அய்யனார் யார்? – 1

அய்யனார்

அய்யனார் & அய்யப்பன் இரண்டும் ஒருவரே! இல்லை இல்லை அய்யனார் வேறு; அய்யப்பன் வேறு. இப்படி இருதரப்பான வாதங்கள் பல வருடங்களாய் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதுபற்றி பலர் ஆராய்ந்திருக்கக் கூடும். பல கட்டுரைகள் எழுதியிருக்கக் கூடும். அது பற்றிய என் ஆய்வு முயற்சியே இக்கட்டுரை.

அய்யனார் யார்? சாஸ்தா என்ற அழைக்கப்படும் சாத்தாவும் அவரும் ஒன்றா?  அவர் பற்றிய வரலாற்று, புராண, இலக்கியக் குறிப்புகள் எப்போதுமுதல் காணப்படுகின்றன என்று முதலில் பார்ப்போம்.

சாஸ்தா

நமக்குக் கிடைத்த தொன்மையான பண்டை இலக்கிய, இலக்கண நூல் எது என்றால் பரிபாடலையும் தொல்காப்பியத்தையும் சொல்லலாம். பரிபாடலில் முருகன், விஷ்ணு பற்றிய பாடல் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. தொல்காப்பியத்தில் ஐந்திணைக் கடவுள்களாக முருகன், மாயோன், இந்திரன், வருணன், கொற்றவை வழிபாடு பற்றிக் கூறப்படுகின்றது. இவற்றில் அய்யனார் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை.

அப்படியானால் அய்யனார் யார்? அவரது வழிபாடு எப்போது முதல் தமிழகத்தில் தோன்றியிருக்கும்?

சாஸ்தா அல்லது சாத்தான் என்ற கடவுளும் அய்யனாரும்  தோற்றத்தில் ஒன்று போலவே உள்ளனர். அய்யனார் தான் சாத்தன் எனக் கொண்டால் சங்க இலக்கியத்தில் ’சாத்தன்’ என்ற பெயரில் சில குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. சாத்தன் எனும் பெயருடைய புலவர்கள் பலர் இருந்துள்ளனர். மதுரை கூல வாணிகன் சீத்தலைச் சாத்தன் என்ற பெயரும் அதில் ஒன்று. அவர் சாஸ்தாவை அல்லது அய்யனாரை குலதெய்வமாக வழிபட்டவர். அதனால் தான் அப்பெயரை வைத்திருக்கின்றார் என்பது ஒரு சில ஆய்வாளர்கள் கருத்து. ஏனென்றால் குலதெய்வத்தின் பெயரைச் சூட்டுவது தொல் தமிழர் மரபு என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

குதிரை வாகனம்

இதுகுறித்து தேவ நேயப் பாவாணர் கூறும் கருத்து சிந்திக்கற் பாலது. ”நாட்டின் பல இடங்களுக்கும் தத்தம் காவற்படையுடன் சென்று பொருளீட்டிய வணிகக் கூட்டங்களுக்கு சாத்து என்று பெயர். சார்த்து – சாத்து : சார்தல் – சேர்தல் என்பது பொருளாம்” என்கிறார் அவர். மேலும் அவர், “ வணிகக் சாத்துக்களின் காவல் தெய்வத்திற்கு சாத்தன் என்று பெயர். அவரே ஐயனார். அதனாலேயே அக்காலத்தில் வணிகர்கள் சாத்துக்கள், சாத்துவன், சாதுவன் என்றெல்லாம் அழைக்கப்பட்டனர். அக்காலத்தில் உள்ளூர் வணிகர்கள் பெரும்பாலும் குதிரைகளில் சென்றே வாணிகம் செய்தனர். அதனாலேயே ஐயனாருக்கு குதிரை வாகனமாகியது. சாத்தன் என்னும் தெய்வப் பெயர் வடமொழியில் சாஸ்தா எனத் திரியும். சாத்தன் எனும் வணிகக் கூட்டப் பெயர் ஸார்த்த என்று திரியும்.” என்று குறிப்பிடுகிறார்.

குதிரைகள்

ஆக, சங்ககாலத்தில் ஐந்திணைக் கடவுள்கள் பற்றிய குறிப்புகள் மட்டுமே உள்ளன. அதில் சாஸ்தா (அய்யனார்) வழிபாடு பற்றிய குறிப்புகல் கிடைத்தில. ஆனால் அய்யனாரை சங்க மக்கள் வழிபடவில்லை என்று கூறிடுதல் இயலாது. ஐந்திணை நூல்களில் சிவபெருமான் பற்றிய குறிப்புகள் ஏதும் காணப்படவில்லை. அதற்காக சங்க காலத்தில் சிவ வழிபாடே இல்லை என்று சொன்னால் அது எப்படித் தவறாக முடியுமோ அது போலத்தான் அய்யனார் வழிபாடே இல்லை என மறுப்பதும்.

எனவே திடீர் என அய்யனார் வழிபாடு தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் என்பது சரியன்று. தொல் தமிழர் வரலாற்றோடு அய்யனார் வழிபாடு பின்னிப் பிணைந்திருக்க வேண்டும் என்பதே உண்மை. அதே சமயம் அய்யனார், சாஸ்தா வழிபாடுகள் பௌத்த மற்றும் சமண சமயத் தாக்கத்தால் விளைந்தவை என்ற கருத்தும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் சமண, பௌத்தக் வழிபடு கடவுளாக இருந்து, பின்னர் சைவ சமய வழிபாட்டோடு இணைந்து விட்ட வழிபாடுதான் அய்யனார் வழிபாடு என்ற கூற்றும் மறுக்கக் கூடியதன்று.

(தொடரும்)

Advertisements

4 thoughts on “அய்யனார் யார்? – 1

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s