நம்பலாமா, நாடி ஜோதிடத்தை? பகுதி – 3

முதலில் கீழ்கண்டவற்றைப் படித்து விடவும்… இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இந்தக் கட்டுரை புரியும் 😉

நம்பலாமா, நாடி ஜோதிடத்தை?  பகுதி – 2

நம்பலாமா, நாடி ஜோதிடத்தை?  பகுதி – 1

நாடி ஜோதிடம் உண்மையா- 4

நாடி ஜோதிடம் உண்மையா- 3

நாடி ஜோதிடம் உண்மையா- 2

நாடி ஜோதிடம் உண்மையா – 1

ஜோதிடக் கேள்வி – பதில்கள்

ஜோதிடம் சில கேள்விகள்

சில ஆண்டுகளுக்கு முன் என் நண்பர் ஒருவர் சென்னையின் புகழ் பெற்ற நாடி ஜோதிட நிலையம் ஒன்றில் நாடி ஜோதிடம் பார்த்தார். தனது பிரச்சனைகள் அதன் மூலமாவது தீருமா என்று நம்பி அதனைப் பார்த்தார். அவருக்கான ஜோதிடக் குறிப்பில்

______________________________________
______________________________________
______________________________________
மகனிவனும் முன்னொரு கலிங்கதேசம்

தேசமதில் வணிக குடி தனவான் சேயாய்
தன்னீன்றோர் ஆடலரசன் பர்வதம்மாள்
மாசில்லா பரசுராமன் நாமம் சூடி
மகனிவனும் சேய்தோன்றி வாழும்காலம்

காலமதில் தரைவழி தேட்டுமாண்டு
காளையவன் வருமானம் இல்லாள் கூடி
செல்வனிவன் தன ஆசை இடையில் கொண்டு
செப்பிடவே பலராத்தி அபகரித்து

அபகரித்துத் தனதாக்கி வருவாய் லாபம்
அகங்கார செருக்குடனே மனம்போல் வாழ
செப்பிடவே இவையறிந்து இல்லாள் கேட்க
சினம் கொண்டு அன்னவளை வீவாக்கி

வீவாகி உற்றதொரு சாபம் தன்னால்
வீண்பழியதும் மகன் வாழ்வில் பிரிவும் துன்பம்
நவிலவே பிணிவிலகா வீவும் காண
நரனிவனும் இறை வேண்டி பிறவி கேட்க

கேட்டதனால் இப்பிறப்பும் மகனும் காண
காளையர்க்கு முன் பாவம் விலகா வாட்டும்
________________________________________
______________________________________

என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது நண்பர் பூர்வ ஜென்மத்தில் கலிங்க தேசத்தில் (தற்போதைய ஒரிஸ்ஸா) வணிக குலத்தில் பிறந்தவர். தந்தை பெயர் நடராசன். தாயார் பெயர் பர்வதம்மாள். முன் ஜென்மத்தில் இவர் பெயர் பரசுராமன். செல்வம் செல்வாக்கோடு, மனைவி மக்களுடன் வாழ்ந்து வரும் காலத்தில், பணத்தாசை பெருகியதால் பிறருடைய செல்வங்களை அபகரித்தார். அவ்வாறு அபகரித்தவற்றைக் கொண்டு தனது இஷ்டப்படி பல தீய செயல்களைச் செய்து தீய வாழ்க்கை வாழ்ந்தார். இதனை அவருடைய மனைவி தட்டிக் கேட்டார். அதனால் இவர், மனைவியைக் கொலை செய்து விட்டார். இதனால் இவரை பத்தினிப் பெண் சாபம் சூழ்ந்தது. அதனால் வீண்பழி, துன்பம், துயரம், நோய்கள் ஏற்பட்டது. நோயினாலேயே இவர் மரணமும் அடைந்தார்.

பின்னர் இறைவனிடம் தனது தவறுகளுக்கு மன்னிப்பு வேண்டி, பிறவி கேட்டதால் இந்த மறுபிறவி வாய்த்தது. என்றாலும் இவர் செய்த பாவங்கள் இவரை விட்டு விலகாது இவருக்கு துன்பத்தைத் தந்து கொண்டிருக்கிறது. அதற்கு தகுந்த பரிகாரம் செய்ய வேண்டும் என்று வந்திருந்தது.

பரிகாரமாக,

சாந்தியதே நூலாசான் தனக்கு தானம்
செவ்வளமாய் கனிசூலம் இருவர் தூசும்
இந்தமுறை இனிப்புடனே சுபபொருட்கூட்டி
இருவகை மலரோடும் தானிய கும்பம்

கும்பமுடன் பஞ்சமொரு சகத்திரதனமும்
குறையில்லா நெய்தீபம் தாம்பூலம் கூட்டி
ஆணிவனும் செனித்ததோர் வாரம் தன்னில்
ஆனி திங்கள் நல் திதியில் சடுதி செய்ய

செய்யவுமே பாவங்கள் விலகி ஓட
___________________________________
___________________________________

– என்று வந்திருந்தது.

ஜாதகர் மேற்கண்ட சாபமும், பாபமும் விலக முக்கனிகள், பூஜைப் பொருட்கள், ஆண், பெண் இருவர் அணியக் கூடிய துணிகள், ஐந்து வெள்ளிக் கலசம், இனிப்பு, மாலை, நவதானியம், இவற்றுடன் 1008 ரூபாய் வீதம் ஐந்து பேருக்கு சுவடியைப் படித்த இடத்திற்கு வந்து அங்குள்ள நூலாசானுக்கு வழங்கி, ஆசி பெற்றால் பாவம் தீர்ந்து விடும். குறைகள் முழுமையாக விலகி விடும் என்பது இப்பாடலுக்கு நாடி ஜோதிடரின் விளக்கம்.

இதைக் கேட்ட நண்பர், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும், ஆளுக்கு ரூ. 108/ வீதம் ஐந்து பேருக்குத் தருவதாகவும், சிறிய செப்புக் கலசம் தருவதாகவும், அவ்வாறு தருபனவற்றை ஏற்றுக் கொள்ளும்படியும் நாடி ஜோதிடரிடம் கூறினார். ஆனால் நாடி ஜோதிடர் அதனை ஏற்கவில்லை. நாடி நூலில் எப்படி வந்திருக்கிறதோ அந்த முறைப்படித் தான் பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு கொடுத்தால் மட்டுமே தங்களால் ஏற்க முடியும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் மாறுபட்டு பரிகாரங்கள் செய்தால் பலிக்காது. பலன் முழுமையாக ஏற்படாது, ஏதாவது விபரீதம் விளையலாம், என்றும் எச்சரித்தார்.

நண்பர் இதனை ஒப்புக் கொள்ளவில்லை. “நாடியில் ’வெள்ளிக் கலசம்’ தர வேண்டும் என்று குறிப்பிடவில்லையே! ’கும்பம்’ என்று தானே வந்திருக்கிறது. ஆகவே பித்தளைக் கும்பத்தையோ அல்லது கலசத்தையோ தந்தாலே போதுமே என்றார். ஆனால் நாடி ஜோதிடர் அதனை ஏற்கவில்லை. கலசம், கும்பம் என்றாலே அது ’வெள்ளி’ தான் என்றும், சொல்லப் போனால் அவர் ‘பொற் கலசத்தை’த்தான் தானமாகத் தர வேண்டும். ஆனால் தற்காலத்தில் அவ்வாறு யாராலும் தர இயலாததால், தான் பெருந்தன்மையோடு ’வெள்ளிக் கலசம்’ தந்தால் போதும் என்று குறிப்பிட்டதாகவும் சொன்னார்.

ஆனால் நண்பர் அதனை ஏற்கவில்லை. தன்னால் இயன்ற அளவுதான் பரிகாரம் செய்ய இயலும் என்றும், அதனை ஏற்காவிட்டால் தான் செய்வதாக இல்லை என்றும் கூறினார். மேலும் அந்தப் பரிகாரப் பொருட்களை நாடி ஜோதிடர்களுக்கே ஏன் வழங்க வேண்டும், உணவில்லாமல் கஷ்டப்படும் ஏழைகளுக்கு வழங்கி உதவலாமே! அப்படிச் செய்தால் பாவம் தீராதா என்று வாதிட்டிருக்கிறார். நாடி ஜோதிடர், ‘உங்கள் வாழ்க்கை உயர நாங்கள் வழிகாட்டுவதால் எங்களுக்குத்தான் தானம் தர வேண்டும். அப்போதுதான் தானம் பலிக்கும். இல்லாவிட்டால் பலிக்காது’ என்று கூறியிருக்கிறார்.

நண்பர் உடனே, ”அந்தக் காலத்தில் ரூபாய், பணம் என்பதெல்லாம் புழக்கத்தில் இல்லையே. எல்லாமே அணா, பைசாதானே. அதற்கு முந்தைய காலத்தில் கழஞ்சு, பொன் போன்றவை தானே புழக்கத்தில் இருந்தன. அப்படியிருக்க முனிவர்கள் எப்படி என்னை ”1008/-ரூபாய் கொடு” என்று குறிப்பிட்டிருக்க முடியும்? அதற்குச் சாத்தியமே இல்லையே! நீங்கள், முனிவர்கள் பெயரைச் சொல்லி என்னை ஏமாற்ற முயல்கின்றீர்கள்” என்று சொல்லி விட்டு பரிகாரம் ஏதும் செய்யாமல் அவ்விடம் விட்டு வெளியேறி விட்டார்.

தற்போது மனைவி குழந்தைகளுடன் வசதியான வாழ்க்கை நடத்தி வரும் நண்பர், தான் நாடிஜோதிடம் கூறும் முற்பிறவிகளை நம்பவில்லை என்றும், தான் அந்த ஊரில் தான் பிறந்தேன் என்பதற்கு எவ்வித ஆதாரத்தையும் நாடியால் தர முடியாததால் அதுதான் தன் முற்பிறவி என்பதை தம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் கூறுகிறார். மேலும் அவர், ”ஒருவேளை முற்பிறவியில் நான் கலிங்கம் எனப்படும் ஒரிஸ்ஸாவில் பிறந்திருந்தாலும், நான் எப்படி முழுக்க முழுக்க ஒரு தமிழனாக, தமிழ்ப் பெயருடன் வாழ்ந்திருக்க முடியும்? அதற்கு எவ்வளவு தூரம் சாத்தியக் கூறு உள்ளது? ஒரிய மொழி பேசும் ஒரு குடும்பத்தில் பிறந்து வாழத்தானே சாத்தியம் அதிகம். அதுவும் தந்தை பெயர் நடராசன். தாயார் பெயர் பர்வதம்மாள். முன் ஜென்மத்தில் என் பெயர் பரசுராமன் என்பதையெல்லாம் என்னால் ஏற்கவே முடியவில்லை. இது நாடி ஜோதிடர்களே இட்டுக்கட்டிக் கூறுவது! வாழ்க்கையில் உயர ஒருவன் கடுமையாக உழைக்க வேண்டும். உண்மையாக நடக்க வேண்டும். தனக்கு வரும் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதை விடுத்து நாடி, ஜோதிடம் என்றெல்லாம் சென்றால் குழப்பம் தான் மிஞ்சும். ஒருவன் தன்னுடைய கடமைகளைச் சரியாகச் செய்தாலே போதும். மற்றவற்றைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை” என்கிறார்.

ஒரு சில நண்பர்கள் “நாடி கூறியவாறே எனக்கு அனைத்தும் நடந்தது” என்கின்றனர். ஒரு சிலர் ”எதுவுமே பலிக்கவில்லை. எல்லாமே ஏமாற்றுவேலை” என்கின்றனர். இதில் எது உண்மையாக இருக்க முடியும்?

(நண்பர் முருகையன், நீங்களும் உங்கள் அனுபவத்தை, கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம். அது ’நாடி ஜோதிடம் உண்மை’ என்பதற்கு வலு சேர்க்கக் கூடும்)

(தொடரும்)

Advertisements

13 thoughts on “நம்பலாமா, நாடி ஜோதிடத்தை? பகுதி – 3

 1. தங்களின் விரிவான பதிலுரைக்கு மிக்க நன்றி,
  உங்களைப்போன்றே நானும் சிறுவயதில் ஆரம்பகாலத்தில் தே‍டியவைதான் மேற்படிவிஷயங்கள்.
  தற்சமயம் நான் உபாசிப்பது வாலை என்னும் ஆதி சக்தி மனோன்மணி ( புவனேஸ்வரி) மேலும், அபிராமி அம்மன் மற்றும் மதுரை மீனாட்சிதேவியாகும்.
  நல்லவர்களின் நற்செய்கையால் நன்மையுண்டாகும்.
  இறைவன் எல்லோருக்கும் அருள்புரிவார்.

 2. உங்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்றேன்.
  அனுபவமே உண்மையான ஆசான்.
  எனது சிறு வயது வாழ்க்கையில் நிறைய உபாசனைகள் ( கணபதி, சுப்ரமணியர், ஆஞ்சநேயர், மோகினி, சப்த கன்னியர்கள் )

  போன்றவ‍ை செய்துள்ளேன். இன்றைக்கும் இந்த தேவ, தேவதைகளால் நான் (Self) நன்மை அடைந்து வருகின்றேன்.
  எனக்கு தெரிந்த நாடி ஜோதிட நண்பர், நாடி ஜோதிடத்தில் யட்சனியும் கலந்து விட்டது என்று உண்மையைச் சொன்னார். அந்த

  யட்சினி உபாசனையை சொல்லிக்கொடுக்க முயன்ற போது சில தடங்கல்களால் முடியாமல் போய்விட்டது. ஆனாலும்

  நாடிஜோதிடத்தைப் பற்றி இன்னும் முழுமையாக விரிவாக அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.

  (எனது 22 வயதிலிருந்து தற்போதைய 38 வயது வ‍ரை எனக்கு ஞான நாட்டமே அதிகம் உள்ளது. இருப்பினும், தேவதைகள்,

  அமானுஷ்யம், ஆவிகள் பற்றிய ஆராய்ச்சிகள் ஒரு ஓரமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
  எனது முதன்மைத் தேடல் அருட்சிவஞானம் (மரணமில்லா பெருவாழ்வு) . அதன்பிறகுதான், உலகியல் விஷயங்கள். )

  //…..யக்‌ஷணி தேவதைகள் பற்றி பின்னால் தனியாக எழுத இருக்கிறேன்…//
  உங்கள் பதிவு ஒன்றில் ‘பத்மாஸினி’ என்ற வார்த்தையை படித்ததாக ஞாபகம். இதைப்பற்றியும் குறிப்பிடவும்.
  யட்சனி தேவதை தொடரின் முதல் வாசகன் நானாகத்தான் இருப்பேன். தொடருக்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
  தேவதைகளைப்பற்றிய நேரடி அனுபவம் உங்களுக்கு இருந்தால் நான் உங்களிடம் தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் மூலம்

  தொடர்புகொள்கின்றேன்.

  அன்புடன்,
  பா. முருகையன், வடலூர்.
  http://www.siddharkal.blogspot.com

  1. நன்றி முருகையன்.

   நாடி ஜோதிடர்களைக் குறை சொல்வதோ அல்லது தூற்றுவதோ என் நோக்கமல்ல. அந்த உயரிய கலை இன்று தாழ்ந்த நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறது என்பதே என் கவலை. சத்யசாயி பாபா, யோகிராம் சுரத் குமார், மகாத்மா காந்தி உள்ளிட்டோருக்குக் கூட அவர்கள் சார்பாக நாடி ஜோதிடம் பார்க்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட உயர்ந்த, மகான்கள் உட்பட மக்கள் பலருக்கு வழிகாட்டும் தெய்வீகக் கலை இன்று யார், யார் கையிலோ சிக்கி சின்னாபின்னமாகி விட்டது.

   போலி மனிதர்கள் பலர் உள்ளே புகுந்து விட்டனர். அவர்களுக்கு அந்த ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயத்தைப் புரிந்து கொண்டு தெளிவாக விளக்கிச் சொல்லும் அனுபவம் இல்லை. பொறுமையும் இல்லை. அதே சமயம் வந்த வாடிக்கையாளரை விடவும் மனதில்லை. கிடைத்த குறுக்கு வழிதான் இந்த தேவதை உபாசனை.

   அதனால்தான் யட்சணி உதவியால் கூறப்படும் நிகழ்கால, கடந்த காலப் பலன்கள் சரியாக இருந்தும் எதிர்காலப் பலன்கள் சரிவர பலிப்பது இல்லை. ஏனென்றால் தேவதைகள் ஆற்றல் மிக்கவை என்றாலும் அவை ஓரளவிற்கு வரம்பிற்கு உட்பட்டவை. அவற்றை மீறி அத்தேவதைகளால் செயல்பட முடியாது.

   என்னைப் பொறுத்தவரை இந்த தேவதை உபாசனை எல்லாம் தேவையில்லை. இவை ஆன்மீகத்துக்கு உதவவும் போவதில்லை. தெய்வ அருளும், மகான்களின் ஆசியுமே நமக்குத் தேவை.

   இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் விஷயங்கள் எல்லாம் எனது ஆரம்ப காலத் தேடல்களில் கிடைத்த ஒன்றன் பின் ஒன்றான அனுபவங்களின் சில பகுதிகள் அவ்வளவே! இவற்றை எழுத எனக்கு விருப்பமே இருந்ததில்லை. ஆனால், ஏனோ தற்போது எழுதுகிறேன். அதற்குக் காரணமும் தெரியவில்லை.

   //யட்சினி உபாசனையை சொல்லிக்கொடுக்க முயன்ற போது சில தடங்கல்களால் முடியாமல் போய்விட்டது. //

   அது உங்களுக்கு வேண்டவே வேண்டாம்.

   //உங்கள் பதிவு ஒன்றில் ‘பத்மாஸினி’ என்ற வார்த்தையை படித்ததாக ஞாபகம். இதைப்பற்றியும் குறிப்பிடவும்.
   யட்சனி தேவதை தொடரின் முதல் வாசகன் நானாகத்தான் இருப்பேன். தொடருக்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்//

   நன்றி. எழுதுவேனா என்று தெரியாது. யட்சிணிகளில் பல வகைகள், பிரிவுகள் உள்ளன. கர்ண யக்ஷிணி, (காதில் வந்து சொல்லும் உருவமற்ற தேவதை) தாம்பூல யக்ஷிணி (தாம்பூலம் தரித்தால் வாக்கில் வந்து சொல்லும்) என்று நிறைய வகைகள் உள்ளன. யோகினி, டாகினி என்று இன்னும் நிறைய இருக்கின்றன. சில நீச தேவதைகளும் இருக்கின்றன. அவற்றை வழிபடுவதும், உபாசிப்பதும் ஆபத்தைத் தரும்.

   ”பத்மாசினி” போன்றவை தெய்வ யட்சிணிகள். அம்பாளின் சக்தி பீடத்தில் அமர்ந்திருக்கும் 64 வகை தேவதைகளில் ஒன்றின் பெயர் ‘பத்மாஸினி’. இவற்றை அம்பாளின் பரிவார தேவதைகள் என்று சொல்லலாம். உங்களுக்கு தெய்வீக ஆற்றல் இருந்தால், அன்னையின் அருள் இருந்தால் இவற்றை கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் சூட்சும ரீதியில் தரிசிக்க இயலும். காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்திலும் சில குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட ஓரைகளில் இவற்றின் தரிசனம் கிட்டும். இவையெல்லாம் தெய்வீக விஷயங்கள். பொதுவில் பேச உகந்ததல்ல.

   மற்றபடி எனக்கு தேவதைகள் பற்றி பெரிய அனுபவம் ஏதும் இல்லை.

   சொல்லப்போனால் இந்த மானுட வாழ்க்கையில், இந்த மாபெரும் பிரபஞ்சத்தின் முன்னால் நாம் எல்லாம் வெறும் தூசுக்குச் சமானம். ஆனால் நாம் தான் அதையெல்லாம் அறியாமல் என்னென்னவோ எழுதிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கிறோம், நாடகம் முடியும் வரை.

   நன்றி, தங்கள் வருகைக்கும், நீண்ட விளக்கமான பின்னூட்டத்திற்கும்.

   1. சொல்லப்போனால் இந்த மானுட வாழ்க்கையில், இந்த மாபெரும் பிரபஞ்சத்தின் முன்னால் நாம் எல்லாம் வெறும் தூசுக்குச் சமானம். ஆனால் நாம் தான் அதையெல்லாம் அறியாமல் என்னென்னவோ எழுதிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கிறோம், நாடகம் முடியும் வரை.

  1. ”திறமையான நாடி ஜோதிடர்கள்….???? !!!!!”

   எதில் ஏமாற்றுவதிலா?

   இட்டுக் கட்டிப் பாடல் எழுதுவதிலா?

   பலன் சொல்வதிலா?

   அல்லது நாடிக்கு உண்மையாக இருப்பதிலா?

   எனக்கு அப்படி யாரையும் தெரியலீங்களே சார்…

 3. அன்பார்ந்த ரமணன், வணக்கம். எனது பெயரையும் தங்களது பதிவில் குறிப்பிட்டு,எனது அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி. உங்களின் பதிவு ஒன்றில் எனது பெயர் வந்தது சந்தோஷமான விஷயம்.

  இப்பதிவில் தங்களுடைய நண்பரின் கூற்று முழுக்க முழுக்க உண்மை. பரிகாரம் என்ற பெயரில் சில போலியான நாடி ஜோதிடர்கள் இட்டுக்கட்டி பணம் பறிக்க முயன்றிருக்கின்றனர்.
  என்னளவில் நாடி சுவடி உண்மை. அதில் வரும் பரிகாரமும் உண்மை. நான் பார்த்த இடத்திலும் பரிகார முறைகளை எனக்கு கூறினர். ஆனால் நான் பரிகாரம் செய்யவில்லை. பரிகாரம் என்ற பெயரில் இவ்வளவு தட்சணை வை. வெள்ளி சொம்பு கொடு. பித்தளை சொம்பு கொடு என்று ஏமாற்றுபவர்களும் உள்ளனர். ஏமாறுபவர்களும் உள்ளனர். உண்மையில் மன சுத்தத்தோடு தனக்காக சித்தர் பெருமக்கள் ஓலைச் சுவடியில் ஏதேனும் பலாபலன்கள் எழுதி வைத்துள்ளனரா என்று பயபக்தியோடு, கர்ம சிரத்தையோடு, மனம் அடங்கி, ஒடுங்கி சில வார காலங்கள் இறைவனை நினைத்து பிரார்த்தித்து வந்தால், உங்களின் பூர்வ புண்ணிய பலனால் நல்லதொரு நாடி ஜோதிடர் மூலம் இறைவனும் சித்தர்களும் அருள்பாலிப்பார்கள். இந்த கலிகாலத்தில் ஏமாற்றுவர்களிடம் இருந்து ஏமாறாமல் இருப்பது என்பது கூட தெரியாமல் பல அப்பாவிகள் ( இவர்களை அப்பாவிகள் என்று சொல்லக்கூடாது. பாவிகள் என்றே ‍சொல்லலாம். பின்ன என்ன சார். நாலு ஏழை பிள்ளைகளுக்கு கல்வி அறிவு கொடுக்க நினைக்காதவர்கள் எல்லாம் நாடி ஜோதிடம் பார்க்க போனேன் ( கடை வீதியில் கத்திரிக்காய் வாங்க போவது மாதிரி) பலன் தவறாக வந்தது என்று புலம்பத்தான் வேண்டும். ஏன்? . அவர்களின் விதி ஏமாற்றுபவர்களிடம் ஏமாறவேண்டும் என்பது. உண்மையைச் சொல்கின்றேன் உங்களின் மனசாட்சிப்படி நீங்கள்( உங்களைச் சொல்லவில்லை ரமணன். நாடி பார்க்க, பார்த்த நண்பர்களை சொல்லுகின்றேன்.) உத்தமன் எனில் நீங்கள் யாரிடமும் ஏமாறமாட்டீர்கள்.யாராலும் ஏமாற்றப்பட மாட்டீர்கள்.

  சப்ஜெக்ட்டுக்கு வருவோம். ஏமாற்றுபவர்களும் ஏமாந்தவர்களும் இந்த உலகில் இருக்க, ஏமாறாமல் பலன் பார்த்த நான், நாடி ஜோதிடம் மற்றும் ஜீவநாடி உண்மை என்பதற்கு எனது அனுபவங்களை சிறிது நாள் சென்று உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன்.
  அன்புடன்,
  பா. முருகையன், வடலூர்.
  http://www.siddharkal.blogspot.com

  1. நன்றி முருகையன்.

   ஆனால் நான் ஏமாந்திருக்கிறேன். (நான் உத்தமன் இல்லை என்பது வேறு விஷயம்) ஆனால் அப்படி ஏமாந்ததனால்தான் நிறைய விஷயங்களை – எப்படி ஏமாற்றுகிறார்கள், என்ன டெக்னிக் உபயோகிக்கிறார்கள், எந்தெந்த தேவதைகள் இதற்குப் பயன்படுகின்றன, எப்படி மைண்ட் ரீட் செய்யப்படுகிறது என்பது உட்பட அனைத்தையும் – தெரிந்து கொள்ள முடிந்தது. (இவற்றைத் தெரிந்து கொள்ள சில நாடி ஜோதிடர்களும் மறைமுகமாக உதவினார்கள். அவர்கள் உதவி இல்லாமல் என்னால் எப்படி இதில் உள்ள அதி சூட்சுமமான விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்திருக்கும்) எனது ஏமாற்றமும் கூட எனக்கு ஒரு தெளிவைக் கொடுத்தது. வாழ்வில் மனித யத்தனத்துக்கு அப்பால் எத்தனை எத்தனையோ விஷயங்கள் உள்ளன என்பதைத் தெரிந்து கொள்ள இந்த அனுபவங்களே உதவின. அப்படித் தெரிந்து கொண்டதினால் தான் மக்களைச் சற்றே எச்சரிக்க இந்த மாதிரிப் பதிவையும் எழுத முடிந்தது. சொன்னது கொஞ்சம்தான். சொல்லாதது எவ்வளவோ உள்ளது. தேவதைகள் பற்றியோ, அவற்றின் உபாசனை பற்றியோ இந்த கலிகாலத்தில் எழுதினால் யார் நம்பப் போகிறார்கள்.

   நாடிஜோதிடம் பார்க்கப் போன ஒருவர் அதற்கு முந்தைய இரவு என்ன செய்து கொண்டிருந்தார், வருவதற்கு முன்னால் என்ன பேசிக் கொண்டிருந்தார், யாருக்குமே தெரியாமல் அவர் வாழ்வில் செய்த செயல்கள் என்ன, எங்கு, என்ன சாப்பிட்டார் என்பது உட்பட பலவற்றை இந்த தேவதைகளால் சொல்ல முடியும். (யக்‌ஷணி தேவதைகள் பற்றி பின்னால் தனியாக எழுத இருக்கிறேன்)

   நீங்கள் சொன்னதில் மறுக்க முடியாத ஒரு உண்மை உள்ளது.

   ”ஒருவன் தன்னுடைய கஷ்டங்களை எப்படியாக இருப்பினும் அனுபவித்தே ஆக வேண்டும் என்று கர்மவிதி இருந்தால் அவனுக்கு நல்ல நாடி ஜோதிடர்களின் தொடர்பு கிடைக்காது. போலிகளைச் சந்தித்து பணத்தை இழந்து மனத்துயரையே அவன் அனுபவிக்க நேரிடும்” இது உண்மை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.