சில நேரங்களில் சில சந்திப்புகள் – 2 (பகுதி -2)

முதல் பகுதி

நான் கேள்விகள் கேட்கக் கேட்க மிகச் சரளமாக பதில் வந்தது அவரிடமிருந்து.

அவருக்கிருந்த மேதமை, தான் என்ற அகங்காரமின்மை, எதையும் பெரிதாக நினைத்து அலட்டிக் கொள்ளாத தன்மை, நான் என் கடமையைத் தானே செய்தேன் என்ற அடக்கம், கிராமத்துப் பின்புலம், அந்த நினைவுகளின் உயிர்ப்பு, குடும்பத்தின் மீது இருந்த பாசம், பேரனின் மீது இருந்த அளவு கடந்த நேசம் என ஒவ்வொன்றாக அறிந்து கொள்ள முடிந்தது அவரது பேச்சிலிருந்து.

“நான் என்னங்க பெரிசா செஞ்சிட்டேன். என் வேலை அது. அதை செய்யச் சொன்னாங்க. நானும் அதுக்காக நிறைய புஸ்தகங்களை தேடி, படிச்சு, கருத்தை உள் வாங்கிக்கிட்டு செஞ்சேன். அவ்ளோதான். எதுவுமே என்னோட சொந்தக் கருத்து கிடையாது. எல்லாமே இரவல்தான். என்னைப் போய் ”மகான்”னு நினைச்சி கடிதம்லாம் போட்டிருக்காங்க. சில பேர் நான் பெரிய சாமியார்னு நினைச்சி என் கிட்ட ஆசிர்வாதம் வாங்கணும்கறதுக்காக எனக்கு முன்னாடியே ஆபிஸ்ல வந்து காத்திட்டிருப்பாங்க. இப்படித்தான் ஒருதடவை ஒரு அம்மா தன் மகளோட வந்திருந்தாங்க. நான் சாமியார் எல்லாம் இல்லம்மா. சாதாரண ஆசாமின்னு சொன்னாலும் கேட்காம, சார், உங்களைப் பத்தி உங்களுக்குத் தெரியாது சார். எங்களுக்குத்தான் தெரியும்னு பிடிவாதமாச் சொல்லி, இரண்டு பேரும் என் காலில விழுந்திட்டாங்க. அப்புறம் எந்திரிச்சு நின்னு திருநீறு பூசி விடுங்கன்னாங்க. அட, நானே வச்சிக்கிறதில்லையேம்மான்னேன். பரவாயில்லீங்க. நாங்க கொண்டு வந்திருக்கோம்னு சொல்லி அவங்க கொண்டு வந்த திருநீறை என் கையில கொடுத்து, ’சீக்கிரம் கல்யாணம் ஆகணும் சொல்லி ஆசிர்வாதம் பண்ணுங்க சார்’ன்னு சொல்லி அதை மகளுக்கு வச்சி விடச் சொன்னாங்க. நானும் வேற வழியே இல்லாம அப்படியே செஞ்சேன். இதுலெ என்ன ஆச்சரியம்னா 15 நாள் கழிச்சு அந்த அம்மா வந்தாங்க. மறுபடியும் ஆசிர்வாதமான்னு நான் பயந்துகிட்டிருக்கிறப்போ அவங்க ரொம்ப சந்தோஷமா, சார் உங்க ஆசிர்வாதத்துனால என் பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயமாயிருச்சி அப்படின்னாங்க. அவங்களுக்கு சந்தோஷம். எனக்கோ அதிர்ச்சி. ஒருவேளை நமக்கு ஏதோ பெரிய அருள், சக்தி எல்லாம் இருக்கோன்னு கூட நினைக்க, நம்ப ஆரம்பிச்ட்டேன்னா பார்த்துக்குங்களேன் ” என்றார் சிரிக்காமல்.

தான் அதிகம் சிரிக்காமல், நம்மை சிரிக்க வைக்கும்படி எளிமையாகப் பேசும் அவரது பாணி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த நேர்காணல் மிக சுவாரஸ்யமான ஒன்றாக, மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது.

ஆன்மீகம் என்பது பற்றிய அவரது ஆழமான கருத்து, தெளிவான சிந்தனை, குழப்பமின்மை, தான் என்ன செய்கிறோம் என்பது பற்றிய உறுதி, ’நான் கடமையைச் செய்தேன்; பலனை எதிர்பாராமல்’ என்ற உளப்பாங்கு, ’இந்த உலகத்துல உள்ள எதிலுமே பெரிசா எனக்கு எந்த ஈடுபாடும் கிடையாதுங்க’ என்று சொன்ன நேர்மையான ஒப்புதல் என எல்லாமே என் கண்ணுக்கு அவரை ஒரு ”கர்மயோகி”வே காட்டியது.

அவர் போட்டிருந்தது ஒரு சாதாரண வெள்ளை நிற வேட்டி. வெள்ளை நிறச் சட்டை. அந்தச் சட்டையிலும் கூட முன் புறத்தில் ஒரு பட்டனை அவர் போடவில்லை. அலட்சியம் என்பதில்லை. அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை. அதை ஒரு பெரிய விஷயமாக நினைக்கவும் இல்லை. எந்தக் கேள்விக்கும் அவர் உணர்ச்சிவசப்படவில்லை. புகைப்படம் எடுக்கும் போதும் கூட அப்படியே இருந்தார். புகழையும், பணத்த்தையும் பலர் தேடித் தேடி அலைந்து கொண்டிருக்கையில் அது குறித்த எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் இருக்கும் இவர் உண்மையிலேயே கீதை சொல்லும் ”ஸ்திதப் பிரக்ஞன்”தான் என்று நினைத்தவாறே மீண்டும் சந்திப்பதாகக் கூறி விடைபெற்றேன்.

என் மனம் முழுதும் அவரது எளிமையும், அகங்காரமின்மையும் வியாபித்து இருந்தது.

(தொடரும்)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s