வெளியேற்றம் – பகுதி 2

முதல் பகுதி இங்கே…

நூல்களை வாசிப்பதில் பல்வேறு முறைகள் இருக்கின்றன. சில நூல்களை அப்படியே வாசிக்க ஆரம்பித்து முடித்து மடித்து வைத்து விடலாம். சில நூல்களை வாசித்து அசை போட்டு திரும்ப வாசித்து தொடரலாம். சில நூல்களை என்னதான் முயற்சி செய்தாலும் சில பக்கங்களுக்கு மேல் வாசிப்பது இயலாது. சில நூல்கள் நம்முடனே பயணிப்பவை. கூர்ந்த கவனம் வேண்டுபவை. திரும்பத் திரும்ப நம் வாசிப்பைக் கோருபவை. நம் அகத்தில் அமர்ந்து, சிந்தனையில் வியாபிப்பவை. “வெளியேற்றம்” அப்படிப்பட்ட நூல்களுள் ஒன்று.

யுவன் சந்திரசேகரின் கதை சொல்லும் பாணி சராசரி கதை சொல்லும் பாணிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. வாசகனைப் புனைவுலகின் ஆழத்துக்குள் அமிழ்த்திவிடக் கூடியது. கதை, கதைக்குள் கதை, அதற்குள் ஒரு கதை என்று செல்லும் யுவனின் கதைகள், வாசகனுக்கு நுட்பமான வாசிப்பின்பத்தை அளிப்பதுடன், படைப்பின் நிர்ப்பந்தங்களற்ற இனியதொரு புத்துலகுக்கு அவனை அழைத்துச் செல்வன. வெளியேற்றமும் அப்படித்தான். அது மதுரைக்கும், திருநெல்வேலிக்கும், குற்றாலத்துக்கும், திருத்தணிக்கும், வட இந்தியாவிற்கும், திருவண்ணாமலைக்கும், காசிக்கும்  என பல இடங்களுக்கு வாசகனை அழைத்துச் செல்கிறது.

கதையில் வரும் ’ராமலிங்கம்’ பாத்திரம் உயிரின் வேட்கையை, வாழ்தலின் விழைவைப் புரிந்து கொள்ளும் விதம் சிறப்பு. பெண் சகவாசத்தால் தீராத நோய் வந்த ராமலிங்கம் மரணம் ஒன்றே தனக்கு முடிவு தரும் என்று நம்புகிறான். ஒருநாள்  ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள விழைகிறான். அவன் பாய முடிவு செய்த அதே கணத்தில், அதே தண்டவாளத்தில் எதிரே ஒரு ஆட்டுக்குட்டி. வேகமாக ரயில் வருவதை உணர்ந்து துள்ளி விலகுகிறது அது. அதன் வாழும் வேட்கை, அதன் கண்களின் இருக்கும் உயிரின் தவிப்பு ராமலிங்கத்தின் முடிவை மாற்றுகிறது. மீண்டும் வாழ முடிவு செய்கிறான். அந்த மாறுதலை யுவனின் வரிகள் மிக அழகாகக் காட்சிப்படுத்துகிறது : “ ரயில் மறைந்து நீங்கிய வெட்ட வெளியில் எதிர்ப்புறம் நின்றிருந்த ஆடும் இவனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். தாங்கள் பகிர்ந்து கொள்வது சாவை அல்ல; வாழ்வை. இந்தக் கட்டாந்தரை, மேற்புறம் மட்டும் பளபளவென்று வெண்மை பூத்திருக்கும் தண்டவாளங்கள், அவற்றுக்கிடையில் குவிந்து கிடக்கின்ற கருங்கல் ஜல்லி, முற்றிய பகல் வேளையின் வெக்கை, தார்ச்சாலையில் குளம் மாதிரி அலையடித்துக் கிளம்பும் ஆவி, வெற்றுக் கண்களுக்கு அநியாயமாய்க் கூசும் ஆகாயம், கையை மறுபடி இறக்கி விட்ட கைகாட்டி மரம் எல்லாம் இன்னும் இருக்கிறது….” (இதே காட்சி எனக்கு ஜெயமோகனின் ஒரு சுய அனுபவக் கதையில் புழு ஒன்றைக் கண்டு, அதன் உயிர் துடிப்பைக் கண்டு தற்கொலை முடிவிலிருந்து மனம் மாறுவதை ஞாபகப்படுத்தியது)

அந்தக் கணம் ராமலிங்கத்தின் வாழ்க்கையில் திருப்பு முனை ஆகிறது. அதன் பின் ராமலிங்கத்திற்கு ஒருபோதும் தற்கொலை எண்ணம் வரவில்லை. ஆனாலும் அவன் வீட்டை விட்டு, இல்லை… இல்லை அந்த ஊரை விட்டே வெளியேறுகிறான், தான் மட்டுமல்ல; தன் துணையுடன். அதன் பின்னர் ராமலிங்கம் வாழ்க்கை என்ன ஆனது என்பதை ’ராமலிங்கம்’ சொல்லும் விதமும், சந்தானம் அதைக் கேட்டு பிரமிப்பதும் ……. அப்போதைய ராமலிங்கம் மற்றும் சந்தானத்தின் எண்ண ஓட்டங்களும் அருமை.

கதைகளை பல கதைகளின் தொகுப்பாகவும் சுய அனுபவங்களாகவும் சொல்வது, தன்னையே பல ஆளுமைகளாக உருவாக்கிச் சித்திரிப்பது என பின் நவீனத்துவத்தின் அனைத்துக் கூறுகளும் கொண்டவை யுவனின் படைப்புகள். இதற்கு “வெளியேற்றமும்” விலக்கில்லை. நான் லீனியராக, முன்னும் பின்னுமாக இறந்த காலம், கடந்த காலம், (கவனிக்க கடந்த காலம்: இறந்து போன காலமல்ல) நிகழ்காலம் என மாறி மாறிப் பயணிக்கிறது. நாம் காணும் இந்த உலக யதார்த்தம் இதன் ஒரு முகமே. இன்னும் நாம் அறியாத பல யதார்த்த முகங்கள் உள்ளன. அதையே “மாற்று மெய்மை” என்று யுவன் குறிப்பிடுகிறார். அப்படி நாம் அறியாத, நம்மால் பல முடியாத பல ஆளுமைகள், சம்பவங்கள் இப்படைப்பில் உள்ளன.

இப்புதினத்தில் வரும் ஒவ்வொருவரின் கதைகளும் ஒவ்வொரு விதம். ஐயர், செட்டியார், தலித், நாடார் என்று பலரது வட்டார வழக்குகள், பழக்க வழக்கங்கள், பேச்சு மொழிகள், வாழ்விடங்கள். மிகத் தெளிவான மொழி நடை. சிறப்பான சொல்லாடல்கள். படிக்கப் படிக்க பிரமிப்பைத் தருகிறது இந்நாவல்.

யுவன் சந்திரசேகர்

போகிற போக்கில் பாத்திரங்களின் ஊடாக யுவன் எழுப்பும் கேள்விகளும், தத்துவங்களும், செய்திகளும் நம்மை சிந்திக்கத் தூண்டுவன. உதாரணத்திற்கு சில…

“தான் இன்னும் பிறக்கவில்லை என்று நம்புகிறவனுக்குத்தான் இறப்பைப் பற்றிய யோசனை இருக்காது” (பக்.21)

”இறந்தவர்கள் உலகம் ஒன்று இருக்கிறது என்றால் இன்னும் பிறக்காதவர்களும் அங்கே இருக்கத்தானே செய்வார்கள். அவர்கள் ஒருவரையொருவர் எவ்விதம் அடையாளம் காண்பார்கள்?” (பக்.38)

“சதா சர்வ காலமும் சேற்றில் நின்று இரைதேடும் அவை (கொக்குகள்), இறக்கைகளின் வெண்மையை எப்படி இவ்வளவு கறாராகப் பேணுகின்றன?” (பக். 72)

”பிறப்பதற்கு முன்னாலேயே இதுவெல்லாம் (உயர்வு, தாழ்வு) தீர்மானமாகி விடுகிறதா? யார் தீர்மானிப்பது? என்ன அடிப்படையில்? எதற்காக? குறைந்த பட்சம் மனிதக் கருவாக ஒரு பெண் வயிற்றில் உதிப்பதற்கு முன்னால் நானும் இவனும் ஒரே உலகத்தின் பிரஜைகளாகத் தானே இருந்திருப்போம். இப்போது இருக்கிற மாதிரி இன்னார் வயிற்றில் பிறக்க வேண்டும், இன்ன ஜாதியில் பிறக்க வேண்டும் என்பதெல்லாம் அங்கேயே தீர்மானமாகி விடுகிறதோ?” (பக். 81)

”இப்ப பூமியை ஒர்த்தன் கொடைச்ஞ்சிக்கிட்டே போறான்னு வையி மறுபக்கம் வெளியேறும்போதும் தரைதான் இருக்குமாம். சொல்லிக்கிறாக. ஆனா, ஆகாசத்துக்கு மறுபக்கம்னு ஒண்ணே கெடையாது. தெரியுமில்லே… ?” (பக். 95)

இப்படி இன்னும் பற்பல சிந்திக்கத் தூண்டும் வினாக்களும், விடைகளும் கொண்டிருக்கிறது இப்புதினம்.

நாவலின் மிக முக்கியமான, தீர்க்கமான கதாபாத்திரம் ஜய்ராம். கழிவுகளைச் சுத்தம் செய்பவரின் மகன் ஒரு ஞானியாக மலர்கிறார். எப்படி என்று படிக்கும்போது உண்டாகும் பிரமிப்பு, அவர் குருவின் செயலையே கேள்விக்குரியதாக்கும்போது மேலும் பல மடங்கு அதிகரிக்கிறது. மிக மிகத் தெளிவான ஒரு விதத்தில் சொல்லப்போனால் குருவையே மிஞ்சிய, தன்னிறைவு பெற்ற,  மிக முழுமையான கதாபாத்திரம் ஜய்ராம். மன்னாதி மற்றும் சந்தானத்துடனான அவரது உரையாடல் நாவலின் மிக முக்கியமான பகுதி.

(தொடரும்)

– அரவிந்த்

 

 

 

Advertisements

6 thoughts on “வெளியேற்றம் – பகுதி 2

 1. தற்கால தீவிர இலக்கிய படைப்பாளி ஜெயமோகனின் மிகப்பெரிய முயற்சியில் உருவான கணமான நாவல் (847 பக்கம்). அடிக்கடி பல இலக்கிய சர்ச்சைகளில் சிக்கி வலைப்பதிவுகளில் அதிகம் பேசப்படும் ஜெயமோகனின் நாவல் எதையும் இதற்கு முன் நான் வாசித்ததில்லை. ஒரு சில சிறுகதைகள், கட்டுரைகளை வாசித்ததுண்டு. இந்நாவலை வாசிக்க நான் ஒரு மாதம் எடுத்துக்கொண்டேன். இது ஒரு சரித்திர நாவலுக்குறிய பாணியில் அமைந்திருக்கிற நவீன இலக்கியம். சிலர் இதை சரித்திர நாவல் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பழங்காலத்தில் நடந்ததாக நம்பகத்தன்மையோடு ஒரு கற்பனை கதையை ஆசிரியர் கூறுகிறார். இதில் வரும் ஊர் கற்பனை, காலம் கற்பனை, கதை மாந்தர்கள் கற்பனை, வரலாற்று பின்னனி நிகழ்வுகளும் கற்பனை…ஆனால் இதில் மையப்படுத்தப்படும் சமய தத்துவ விசாரனைகள் மட்டும் மெய். அதேசமயம் கதை ஓட்டத்தை பாதிக்கும் அளவுக்கு சலிப்பேற்படுத்திய பகுதியும் இதுதான்.

 2. புகையை நிறுத்திய சில வாரங்களுக்குப் பிறகு மூளையில் நடக்கும் மாற்றங்கள் தான் என்னை மிகவும் பாதித்தன. புகையில் இருக்கும் நிகோடின் எந்தளவு மூளையை பாதிக்கும் என அனுபவித்தால் மட்டுமே தெரியும். நிறுத்திய மூன்றாவது வாரத்திலிருந்து பலவிதமான பயம் என் நாட்களை ஆக்கிரமித்தன. நடக்கும்போது விழுந்துவிடுவேனோ என பயம், படுத்தால் கட்டிலிருந்து மிதப்பது போலத் தோன்றும், ஜீரோ டிகிரியில் கூட கைவிரல்களிடையே வியர்க்கும், ஒருவிதப் பதற்றத்தில் நள்ளிரவில் கால்கள் உதறிக்கொள்ளும்.

 3. தோழர்,

  உங்கள் நூல் விமர்சனம் படித்தேன். அருமை. யாருக்கும் புரியாத நூலை, அதே போன்று யாருக்கும் புரியாத ’கன்னா பின்னா’ மொழியில் பலரும் விமர்சனம் என்ற பெயரில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் உங்கள் விமர்சனம் சிறப்பாகவே உள்ளது. ஆனால் ஒரு குறை. நீங்கள் சிறு சிறு வாக்கியங்களாக எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அடுத்த பகுதியை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். இந்த நூல் தற்போது ’ஸ்டாக்’ இல்லை என்றும் கேள்விப்பட்டேன். உண்மையா என்று கூறுங்கள். தொடர்ந்து நல்ல நூல்களைப் பற்றி எழுதுங்கள்.

  நன்றி

  அன்புடன்
  நிர்மலா

  1. தங்கள் ஆலோசனைக்கு நன்றி சகோதரி. எழுத முயற்சிக்கிறேன். நூல் ’ஸ்டாக்’ பற்றி நீங்கள் உயிர்மை பதிப்பகத்தில் விசாரித்துக் கொள்ளுங்கள். மிக்க நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s