உயிரா? மானமா?

உயிர் பெரிதா, மானம் பெரிதா?

இன்று பலர் மானத்தை விட உயிரையே பெரிதாகக் கருதுகின்றனர். அதிலும் சில அரசியல்வாதிகளுக்கும், பணம் படைத்த சில செல்வந்தர்களுக்கும் மானத்தைப் பற்றி எவ்விதக் கவலையுமில்லை. தங்கள் உயிருக்கும், தாங்கள் சேர்த்து வைத்த உடைமகளுக்கும், சொத்துக்களுக்கும் பிரச்சனை வராமலிருந்தால் சரி. அதற்காக அவர்கள் எந்த அளவுக்கும் இறங்கிப் போக வேண்டுமானாலும் – மானமே போனாலும் கூடப் பரவாயில்லை என –  பகையாளிகள்/கூட்டாளிகள் காலில் விழவும் கூடத் தயாராக உள்ளனர். அந்தக் காலத்தில் ஒரு மன்னன் இருந்தான். அவனுக்கும் ஒருவிதத்தில் மானக் குறைவு ஏற்பட்டது. அவன் என்ன செய்தான் தெரியுமா?

அந்த மன்னன் பெயர் கணைக்கால் இரும்பொறை. அவன் சேர மன்னன். இன்று ‘கேரளம்’ என்ற தனிப்பெயர் தாங்கி நிற்கும் அந்நிலப்பகுதி, ஒரு காலத்தில் தமிழ்நாட்டோடு இணைந்திருந்தது. அப்பொழுது ‘மலையாளம்’ என்றதொரு தனிமொழி இல்லை. சொல்லப் போனால் ‘கேரளம்’ என்ற மலையாளச் சொல்லே ஒருவிதத்தில் ‘சேரன்’ ‘சேரலன்’ என்ற தமிழ்ச்சொற்களின் சிதைவு என்றே கூறலாம்.

இச் சேரமன்னன் சிறந்த தமிழ்ப் புலவன்; நல்ல கவிஞனும் கூட. ஒருமுறை இம்மன்னன் சோழன் கொச்செங்கணான் என்பவனோடு போர் புரிய நேரிட்டது. போரில் கணைக்கால் இரும்பொறை தோற்று விட்டான். போரில் வீர மரணம் எய்தாமல் சோழ மன்னனால் சிறைப் பிடிக்கப்பட்டான்.

தனது தோல்விக்காக வருந்தவில்லை சேரன். ஆனால், பகைவனுடைய சிறையில் அடைபட்டு இருக்க நேரிட்டதை மிகப் பெரிய அவமானமாகக் கருதினான். அதை எண்ணி எண்ணி மனம் புழுங்கினான். வருந்தினான்.

இந்நிலையில் திடீரென அவனுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. சிறைக் காவலாளர்களைப் பார்த்து தனது தாகம் தீர்க்கத் தண்ணீர் கேட்டான். எதிரியாக இருந்தாலும் கூட ’தண்ணீர்’ என்று ஒருவன் கேட்டு விட்டால் அதை முதற்கண் தணிப்பதுதான் தமிழர்தம் பண்பாடு. ஆனால் அவர்களோ அதை மறந்து, மன்னன் கேட்டவுடன் தண்ணீர் கொணர்ந்து தராமல், அவனை எள்ளி நகையாடினர். கிண்டலாக, கேலியாகப் பேசி மனதைப் புண்படுத்தினர்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்தனர். ஏற்கெனவே சிறைப்பட்டுக் கிடப்பதை மானம் அழிந்த செயலாகக் கருதி வருந்தும் சேரனுக்கு, காவலாளிகளின் இந்த அற்பச் செயல் அறவோடு பிடிக்கவில்லை. தண்ணீர் தாகம் அதிகமாய் இருப்பினும் கூட, தன்னுடைய மானத்தை இழந்து, அவமரியாதைப் பட்டு, தன் பகைவர்களிடம் கேட்டு வாங்கிய தண்ணீரைக் குடிக்க அவனுக்கு மனம் வரவில்லை.

அவனது கவி உள்ளம் விழிக்கிறது. உடன் ஒரு பாடல் பிறக்கிறது.

      ” குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்

        ஆள் அன்று என்று வாளில் தப்பார்

        தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து

        சீரிய கேள் அல் கேளிர்

        வேளாண் சிறுபதம் மதுகை இன்றி

        வயிற்றுத் தீ தணியத் தாம் இரந்து

        உண்ணும் அளவை

        ஈன்மரோ! இவ்வுலகத்தானே!”

”குழந்தையாகப் பிறந்து இறக்காமல் இறந்தே பிறக்கும் குழந்தையாயினும், குறைப் பிரசவமாகப் பிறந்த குழந்தையாக இருப்பினும், போரில் இறவாமல் இவ்வாறு இறத்தல் அவமானம் என்று கருதி, அந்த இறந்த குழந்தையையும், குறையாகப் பிறந்த தசைப் பிண்டத்தையும் வாளால் வெட்டிப் புதைப்பார்கள்.  சங்கிலியால் கட்டுண்ட நாயைப் போலப் பகைவன் சிறையில் அகப்பட்டு அப்பகைவனின் காவலாளரிடம் பிச்சையாகத் தண்ணீர் பெற்று மானத்தை இழந்து, குடித்து உயிரை வைத்திருக்க விரும்பும் என் போன்றவர்களை இனி இவ்வுலகத்தார் பெறாமல் இருப்பார்களாக” என்பது அப்பாடலின் பொருள்.

இக் கவிதையில்தான் எத்தனை அவல நயம். எவ்வளவு வேதனை? சோகத்தை வார்த்தைகளால் பிழிந்து எடுத்திருக்கிறான் சேரமான் கணைக்கால் இரும்பொறை.

கவிதையைப் பாடி முடித்த அவன், தண்ணீரைக் குடிக்காமலேயே உயிரை விட்டு விட்டான்

மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்

என்ற குறளுக்கு எடுத்துக் காட்டாக, உயிரை விட மானம்தான் பெரிது என்பதை இஉந்த உலகுக்கு எடுத்துரைக்கும் முகமாக தன் இன்னுயிரைத் துறந்து புகழுடம்பு எய்தினான் அந்த மாவீரன்.

ஆனால், இன்று….??

**********************************

Advertisements

2 thoughts on “உயிரா? மானமா?

  1. கதையெல்லாம் நல்லத்தான் இருக்கு சார், ஆனா கடைசியில எழுதி இருக்கிங்களே… //ஆனால், இன்று….??//
    இதுக்குதான் என்ன அர்த்தம் என்று புரியல….!!!???

    1. புரியலையா? அய்யோ பாவம் நீங்க ஒரு அப்பாவி ”ராசா” வேற என்னத்தைச் சொல்ல? இது ஒண்ணும் “சிதம்பர” ரகசியம் இல்லையே! எதையுமே “கருணை”க் கண் கொண்டு பாக்காதீங்க ”தயா” செய்து. அப்படிப் பார்த்தாலும் நமக்கு என்ன சங்க ”நிதி”யும் பதும ”நிதி”யுமா ஓடப் போகுது. அடப் போங்க சார்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s