மகான்களும் விஜயதசமியும்- 2

மகான்களின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல; புதிரானதும் கூட. அத்தகைய மகான்களுள் நான்கு இடங்களில் ஜீவசமாதியானதாகக் குறிப்பிடப்படுபவர் மகான் ராஜபூஜித ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள். கிட்டத்தட்ட 250 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர் என்று கூறப்படும் இம்மகானின் வாழ்க்கை வரலாறு பல்வேறு அற்புதங்களை உள்ளடக்கியது. இம்மகானும் ஸ்ரீ ஷிர்டி சாயிபாபாவைப் போலவே விஜயதசமி நன்னாளைத் தான் தனது சமாதி காலத்திற்குத் தேர்ந்தெடுத்தார் என்பது மற்றொரு விந்தையான சிறப்பாகும்.

ஸ்ரீ குழந்தையானந்தர்
ஸ்ரீ குழந்தையானந்தர்

மதுரையை அடுத்த சமயநல்லூரில் வாழ்ந்தவர்கள் ராமஸ்வாமி ஐயர் – திரிபுரசுந்தரி தம்பதியினர். ஸ்ரீவித்யா உபாசகர்கள். தினம்தோறும் மதுரைக்கு வந்து மீனாட்சியைத் தொழுவது இருவருக்கும் முதற்கடமை. ஆனால் எல்லா செல்வங்களும் இருந்தும் அதனை அனுபவிக்க புத்திர பாக்கியம் வாய்க்கவில்லையே என்ற மனக்குறை அவர்களை பெரிதும் வாட்டி வந்தது. ஆண்டுகள் பல கடந்தும் பலனில்லாததால் அவர்களுடைய மனக்கவலை அதிகரித்தது. அதனால் தங்களுக்குக் குழந்தை பிறந்தால் அதை மீனாட்சிக்கே அர்ப்பணித்து விடுவதாக வேண்டிக் கொணடனர். அவர்கள் பிரார்த்தனை பலித்தது. திரிபுரசுந்தரி அம்மாள் கருத்தரித்தார். இரண்டு குழந்தைகளை ஈன்றார். ராமன், லட்சுமணன் என அக்குழந்தைகளுக்குப் பெயரிட்டனர். அதில் மூத்த குழந்தை ராமன் ஒளி பொருந்திய கண்களுடனும், காலில் சங்கு, சக்கரத்துடனும் மிக அழகாக இருந்தது. ஆனால் அழவில்லை. தாய்ப்பால் குடிக்கவில்லை.

மாதங்கள் கடந்தன. ஆயினும் அக்குழந்தையின் நிலையில் மாற்றமில்லை. தெய்வக் குற்றமோ என பெற்றோர் அஞ்சினர். ஆலய அர்ச்சகரிடம் ஆலோசனை கேட்டனர். பின்னர் தான் இருவருக்கும் குழந்தை பிறந்தால் அதை அம்பிகைக்கு அர்ப்பணிப்பதாகச் சொன்னது ஞாபகம் வந்தது. ஆனால் இரண்டு குழந்தைகளில் எந்தக் குழந்தையை அர்ப்பணிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது அர்ச்சகருக்கு அருள் வந்து, காலில் சங்கு சக்கரம் உள்ள குழந்தையை விட்டுச் செல்லுமாறு ஆணை வந்தது. அதன்படி குழந்தை ’ராமன்’ ஆலயத்தில் தனித்து விடப்பட்டான். அன்னை மீனாட்சியின் அருளாலும், அர்ச்சகர்களின் ஆதரவாலும் குழந்தை வளர்ந்தது. தகுந்த வயது வந்ததும் உபநயனமும் செய்விக்கப்பட்டது. ராஜகோபாலன் என்ற தீட்சா நாமமும் சூட்டப்பட்டது.

ஜீவ சமாதி
ஜீவ சமாதி

ஒருநாள், அன்னை மீனாட்சியை தரிசிப்பதற்காக காசியிலிருந்து கணபதி பாபா என்ற மகான் வந்திருந்தார். ஒரு நல்ல சீடனை தேடிக் கொண்டிருந்த அவருக்கு ராஜகோபாலனைக் கண்டதும் அவனே அதற்குத் தகுதியானவன் என்ற எண்ணம் தோன்றியது. ஆலயத்தினரின் அனுமதி பெற்று ராஜகோபாலனைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். காசியில் ஸ்ரீகணபதி பாபாவிடமிருந்து சகல சாஸ்திரங்களையும் பயின்றார் ராஜகோபாலன். புனிதத் தலங்களை தரிசிப்பதற்காக தல யாத்திரைகளை மேற்கொண்டார். பல மன்னர்களால் போற்றப்பட்டார். ராஜபூஜித ஸ்ரீ ராஜகோபால சுவாமிகள் என்று அவர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். சில வருடங்களில் கணபதி பாபா மகா சமாதி அடைந்தார். அவர் சமாதிக்குப் பின் தனியறையில் பல ஆண்டுகாலம் நிஷ்டையில் இருந்த சுவாமிகள், பின் தாமும் ஒரு சமாதிக் குழியை ஏற்படுத்தி அதில் இறங்கி ஜீவ சமாதி ஆனார்.

பின் இரண்டாவது அவதாரமாக மீண்டும் காசியில் தோன்றி த்ரைலிங்க சுவாமிகள் என்ற பெயரில் வாழ்ந்து நேபாளத்தில் ஜீவசமாதி ஆனார். பின் தென்காசியில் குழந்தை வேலப்பராகத் தோன்றி வாழ்ந்து பல்வேறு அற்புதங்களைச் செய்து அங்கேயே ஜீவ சமாதி ஆனார். பின்னர் நான்காவது அவதாரமாக மதுரையில் தோன்றினார். குள்ளமான உருவம். பருத்த தொந்தி. வட்டமான முகம். சாளவாய் ஒழுகிக் கொண்டிருக்கும் வாய். மழலைப் பேச்சு என்று சுவாமிகளின் தோற்றம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. குழந்தையைப் போன்ற தோற்றம். சிரித்த, ஆனால் மரியாதையைத் தோற்றுவிக்கும் முகம் என்பதாக சுவாமிகளின் உருவ அமைப்பு அமைந்திருந்தது. ‘கண்ணுரெண்டும் எச்சி, கறந்த பாலும் எச்சி ‘ என்று அடிக்கடிச் சொல்லுவார். குழந்தை போல குழறிக் குழறிப் பேசுவார் என்பதாலேயே அவருக்கு ‘குழந்தையானந்தர்’ என்ற பெயர் நிலைத்து விட்டது.

சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் பலப்பல. அவற்றுள் ஒன்று இன்னமும் அவரது பக்தர்களால் நினைவு கூரப்படுவது.

புனித மரம்
புனித மரம்

ஒருநாள் மதுரை ரயில் நிலையத்தில் சென்னைக்குச் செல்ல இருந்த ரயில் ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார் குழந்தையானந்தர். அது வெள்ளைக்கார அதிகாரி ஒருவருக்கு ரிசர்வ் செய்யப்பட்டிருந்த முதல் வகுப்புப் பெட்டி. தனக்கென ரிசர்வ் செய்த அந்த இடத்தில் குழந்தையானந்தர் அமர்ந்திருந்ததைப் பார்த்ததும் அந்த அதிகாரி கடும் கோபம் கொண்டார். உடனடியாக அந்த இடத்தை விட்டு எழுந்து கொள்ளுமாறு சுவாமிகளை அதிகாரம் செய்தார். ஆனால் சுவாமிகள் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் மௌனமாக அமர்ந்திருந்தார். அதிகாரி, ஸ்டேஷன் மாஸ்டரிடம் புகார் செய்தார். அப்போது கல்யாணராம அய்யர் என்பவர் ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியாற்றி வந்தார். அவர் சுவாமிகளைப் பரிசோதித்து டிக்கட் இல்லை என்பதால் கீழே இறக்கி விட்டார்.

சுவாமிகள் பிளாட்பாரத்தில் அமர்ந்து விட்டார். ரயில் கிளம்ப பச்சைக்கொடி காட்டப்பட்டது. டிரைவர் எஞ்சினை இயக்கினார். ரயில் கிளம்பவில்லை. பலமுறை முயன்றும் பலனில்லை. அப்போது அங்கு வந்த சுவாமிகளின் மகிமை அறிந்த சிலர், ஸ்டேஷன் மாஸ்டரிடம் சுவாமிகளின் பெருமை பற்றிச் சொல்லி, அவரிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லினர். கல்யாணராம அய்யரும் பணிவுடன் சுவாமிகளிடம் மன்னிப்பு வேண்டினார். சுவாமிகளை முதலில் அமர்ந்திருந்த ஆசனத்திலேயே அமர்த்தினார். வெள்ளைக்கார அதிகாரிக்கு மாற்று ஏற்பாடு செய்தார்.

சமாதி ஆலயம்
சமாதி ஆலயம்

உடனே சுவாமிகள் சந்தோஷம் பொங்க ‘ டேய், ரயில் இனிமேல் போகும்டா’ என்றார். டிரைவர் உடனே எஞ்சினை இயக்க, ரயில் கிளம்பியது.

ஒருமுறை பக்தர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தார் குழந்தையானந்த சுவாமிகள். அந்த வீட்டில் சுவாமிகளின் திருவுருவப் படத்தோடு அவர் முந்தைய உருவமான த்ரையலிங்க சுவாமிகளின் படத்தையும் வைத்து வழிபட்டு வந்தனர். அதைப் பார்த்த சுவாமிகள், ‘அடேய், எனது இந்த வேஷத்தையும் வைத்திருக்கிறாயா? பேஷ், பேஷ்’ என்றார் புன்னகையுடன். இதன் மூலம் குழந்தையானந்தரின் பூர்வ ஜென்மமே ஸ்ரீ த்ரையலிங்க சுவாமிகள் என்ற உண்மையை அறிந்து கொள்ள இயலுகிறது.

இவ்வாறு மூன்று முறை ஜீவசமாதியிலிருந்து வெளித்தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்த இம்மகான், 1932ம் வருடம் விஜயதசமி அன்று, மதுரை லட்சுமி நாராயணபுரத்தில் சமாதி அடைந்தார். மதுரை அரசரடியில் அமைந்திருக்கும் இவரது ஜீவ சமாதியிலிருந்து சூட்சும ரீதியாக பக்தர்களுக்கு இன்றும் ஸ்ரீ குழந்தையானந்தர் உதவி வருகிறார் என்பது பக்தர்கள் நம்பிக்கை. விஜயதசமி அன்று மகானை உளப்பூர்வமாக வழிபடுபவர்களுக்கு எல்லா நன்மையும் பெருகும்.

இது ஒரு மீள் பதிவு

*********

Advertisements

One thought on “மகான்களும் விஜயதசமியும்- 2

  1. பின் இரண்டாவது அவதாரமாக மீண்டும் காசியில் தோன்றி த்ரைலிங்க சுவாமிகள் என்ற பெயரில் வாழ்ந்து நேபாளத்தில் ஜீவசமாதி ஆனார். பின் தென்காசியில் குழந்தை வேலப்பராகத் தோன்றி வாழ்ந்து பல்வேறு அற்புதங்களைச் செய்து அங்கேயே ஜீவ சமாதி ஆனார். பின்னர் நான்காவது அவதாரமாக மதுரையில் தோன்றினார். குள்ளமான உருவம். பருத்த தொந்தி. வட்டமான முகம். சாளவாய் ஒழுகிக் கொண்டிருக்கும் வாய். மழலைப் பேச்சு என்று சுவாமிகளின் தோற்றம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. குழந்தையைப் போன்ற தோற்றம். சிரித்த, ஆனால் மரியாதையைத் தோற்றுவிக்கும் முகம் என்பதாக சுவாமிகளின் உருவ அமைப்பு அமைந்திருந்தது. ‘கண்ணுரெண்டும் எச்சி, கறந்த பாலும் எச்சி ‘ என்று அடிக்கடிச் சொல்லுவார். குழந்தை போல குழறிக் குழறிப் பேசுவார் என்பதாலேயே அவருக்கு ‘குழந்தையானந்தர்’ என்ற பெயர் நிலைத்து விட்டது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s