பி.ஏ.கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை – 2

முதல் பகுதி

இந்த நாவலின் மூலம் கிருஷ்ணன் வைக்கும் வாதங்கள் மிக முக்கியமானவை. சமூகம், மதம், அரசியல், கல்வி, சினிமா, ஆன்மீகம் என்பது பற்றி இந்த நாவல் முன் வைக்கும் கருத்துகள் கவனத்தில் கொள்ளத் தக்கவை. அரசியல் குறித்து நம்பியும் கண்ணனும் பகிர்ந்துக் கொள்ளும் தகவல்கள் நுட்பம் சார்ந்தவை. காந்தியின் அரசியல், கம்யூனிஸ்ட்களின் அரசியல் வாழ்க்கை, தி.முக.வின் வெற்றி என எல்லாமே சற்று அதிகமாகவே இந்நாவலில் விமர்சனத்துள்ளாகுகின்றன. குறிப்பாக கம்யூனிச சித்தாங்களை, தத்துவார்த்தங்கள் குறித்து இந்நாவல் சற்றுக் கடுமையாகவே விமர்சிக்கிறது எனலாம்.

நாவலில் கம்யூனிஸ்ட் நம்பி கூறுவதாக வரும் கீழ்கண்ட உரையாடல் மிக முக்கியமானது.

”முகுந்தன், மதம் நமது நாட்டில் மிகப் பெரிய உண்மை. அது நாம கண்ணை மூடிகிட்டா மறைஞ்சி போயிடாது. நாம் அநியாயத்தை எதிர்த்துப் போராடறதுக்கு மதம் உதவியா இருக்கும்னு நினைச்சா அதோடு கை குலுக்க நாம தயங்கக் கூடாது. காந்தி இதைத்தான் அவர் பாணில, கொஞ்சம் குழப்பமான முறைல செய்ய நினைச்சாரு.”

“மதத்தை அணைச்சிகிட்டா மதம் நம்மையே மாத்திடும். முதல்ல நல்லா இருக்கும். ஆனா நம்மோட சொந்த ஆத்மாவைக் கரையேத்தற முயற்சில நாம மக்களை மறந்திடுவோம். அவங்க பிரச்சனைகளை மறந்திடுவோம்” என்ற முகுந்தனின் எதிர்வினை, தற்போதைய அரசியல்வாதிகளின் போலித்தனத்தை, தப்பிக்கும் மனப்பான்மையை, அப்பட்டமான சுயநலப்போக்கை, தங்கள் சுயலாபத்துக்காக மட்டுமே மதத்தைக் கையாள்வதைக் காட்டுவதாகக் கொள்ளலாம்.

அது போன்று வீட்டை விட்டு வெளியேறிய நம்மாழ்வார், சகோதரன் பட்சிராஜனுக்கு எழுதும் கடிதமும் மிக முக்கியமானது.

“சுயராஜ்யம் புளித்து போன ஒரு கனவாக எனக்குப் படுகிறது. கடவுள் அவர்கள் பக்கம். எதிர்க்க எனக்கு விருப்பமில்லை. வரப்போகும் தலைமுறைகள் வரையும் தியாகிகளின் பட்டியலில் என் பெயர் வரும் என்பதற்காக நாயைப் போலச் சாக நான் தயாராக இல்லை” என்ற வரிகளில் அக்கால இளைஞர்கள் சிலரது மாறுபட்ட மனநிலை வெளியாகிறது.
மற்றுமொரு முக்கியமான கடிதம் நம்பி, இறப்பதற்கு முன் கண்ணனுக்கு எழுதும் கடிதம்.

”தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் இந்த வாழ்க்கையால் என்ன பயன்? ஒரு வடிகட்டின முட்டாளின் நினைவாற்றலைக் கொண்டிருக்கும் மக்களுக்கு உழைப்பதால் என்ன லாபம்? நிறைவேறவே முடியாத கொள்கைகளைக் கட்டிக் காப்பதில் என்ன கிடைக்கப் போகிறது?” – சமூகத்தின் சுயநலப் போக்கையும், அதன் சகிக்க முடியாத இன்னொரு முகத்தையும் பற்றி ஆழ்ந்த வருத்தத்துடன் சுட்டிக்காட்டப்படும் இந்த வரிகள் ஒரு நம்பிக்கையில் தோற்றுப்போனவனின் உண்மையான வாதமாகக் கருதத்தக்கது.

கம்யூனிஸ்ட்கள் குறித்த கீழ்கண்ட வரிகள் வாசக அதிர்ச்சியை ஏற்படுத்துபவை.

”அட்டையை எடுத்துட்டா புஸ்தகமெல்லாம் காத்தால்ல இருக்கு”, ” இந்த கம்யூனிஸ்ட் போர்வையை என்னிக்கு நீ தூக்கிப் போடறியோ அன்னிக்கு தான் உருப்படுவே”, “கம்யூனிஸ்டா, உள்ளத்திலேயே அழுகி வீச்சம் அடிக்கற பயலுங்க அவங்க தான்”.

”இருங்க. தலகாணி இல்லையா. இடுப்புக்கு அண்டக் கொடுக்கணும்ல… தென்பட்டது லெனின்…. புஸ்தகங்களை தன்னுடைய ரவிக்கையால் மூடினாள். படுத்துக் கொண்டு அவனை அழைத்தாள்…”

”லெனினுக்குச் சேதமில்லை. இரண்டாம் பாகத்தின் நீல அட்டைதான் சிறிது கசங்கிய மாதிரி இருந்தது”

– மேற்கண்ட வரிகளினூடே இந்நாவல் கூறும் நுண்ணரசியல் பல. எல்லோருக்கும் நல்லவனாக வரும் நம்பியின் மறைவு அதிர்ச்சியை அளிப்பது மட்டுமல்ல; அதற்கு எந்த எதிர்ப்பலைகளும் எழாமல் இருப்பதே புரையோடிப் போன சமூகத்தின் இன்னொரு முகத்தைக் காட்டுவதாக உள்ளது.

கையாலாகாத, பொருந்தாத வெற்றுக் கூச்சல் எழுப்பும் நபராக வரும் நரசிம்மனின் பாத்திரமும் இங்கு முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்றாகும். ’பிராமணர்களுக்கு தனிதேசம் வேண்டும்’ என்ற அவனது அபத்தப் பேச்சு குறியீடாக வேறு ஏதோ ஒன்றை ஞாபகப்படுத்துகிறது.

பெரியார், நரசிம்மன் வசிக்கும் சன்னதித் தெருவில் பேச வந்தபோது முன்வைக்கப்பட்டிருக்கும் காட்சிப்படுத்துதல்கள் மிக முக்கியமானவை. அதுவும் ‘யகாஸகௌ சகுந்தகா…’ எனத் தொடங்கி சுக்ல பக்ஷ யஜூர்வேதத்தில் வருவதாகச் சொல்லப்படும் ஸ்லோகத்தை பேச்சாளர் கூறக் கேட்டதும் அதை உடனடியாகப் படிக்க ஆவல் கொள்ளும் நரசிம்மனின் போக்கு அவனது குணாதிசயத்தைத் தெளிவுறக்காட்டி விடுகிறது.

கடைசியில் மலம் சுத்தம் செய்யும் பெண்ணை உறவுக்கு அழைக்க, அவளால் முகத்தில் மலம் அப்பப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு தற்கொலை செய்து கொள்கிறான். ஆனால் அவன் இறுதி ஊர்வலத்தில் அதே பெண், சுடுகாடு வரை ஒப்பாரி வைத்துக் கொண்டே செல்வதாக வருவது கதையோடு ஒட்டவில்லை.
ரோசாவின் பாத்திரப்படைப்பும் கவனத்தில் கொள்ளத் தக்கது என்றாலும் அது பிறப்பு முதல் உடன் வளர்ந்த இயல்பான ஒன்றாகவே இருப்பதால் வியப்படைய ஏதுமில்லை.

நாவலின் ஊடாக வந்து போகும் சர்வாங்க சவர ஜெர்மன் ஐயங்கார், விக்டோரியா ராணியின் மரணத்துக்காகக் குளித்த, பொன்னாவை எப்படியாவது வளைத்துப் போட முயற்சித்த வக்கீல் ஐயங்கார், ஆண்டாளைக் கட்டிப்பிடித்த அவர் பையன், நள்ளிரவில் தூரம் ஒதுங்கியிருந்ததாக நம்பப்பட்ட ஆண்டாளை அரவணைத்த அய்யராத்து குடுமிப் பையன், எப்போதும் கற்றாழை நாற்றம் அடிக்கும் தினமொட்டு நிருபர் சங்கரராமன், வாய் ஓயாமல் ஆங்கிலம் பேசிக் கொண்டும், அவ்வப்போது திருமலையிடம் வந்து நாசிகா சூரணம் யாசித்தும், சமயங்களில் நிர்வாணமாகத் தெருக்களில் சுற்றிக் கொண்டும் இருக்கும் மனநிலை பிறழ்ந்த வக்கீல் ராமசாமி அய்யர், வயதிற்கு மீறிய தெளிவுடன் இருக்கும் கண்ணனின் தங்கை ராதா என்று கிருஷ்ணன் நம் முன்னால் காட்சிப்படுத்தும் மனிதர்கள் நாவலில் எந்தவித மிகைப்படுத்துதலும் இல்லாமல் இயல்பாகவே வந்து போகிறார்கள்.

காந்தீயம், கம்யூனிஸம், மத நம்பிக்கை, குரு விசுவாசம், சமூக சேவை, திராவிட இயக்கங்கள், வரலாற்று விமர்சனம் என்று பல தடங்களை இந்நாவல் தொட்டுச் செல்கிறது. இது உணர்வு சார்ந்த நாவலா, அரசியல் சார்ந்த நாவலா என்று பார்த்தால் உணர்வு சார்ந்த அரசியல் நாவல் என்று தாராளமாகச் சொல்லி விடலாம். புரட்சி என்பது இன்று ஒரு நகைப்புக்குரிய சொல்லாக மாறி விட்டதற்கு யார் காரணம் என்பதை இந்த நாவல் சொல்லாமல் சொல்லிச் செல்கிறது. பிரச்சனைகளுக்கான தீர்வு இதுதான் என்று கூறாமல் செல்வதே ஒருவிதத்தில் நாவலின் பலம் என்றும் சொல்லலாம்.

நாவல் கூறும் மையக் கருத்தாக இதைக் கொள்ளலாம். ஒருவன் கொள்கை வீரனாக வாழ்கிறான். ஆனால் கடைசியில் அந்தக் கொள்கைக்காகவே உயிரை விடுகிறான், எந்தப் பயனுமில்லாமல். மற்றொருவனோ, வாழ்க்கையை யதார்த்தமான அதன் போக்கில் எதிர் கொள்கிறான். வளைந்து கொடுத்துப் போகப் பழகிக் கொள்ளும் அவன், இறுதியில் எந்த விதக் கொள்கைப் பிடிப்புமில்லாது, முடிவு எடுக்கக் கூடத் தயங்கும் சராசரி மனிதனாக வாழ்க்கையை தயக்கத்துடன் எதிர் கொள்கிறான். யதார்த்தத்தில் இப்படிப்பட்ட மனிதர்களே எங்கும் காணக் கிடைக்கிறார்கள் என்பது மட்டுமல்ல; அவர்களே தங்கள் வாழ்வனுபவத்தால் தங்களை உருமாற்றிக் கொண்டு வெற்றியடைகிறார்கள் என்பதே உண்மை. அது அரசியலாகட்டும், சினிமாவாகட்டும், ஆன்மீகமாகட்டும் எங்கும் நாம் இப்படிப்பட்ட கண்ணன்களை அதிகம் பார்க்கலாம். கண்ணன்களே நாளடைவில் கம்சர்களாக மாறுவது தான் வாழ்க்கையின் குரூரம் அல்லது யதார்த்தம்.

மொத்தம் பதினெட்டு அத்தியாயங்களில், கொஞ்சம் கூடத் தொய்வு இல்லாமல் மிக விறுவிறுப்ப்பாக சுவாரஸ்யமாக இந்த நாவலைப் படைத்திருக்கிறார் திரு. பி.ஏ.கிருஷ்ணன். தடை நடையே இல்லாமல் செல்வது நாவலின் வெற்றிக்குச் சான்றாகிறது. உணர்வுரீதியாக சொற் சித்திரம் தீட்டியிருக்கிறார் எனக் கூறின் அது மிகையில்லை. தாமிரபரணி ஆறு, சுலோசன முதலியார் பாலம், நாங்குநேரிக் குளம், வண்ணார் பேட்டை பங்களா, குற்றால அருவி என காட்சிப்படுத்துதல்களும் விவரணைகளும் வெகு இயல்பாக இருக்கிறது.

ஆரம்பம், நடு, முடிவு என்று நாவலின் முழுமையான அம்சங்கள் கொண்டிருந்தாலும், நாவல் இறுதியில் ’சென்று தேய்ந்து இருதல்’ என்னும் வகையிலேயே அமைந்திருக்கிறது. சொல்லப்போனால் நம்பியின் மரணத்தோடு, நம்மாழ்வார் திரும்ப வந்து குடும்பத்துடன் இணைவதோடு நாவல் ஒருவிதத்தில் முற்றுப் பெற்று விடுகிறது எனலாம். மற்றொரு விதத்தில் பார்த்தால் நாவல் முடியவில்லை, கண்ணனின் டில்லி பயணத்தோடு தற்காலிகமாக முடிந்திருக்கிறது அவ்வளவே! கண்ணனின் டில்லி வாழ்க்கை, சீக்கியர் பிரச்சனை, சாகித்ய அகாதமி விவகாரம், டில்லி அரசியல், காந்திகளின் எழுச்சி-வீழ்ச்சிகள், கழகங்களின் வீழ்ச்சி என்று சமகாலச் செய்திகளை கண்ணன் மூலமாகப் பதிவு செய்ய கிருஷ்ணனுக்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது. புலிநகக் கொன்றையின் இரண்டாம் பாகத்தை தாராளமாக எதிர்பார்க்கலாம்.

பறவைகள் கிளைகளில் அமர்ந்து கூச்சலிட்டுக் கொண்டிருக்கலாம். பூக்களை அழிக்கலாம். சில நேரங்களில் அமைதியாகவும் இருக்கலாம். ஆனால் மரம் அதனால் எல்லாம் பாதிக்கப்படுவதில்லை. அது அமைதியாய் அனைத்திற்கும் சாட்சியாய் இருந்து நடப்பனவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. மனிதர்களும் அப்படித்தான். வருகிறார்கள், போகிறார்கள். ஆனால் இது எதனாலும் பாதிக்கப்படாத காலம், எல்லாவற்றிற்கும் சாட்சியாய் இருக்கிறது, புலிநகக் கொன்றையைப் போலவே!

புலிநகக் கொன்றை

காலச்சுவடு பதிப்பகம்

669, கே.பி.சாலை

நாகர்கோவில் – 629001


நன்றி : – அரவிந்த்

************

Advertisements

2 thoughts on “பி.ஏ.கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை – 2

  1. தங்களது மரணத் தூதுவன்-அமானுஷ்யப் பூனை என்கிற இடுகையை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன். நேரமிருக்கும்போது பார்வையிடுங்கள். அதற்கான சுட்டி இதோ.http://blogintamil.blogspot.in/2012/06/blog-post_21.html

    1. மிக்க நன்றி நுண்மதி. உங்கள் கவிதையும் பார்த்தேன். வலைச்சரமும் பார்த்தேன். சிறப்பு. மகிழ்ச்சி. மிக்க நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.