சில நேரங்களில் சில சந்திப்புகள் – 1 (இறுதிப் பகுதி)

முதல் பகுதி இங்கே

இரண்டாம் பகுதி இங்கே

மறுமுறை டைப் செய்த தாள்களுடன் அவரைப் பார்க்கச் சென்றேன்.

“எதையும் சரியாச் செய்யணும் இல்லையா? தவறா ஒரு கருத்து வந்திடக் கூடாது” என்று சொல்லி விட்டு பக்கங்களைப் பார்க்க ஆரம்பித்தார்.

“அட.. பரவாயில்லையே.. நான் சொன்ன மாதிரியே எல்லாம் அப்படியே வந்திருக்கே! ஒண்ணும் பெரிசா வேலை இருக்கற மாதிரி தோணலை” என்று சொல்லி விட்டு முழுமையாக ஒருமுறை படித்துப் பார்த்தார். பின் ஓரிரு வார்த்தைகளை மட்டும் அடித்து மாற்றினார். “ஓகே. இதை பப்ளிஷ் பண்ணலாம்” என்றார்.

நான் வாங்கி வைத்துக் கொண்டேன்.

இப்போது மீண்டும் பேச்சு துவங்கியது. அவரது குடும்பம் பற்றி, எழுத்தே தான் வாழ்க்கையாகக் கொண்டதால் அவர்கள் பட்ட கஷ்டங்கள் பற்றி, மனைவியின் அப்பாவித்தனம் பற்றி, சோடியம் குறைபாட்டால் தனக்கு அடிக்கடி ஏற்படும் ஞாபகமறதி பற்றி எல்லாம் விரிவாகப் பேசினார். பின் பேச்சு ஆன்மீகம், ரமணர், அன்னை, அரவிந்தர் என்று திசை மாறி சினிமா, சக கலைஞர்கள், எழுத்தாளர்கள் ஜெயமோகன், சுந்தர ராமசாமி, சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, வெங்கட்சாமிநாதன், எஸ்.பொ, விமலாதித்த மாமல்லன் என்றெல்லாம் பயணித்து பின் எழுத்தாளர்களின் சண்டை, சச்சரவுகள், கருத்து மோதல்கள் என்று பயணப்பட்டு இறுதியில் ஜோதிடத்தில் வந்து நிலைத்தது.

ஜோதிடத்தில் எனக்கிருந்த ஆர்வம் குறித்து, நாடி ஜோதிடத்தில் நான் செய்திருந்த ஆய்வுகள் குறித்துச் சொன்னேன்.

சுவாரஸ்யமாகக் கேட்டார்.

“இங்கே கீழ்ப்பாக்கத்துல கூட ஒரு இடத்துல பார்க்கறான். நான் ஃப்ரெண்டோட போயிருந்தேன். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணச் சொன்னான். அப்புறம் தேடிப் பார்த்துட்டு ஓலை கிடைக்கலைன்னு போகச் சொல்லிட்டான். அப்புறம் அவர் வேற எங்கெயோ போய்ப் பார்த்ததாச் சொன்னார்.” என்றார்.

“நீங்க பார்த்திருக்கீங்களா?” என்றேன்.

“ம். ரொம்ப வருஷம் முன்னாடி..” என்றார்.

நான் மேலும் ஆவலுடன், “அதில் வந்தபடி எல்லாம் நடந்ததா?” என்றேன்

“இல்லே. அவன் ஏதேதோ சொன்னான். ஒண்ணும் இப்போ சரியா ஞாபகம் இல்லை” என்றார் அசுவாரஸ்யமாக.

அதற்குமேல் அதுபற்றிப் பேச்சைத் தொடருவது சரியாக இருக்காது என்றெண்ணி சற்று நேரம் மௌனமாக இருந்தேன்.

தற்கால பத்திரிகையுலகம் பற்றிச் சில விஷயங்கள் சொன்னார். புத்தகங்கள் விற்பனை பற்றி, ராயல்டி பற்றி, பதிப்பகங்கள் பற்றி அவரது அனுபவங்களைச் சொன்னார்.

”இந்த இண்டர்வியூ கொஞ்சம் முன்னாடியே வந்திருந்தா அழகிய சிங்கரோட புக்ல போட்டிருக்கலாம். போன மாசம் தான் அவர் வந்து எல்லாத்தையும் கலெக்ட் பண்ணிண்டு புக்கா போட ஏற்பாடு பண்ணிட்டுப் போனார்”

”இனடர்நெட்டை நான் அதிகம் பார்க்கறதில்லை. கண் வலிக்கிறது. யாராவது போன் பண்ணி, ’மெயில் அனுப்பியிருக்கேன் பாருங்கோ!’ அப்படின்னு ஏதாவது சொன்னா பார்க்கறதுண்டு” என்றார்.

பக்தி, ஆன்மீகம், வேலை வாய்ப்பு என்று பொதுவாக சில விஷயங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம்.

நான் விடைபெற எத்தனித்தபோது வந்த நண்பர் ஒருவருக்கு என்னை அறிமுகப்படுத்தினார். மலேசியாவில் இருந்து அப்போது விடுப்பில் சென்னைக்கு வந்திருக்கும் தன் மகனுக்கும் என்னை அறிமுகம் செய்வித்தார்.

இதழ் வெளியானதும் வந்து சந்திப்பதாகக் கூறி விடை பெற்றேன்.

நான் வெளியில் வந்து ஆட்டோ எங்கே கிடைக்கும் என்று தேடி நடந்து கொண்டிருக்கும் போது அந்த வேகாத வெயிலில், நண்பரது ஸ்கூட்டரின் பெவிலியனில் அமர்ந்து அவர் எங்கோ சென்று கொண்டிருந்தார்.

****

இதழ் வெளிவந்ததும் எடிட்டருடன் வந்து சந்தித்தேன். எங்கள் இதழின் எடிட்டர் (திரு. மதுரபாரதி) தனது டெல்லி வாசத்தை, அங்கே அவரைச் சந்தித்ததை, கணையாழியில் வெளியான தனது “தீ” சிறுகதைக்கு இலக்கியச் சிந்தனை பரிசு கிடைத்ததை, அப்போது ”அவர்” ஆசிரியராக இருந்ததை எல்லாம் சொல்லிப் பேசிக் கொண்டிருந்தார். ஒரு புன்முறுவலுடன் அதனைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு நானும், எடிட்டரும் எங்கள் புத்தகங்களை பரிசாக அளித்தோம். பெற்றுக் கொண்டார். படித்து விட்டுத் தகவல் சொல்வதாகச் சொன்னார். சில வாரங்கள் கழித்து அவரிடமிருந்து ஒரு அஞ்சலட்டை வந்தது…

அதில்….

– என்று எழுதியிருந்தார்.

அவருடைய உள்ளத்தை உள்ளபடி பிரதிபலிக்கும் சுவையான நேர்காணலை இங்கே  வாசிக்கலாம்.

தனது வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ கஷ்டங்களை, பிரச்சனைகளை, துயரங்களைச் சந்தித்திருந்த போதும் அதைப் பெரிதாக நினைக்காமல், அதை ஒரு பெரிய விஷயமாக விரித்துக் கூறாமல், “என்ன செய்வது, நான் தேர்ந்தெடுத்த பாதை அப்படி” என்று சுலபமாக அதை ஏற்றுக் கொண்டு கடந்து வந்த அந்த மனிதரை நினைத்து இன்னமும் வியந்து கொண்டே இருக்கிறேன்.

***

நன்றி : அரவிந்த்

மின்னஞ்சல் முகவரி : aravindsham at gmail dot com

முகநூல் முகவரி : https://www.facebook.com/arvindswam

***

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s