வெளியேற்றம் – பகுதி 4 (இறுதிப் பகுதி)

முதல் பகுதி

இரண்டாம் பகுதி

மூன்றாம் பகுதி

முதலில் ஒரு விஷயம்…

இந்தத் தொடர் கட்டுரை “வெளியேற்றம்” நூலின் விமர்சனம் அல்ல. இப்புதினம் கூறும் விஷயங்கள் என்ன, நான் அதைப் புரிந்து கொண்ட விதம் எப்படி, இது ஏன் என்னைக் கவர்ந்தது என்பது பற்றிய கருத்துப் பரிமாறல்களே தவிர, நூலின் முழுமையான விமர்சனமாக இதைக் கருதலாகாது என்பதே என் கருத்து. காரணம், இந்தப் புதினத்தை முழுமையாக விமர்சனம் செய்வது என்பது ‘ கடலை பானைக்குள் அடைப்பது போல’. எப்படி முயற்சி செய்தாலும் அது குறையாகவே முடியும். ஏனென்றால், இதில் பேசப்பட்டிருக்கும் விஷயங்கள் அப்படிப்பட்டவை. பல கோணங்களில் பலரது பார்வைகளில் அலசப்பட வேண்டியவை. ”வெளியேற்றம்” போன்ற புதினத்தை பிற நூல்களுக்கு விமர்சனம் எழுதுவது போல எழுதி விட முடியாது. இது கங்கை போன்ற பிரவாகம். கொஞ்சமே சொம்பில் அடைத்துக் கொள்ளலாம். அவ்வளவுதான்.

இனி வெளியேற்றத்துக்குள் நுழைவோம்.

யுவன் எழுதிய முக்கியமான ஒரு நாவல் குள்ளச் சித்தன் சரித்திரம். அதுவும் அதிசயங்கள், ஆன்மீகம், அற்புதம், மறுபிறவி என கதைக்குள் கதையாக விரிவது. கிட்டத்தட்ட இந்த நூலை அதன் இரண்டாவது பாகம் போல என்று சொல்லலாம். ஆனால் இந்நூல் அதையும் தாண்டி விரிந்து, பல கேள்விகளுக்கு தத்துவ நோக்கில் விடைகளைச் சொல்கிறது. கூடவே நம்மையும் வினா எழுப்பிச் சிந்திக்க வைக்கிறது. குறிப்பாக குருவுக்கும் சீடனுக்கு நடக்கும் சில உரையாடல்கள்…

வேதமூர்த்தியின் குருவின் குரு சொல்கிறார் : “ நம் கையில் என்ன இருக்கிறது. ஜனங்களுக்கு எது நடக்க வேண்டுமென்றிருக்கிறதோ, அது நம் மூலமாக நடக்கிறது. அவ்வளவுதான்”

மற்றோரிடத்தில் :  ”கனவைக் கண்டுகொண்டிருக்கும்போதே கண் விழித்து அடுத்தவரிடம் சொல்ல முடியுமா?”

”உயிர்ப்பொருள் ஒவ்வொன்றையும் பார்வைக்குத் தெரியாத வலைப்பின்னல் உறை மாதிரி மூடியிருக்கிறது. வலுவான காந்த சக்தி கொண்டது அது. ஒவ்வொரு உறைக்கு ஒவ்வொரு குணாம்சம். இரண்டு உயிரினம் நெருங்குகிறதா, காந்த மண்டலங்கள் இரண்டு நெருங்குகின்றன என்றுதான் அர்த்தம்”

– இப்படி குருவுக்கும் சீடனுக்கு உரையாடல்கள் ஒருபுறமென்றால் மறுபுறம் சந்தானம் தான் சந்திக்கும் நபர்களுடன் உரையாடுவது. ஒருவிதத்தில் உரையாடல்கள்தான் இந்த நாவலை முன்னெடுத்துச் செல்கின்றன என்று கூடச் சொல்லலாம். அப்பாவிப் பெண் தங்கம், ஹரிஹர சுப்ரமண்யன், வைரவன், மன்னாதி, சிவராமன், கோவர்த்தனம், ஜய்ராம் என ஒவ்வொருவருடான உரையாடல்களும், சிந்தனைகளும், க்ளாஸிக். தொடர்ந்து யோசிக்க வைக்கும் பல சிந்தனைகள் இந்நாவலில் விரவிக் கிடக்கின்றன. யுவனின் பாத்திரப்படைப்புகள் ஒவ்வொன்றும் ஒரு விதம். குறிப்பாக ஜய்ராமுடனான உரையாடல்கள், குருவின் செயலையே விமர்சிக்கும் அவரது மனப்பாங்கு, “குரு – சிஷ்யன் என்று ஆகும்போதே, இவரில் ஒரு பகுதி குருவாகிறது. அவரில் ஒரு பகுதி சிஷ்யனாகி விடுகிறதே” என்ற அவரது கருத்தும், பிறவிகள் பற்றிய அவரது சிந்தனையும் எத்தனையோ உள்ளர்த்தங்களைக் கொண்டது. (எனக்கு ஜய்ராம் பாத்திரம் ஏனோ யோகிராம் சுரத்குமாரை நினைவுபடுத்துகிறது.). கண் தெரியாமல் எதையும் நுண்ணுணர்வால் அறியும் ஹரிஹர சுப்ரமண்யத்தின் திறன், அவரை, அவரது சிறுபருவத்தில் அணுகும் வேதமூர்த்தி, வேதமூர்த்திக்கும், ஹரிஹரனின் தாய்க்கும் நடக்கும் உரையாடல்கள் போன்ற பகுதிகள் மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளன.

அதுசரி, யார் இந்த வேதமூர்த்தி?

சந்தானம் சந்திக்கத் தேடி அலையும் கண்ணியின் மையப் புள்ளிதான் வேதமூர்த்தி. எங்கெங்கோ தேடி இறுதியில் காசியில் அவரைச் சந்திக்கிறார் சந்திக்கிறார் சந்தானம். ஆனால், அவரை முன்னமேயே சந்தானம் சந்தித்திருக்கிறார் என்பதுதான் புதினத்தில் சுவாரஸ்யமானது.

தன்னைப் போல் அல்லாமல், விரும்பும் தறுவாயில் மரணத்தை வரவழைத்துக் கொள்ளும் கலையில் தன் சீடன் வெற்றிபெற வேண்டும் என்று இறக்கும் தறுவாயில் வேண்டுகோள் வைத்து ஆசிர்வதிக்கிறார் வேதமூர்த்தியின் குரு. அதற்காக காசிக்கு வருகிறார் வேதமூர்த்தி. வேதமூர்த்தி தன் உயிரைத் தானே மாய்த்துக் கொள்ள முயல்வது தற்கொலையா? குருவின், ஆசையை வேண்டுகோளை நிறைவேற்ற அவ்வாறு செய்கிறாரா? அல்லது அது ஒரு சித்தியா? தன் பிறப்பை நிர்ணயிக்கும் உரிமை கொண்டவர்களுக்கு, இறப்பை நிர்ணயிக்கவும் உரிமை உண்டு என்பதை சொல்லாமல் சொல்லத்தானா? அல்லது வாழ்ந்தது போதும், நாம் விட்டுச் செல்லும் பணிகளைச் செல்லும் பணிகளைச் செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். போதும் இந்த மானுட ஜன்மம் என்று நினைத்து எடுக்கப்படும் முடிவா? ’வெளியேற்றம்’ என்பது உண்மையில் இதுதானா? உடலை விட்டு, உயிர் துறப்பதுதான் வெளியேற்றமா?

இல்லை.

”வெளியேற்றம்”, உடலைத் துறப்பதையோ, வீட்டை அல்லது குடும்பத்தைத் துறப்பதையோ குறியீடாகக் கொள்ளவில்லை. .”வெளியேற்றம்” உண்மையில் மனிதர்களின் ”வெளியேற்றத்தை”க் குறிக்கவில்லை. அது, மனிதனின் அகத்திலிருந்து வெளியேறும் ஒன்றைக் குறிக்கிறது. வெளியேறும் அது என்ன, எப்படி வெளியேறுகிறது, அதனால் ஒவ்வொரு மனிதர்களின் வாழ்க்கையில் எந்தெந்த விதத்தில் அக மாறுதல்கள் நிகழ்கின்றன, அதன் விளைவுகள் என்ன என்பதை ஒரு மாபெரும் கதைப் பின்னல்கள் வழியாகச் சொல்கிறது. எல்லோரையும் அரவணைத்து, ஒருங்கிணைத்த வேதமூர்த்தியிடமிருந்து “தான்” வெளியேறியதா, இல்லையா? என்பதை “வெளியேற்றம்” சொல்கிறது, மிகவும் சூட்சுமமாக.

அமைப்புகளிலிருந்து வெளியேறுவதோ, நிறுவனங்கள், பீடங்களிலிருந்து வெளியேறுவதோ வெளியேற்றமல்ல; தன்னுள்ளிலிருந்து தான் வெளியேறுவதுதான் வெளியேற்றம் என்பதை மிகவும் பூடமாகச் சொல்கிறது ”வெளியேற்றம்”

பின்னுரையில் யுவன் சொல்கிறார், நாவலில் வரும் பெரியவர் நிஜமாகவே தாமே குறித்த அதே நாளில், அதே நேரத்தில் நாவலில் வருகிற மாதிரியே சிங்கூர் காட்டிலேயே சமாதி அடைந்ததாக. மேலும் சொல்கிறார், “ இந்த நாவலின் முதலாவது பகுதியான ஊற்று என்ற அத்தியாயத்தில் திருவண்ணாமலையில் உள்ள ஒரு விடுதி இடம் பெறுகிறது. ஊரும் விடுதியும் நிஜமானவை. அவை மட்டுமல்ல. அங்கு காத்திருந்தவரும் உடன் துணைக்கு இருந்தவரும் கூட நிஜமான மனிதர்கள் தான்” என்கிறார். வியப்பாகத்தான் உள்ளது. மேலும் வியப்பைத் தருவது “இந்த நாவலில் வருகிற மாய நிகழ்வுகள் – நடைமுறை சாத்தியத்துக்கு அப்பாற்பட்டவையாகத் தென்படுகிறவை – அனைத்துமே நிஜமாக நிகழ்ந்தவை. வலுவான சாட்சியங்களும் சான்றுகளும் உள்ளவை.” என்று அவர் சொல்லியிருப்பது தான்.

வெளியேற்றம் ஏன் என்னைக் கவர்ந்தது? எனக்கும் இதுபோன்ற சில நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதால், என் வாழ்க்கைத் தேடலிலும் இது போன்ற சுவாரஸ்யமான சில அதிசய மனிதர்களைச் சந்தித்திருப்பதால்தான் என்று சொல்லலாமா? ஆம். சொல்லலாம். ஆனால் அதுமட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. யுவன் சந்திரசேகரின் பிற படைப்புகளும் என்னைக் கவர்ந்தவையே. அவற்றில் மணிமகுடம் ”வெளியேற்றம்”. என்றால் அது மிகையில்லை.

உண்மையில் இந்நூல் சராசரி வாசகர்களுக்கானதில்லை. வாழ்க்கையில் தேடலும், எதிர்பாராமல் ஒவ்வொருவரது வாழ்விலும் நடக்கும் நிகழ்வுகளின் மீதுமான கேள்விகளும் கொண்டவருக்கு வெளியேற்றத்தின் நூல் எளிதில் பிடிபட்டுவிடும். இப்படைப்பை உருவாக்க யுவன் எவ்வளவு உழைத்தாரோ தெரியாது. வழக்கமான, அழகான, மயக்கக் கூடிய நடை. யுவனுக்கும், இதை வெளியிட்ட உயிர்மை மனுஷ்யபுத்திரனுக்கும் நல்லதொரு படைப்பை அளித்தமைக்காக என் நன்றிகள். தமிழில் வெளியான மிகச் சிறந்த படைப்புகளில் வெளியேற்றத்துக்கும் நிச்சயம் இடமுண்டு.

இந்த நூலை வாங்க உயிர்மை பதிப்பகம்

மேலும் தொடர்புக்கு…

Uyirmmai
11/29 Subramaniyan street
Abiramapuram
Chenna-600018.
Tamil nadu
India
Tele/fax: 91-44-24993448
e-mail: sales@uyirmmai. com

(முற்றும்)

– அரவிந்த்

****

Advertisements

2 thoughts on “வெளியேற்றம் – பகுதி 4 (இறுதிப் பகுதி)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.