இப்பொழுது நான், நுழைவாயிலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தேன். அடுத்தது நான் தான் உள்ளே போக வேண்டும். குறிப்பேடு போன்ற ஒன்றில் என் பெயர் முதலிய விவரங்கள் மீண்டும் அந்த உயரமான மனிதரால் சரிபார்க்கப்பட்டன.

“உள்ளே போனதும், பயப்படாம, தைரியமா, கேட்குற கேள்விங்களுக்கு பதில் சொல்லுங்க. நீங்க சொல்லப் போற பதில வச்சுத்தான் உங்களுக்கு எல்லாம் கிடைக்கும்.” என்றார் அந்த மனிதர்.

“சரி, சரி” என்று தலையாட்டினேன். எனக்கு உள்ளூர ஆவலாகவும் அதே சமயம் பயமாகவும் இருந்தது. ‘உள்ளே எத்தனை பேர் இருப்பார்கள், என்னென்ன கேள்வி கேட்பார்கள், எப்படி பதில் சொல்வது,’ என்றெல்லாம் மனதுக்குள் சிந்தனைகள் ஓடின.

இப்பொழுது மணி மீண்டும் ஒலித்தது.

“தயாரா இருங்க” என்றார் அந்த உயரமான மனிதர்.

‘ம்’ என்றேன். உள்ளே ஒரு விதப் பதட்டம் ஓடியது.  மீண்டும் அம்மா பண்ணிய மோர்க் குழம்பு, அப்பா கூட்டிக் கொண்டு போன சினிமாப் படம், தம்பியோடு போட்ட சண்டை, எதிர் வீட்டு லலிதா என எல்லாம் நினைவுக்கு வந்து மனதை வாட்டியது. அழுகை அழுகையாக வந்தது. ‘அம்மா இப்பொழுது என்ன செய்து கொண்டிருப்பாள், அப்பா வயலுக்குப் போய் விட்டிருப்பாரா, தம்பி பள்ளிக்கூடம் போய் விட்டிருப்பானா, லலிதா என்னை நினைத்துக் கொண்டிருப்பாளா?’ மனதிற்குள் பல சிந்தனைகள் வந்து போக, என்னையும் அறியாமல் கண்கள் கலங்கின.

‘ம், இப்போ நீங்க உள்ளே போகலாம்’ என்றார் அந்த உயரமான நபர்.

உள்ளே நுழைவதற்கு முன் சற்றே ஒரு முறை குனிந்து கீ………..ழே பார்த்தேன்.

“சே, நல்ல உத்யோகம்பா, பொழுது விடிஞ்சு பொழுது போனா இதே  பொழைப்பாப் போச்சு நமக்கு. கண்ணு மண்ணு தெரியாம வண்டிய ஓட்டிக்கிட்டு வர வேண்டியது, யார் மேலயாவது, எது மேலயாவது மோதிச் சாக வேண்டியது,  எவ்ளோ சொல்லியும் ஹெல்மெட் போடறதில்லை. சே, எல்லாம் நம்ம தலையெழுத்து. ம், ம், சீக்கிரம்  ஆகட்டும்பா” தொப்பியைக் கையில் வைத்துக் கொண்டு சலிப்புடன் ஒருவர் அவசரப்படுத்திக் கொண்டிருக்க, இரண்டுபேர் நொறுங்கிக் கிடந்த பைக்கை ஓரம் தள்ளிவிட்டு, ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டிருந்தனர்… உருக்குலைந்து போன என் உடலை!

*****************************

Advertisements

3 thoughts on “மாற்றான்

  1. அட்டகாசம். காலேஜ், கவுன்சிலிங்க் என்றெல்லாம் இருக்கவும் வேறு ஏதோ ஒரு கதை என்று நினைத்தேன் சார். முடிவைப் படித்ததும்தான் நீங்கள் சொல்ல வருவது புரிந்தது. அதுசரி அந்த வெள்ளை மாளிகையில் இருந்தவர்(கள்)தான் கடவுளா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s