சில நேரங்களில் சில சந்திப்புகள் – 2 (பகுதி -3)

முதல் பகுதி

இரண்டாம் பகுதி

இதழ் வெளிவந்ததும் தொலைபேசிவிட்டு ஒரு மாலை நேரத்தில் நானும் எங்கள் முதன்மை ஆசிரியர் திரு. மதுரபாரதி அவர்களும் அவரைக் காணச் சென்றோம்.

அதே எளிமையான மாடி அறை.

“வாங்க.. வாங்க..” என்று வரவேற்றார்.

”இதுதான் என்னோட ரூம். எழுதறது, படிக்கறதுன்னா இங்க வந்துதான் எல்லாம் செய்வேன். மீதி நேரத்துல கீழே பேரப் பிள்ளையோட போய் விளையாடுவேன். எங்க கிராமத்துலேர்ந்து யாராவது ஏதாவது வேலையா வந்தா இங்கே தான் வந்து தங்கிக்டுவாங்க. அவங்க குளிக்க கொள்ளன்னு எல்லாத்துக்கும் மொட்டை மாடில சௌகர்யம் பண்ணியிருக்கேன்” என்றார்.

“பொதுவா என்னை மாதிரி ஆளுங்களோட இன்டர்வியூ எல்லாம் பத்திரிகைல வந்தா நாமதான் பாத்து தெரிஞ்சிக்கிட வேண்டி இருக்கும். ஆனா உங்க இன்டர்வியூ வந்தவுடனே அமெரிக்காவுலேர்ந்தே கூப்பிட்டுப் பேசினாங்க. ஆச்சரியமாதான் இருக்கு” என்றார்.

இதழை அவரிடம் கையளித்தோம். வாங்கிப் புரட்டிப் பார்த்து விட்டு, ’அப்புறமா படிக்கிறேன்’ என்றார்.

அப்புறம் பொதுவான பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார்.

சமூகம் பற்றி, மக்கள் வாழ்க்கை பற்றி, சமூகம் தற்போது அடைந்து கொண்டிருக்கும் மாற்றங்கள் பற்றிச் சொன்னார்.

கடந்த முறையை விட இந்த முறை சற்று உற்சாகமாகவே இருந்தார். (எடிட்டரும் வந்திருந்ததுதான் காரணமோ?)

எழுத்துலகம் பற்றி, பதிப்புலகம் பற்றி நிறைய விஷயங்களைப் பேசினார். “பா.ராகவன்” நூல்கள் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குது. எளிமையா, ரொம்ப சுவையா எழுதறாரு” என்றார்.

”கிராமத்துப் பக்கம் பாத்திங்கன்னா முன்னாடி எல்லாம் கல்யாணம்னு போய் பத்திரிகை வச்சா பத்திரிகையக் கொடுத்துட்டு அவங்க வீட்டிலேர்ந்து தீப்பெட்டிய வாங்கிட்டு வந்திருவாங்களாம். எதுக்குன்னா பத்திரிகை வச்சதுக்கப்புறம் அவங்க தங்களோட வீட்ல சமைக்கக் கூடாதாம். இவங்க வீட்லதான் சாப்பிடணுமாம். அப்படி எல்லாம் சம்பிரதாயம் இருந்திருக்கு. ஆனா இப்போ எல்லாம் தலைகீழா மாறிப் போச்சு” என்றார்

தனது திரையுலக அனுபவம் பற்றி அவர் சொன்னது மிகவும் நகைச்சுவையாக இருந்தது. பேசிக் கொண்டிருக்கும்போதே அவரது துணைவியார் தேநீர் எடுத்து வந்து உபசரித்தார். பேரப் பிள்ளை ஸ்கூல் லீவ் என்பதால் ஊருக்குப் போயிருப்பதாகச் சொன்னார்.

”கண்ல எனக்கு க்ளுக்கோமா ஆபரேஷன் பண்ணியிருக்காங்க. அது இன்னொரு கண்ணுக்கும் பரவிடுமாம். அதுனால விடாம ஐ-ட்ராப்ஸ் போட்டுட்டு வர்றேன். இது ஏன் வருதுன்னு டாக்டர் கிட்ட கேட்டேன். நம்ம உடம்புல பிரஷர் இருக்கிற மாதிரி கண்லயும் பிரஷர் உண்டாம். கண்ல நெகிழ்ச்சித் தன்மை இல்லாமப் போய், அதாவது ஈரப்பசை இல்லாம காஞ்சு போய் கண்ணுக்கு ஒருமாதிரி பிரஷர் அதிகமாகிடுதாம். அது அதிகமாக அதிகமாக பார்வை நரம்பு பாத்திச்சிடுமாம். கண்ல நல்லா எப்பவும் ஈரப்பசையோட இருக்குற மாதிரி பார்த்துக்கணுமாம். அழுதாக்க அந்த ஈரப்பசை அதிகமாச் சுரக்கும்ங்கறாங்க. ஆனா பாருங்க நான் அழுததே இல்ல. இப்படித்தான் சின்ன வயசுல எங்க வீட்ல ஒரு துக்கமாயிருச்சி. எல்லாம் அழுதுக்கிட்டிருக்காங்க. ஆனா எனக்கு அழுகையே வரலை. அழுகக் கூடாதென்னாம் இல்ல. எனக்கு ஏனோ அழுகை வரலை. வந்திருக்கிற சொந்தக்காரங்க எல்லாம் ஒருமாதிரி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. சிலபேர் திட்டக் கூட ஆரம்பிச்சிடாங்க. இவன் என்னடா பைத்தியமா! கொஞ்சம் கூட கவலைப்படாம, அழாம இருககனேன்னுட்டு. என்ன செய்யறது, எனக்கு அழுகை வரலை. ஆனா, அப்படி இருக்கக் கூடாதாம். அழணுமாம். அப்படி அழுதாதான் கண்ணுக்கு நல்லதாம். கண்ணீர் அந்த ஈரப்பசையை உருவாக்கி, காய்ஞ்சு போகாம வச்சிருக்குமாம். நான் அதிகம் அழாததுனாலதான் களுக்கோமா வந்திருக்குமோ என்னவோ” என்றார்.

அப்புறம் தனது பணி அனுபவங்கள் பற்றி, தான் செல்லும் கூட்டங்கள், விழாக்கள் பற்றிய அனுபவங்களைச் சொன்னார். எல்லாவற்றிலும் ஒரு நகைச்சுவை இழையோடியது.

நான் பெற்ற அந்த நகைச்சுவை இன்பத்தைநீங்களும் பெற இங்கே செல்லுங்கள்…

தன் வாழ்க்கையில் ’போதும்’ என்ற ஒரு மன நிறைவோடு வாழ்ந்த ஒரு நல்ல மனிதரைச் சந்திக்கும் வாய்ப்பை அளித்த ”தென்றல்” இதழுக்கு எப்போதும் என் நன்றி உண்டு.

அவரை நான் சந்தித்து விட்டு வந்த சில மாதங்களிலேயே அவர் மறைந்து விட்டார் என்றாலும் காற்றின் கு்ரலாய் அவர் குரல் இணைய வெளிகளிலும், வானொலியிலும் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
என் நினைவிலும்…

***

(எழுதியவர் : அரவிந்த், தென்றல்)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s