”வெளியேற்றம்” பகுதி – 3

முதல் பகுதி

இரண்டாவது பகுதி

எதிர்பாராத பல்வேறு நிகழ்வுகளால் ஆனதுதான் வாழ்க்கை என்பது. எதிர்பார்ப்புப்படி எல்லாம் நடந்தால் சுவாரஸ்யம் போய் விடும் என்பதால் அப்படி அமைந்திருக்கிறதா அல்லது அமைகிறதா என்பது கேள்விக்குறி. அதற்கான விடையை வெளியேற்றம் தருகிறது என்றும் சொல்லலாம் அல்லது அந்த அனுபவத்தைக் காட்சிப்படுத்துகிறது என்றும் சொல்லலாம். ஆனால், இது இப்படித்தான் என்று தீர்ப்புக் கூற முடியாது. ஏனென்றால் இது காட்சிப்படுத்துவது ஒரு மிகப் பெரிய ஜன சமூகத்தை. அதன் பயணத்தை, அனுபவங்களை, வாழ்க்கையை. பலாப்பழத்தின் மேல் தோல் போல் இந்தப் புதினத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல, நூற்றுக்கணக்கான மாந்தர்கள் பின்னிப் பிணைந்திருக்கிறார்கள். ஆகவே, படிக்கும் போது மிக ஆழமான கவனம் கோருகிறது இந்நாவல்.

புதினத்தின் சிந்திக்கத் தூண்டும் வரிகள் சில…

”எங்களை மாதிரி ஏழைங்க பணத்தைப் பத்திச் சவடாலாப் பேசுறதும் ஆத்தாமையாலதாண்டா மன்னாதி. ஈர்க்குச்சி மாதிரி இருக்கிறவன், ‘நானெல்லாம் யாரையும் அடிச்சிக் கிடிச்சு வய்க்க மாட்டேன்னு’ கவுரமாச் சொல்லிர்ற மாதிரிதான். (பக். 113)

”ஒரு முள் செடியை இறுக்கிக் கட்டிக்கோ. வலி தாங்காம ரெண்டு சொட்டுக் கண்ணீர் ஊறாதா. அதெ வச்சிண்டு பிதுர் லோகத்துக்குப் போயிடலாங்கறது ஐதீகம்” (ப. 180)

”குடும்பம்ண்றது லேசுப்பட்ட விசயம் இல்லேங்க. ஆயிர ஆயிரம் வருசமா சனங்க வாள்ந்து பளகின விசயம் இல்லேங்களா? தனியா இருந்து ஒருத்தனும் ஒண்ணுத்தெயும் களட்டிற முடியாது.” (பக. 363)

“பாமரன் அறிஞன் என்றெல்லாம் பேதம் கிடையாது நண்பரே. இதெல்லாம் அளவுகோல்களால் உண்டாகிற வித்தியாசங்கள். இன்னொரு அளவுகோலில் எல்லாரும் மனிதப்பிறவுகள் தாம். வேறொரு அளவுகோலில் கொசுவும் ஒட்டகச்சிவிங்கியும் விட்டில் பூச்சியும் மஹாத்மா காந்திஜியும் எல்லாருமே உயிர்ப்பிறவிகள் தாம்” (பக். 450)

“குரு – சிஷ்யன் என்று ஆகும்போதே, இவரில் ஒரு பகுதி குருவாகிறது. அவரில் ஒரு பகுதி சிஷ்யனாகி விடுகிறதே” (பக். 450)

”இதுவரைக்கும் மனித குலம் அனுபவித்து வந்திருக்கும் தற்செயல்கள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கோக்கும் பட்சத்தில் வரலாறு என்று நாம் தொகுத்து வைத்திருக்கும் சங்கதி இப்போது இருக்கிற மாதிரியே இருக்குமா?” (பக். 458)

“இறந்தவர்கள் உலகம் ஒன்று இருக்கிறது என்றால், இன்னும் பிறக்காதவர்களும் அதே உலகத்தில் தானே இருந்தாக வேண்டும். பிறப்பதற்குத் தன்முறை வருவதற்காகக் காத்துக் கொண்டு இருக்கத்தானே செய்வார்கள். இரண்டு தரப்பும் ஒருவரையொருவர் எவ்விதம் அடையாளம் காண்பார்கள்?” (பக். 460)

”தற்செயல்களின் வரலாற்றில் இதெல்லாம் முன் கூட்டித் திட்டமிடப்பட்ட ஒன்றாகவே இருக்கும். திட்டகர்த்தா யார் என்று கண்டடைவதுதான் சிக்கலே…” (பக். 465)

”இவுகளையெல்லாம் ஒரு பார்வையெ வச்சி அள்ந்துற முடியாதுங்க. சந்யாசி மாதிரி இருப்பாக – காவி கட்ட மாட்டாக. குடும்பஸ்தரு மாதிரி இருப்பாக –  குடும்பம் இருக்காது. சித்து வேலையெல்லாம் காமிப்பாக. சித்தரு கெடையாது. இது ஒரு தனீ வகெ. நாம தடுக்கிலே பாஞ்சா, கோலத்திலே பாஞ்சு வளுக்கிட்டு ஓடீர்றவுக..” (பக். 482)

மேற்கண்டவை ஒரு துளிதான். இம்மாதிரி நம் அகத்தே கேள்வி எழுப்பி நாம் விடை தேட வேண்டிய பல சிந்தனைகள் போகிற போக்கில் நாவலில் சொல்லப்பட்டிருப்பது நாவலின் மிகப் பெரிய பலம். கூடு விட்டுக் கூடு பாய்தல், அற்புதங்கள், அதிசயங்கள், நிர்வாண சந்யாசிகள், ஜீவசமாதிகள், தத்துவங்கள் என பற்பல களங்களைக் கொண்ட இந்நாவல் எம்.பில், பிஹெச்.டி ஆய்வு செய்பவர்களுக்கு மிகப் பெரிய திறப்பாக இருக்கும். மேலும் பல பல களங்களுக்கு, மேல்நிலை ஆய்வுகளுக்கு இடமளிக்கும்.

யுவன் சந்திரசேகர் தான் ஒரு அற்புதமான கதை சொல்லி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.

(தொடரும்)

Advertisements

3 thoughts on “”வெளியேற்றம்” பகுதி – 3

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.