ஜே.கே சில குறிப்புகள்

தமிழ்ச்சிறுகதை உலகில் இந்த அரைநூற்றாண்டுக் காலத்தில் உலகின் தரத்துக்கு உகந்த கதைகளை எழுதித் தமிழையும் தங்களையும் உயர்த்திக் கொண்ட ஒரு சில எழுத்தாளர்கள் உண்டு. அவர்களில் ஜெயகாந்தனும் ஒருவர். பாரதி, புதுமைப்பித்தன் இவர்களின் வரிசையில் நவீன தமிழ் இலக்கியத்தின் திருப்புமுனைக்கும், எழுச்சிக்கும் காரணமாக அமைந்தவர் ஜெயகாந்தன் என்றால் அது மிகையில்லை.
ஜெயகாந்தன் காலம் என்று தனித்து குறிப்பிட வேண்டிய அளவுக்கு அவரது படைப்புகள் தமிழ் இலக்கியப் பரப்பில் ஆணித்தரமாக தனது இருப்பைப் பறைசாற்றின. 1934-ஆம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கடலூரில் உள்ள மஞ்சக்குப்பத்தில் பிறந்தவர் ஜே.கே என தமிழ் வாசகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ஜெயகாந்தன். 78 வயதான ஜே.கே, தமிழ் இலக்கியப் பரப்பின் தனித்த ஓர் சாதனையாளர்.

சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த ஜெயகாந்தன், ஐந்தாம் வகுப்பு வரையே கல்வி பயின்றார். வீட்டுச்சூழல் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிய இவருக்கு இவரது மாமா உறுதுணையாக இருந்தார். விழுப்புரத்தில் தன் மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தார். மாமா கம்யூனிசக் கொள்கைகளில் மிக்க ஆர்வமுடையவர். அவர் மூலம் ஜே.கேவுக்கு பாரதியும், கம்யூனிச சித்தாந்தங்களும் அறிமுகமானது. அதன் பின் அவரது வாழ்கைப் பயணம் புதிய பாதையில் அடிபோடத் தொடங்கியது. 

ஜெயகாந்தன் சில ஆண்டுகள் விழுப்புரத்தில் வாழ்ந்த பின் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அங்கு பெரும்பாலான நேரத்தை சி.பி.ஐ-யின் ஜனசக்தி அலுவலகத்தில் – அச்சகத்தில் பணிப்புரிந்தும், ஜனசக்தி பத்திரிக்கைகளை விற்றும் கழித்தார். ஆனால் 1949-ஆம் ஆண்டு சி.பி.ஐ மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் தடை விதிக்கப்பட்டது. ஆதலால், அவர் சில மாதங்கள், தஞ்சையில் காலணிகள் விற்கும் கடை ஒன்றில் பணி புரிந்தார். இந்த எதிர்பாராத இடைவேளை, அவர் வாழ்க்கையில் முக்கிய கால கட்டமாக அமைந்தது. சிந்திக்கவும் எழுதவும் நேரம் கிடைத்தது. 
 
ஜெயகாந்தன் பாரம்பரிய எழுத்தாளர் பரம்பரையில் இருந்து வந்தவர் அல்ல. திட்டமிட்டு இலக்கிய உலகில் புகுந்து சாதனைகள் நிகழ்த்த வேண்டும் என்று எண்ணிச் செயல்பட்டவரும் அல்ல. அவரது வாழ்க்கை அனுபவங்களே அவரது படைப்பாக்கமாகப் பரிணமித்தது. அவரது இலக்கிய வாழ்க்கை 1950-களில் துவங்கியது. சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன் போன்ற பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளியாகத் துவங்கின.
 
கம்யூனிஸ்ட் கட்சியின் மீது ஜெயகாந்தன் பற்றுக் கொண்டிருந்தார் என்றாலும் உட்கட்சிப் பூசல்களினாலும், கட்சியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளாலும், சி.பி.ஐ-யிலிருந்து அவர் விலகினார். பின்னர் காமராஜருடைய தொண்டராக மாறினார்.
மளிகைக் கடைப் பையன், மருத்துவரின் உதவியாள், மாவு மெஷின் வேலை, கம்பாசிடர், டிரெடில்மேன், மதுரையில் சினிமா பாட்டுப் புத்தகம் விற்றது, கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸில் இருந்து பத்திரிக்கைகள், புத்தகங்கள் விற்றது, ஃபவுண்ட்ரியில் எஞ்சினுக்கு கரி கொட்டுவது, சோப்பு ஃபாக்டரியில், இங்க் ஃபாக்டரியில் கைவண்டி இழுத்தது, ஜட்கா வண்டிக்காரனிடம் உதவியாளனாக இருந்தது,…. ஃபுரூஃப் ரீடர், பத்திரிகை உதவி ஆசிரியர்… என்று அவரது வாழ்க்கையின் பல வேறுபட்ட அனுபவக் குவியல்கள் எழுத்துக்களாக முகிழ்த்தது. அது சிறுகதை, நாவல், நாடகம், உரைநடை, கட்டுரை, பத்தி எழுத்து, சினிமா என வளர்ந்தது. புதுமைப்பித்தனின் வீச்சும், பாரதியின் புரட்சியும் ஜெயகாந்தனின் எழுத்துக்களில் தெரிந்தது. அவரது படைப்புகளுக்கு புகழும் அங்கிகாரமும் கிடைத்தது. இலக்கிய இதழ்களில் மட்டுமல்லாது வெகுஜன இதழ்களிலும் அவரது எழுத்துக்கள் பிரசுரிக்கப்பட்டன. அதனால் அவை தமது தகுதியை உயர்த்திக் கொண்டன. இருபதாம் நூற்றாண்டின் தலைச் சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராக ஜெயகாந்தன் போற்றப்பட்டார். அதன் பின் திரைப்பட வசனகர்த்தா, இயக்குநர் என்று அவரது வாழ்க்கை முற்றிலும் புதிய தளத்தில் அமைந்தது. “பாதை தெரிகிறது பார்” – இப்படத்தின் பாடலாசிரியராக சினிமா உலகினுள் காலடி எடுத்து வைத்தார். புதுமைப்பித்தனுக்கு பின்பு நவீன தமிழ் இலக்கிய போக்கில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய ஜெயகாந்தன், தமிழ் சினிமா உலகிலும் திருப்பத்தை ஏற்படுத்தினார். அவரது நாவலான “உன்னைப் போல் ஒருவன்” மற்றும் “சில நேரங்களில் சில மனிதர்கள்” போன்றவை திரைப்பபடமாக வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதிலும் உன்னைப் போல் ஒருவன் நாவலுக்கு திரைப்பட வடிவம் கொடுத்து 3 வாரங்களில் படத்தை இயக்கி வெளியிட்டது மிகப் பெரிய சாதனையாக அக்காலத்தில் கருதப்பட்டது. அதற்கு தேசிய விருதும் கிடைத்தது. 
தமிழ்ப் படங்களையே பார்த்தறியாத “கர்மவீரர் காமராஜா;” மீது அளவு கடந்த பற்றும் மரியாதையும் கொண்டிருந்தார் ஜெயகாந்தன். ஜெயகாந்தனின் அழைப்பைத் தட்டிக்கழிக்காத காமராஜரும் இப்படத்தைப் பார்த்து விட்டு பெரிதும் பாராட்டினார். காமராஜருடன் இருந்து இப் படத்தைப் பார்த்த ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் (ஏ.வி.எம்) ஜெயகாந்தனிடம், “இப்படத்தை தேசியவிருதுக்கு வேண்டுமென்றால் அனுப்புங்கள், கதையை எனக்குத் தாருங்கள். வர்த்தக ரீதியில் லாபம் கிட்டக் கூடியவிதமாக இதனை நான் எடுக்கிறேன்” என்று கேட்டுக் கொண்டார். ஆனால் ஜெயகாந்தன் அதற்கு மறுத்துவிட்டார்.

சாதாரண மனிதர்களின் உலகம் முதல் அறிவுஜீவித்தன வாழ்வின் அழுத்தங்கள் வரை, சமுதாய முரண்பாடுகள், சிக்கல்கள் போராட்டங்கள், நகர்ப்புற தொழிலாளர் வர்க்கம், விழிப்புற்ற பெண்கள், தனிமனித பலம், பலவீனம், ஆன்மீக விசாரணைகள் என ஜெயகாந்தனின் கதைகள் பல்வேறு உள்ளடக்கங்களைக் கொண்டதாக அமைந்தன. அதனாலேயே அவை வெளிவந்த காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஜெயகாந்தனின் படைப்புலகம் வாழ்க்கை மீதான நேசிப்பையும் மனித நேயத்தையும் உளமாரப் பேசுபவையாக உள்ளன. 

எந்தவொரு எழுத்தாளர்களுக்கும் இல்லாத தனிச்சிறப்பு ஜெயகாந்தனின் படைப்புகளுக்கு உண்டு. ஜெயகாந்தன் தனது நூல்களுக்கு எழுதிய முன்னுரைகள் பெரிதும் சிறப்புடையன. அவரது முன்னுரைகள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் பொழுது ‘முன்னுரை இலக்கியம்’ எனும் ஓர் தனித்த இலக்கிய வகைமையை நம்மால் அடையாளம் காண முடியும்.
 

பிரபல ‘ஆனந்த விகடன்’ வார இதழ் ஜெயகாந்தனின் சிறுகதைகளைக் கேட்டு வாங்கி முத்திரைக் கதைகளாக வெளியிட்டுப் பெருமைப்படுத்தியது. தொடர்ந்து பல புகழ்பெற்ற சிறுகதைகளை விகடனில் எழுதினார் ஜெயகாந்தன். அவற்றுள் ஒன்று தான் ‘அக்கினிப் பிரவேசம்’ என்னும் சிறுகதை. இது ஆனந்தவிகடனில் வெளியாகி சர்ச்சைகளையும், விமர்சனங்களையும், பாராட்டுக்களையும் பெற்றது.ஜெயகாந்தனுடைய படைப்புக்கள் ருஷ்ய, பிரெஞ்சு, செக் ஆங்கில, ஜெர்மனி, உக்ரேனிய மொழிகளிலும், இந்தியாவில் உள்ள பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரர். விருதுகளால் தனது படைப்பிற்கும் தனது படைப்புகளால் விருதுக்கும் பெருமை ஏற்படுத்தியவர் ஜெயகாந்தன் என்றால் அது மிகையில்லை. சாகித்திய அகாதமி விருது, சோவியத் நாட்டின் நேரு விருது, தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் ராஜராஜன் விருது, கலைஞர் விருது, ஞானபீட விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்ப்பட்டு இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

”எழுத்து எனது ஜீவன் – ஜீவனம் அல்ல” என்று மார் தட்டிச் சொன்ன ஒரே எழுத்தாளர் ஜெயகாந்தன் மட்டுமே!. அவர் எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்றால் அஃது மிகையில்லை.

எழுத்தாக்கம் : அரவிந்த்

******

2 thoughts on “ஜே.கே சில குறிப்புகள்

திண்டுக்கல் தனபாலன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.