பி.ஏ.கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை – 1

“எக்கர் ஞாழல் இறங்கிணர்ப் படுசினைப்
புள்ளிறை கூருந் துறைவனை
உள்ளேன் தோழி படீ இயரென் கண்ணே…” 

சங்க இலக்கியங்களில் ஒன்றான ஐங்குறுநூற்றில், மருதத் திணையின் ஞாழல் பத்தில் 142வது பாடலாக இடம் பெற்றிருக்கிறது மேற்கண்ட பாடல். ’ஞாழல்’ என்பது புலிநகக் கொன்றை மரத்தைக் குறிக்கும்.

’தோழி கேள். எவனுடைய நாட்டின் மணலடர்ந்த கரையில் இருக்கும் புலிநகக் கொன்றை மரத்தின் தாழ்ந்த, பூத்திருக்கும் கிளைகளில் பறவைகள் ஆக்கிரமித்துக் கூச்சல் இட்டு அழிவு செய்து கொண்டிருக்கின்றனவோ அவனை இனி நான் நினைக்க மாட்டேன். என் கண்களுக்குச் சிறிதாவது தூக்கம் கிடைக்கட்டும்’ என்பது பாட்டின் பொருள்.

பி.ஏ.கிருஷ்ணன் அவர்களால் ‘Tiger claw tree’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்ற நூல், தமிழில் ’புலிநகக் கொன்றை’ என்ற பெயரில் வெளியாகி சிறப்பான கவனத்தைப் பெற்றது. அசோகமித்திரனால், ‘ஆங்கிலத்தில் எழுதப் பெற்ற தமிழ்நாவல்’ என்று பாராட்டையும் பெற்ற இந்நூலை, தமிழில் வெளியாகியுள்ள முக்கியமான இலக்கியப் படைப்புகளுள் ஒன்று எனக் கூறலாம்.

1970ல் ஆரம்பித்து முன்னோக்கியும் பின்னோக்கியுமாக நகர்கிறது நாவல். தென்கலை ஐயங்கார் குடும்பத்தின் நான்கு தலைமுறைகளை கதைக் களமாகக் கொண்டு நாவல் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொன்னா-ராமன் தம்பதியினரின் குடும்ப வாழ்க்கையில் ஆரம்பித்து, அப்படியே சிப்பாய் கலகம், கட்டபொம்மு கிளார்க்கைக் கொன்றது, பாஞ்சாலக் குறிச்சி வீழ்ந்தது, கட்டபொம்மு தூக்கிலிடப்பட்டது, மருதுபாண்டியரின் அதிரடி அறிவிப்புகள், ஆஷ் கொலை, வாஞ்சிநாதன் தற்கொலை என்ற வரலாற்றுத் தகவல்கள் எல்லாம் கதையினூடே சம்பவங்களாக, வாழ்க்கை நிகழ்ச்சிகளாகக் கண்முன் விரிகின்றன. சுதந்திரப் போராட்டம், அதற்குப்பின் நடந்த இந்திய அரசியல் சமூக மாற்றங்கள், அதன் பின்னணிகள் என விரிகிறது கதை.

நான்கு தலைமுறைகளைப் பற்றிய கதை என்பதால் நாவலில் ஏகப்பட்ட விவரணைகள் கொட்டிக் கிடக்கின்றன. மேம்போக்காகப் படிக்காமல் ஆழ்ந்து படிப்பதன் மூலம் நாவல் காட்டும் பல்வேறு காலகட்டத்து மக்களின் வாழ்க்கை முறை, சமூகப் பின்னணிகள், நெறிமுறைகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் என பலவற்றை அறிந்து கொள்ள இயலுகிறது. நூல் உருவாக்கத்திற்காக ஆசிரியர் செய்திருக்கும் கடுமையான உழைப்பும் கண்முன் தெரிகிறது.

பி.ஏ.கிருஷ்ணன்

நாங்குநேரி ஜீயரின் மடப்பள்ளியில் புளியோதரைப் புலியாக விளங்கும் ஐயங்காரின் மகள் பொன்னா என்கிற பொன்னம்மாள். அவளுக்கும் பிரபல உண்டியல்காரக் குடும்பத்து லேவாதேவி கிருஷ்ண ஐயங்காரின் செல்ல மகன் ராமன் என்கிற ராமன் ஐயங்காருக்கும் வானாமாமலை பதினெட்டாம் பட்ட ஜீயரின் ஆசிர்வாதத்தோடு திருமணம் நடக்கிறது. நம்மாழ்வார், பட்சி என இரு ஆண் மகவுகளுக்கும், ஆண்டாளுக்கும் தாயாகிறாள் பொன்னா. சாப்பாட்டுப் பிரியனான ராமனுக்கு மதுப் பழக்கமும் விரும்பத்தக்கதாயிருக்கிறது. ஆண்டாளுக்குத் திருமணமான கையோடு அவள் கணவன் குளத்தில் மூழ்கி இறந்து விட விதவையாகிறாள். ராமன் ஐயங்கார் அவளுக்கு மறுமணம் செய்ய நினைக்க, ஜீயர் அதை ’குல ஆச்சாரத்துக்கு விரோதம்’ என்று சொல்லித் தடுக்க, அந்தச் சோகத்திலேயே ராமனும் இறந்து விடுகிறார். பொன்னா தனியளாகிறாள்.

நம்மாழ்வாரையும் பட்சியையும் வளர்த்து ஆளாக்க, நம்மாழ்வாருக்கு காங்கிரஸ் கட்சியின் மீதான் அபிமானம் அதிகமாகிறது. ஆனால் காந்தியத்தை விட, புரட்சியே உயர்ந்தது என நினைக்கிறான். திலகரின் கொள்கைகள் அவனை ஈர்க்கிறது. திலகரை மாதிரி நான்கைந்து தலைவர்கள் இருந்தால் போதும். மூட்டை முடிச்சுக்களோடு வெள்ளைகாரன் கப்பல் ஏறி விடுவான் என்பது அவன் எண்ணமாக இருக்கிறது. வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமண்ய பாரதி, நீலகண்ட பிரம்மச்சாரி வ.வே.சு அய்யர், வாஞ்சி என எல்லோரையும் சந்திக்கிறான். பாரதமாதா சங்கக் கூட்டங்களில் கலந்து கொள்கிறான். பொன்னாவின் தூண்டுதலால் லட்சுமியைத் திருமணம் செய்து கொள்ள, அவளோ, மது என்ற மதுரகவியைப் பெற்றுக் கொடுத்து விட்டுக் காலமாகி விடுகிறாள். தனியனாகிறான் நம்மாழ்வார். இந்தியா புரட்சியால் விடுதலை பெறும் என்கிற அவன் நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்கிறது.

ஏற்கனவே தளர்ந்திருக்கும் அவனை பொன்னா மறுமணத்திற்குத் தூண்ட, மறுத்து விட்டு, விரக்தியுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறான். வடநாட்டுக்குச் சென்று ஜோஷி மடத்தில் சேர்ந்து அவன் சாமியாராகி விட, அவன் வருவான் என்ற நம்பிக்கையில் நாட்களைக் கடத்துகிறாள் பொன்னா.

நம்மாழ்வாரது மகன் மதுரகவியை அத்தை ஆண்டாள் வளர்க்கிறாள். பின் வ.வே.சு.அய்யரின் சேரன்மாதேவி குருகுலத்தில் சேர்க்கப்படுகிறான் மது. கதையினூடாக குருகுலத்தில் நடந்த ’பந்தி வஞ்சனை’ சம்பவங்கள் விளக்கப்படுகின்றன. அடுத்து பாபாநாசம் மலை அருவியில் மதுவின் கண்முன்னே அய்யர் இறந்து படுகிறார். நாளடைவில் காந்தியின் சித்தாந்தங்கள் பிடிக்காமல் போகிறது மதுவுக்கு. கம்யூனிஸம் ஈர்க்கிறது. கமலாவுடன் கல்யாணமும் நடக்கிறது. ஒரு பொதுவுடைமைப் போராட்ட ஊர்வலத்தில் இறந்துபடுகிறான் மது.

பட்சி ஹோம்ரூல் இயக்கத்தில் ஈடுபட்டு வயதாகி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். பிரபலவழக்கறிஞர், ராஜாஜியின் அபிமானியும் கூட. ஆண்டாளோ சித்தம் தடுமாறி மனநோய் விடுதியில் சேர்க்கப்பட்டு இறந்து போய் விடுகிறாள்.

பட்சியின் ஒரே மகன் திருமலை. அவனுடைய மகன் கண்ணன் நெல்லையில் கல்லூரி விரிவுரையாளன். திருநெல்வேலியில் பேராசிரியரை போலீஸ் காவலில் வைத்த வழக்கில் கலெக்டருக்கு எதிராகப் பேசி வேலையை இழக்கிறான். அவனுக்கு பம்பாய்க்காரி உமாவின் மீது காதல். உமா அவனை ஐ.ஏ.எஸ். படிக்கச் சொல்கிறாள். கண்ணன் வழக்கம் போல சோம்பேறியாக இருக்கிறான்.

மதுவிற்கு பிறந்த நம்பி, ரோசா என்னும் உடல் ஊனமுற்ற வேற்று ஜாதிப் பெண்ணை மணந்து கொள்கிறான். டாக்டராக இருக்கும் இருவரும் மக்கள் சேவையாற்றுகின்றனர். நம்பி கம்யூனிஸ்ட் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு உடையவனாக இருக்கிறான்.

இறந்துபோய் விட்டதாக அனைவராலும் கருதப்பட்ட நம்மாழ்வார் ஜோஷிமடத்திலிருந்து தம்பி பட்சிக்கு எழுதிய கடிதம் கிடைக்க, நம்பி அவரைச் சந்திக்க அங்கே செல்கிறான் – நாவலில் இந்தச் சந்திப்பு மிக முக்கிய இடம் பெறுகிறது – அவனிடம் பின்னர் தான் அங்கு வந்து சேர்வதாகக் கூறுகிறார் நம்மாழ்வார்.

குற்றாலம் செல்லும் நம்பி, பூர்வீக ஊரான புனலூருக்குச் செல்கிறான். நக்சலைட் என்ற உளவுத்துறையின் சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு சித்திரவதைப் செய்யப்படுகிறான் – அப்போது வெளிப்படுத்தப்படும் நம்பியின் சிந்தனைகளும், உரையாடல்களும் நாவலை வேறொரு தளத்தை நோக்கி நகர்த்துகிறது என்றால் அது மிகையில்லை – பின்னர் குற்றமற்றவன் என்று விடுதலை செய்யப்படும் நம்பி, மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறான். செய்தி கேட்டுக் குடும்பம் அதிர்ச்சியடைகிறது. ஒரு கள்ளி படர்ந்த திருவனந்தபுரம் சுடுகாட்டில் நம்பி புகைந்து போகிறான், அவன் லட்சியங்களைப் போலவே.

ஜோஷி மடத்திலிருந்து புறப்பட்டு, தல யாத்திரை செய்து கொண்டே ஊருக்குத் திரும்பி வரும் நம்மாழ்வார், தன் குடும்பத்தினரைச் சந்திக்கிறார். நம்பி இறந்து போன சம்பவங்களைக் கேள்விப்பட்டு அதிர்ந்து போகிறார். படுத்த படுக்கையாக இருக்கும் பொன்னாவோ பிள்ளை நம்மாழ்வாரை அடையாளமே கண்டு கொள்ளாமல் இருக்கிறாள்.

கண்ணன் ரோசாவை மணம் செய்து கொள்ள வேண்டுகிறான் அவள் மறுத்து விடுகிறாள். இறுதியில் நம்மாழ்வார் ரோசாவுடனும் அவளுடைய கைக்குழந்தையுடனும் அவள் வீட்டிலேயே தங்கி விடுகிறார். உமாவின் நினைவுடன் கண்ணன் ஐ.ஏ.எஸ்.தேர்வு முடித்து டெல்லி செல்கிறான்.

இதுதான் 300 பக்கங்களுக்கு மேற்பட்ட புலிநகக் கொன்றையின் கதைச் சுருக்கம்.

(தொடரும்)

நன்றி : அரவிந்த்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.