காணாமல் போனவன் – சிறுகதை

சாயந்திர நகரம் இரவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது விரைவாய். கடற்கரைக்குச் சற்றுத் தொலைவில் இருந்த அந்தப் பூங்காவில் நான் அமர்ந்திருந்தேன். நேரமானதால் அங்கு வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராய்க் கிளம்பிக் கொண்டிருந்தனர். அமர்ந்திருந்த ஒரு சிலரையும் வாட்ச்மேன் உரத்த குரலில் கத்தி எழுப்பி வெளியே அனுப்பிக் கொண்டிருந்தான். சற்று தள்ளி, இருள் சூழ்ந்த ஒரு மரத்தின் அடியில் நான் அமர்ந்திருந்ததால் வாட்ச்மேன் என்னை கவனிக்கவில்லை. விசிலை ஊதிக் கொண்டே சென்று கதவைச் சாத்தி விட்டுப் போய்விட்டான்.

மரத்தில் சாய்ந்து அமர்ந்தேன். வீட்டின் நினைவு வந்தது. வீட்டிற்குச் சென்று என்ன செய்யப் போகிறேன்?. மனைவியா, குழந்தைகளா, குட்டியா? எதுவுமில்லை… கல்யாணமாகாத ப்யூர் பேச்சிலர். எவ்வளவுதான் தினம்தோறும் வெளியே சுற்றுவது?… சினிமா, டிராமா, இலக்கியக் கூட்டங்கள் என்று வர வர எதுவுமே பிடிக்கவில்லை. ஒரு மாறுதலுக்குத் தொடர்ந்து கோவிலுக்குச் சென்று வந்ததில் அதுவுமே சற்று அலுப்பைத் தர, ஜஸ்ட் ரிலாகஸ் செய்ய இன்று இந்தப் பார்க். சிந்தித்துக் கொண்டிருந்த என்னை காற்று மெள்ளத் தழுவ, கண்களை மெள்ள மூடினேன்.

       எவ்வளவு நேரம் நான் அப்படி அமர்ந்திருந்தேன் என்பது தெரியாது. சட்டென்று கண் விழித்துப் பார்த்த போது மணி இரவு 9.00-ஐக் கடந்திருந்தது. சரி, அருகில் எங்கேனும் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்குச் செல்லலாம் என எண்ணி எழுந்து கொண்டேன்.

       அப்போது…

       ‘தம்பி!’ என்று ஒரு கரகரப்பான குரல் கேட்டது. திடுக்கிட்டேன். சுற்றுமுற்றும் பார்த்தேன். யாரையும் காணவில்லை. எனக்கு பயத்தில் உடல் வியர்த்தது. ஆனால்.. மீண்டும் அந்தக் குரல் கேட்டது.

       “தம்பி, நான் கூப்புடறது கேட்குதா?”

       நான் திடுக்கிட்டேன். “கே… கேட்… கேட்கிறது. நீ…. நீங்கள் யார்?, எங்கே இருக்கிறீர்கள்” பதட்டத்துடன் வினவினேன் குரல் வந்த திசை எது என்று தெரியாமல்.

       “தம்பி, பயப்படாதே. பார்க் பெஞ்ச் மேலதான் நான் உட்கார்ந்து இருக்கேன். ஆனா உன் கண்ணுக்குத் தெரிய மாட்டேன்!. என் உருவம் மறைஞ்சு இருக்கு தம்பி.” என்றது குரல்.

       “மறைஞ்சிருக்கா… ஒரு வேளை நீங்க ஆவியா?” பதட்டத்துடன் வினவினேன்.

       ”ஆவியாவது பாவியாவது… அதெல்லாம் ஒண்ணும் இல்லை தம்பி. நானும் உன்னை மாதிரி ஒரு மனுஷன்தான். தேவையில்லாத ஒரு சிக்கல்னால இப்படி ஆகிட்டேன். நீதான் தம்பி எனக்கு உதவி செய்யணும்” என்றது குரல்.

       “ஏன் என்னைக் கூப்புடறீங்க… இவ்ளோ பெரிய நகரத்திலே வேற ஆளா உங்களுக்குக் கிடைக்கல…”

       “இல்லை தம்பி, நான் பழைய படி ஆகறதுக்கு நீதான் உதவி செய்ய முடியும். அது உன்னாலதான் முடியும்ங்கறதுனாலதான் உன்னைக் கூப்பிட்டேன்”

       ”புரியல. நான் என்னத்த உங்களுக்கு உதவறது. முதல்ல நீங்க யாரு, என்னன்னே எனக்குத் தெரியாது. அப்புறம் எப்படி நான் உங்களுக்கு உதவ முடியும்?”

       “இல்லே தம்பி. நீ தான் எனக்கு உதவ முடியும். நீ ‘ஓ பாசிடிவ்’ தானே!”

       “ஆமா.. அது எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்றேன் ஆச்சரியத்துடன்

       “காலையில ஒரு ஆளைக் காப்பாத்தறதுக்கு நீ பிளட் கொடுத்தே பத்தியா, அப்போலேர்ந்தே நான் உன் கூட தான் இருக்கேன்.”

       “ஆமா. ஆனா பிளட் கொடுத்தும் பிரயோசனம் இல்லை. அந்த ஆள் செத்து போயிட்டார்!” என்றேன் சற்று சோகத்துடன்.

       “அதுவும் தெரியும்.” என்றது குரல்.

       “ எப்படி… எப்படித் தெரியும்?” என்றேன் மீண்டும் ஆச்சரியத்துடன்.

       ”நான்தான் உன் கூடவே இருந்தேன்னு சொல்றேனே…அதையெல்லாம் அப்புறம் விரிவா சொல்றேன். பொதுவா ஓ பாசிடிவ் உள்ளவங்களுக்கு இரக்க சுபாவம் ஜாஸ்தியா இருக்கும். நானும் ஓ பாசிடிவ்தான். அதுனாலதான் அதே மாதிரி ஓ பாசிடிவ் உள்ள உன் கிட்ட உதவி கேட்கறேன். செய்வியா ப்ளீஸ்” என்று கெஞ்சியது குரல்.

       கொஞ்ச நேரம் யோசித்தேன். பின் “சரி, உங்களைப் பத்தி முழு விவரங்களைச் சொன்னீங்கன்னா, என்ன, ஏதுன்னு முயற்சிக்கிறேன்” என்றேன், சற்று அச்சம் நீங்கியவனாக.

       ”சொல்றேன், எல்லாத்தையும் சொல்றேன். அதுக்குத் தானே தம்பி உன்னை கூப்பிட்டேன்” என்ற குரல் தன் கதையைச் சொல்லத் தொடங்கியது.

***********

       தம்பி, என் பெயர் நாராயணன். நான் திருவல்லிக்கேணியில் இருக்கறேன். இந்தச் சம்பவம் நடந்தது நேற்று சாயங்காலம். பீச்சில் நான் காலாற நடந்துக் கிட்டிருந்தேன். ”என்ன நாராயணன் சௌக்யம் தானே?”,ன்னு கேட்டு என்னைத்  வேகமாத் தாண்டிப் போனார் கோபாலன். அவர் எங்கள் பகுதி சித்தர் மன்றத்தின் செயலாளர். ரிடயர்டு பேங்க் ஆபிசர். நான் பதில் சொல்றதுக்குள்ள அவர் வேகமாகப் போயிட்டார். அதனால் கொஞ்சம் கடுப்பாகிப் போய் மணல்ல உட்கார்ந்தேன். இருள் மெள்ள மெள்ள வந்து கொண்டிருந்தது. ஏதேதோ சிந்தனைகள் என்னுள் ஓடிக் கொண்டிருந்தன. மணலில் படுத்துக்கிட்டு வானத்தையே பார்த்துக்கிட்டிருந்தேன். எவ்வளவு நேரம் அப்படியே நான் இருந்தேன்னு எனக்குத் தெரியாது. திடீர்னு ”தம்பி, தம்பி”ன்னு யாரோ கூப்பிடறதைக் கேட்டுக் கண் முழிச்சுப் பார்த்தேன். களைப்பில தூங்கிட்டேன் போலிருக்குது. கண்ணைக் கசக்கிக்கிட்டு எழுந்து பார்த்த போது எதிரே ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்தார். அழுக்குத் தாடி. கலைந்த தலை முடி கிழிந்த ட்ரஸ். முகம் முழுவதும் அம்மைத் தழும்புக் காயம் என அவரைப் பார்க்கறதுக்கே கொஞ்சம் பயமாக இருந்துச்சு.

       “தம்பி! ரொம்ப பசிக்குதுப்பா, டீக் குடிக்க எதுனா கொடேன்” என்றார்.

       கை, கால்கள் திடமாக இருந்தும் பிச்சை கேட்குற அவரைப் பார்க்கப் பார்க்க எனக்கு ஒரே ஆத்திர ஆத்திரமா வந்திச்சி. அதே சமயம் பரிதாபமாவும் இருந்திச்சி. பைக்குள் கைவிட்டேன். ஒரு முழு ஐந்து ரூபாய் நாணயம் வெளியே வந்திச்சி. அதை அவர் கையில் போடப் போனேன்.

       அவரோ, “தம்பி, ரெண்டு கையையும் நீட்டிக்கிட்டு இருக்கிறேன் பாரு, ரெண்டு கையையும் நீட்டிக்கிட்டு இருக்கிறேன் பாரு,” என்றார் சிரிப்புடன்.

       எனக்கு ஒண்ணுமே புரியலை. “என்ன இது, ஏன் இவர் என்னவோ சொல்லி ஒளறுறார்.. ஒரு மாதிரியாச் சிரிக்கிறார்… ஒருவேளை பைத்தியமா, இல்லை குடிகாரரோ.. கஞ்சா, அபின் இது மாதிரி எதுனா குடிக்குறவரோ, போதையில ஒளர்றாரோ?” புரியாமல் முழிச்சேன்.

       “நாராயணா! நாராயணா!“  அப்படின்னார் அவர் சிரிச்சுக்கிட்டே.

       எனக்கு ஒரே அதிர்ச்சி. “என்ன.., எப்படி இவருக்கு என் பெயர் தெரியும்? உண்மையில் இவர் என் பெயரைத் தான் சொல்றாரா, இல்லை கடவுளைக் கூப்பிடுறாரா? ஒண்ணுமே புரியலையே!” அவரையே உத்துப் பார்த்தேன் சற்று அச்சத்துடன்.

       அவர் ஒண்ணும் சொல்லாம நீட்டின கையை ஃபுல்லா என்னை நோக்கி நீட்டிக்கிட்டே என் கண்ணை உத்துப் பார்க்க ஆரம்பிச்சார். எனக்கு மயக்கம் வர்ற மாதிரி இருந்திச்சி.

       ”ஹா.. ஹா.. ஹா..” ன்னு அவர் சிரிக்கவும் எனக்கு ரொம்பப் பயமாயிருச்சி.

       “என்ன வேணும் உங்களுக்கு?” ன்னேன் ரொம்பல் கடுப்போட

       “ நீ தான் வேண்டும்.. நீ தான் வேண்டும்” ன்னார், சிரிச்சிக்கிட்டே.

       “உங்க ஒளறல் ஒண்ணும் எனக்குப் புரியலை. சரி. நான் கிளம்பறேன்” ன்னு சொல்லிட்டு நான் அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பிச்சேன்.

       “தம்பி” ன்னு கத்தினார் அவர் கொஞ்சம் சத்தமா.

       திரும்பி       அவரைப் பார்த்தேன். நான் அப்படியே திகைச்சிப் போய் நின்னுட்டேன். அவரோட கண்ணு ரெண்டும் சிவப்பா ஒளி வீசிச்சி. அது கொஞ்சம் கொஞ்சமாப் பெரிசாகிப் பெரிசாகி, ரொம்பப் பெரிசா சுத்தி எங்க பார்த்தாலும் அந்தக் கண்ணேதான் இருத்திச்சி. எனக்கு நெஞ்சை அடைச்சது. அவர் மெள்ள மெள்ள என் கிட்ட வர, நான் அவரைத் தள்ளிவிட முயற்சிக்க, முடியாமப் போய் அப்படியே மயக்கமாயிட்டேன்.

       – கதையை இந்த இடத்தில் நிறுத்தியது குரல்.

       ”அப்புறம் என்ன ஆச்சு,” என்றேன் ஆர்வம் தாங்க மாட்டாமல்.

       “சொல்றேன். கொஞ்சம் இரு” என்றது குரல்.

       சில நிமிடங்கள் மௌனமாகக் கழிந்தன.

       “அப்புறம்தான் நான் இப்படி ஆனேன்” என்று மீண்டும் கதையைச் சொல்லத் தொடங்கியது குரல்.

       ”எனக்கு நினைவு வந்து பார்க்கும்போது அந்தச் சாமியார் மாதிரி ஆளோட உடம்பு கீழே கிடந்துச்சி. சரிதான் செத்து கித்துப் போயிட்டான் போல இருக்குன்னு நினைச்சேன். சரி புறப்படலாம்னு நினைச்சு, எழுந்துக்கப் பார்த்தா என் கை, கால், உடம்புன்னு எதையுமே காணோம். நான் உடம்பு இல்லாதவனா வெறும் உருவமா இருந்தேன்”

       “என்ன” என்றேன் திடுக்கிட்டுப் போய்.

       “ஆமாப்பா. என் உடம்பைக் காணோம். அப்புறம்தான் தெரிஞ்சது, சாமியார் என்னை மயக்கமாக்கிட்டு, கூடு விட்டுக் கூடு பாஞ்சு என் உடம்புல பூந்துட்டு ஓடிப் போயிட்டாருங்குறது. அவர் எதுக்கு, ஏன் அப்படிப் பண்ணினாரு, எங்க போனாருன்னு எனக்குத் தெரியலை. சாமியாரு உடம்புக்குள்ள இருந்திருக்க வேண்டிய நான் எப்படி அதுல இருந்து வெளில வந்தேன்னும் எனக்குப் புரியலை. அங்கயும், இங்கயும் தேடிப் பார்த்தேன். என்னோட உருவத்துல ஓடிப் போனவன என்னால கண்டுபிடிக்க முடியலை. சாமியாரோட அந்த உடம்புலயும் என்னால புகுந்துக்க முடியலை. ஒண்ணும் பண்ண முடியாம அங்க இங்க சுத்திக் கிட்டு இருக்கும் போதுதான் உன்னைப் பார்த்தேன். உன் பின்னாடியே வந்துட்டேன். இனிமே நீ தான் தம்பி எனக்கு உதவணும். இதுதான் என்னோட கதை”  என்றது குரல்.

       “மிஸ்டர் நாராயணன், நான் இதுல உங்களுக்கு எப்படி உதவறதுன்னு எனக்கு ஒண்ணும் புரியலையே!” என்றேன் இப்போது அச்சம் விலகியவனாக.

       “நீ பெரிசா ஒண்ணும் செய்ய வேண்டாம்பா. அந்த சாமியார் உடம்பு இன்னும் பீச்லதான் இருக்கு. அங்க வந்து நீ நான் சொல்றபடி செஞ்சாப் போதும்”

       “என்ன செய்யணும்? விபரீதமா ஏதாவது பிரச்சனை…?”

       “ஒரு பிரச்னையும் வராது. பயப்படாம, தைரியமா வா தம்பி. நான் பார்த்துக்கறேன்.”

       பார்க்கிலிருந்து சற்று தொலைவில் தான் பீச் இருந்தது. அந்த இரவு நேரத்திலும் ஆங்காங்கே சிலர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

       ”நேராப் போகணும். அதோ அந்தக் கடை எல்லாம் தாண்டி, மூலையில இருக்குற அந்த படகுக்குள்ள…” குரல் ஒலித்தது.

       நான் படகுக்குள் போய்ப் பார்த்தேன். அதில் வயதான ஒரு உருவம் கிடந்தது. மேலே ஒரு கிழிந்த போர்வை போர்த்தியிருந்தது. மூச்சு வருகிறதா என்று பார்த்தேன். இல்லை. ஆனால் உடல் சூடு குறையவில்லை. விறைக்கவில்லை. பார்ப்பதற்கு யாரோ ஒரு வயதான முதியவர் தூங்குவது போலவே இருந்தது.

       “நான் என்ன செய்ய வேண்டும்?” என்றேன்.

       ”பக்கத்தில் ஒரு பை இருக்கில்லையா, அதில ஒரு டப்பா இருக்கும். அதுக்குள்ள ஒரு குளிகை இருக்கு. அதை எடுத்து வாயில் அடக்கிக்கோ.”

       “அப்படிச் செய்தால் ஏதாவது ஆபத்து…?” சற்றே தயங்கினேன்,

       “சே, சே… அதெல்லாம் ஒண்ணும் ஆகாது தம்பி. கொஞ்சம் மனசு ஒருநிலைப்படும். உன்னோட ஆத்ம சக்தி அதிகமாகும். அது மூலமா நான் ரெண்டு உடம்புக்கும் தொடர்பு உண்டாக்கி சாமியார் உடம்புக்குள்ள புகுந்துடுவேன் நீ எந்திரிச்சி உன் வீட்டுக்குப் போயிறலாம். என்ன சரியா?” என்றது குரல்.

       ’சரி’ என்று சொல்லிக் குளிகையைத் தேடி எடுத்து உண்டேன்.

       கொஞ்ச நேரத்தில் எனக்கு தலையைச் சுற்றுவது போல இருந்தது.

       “ஐயோ எனக்கு மயக்கம் வர்ற மாதிரி இருக்கே. இப்போ என்ன செய்யறது” என்றேன் பதட்டத்துடன்.

       “அந்த உடம்பு பக்கத்துல படு தம்பி..”

       “படுத்து….”

       ”அதோட வலது கையோட உன் இடது கையைச் சேர்த்துகோ. மூச்சை ஆழமா இழுத்து விடு. கண்ணை நல்லா மூடிக்கோ”

       அந்த உடலின் வலது கையோடு என் இடது கையைப் பிணைத்துக் கொண்டேன். மூச்சை ஆழமாக இழுத்து விட்டேன். கண்களை மெள்ள மூடினேன். மயக்கமோ தூக்கமோ இன்னதென்று சொல்லத் தெரியாத ஒன்று மெள்ள மெள்ள என்னைத் தழுவியது.

       எவ்வளவு நேரம் அப்படி நான் மயக்கமாகக் கிடந்தேன் என்பது தெரியாது. எனக்கு நினைவு வந்தபோது, தொலைவில் வேக வேகமாக நான் ஓடிக் கொண்டிருப்பதை உடலில்லாமல் வெறுமனே காற்றில் மிதந்து கொண்டிருந்த நானே பார்த்தேன். படகுக்குள் இருந்த அந்தச் சாமியாரின் உடல் இப்போது சில்லிட்டு விறைத்துப் போயிருந்தது.

****************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s