விஷ்ணு தனுசு – 1


சிவ தனுசை நாம் அறிவோம். அதை முறித்துத் தான் ராமன் சீதையை மணந்து கொண்டான். அண்ணலும் நோக்க, அவளும் நோக்கிய அந்தக் கதை நமக்குத் தெரியும். விஷ்ணு தனுசு?

சிவ தனுசைப் போல புனிதமானதும் மகத்தான ஆற்றல் மிக்கதுமாக இருந்ததுதான் விஷ்ணு தனுசு. மகாவிஷ்ணுவுக்குச் சொந்தமான அதை வைத்திருந்தவன் யார் தெரியுமா?

பரசுராமன்.

பரசுராமன்

மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றாகப் போற்றப்படும் பரசுராமன் தான் விஷ்ணு தனுசை தன் கைவசம் வைத்திருந்தான்.

அந்தணர் குலத்தைச் சேர்ந்த பரசுராமன் ஷத்திரியர்களை வேரறுப்பதாகச் சபதம் பூண்டவன். அவ்வாறே தனது புஜ பல பராக்ரமத்தால் பல க்ஷத்திரிய மன்னர்களை வென்றான். இருபத்தோரு தலைமுறை அரசர்களைக் கொன்று குவித்தான்.

க்ஷத்ரியப் போர்

அவன் காதுக்கு வருகிறது ஒரு சேதி. அது க்ஷத்திரிய குல இளவலும், தசரத மைந்தனுமான இராமன் என்பவன் சிவ தனுசை முறித்தான் என்பது. அதைக் கேட்ட உடனே கடும் கோபம் கொண்டான் பரசுராமன். அவன் கண்கள் சிவந்தது. உடல் துடித்தது. ”இதோ, அந்த ராமனை என்ன செய்கிறேன் பார்!” என்று ஆத்திரத்துடன் புறப்படுகிறான்.

ஸ்ரீ ராமர் திருமணக் காட்சி

சீதா தேவியோடு இராமன் சந்தோஷமாக அயோத்தியை நோக்கி வந்து கொண்டிருக்கும் போது, பரசுராமன் தன் ஆயுதமான கோடாலியுடனும், விஷ்ணு தனுசாகிய வில்லுடனும் ஒரு மலை இடம் பெயர்ந்து நடந்து வருவது போன்ற பயங்கரமான தோற்றத்தோடு வருகிறான். அவன் அந்தணன் என்றாலும் போர் வெறி, கோபதாபம் போன்ற ஷத்திரிய குணங்களை உடையவனானதால் இராமனை நோக்கி வரும் பொழுது, அவனுடைய கண்களும் மேனியும் நெருப்பை உமிழ்கின்றனவோ என்று பார்ப்பவர்கள் பலரும் அஞ்சத்தக்க நிலையில் அவை பளபளவென்று மின்னிக் கொண்டிருக்கின்றன. அவன் குரல் இடி இடிப்பது போல் பயங்கர கோபத்தோடு ஒலிக்கிறது.

பரசுராமன் தன் கையிலுள்ள வில்லை வளைத்து அம்பு தொடுக்குமாறு நாணினை ஏற்றுகிறான். அதனால் ஏற்பட்ட ஓசையைக் கேட்டவர் அனைவரும் நடுங்குகின்றனர். “இவனது இவ்வளவு பெருங் கோபத்திற்குக் காரணம் யாதோ? இவன் எல்லா உயிர்களையும் யமனுக்கு விருந்தாக்கப் போகிறானோ? கண்கள் இரத்தம் கொப்பளிப்பன போல் நெருப்பைக் கக்குகின்றனவே!” என்றுப் பலரும் அஞ்சித் தமக்குள்ளே பேசிக் கொள்கின்றனர்

பரசுராமனுடைய ஜடைமுடி ஆகாயத்தை எட்டுவது போலவும், தோள்கள் திக்குகளை முட்டுவது போலவும் காணப்படுகின்றன. அவன் இப்பொழுது சர்வ சம்ஹார காலத்திலே உயிர்களையும், உலகங்களையும் கொன்று நடனம் செய்யும் மயான ருத்திரனைப் போலத் தோன்றுகிறான்.

அவனைக் கண்ட தசரதர் ”கொடியவனாகிய இவன் இங்கே இப்போது எதிரில் வருவதற்குக் காரணம் என்னவோ?” என்று எண்ணி வருந்துகிறார். பரசுராமனால் தமது அருமை மகனாகிய இராமனுக்குக் கேடு விளையக் கூடுமோ என்ற எண்ணமே  தசரதருக்கு அவ்வளவு அளவற்ற வருத்தத்தையும், அச்சத்தையும் கவலையையும் உண்டாக்குகிறது. இச்சமயம் பரசுராமனுடைய புருவங்கள் நுனி நெறிந்து, கண்கள் நெருப்புப் பொறி சிந்துகின்றன. உடனே தசரதருடைய சேனைகள் பயந்து நிலை குலைந்து ஓடுகின்றன. பரசுராமன் பேரிடி போலக் கர்ஜித்துக் கொண்டு, இராமன் எதிரே கம்பீரமாகச் சென்று நிற்கிறான்.

(புகைப்படங்கள் – நன்றி – கூகிள் இமேஜஸ்) 

(தொடரும்)

Advertisements

3 thoughts on “விஷ்ணு தனுசு – 1

 1. ஓடாதே, நில் கிருஷ்ணா.

  இந்த உலகமே எனக்குக் கிடைத்தாலும் அது எனக்கு வேண்டாம்.
  எனக்கு லட்சியம் கூட பெரிதாக வேறொன்றுமில்லை.
  ஒரு தடவையாவது என் இதயத்தைத் தீண்டியவனைக் காண வேண்டும்.
  என் மோஹன், உன்னைக் காண வேண்டும்.
  அதற்குப் பிறகு, என் உயிர் போனாலும் கவலையில்லை.
  ஒரு தடவையாவது உன் பார்வையும், என் பார்வையும் சேர வேண்டும்.

  *****

  அந்தக் கோபிகைகள் பாலகிருஷ்ணனுடைய அழகான சொரூபத்தையும், லீலைகளையும் பிரலாபித்துக் கொண்டிருந்தார்கள்.

  அதை அந்தத் துறவிக் கேட்டார்.
  அது வரையில் அவர் ப்ரம்மத் தியானத்தில் லயித்திருந்தார்.
  அவருடைய மனம், திடீரென்று, கோவிந்தனைக் காண வேண்டுமென்று ஆர்ப்பரிக்க ஆரம்பித்து விட்டது.
  நாராயணருடைய வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அவர் மனம் அகஸ்மாத்தாக கிருஷ்ணரைச் சந்திக்கத் துடித்தது.
  அவருடைய அனுமதிக்குக் காத்திருக்காமலேயே, கால்கள் யஸோதா ராணியின் மாளிகையை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டன.

  யஸோதாம்மா மாளிகைக்கு முன்புறம் துறவி வந்தடைந்தார்.
  துறவிகளுக்கு அங்கு எப்போதுமே அமோக வரவேற்புத் தான்.
  மேலும் அந்தத் துறவி பிரசித்தமானவர், அவர்களுக்கு நன்கு பரிச்சயமானவர்.

  நந்தகோபரும், யஸோதாம்மாவும் ஓடி வந்து அவருடைய பாதங்களில் தடாலென்று விழுந்தார்கள். விழுந்து நமஸ்காரம் செய்தார்கள்.

  ‘நீங்கள் வந்திருப்பது எங்கள் பாக்கியம். எங்களுடைய அதிர்ஷ்ட நட்சத்திரம் மிளிர ஆரம்பித்து விட்டது. வாருங்கள், வாருங்கள். ரொம்ப நாட்களுக்குப் பிறகு உங்களுடைய தரிசனம் கிடைத்திருக்கிறது. எங்கே போயிருந்தீர்கள்? வெகு காலமாகி விட்டது’.

  ‘நந்தகோபரே, உங்களுக்கு நான் என்ன சொல்வது? நான் வீடு-வாசல், சொந்த-பந்தம் எல்லாவற்றையும் துறந்து விட்டேன். நான் இப்போது ஊருக்கு, வீட்டுக்குப் போவதில்லை. எங்காவது போவதென்றால், உங்கள் மாளிகைக்கு மட்டும் தான் வருகிறேன். எல்லாவற்றையும் துறந்து, காட்டில் வசித்துக் கொண்டிருக்கிறேன். இன்று எதிர்பாராத விதமாக, உங்கள் வீட்டில் ஒரு பாலகன் பிறந்து வந்திருக்கிறான் என்று கேள்விப் பட்டேன். என்னால் கட்டுப் படுத்த முடியவில்லை. என் கால்கள் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தி விட்டன. உங்கள் பாலகனைத் தரிசிக்க வந்திருக்கிறேன்’.

  தன் புதல்வனைக் காண வந்திருக்கிறார் என்று அறிந்ததும், யஸோதாம்மா பரபரப்பாக ஓடிப் போய், ‘எங்கே இருக்கிறான் என் மகன்?’ என்று தேடலானார்கள். போய்ப் பார்த்தால், பாலகிருஷ்ணன் தன் சகாக்களோடு குதூகலமாக, கோகுலத்தின் புழுதியில் உருண்டு, புரண்டு விளையாடிக் கொண்டிருந்தார். யஸோதாம்மா கிருஷ்ணனை வாரி எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு மாளிகைக்கு அழைத்து வந்தார்கள். மாளிகையில் இருத்தி, பாலகனின் உடையில் படிந்திருந்த மண்துகள்களைத் தட்டி விட்டார்கள். சிரசில் இருந்த மண்துகள்களையும் தலை வாரி எடுத்து விட்டு, சுருண்டு முன்னால் ஸ்டைலாக விழுந்திருந்த கேசங்களை இழுத்துப் பின்னால் கட்டினார்கள். முந்தானைத் தலைப்பால் அவருடைய முகத்தைத் துடைத்தார்கள். பிறகு கிருஷ்ணனை அந்தத் துறவியின் முன்னால் கொண்டு வந்து அவருடைய பாதங்களில் கிடத்தினார்கள். கிருஷ்ணனும் பவ்யமாக நமஸ்காரம் செய்துக் கொண்டே துறவியின் பாதங்களை இறுக்கத் தழுவிக் கொண்டார். ஏன்? கிருஷ்ணனுக்குத் துறவிகளின் மேல் அதீதப் பிரியம். அட்டாச்மென்ட் அதிகம். சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.

  எப்போது அந்தத் துறவி கிருஷ்ணனின் அழகைக் கண்டாரோ, அப்போது அவர் வழிபட்டுக் கொண்டிருந்த தெய்வத்தையே மறந்து விட்டார். அப்படி ஒரு தெய்வம் இருந்ததாக ஞாபகமே இல்லை. திரும்பக் காட்டிற்குப் போக வேண்டும் என்பதையும் மறந்து விட்டார். வைத்தக் கண் வாங்காமல், மெய்மறந்து, நீலமேனி ஷ்யாமளவண்ணனின் அழகைப் பருகிக் கொண்டிருந்தார்.

  யஸோதாம்மா சொன்னார்கள், ‘துறவியாரே, இன்று துவாதசி. நீங்கள் துவாதசிப் பூஜையை எங்கள் இல்லத்திலேயே அனுஷ்டிக்க வேண்டும். உங்களைக் கைக்கூப்பிப் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்’.

  துறவி சொன்னார், ‘இல்லையம்மா, இல்லை. நான் இப்போது ஆகாரம் உட்கொள்ளுவதை நிறுத்தி விட்டேன். என்னால் உங்கள் இல்லத்தில் உண்ண முடியாது. என்னை மன்னிக்க வேண்டும். வெறும் பழங்களை மட்டுமே புசிக்கிறேன்’.

  ‘எங்கள் இல்லத்திற்கு வந்தவரை ஆகாரம் எதுவும் சாப்பிட வைக்காமல் அனுப்ப என்னால் இயலாது, சுவாமி. எதுவாக இருந்தாலும் சரி’. யஸோதாம்மா திட்டவட்டமாகச் சொல்லி விட்டார்கள்.

  யஸோதாம்மாவின் பிடிவாதத்திற்கு முன்னால் துறவியின் பேச்சு எடுபடவில்லை.
  அவர் சரியென்று ஒத்துக் கொண்டார்.

  துறவி அவருடைய உணவை அவரே சமைத்துச் சாப்பிடுபவராதலால், சட்டென்று யஸோதாம்மா குளித்து முடித்து, சுத்தமான வஸ்திரமணிந்து, சுத்தமான பாத்திரம்-பண்டங்களை எடுத்து வைத்தார்கள். புதிதாக அடுப்பு ஒன்றையும் கௌசாலாவில் (மாட்டுத் தொழுவத்தில்) அக்கறையாக அமைத்துக் கொடுத்தார்கள். பவித்ரமான கறந்த பாலையும் கொண்டு வந்துக் கொடுத்தார்கள். அரிசி, சர்க்கரை, இத்யாதிகளை வழங்கி விட்டு சொன்னார்கள், ‘துறவியாரே, உங்களுக்கு வேண்டிய அன்னத்தைத் தயார் செய்யுங்கள். நீங்களும் உண்ணுங்கள். நாங்கள் எங்களுடையப் பிறவிப் பயனை அடைந்து விடுவோம்’.
  துறவி பகவானுக்காக அன்னத்தைத் தயாரிக்க ஆரம்பித்தார். பகவானுக்கு நெய்வேத்யம் செய்து விட்டு, பிறகு அவர் ப்ரசாதத்தை உட்கொள்ளுவார்.

  யஸோதாம்மா மேலும் அந்தத் துறவிக்கு வழங்க வேண்டியதான பொருள்களைத் திரட்டுவதில் முனைந்து விட்டார்கள். மற்ற துறவிகளுக்கு வழங்கியதை விட இவருக்கு அதிக தானங்கள்; வெகு காலமாக பழக்கப் பட்டவர் என்பதால்.

  துறவி இன்று நாராயண பகவானுக்காக வேண்டி பால்பாயாஸம் செய்திருந்தார்.
  அதை முதலில் ஆறச் செய்தார்.
  பால்பாயாஸம் ஆறின பிறகு, அதை முன்னால் வைத்து மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தார்.
  ‘ உங்களுடைய வஸ்துவை உங்களுக்கே அர்ப்பிக்கிறேன். வாருங்கள், வந்து ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று பகவானைப் பிரார்த்திக்க ஆரம்பித்தார்.

  அந்த சமயம், கிருஷ்ணன் ப்ரவேசம் செய்து, அவருக்கு எதிரில் வந்து அமர்ந்துக் கொண்டார். துரு, துரு வென்றிருந்த கோவிந்தன் அமர்ந்து, யதேச்சையாக நெய்வேத்யத்தை உண்ண ஆரம்பித்தார். நீலமேக வண்ணன் வெள்ளை வெளேரென்றிருந்த பால்பாயாஸத்தை உண்ணலானார். என்ன ஒரு கான்ட்ராஸ்ட்! கோமளமான வாயைச் சுற்றிலும் பாயாஸம். வாயால் சாப்பிட்டதைக் காட்டிலும், முகத்தில் அதிகம் திட்டு, திட்டாகத் தெரிந்தது.

  துறவி ஜபம் முடிந்து, நெய்வேத்யம் முடிந்தது என்று நினைத்துக் கண்ணைத் திறந்தால், எதிரே என்னக் கண்டார்?
  நெய்வேத்யத்தை உண்ணும் கிருஷ்ணன். அதுவும் எப்படி? வாய் வரைக்கும் வந்துக் கொண்டிருந்த, பாயாஸம் நிரம்பிய வலது கை, பாதியிலேயே நின்றிருந்தது.

  துறவி பாலகிருஷ்ணனைக் கண்டார். பாயாஸம் முகத்தில் ஒட்டி இருந்ததோடில்லாமல், மேனியிலும், உடையிலும் சிந்தி இருந்தது. இந்தக் காணக் கிடைக்காத அழகிய கோலத்தை ரசிப்பதா, இல்லை, இன்னும் எடுத்துக் கொள் என்று சொல்வதா, என்கிற பிரக்ஞ்ஜை இல்லாமல் அவர் வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தார். இவ்வளவு அழகானக் காட்சியை தன் வாழ் நாளில் கண்டதே இல்லை.

  துறவி கண் திறந்து விட்டதைப் பார்த்ததும், கிருஷ்ணர் சட்டென்று, எழுந்து அங்கிருந்து நகர ஆரம்பித்து விட்டார். அப்புறம் தான் துறவிக்கு உறைக்க ஆரம்பித்தது.
  ‘விபரீதம் நடந்து விட்டது, யஸோதாராணி. யஸோதாம்மா, இங்கே வாருங்கள்’.

  இதைக் கேட்டதும், யஸோதாம்மா கைக்காரியத்தை விட்டு விட்டு ஓடி வந்தார்கள்.
  கிருஷ்ணன் தான் ஏதோ செய்திருக்கிறான் என்று நினைத்துக் கொண்டே கௌசாலாவை நோக்கி விரைந்தார்கள். அப்போது தான் கிருஷ்ணன் கௌசாலாவிலிருந்து வெளியே வந்துக் கொண்டிருந்தார். முகத்திலும், உடையிலும் நெய்வேத்யம்.

  யஸோதாம்மா ஆடிப் போய் விட்டார்கள். ‘நாராயணா, நாராயணா! நமது இல்லத்திற்கு அபூர்வமாக ஒரு துறவி வந்திருக்கிறார். இந்தக் குழந்தை இப்படி அநியாயம் செய்கிறதே! ‘மன்னித்துக் கொள்ளுங்கள், மன்னித்துக் கொள்ளுங்கள், சுவாமி. இந்தக் குழந்தை இருக்கிறானே, இளம்பிராயம், விஷமம் அதிகம்’.

  துறவி சொன்னார், ‘அம்மா, எனக்கு ஆத்திரம் கடுகத்தனையும் இல்லை. நீங்கள் இவ்வளவு ஆவேசப் பட வேண்டாம். அவனை ஒன்றும் சொல்லாதீர்கள். மனத்தாங்கலும் அடையாதீர்கள். கடவுள் விட்ட வழி. தினமும் பழங்களை மட்டுமே புசிக்கும் நான் ஆகாரம் எப்படி சாப்பிடலாயிற்று என்று அந்த பரமாத்மாவே எனக்கு உணர்த்த விரும்புகிறார் என்று தான் எடுத்துக் கொள்கிறேன். நீங்கள் சஞ்சலம் அடைய வேண்டாம். சாயங்காலமாகி விட்டது. நான் புறப்படுகிறேன். கொஞ்சம், கொஞ்சமாக இப்படியே நேரம் கழிந்தால், காட்டிற்குள் செல்லும் பாதை கண்ணுக்குப் புலப்படாது’.

  யஸோதாம்மா அழுது விடுவார்கள் போலிருந்தது.

  ‘சுவாமி, நீங்கள் இப்படிப் பசியோடு இங்கிருந்து சென்று விடுவீர்களானால், நாங்கள் பிறவிகள் தோறும் அடைந்த புண்ணியங்கள் எல்லாமே விரயமாகி விடும். உங்களைப் போக விட மாட்டேன். இப்படி விபரீதம் விளையும் படி செய்து விடாதீர்கள். போகாதீர்கள். இன்னும் ஒரு தடவை சிரமம் பார்க்காமல் பாரணை (விரதம் முடிந்து ஆகாரம் உட்கொள்ளும் செயல்) செய்யுங்கள். எல்லாம் சரியாகி விடும். இந்தத் தடவை கிருஷ்ணனை உங்களிடம் அண்டவிட மாட்டேன்’.

  யஸோதாம்மா திரும்பவும் பழையபடி குளித்து, வஸ்த்திரம் அணிந்து, துறவிக்கு எல்லாமே புதிதாக ஏற்பாடுகள் செய்துக் கொடுத்தார்கள். கிருஷ்ணனை கவனமாக மடியில்பிடித்து வைத்து உட்கார்ந்துக் கொண்டு விட்டார்கள். ‘எது வரைக்கும் துறவி உணவு அருந்தவில்லையோ, அது வரைக்கும் கிருஷ்ணனை விட மாட்டேன்’ என்று தீர்மானித்து விட்டுக் குழந்தையை அணைத்துக் கொண்டிருந்தார்கள்.

  துறவி திரும்பவும் நெய்வேத்யம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

  இங்கே கிருஷ்ணன் அம்மாவின் மடியில் உட்கார்ந்திருந்து, தூங்கி விட்டதாக பாவ்லா செய்தார்.
  யஸோதாம்மா அவர் தூங்கி விட்டதாகவே நினைத்தார்கள். ‘அப்பாடா, தூங்கி விட்டான். அது தான் க்ஷேமம். இந்தத் தடவை துறவி ஆகாரம் உண்டு விடுவார்’ என்று ஆசுவாசம் அடைந்தார்கள்.
  காற்று சில்லென்று வீசிக் கொண்டிருந்தது. சட்டென்று யசோதாம்மாவுக்கும் சற்றே கண் அயர்ந்து விட்டது. அம்மா தூங்கினது தான் தாமதம், கிருஷ்ணன் விருட்டென்று எழுந்து, திரும்பவும் கௌசாலாவை நெருங்கி விட்டார்.

  அங்கு அப்போது தான் துறவி மூடிய கண்களுடன் நெய்வேத்யம் அளித்துக் கொண்டிருந்தார்.
  கண்களைத் திறந்த போது, எதிரில் திரும்பவும் கிருஷ்ணன்.

  மடியிலிருந்து கிருஷ்ணன் எழுந்துக் கொண்ட போதே, யஸோதாம்மாவுக்கு முழிப்பு வந்து விட்டது.
  கிருஷ்ணனைப் பிடிக்க பின்னாலேயே ஓடி வந்தும், தாமதமாகி விட்டது.
  எது நடக்ககூடாதென்று, அத்தனைக் கவனமாக இருந்தார்களோ அது நடந்தேறி விட்டது.
  யஸோதாம்மா இடிந்து போய் விட்டார்கள்.
  ‘இப்போது துறவி விட மாட்டார். என் குழந்தைக்கு நிச்சயம் ஏதாவது ஆகி விடும். ஓ, நாராயணா, என் குழந்தையை எப்படியாவதுக் காப்பாற்றுங்கள். மறுபடியும் விபரீதம் நடந்து விட்டது’.

  யஸோதாம்மா கோபம் தலைக்கேற, கிருஷ்ணனை வெடுக்கென்று இழுத்தார்கள்.
  இழுத்ததுமே, அவர்களுக்கே அழுகை பீறிட்டுக் கொண்டு வந்து விட்டது.
  துறவியின் கால்களைப் பிடித்துக் கொண்டு, ‘மன்னித்து விடுங்கள், இவன் குழந்தை. பேதமையால் இப்படி செய்து விட்டான். இவனுடையப் பிழையை தயவு செய்துப் பொறுத்தருள வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டே, தேம்பி, தேம்பி அழ ஆரம்பித்து விட்டார்கள்.

  அம்மா அழுவதைப் பார்த்துக் கிருஷ்ணனும் பயந்து விட்டார்.

  துறவிக்கு யஸோதாம்மா அழுவது கண்ணில் படவில்லை. அவருக்குப் பசியுமில்லை. அவருடைய பார்வை கிருஷ்ணனின் மேல் இருந்தது. அம்மாவின் அழுகையைக் கண்டு, அதனால் உண்டான மிரட்சி கண்களில் தெரிந்தது. அதைக் கண்டு, ‘எங்கே இவன் அழுது விடுவானோ’ என்கிற கவலை அவரைப் பிடித்துக் கொண்டது.
  ‘பாருங்கள், பாருங்கள். நீங்கள் அழ வேண்டாம். நீங்கள் அழுவதைப் பார்த்து கிருஷ்ணன் கலங்குகிறான்; பயப்படுகிறான்’.

  ‘சுவாமி, இவனை நான் என்ன செய்வதேன்றேத் தெரியவில்லை. இவன் மஹா விஷமம். குறும்பு என்றால் அப்படியொரு குறும்பு’.

  ‘நீங்கள் கோபப் படாதீர்கள், ஆத்திரப் படாதீர்கள். நான் உணவு உண்ணக்கூடாது என்பது தான் கடவுள் சித்தம் என்று எண்ணுகிறேன். அதை நீங்கள் ஏன் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்?’

  யஸோதாம்மா இப்போது ஓவென்று அரற்றவே ஆரம்பித்து விட்டார்கள். அழுகைச் சத்தம் கேட்டு நந்தகோபரும் ஓடி வந்து, துறவியின் கால்களில் விழுந்து வணங்கினார்.
  ‘மன்னித்துக் கொள்ளுங்கள், சுவாமி., மன்னித்துக் கொள்ளுங்கள். எங்கள் குழந்தை மஹா விஷமம். எத்தனைத் தடவைச் சொன்னாலும் புரிவதில்லை’.

  யஸோதாம்மாவின் அழுகை நின்றபாடில்லை. யஸோதாம்மா அழுதுக் கொண்டேப் போனார்கள், கிருஷ்ணன் மிரள மிரளப் பார்த்துக் கொண்டிருந்தார். துறவி அவன் அழுது விடக் கூடாது என்பதில் குறியாக இருந்தார்.

  துறவி யஸோதாம்மாவை வினவினார், ‘ இப்போது நான் என்னதான் செய்ய வேண்டுமென்று சொல்கிறீர்கள்? அழாமல் சொல்லுங்கள். சொன்னால் தானே தெரியும்?’

  தன்னைச் சுதாரித்துக் கொண்டு யசோதாம்மா சொன்னார்கள், ‘நான் வேண்டுவது வேறொன்றுமில்லை. இன்னும் ஒரு தடவை ப்ரசாதத்தை தயாரிக்கிற சிரமத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். ஒரே ஒரு தடவை. இது தான் கடைசி. என் மீது கருணை காட்டுங்கள். இவ்வளவு தூரம் செய்து விட்டுப் பின்வாங்க வேண்டாம். இந்தத் தடவை குழந்தையைத் தூக்கிக் கொண்டு உபநந்தரின் மாளிகைக்குப் போய் விடுகிறேன். இங்கிருந்தால் தோதுபடாது. இந்த மாளிகையைச் சுற்றி நான்கு வாசல்கள் உள்ளன. ஒரு வாசலுக்கு ஒருத்தர் என்ன இரண்டு பேரைக் காவலுக்கு நியமிக்கிறேன். நந்தகோபரும் அவர்களோடுச் சேர்ந்து வாசலைக் காப்பார்’.

  ‘சரி. நீங்கள் எது உசிதமென்று நினைக்கிறீர்களோ அப்படியே ஆகட்டும்’.

  திரும்பவும் எல்லாமே ஆரம்பத்திலிருந்து தொடங்கின. யஸோதாம்மாவின் குளியல் முடிந்து, நெய்வேத்யம் தயாரிப்பதற்கான உபகரணங்கள், பதார்த்தங்கள் வந்தன. தளராமல் துறவி சமையலைத் துவக்கினார்.
  யஸோதாம்மா கிருஷ்ணனை உபநந்தரின் மாளிகைக்கு கொண்டு சென்று விட்டார்கள்.
  நந்தகோபர் மற்ற காவலாளிகளோடு காவல் காப்பதற்கு அமர்ந்து விட்டார்.

  யஸோதாம்மா முன்னெச்சரிக்கையாக, உள்ளிருந்து கதவை மூடி தாளிட்டுக் கொண்டார்கள்.
  கிருஷ்ணனை தூங்க வைக்க ஆரம்பித்தார்கள்.
  ‘தூங்கி விடு, இல்லையானால் -துறவிக்கு ஏதாவது சிரமம் கொடுத்தால்- தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டேன். கொஞ்சம் யோசித்துப் பார். உன்னுடைய இதயம் ஏன் இப்படி கொடூரமாகி விட்டது? உன்னால் அந்தத் துறவி காலையிலிருந்து மல்லாடிக் கொண்டிருக்கிறார். அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. அவருடைய பாரணை நஷ்டமாகிற மாதிரி ஒன்றும் செய்யாதே. கொஞ்சம் அவருக்குத் தயை காட்டு’.

  துறவி சமையலை ஆரம்பித்து, திரும்பவும் பால்பாயாஸம் செய்தார்.
  செய்து விட்டு, ஆற வைத்தார். ஆற வைத்து தங்கப் பாத்திரத்தில் வைத்தார்.
  பிறகு, பகவான் நாராயணரை வழிபட ஆரம்பித்தார்.
  ‘ஏ, கருணைக் கடலே, வாருங்கள், ஏன் தாமதிக்கிறீர்கள்? இந்த தாசன் உங்களுக்கு நெய்வேத்யம் வழங்க அமர்ந்திருக்கிறேன். அருள் கூர்ந்து வரவேண்டும், வந்து நெய்வேத்யத்தை சுவீகரிக்க வேண்டும்’.

  யஸோதாம்மா கிருஷ்ணனை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். கதவு மூடி இருந்தது. சட்டென்று அம்மாவின் கைகளை உதறி விட்டு தன்னை விடுவித்துக் கொண்டார். கதவை யார் திறப்பது? தானாகவே திறந்து விட்டது கதவு. கிருஷ்ணன் எடுத்தார் ஓட்டம். கிருஷ்ணன் முன்னால், பின்னாலேயே யஸோதாம்மா.
  ‘யாராவது பிடியுங்கள், யாராவது நிறுத்துங்கள். இல்லாவிட்டால், இவன் திரும்பவும் விபரீதம் செய்வான். துறவி பசியோடு இருந்து விடப் போகிறார்’.

  யஸோதாம்மாவின் அலறலைக் கேட்டு, நந்தகோபர் கிருஷ்ணனைப் பிடித்துக் கொண்டு விட்டார்.
  நந்தகோபர் கேட்டார், ‘நீ திரும்பவும் போகிறாயா?’

  நந்தகோபர் கிருஷ்ணனைப் பிடித்து விட்டதைப் பார்த்த பிறகு, யஸோதாம்மாவிற்கு உயிரே வந்தது. ‘அப்பாடா, இந்தத் தடவையாவது துறவி சாப்பிடுவார்’. அருகே வந்து கிருஷ்ணனின் காதைப் பிடித்து, ‘உன் அட்டகாசம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. படித்துப் படித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறேன், புரியவில்லை உனக்கு? ஏனிப்படி பிராணனை வாங்குகிறாய்? அந்தத் துறவியைப் பட்டினி போடுவதென்றே கங்கணம் கட்டி விட்டாயா? வீட்டுக்கு வந்த துறவி பட்டினி கிடந்தால், அந்த வீட்டில், எல்லாமே கெட்டுக் குட்டிச்சுவராகி விடும். நீ என்னடாவென்றால், துறவியை ஆகாரம் உண்ண விட மாட்டேன் என்கிறாய்’.

  கிருஷ்ணனுக்குக் கோபம் வந்து விட்டது.
  (இது என்ன அபாண்டமாக இருக்கிறது? நானா அவரைத் தொந்தரவு செய்கிறேன்? அவர் தான் என்னைத் திரும்பத் திரும்பக் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.)

  நந்தகோபர் கிருஷ்ணனைப் பிடித்து நிறுத்தி விட்டோம் என்ற பெருமிதத்தில் இருந்தார்.

  நாராயணக் கிருஷ்ணர் எங்கு தான் இல்லை?

  எல்லாவிடத்தில் இருக்கிறார்.

  அவருடைய ஒரு சொரூபத்தைத் தான் நந்தகோபர் பிடித்துக் கொண்டிருந்தார். ஆனால் கிருஷ்ணனோ அவரே இன்னொரு சொரூபத்தில் துறவியின் அருகில் சாவகாசமாக அமர்ந்து நெய்வேத்யத்தை உண்டுக் கொண்டிருந்தார்.
  துறவியோ கண்களை மூடிக் கொண்டு, ‘தங்கக் கிண்ணத்தில் படைத்திருக்கும் நெய்வேத்யத்தை அருந்துங்கள், நாராயணா’ என்று கைகொட்டி, மெய் மறந்துப் பாடிக் கொண்டிருந்தார்.

  துறவி கண் விழித்த பிறகு பார்த்தால், திரும்பவும் அதே கிருஷ்ணன் . ‘குழந்தாய் , நீ ஏன் திரும்பத் திரும்ப வந்து விடுகிறாய்? என்ன விஷயம்?’

  கிருஷ்ணன் சொன்னார், ‘எந்தத் தெய்வத்தை ஜென்ம, ஜென்மாந்திரங்களாக ஸ்துதி செய்து கொண்டிருந்தீர்களோ, அந்தத் தெய்வம் திரும்பத் திரும்ப பிரதக்ஷ்யமாக வந்து நெய்வேத்யத்தை ஸ்வீகரிப்பதை உங்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லையா?’

  கிருஷ்ணன் உடனே தன்னுடைய நாராயண சொரூபத்தை அவருக்கு தரிசனம் கொடுத்தார்.

  துறவி திக்குமுக்காடிப் போய் விட்டார். சாஷ்டாங்கமாக பகவானுடைய பாதங்களில் விழுந்து வணங்கினார்.
  கிருஷ்ணனின் பாதங்களில் இருந்த திருமண்ணைத் தன் தலையில் தடவிக் கொண்டார்.

  கிருஷ்ணன் சொன்னார், ‘நீங்கள் இத்தனைக் காலமாக என்னை வணங்குகிறீர்கள். இத்தனைக் காலமாக எனக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். இன்று உங்கள் மனோரதத்தை பூரணமாக நிறைவேற்றிவிட்டேன். அம்மாவிடம் இதைப் பற்றி மூச்சு விட வேண்டாம். அப்பாவிடமும் ஒன்றும் சொல்ல வேண்டாம்’.

  துறவிக்கு ஆனந்தம் கரை புரண்டோடியது. ப்ரசாதத்தை எடுத்தார். உண்டார். தன சிகையில் தடவிக் கொண்டார். தன் அங்கங்கள் முழுவதிலும் தடவிக் கொண்டார். தடவிக் கொண்டு கௌசாலா முழுவதையும் சுற்றி, செம்புக்கு நாமத்தைப் போட்டு விட்டு, ‘கோவிந்தா’ என்று நாம் உருளுவதைப் போல, உருண்டார்.

  கதவைத் திறந்து வெளியே வந்த போது, யஸோதாம்மா கேட்டார்கள், ‘பாரணை முடிந்து விட்டதா? ஆகார சாந்தி ஆகி விட்டதா? நான் கிருஷ்ணனை உள்ளே வர விடவே இல்லை. இதோ பாருங்கள் அவனைப் பிடித்து வைத்திருக்கிறேன்’.

  ‘அம்மா, ஒரு ஏகாதசி விரதம் மட்டும் முடியவில்லை. எத்தனையோ ஜென்மங்களாக இருந்த விரதம் முடிந்து பாரணை செய்த மாதிரி இருக்கிறது. எத்தனை, எத்தனை ஜென்மாந்திரங்களாக நான் ஏகாதசி விரதம் இருந்து வந்தேனோ, அதனால் தான் இன்று அப்படியோரு பாரணை முடிந்தது. யாருடைய வாழ்க்கையில் இந்த மாதிரி பாரணை முடிகிறதோ, அவருடைய ஏகாதசி விரதம் வெற்றியடைந்து விடும். நான் பிறவிக் கடலைத் தாண்டி விட்டேன். அம்மா, உன்னுடைய குழந்தை இருக்கிறானே விஷமம் செய்பவனேயானாலும் மிக நல்லவன். மிகவும் பிரியத்திற்க்குரிவன்’.

  முதலில் இப்படித் தான் சொல்ல வாயெடுத்தார், ‘உன் பிள்ளை சாதாரணமானவனில்லை. உன் பிள்ளை பிரம்மம்’.
  கிருஷ்ணன் புருவங்களை உயர்த்தியதும், ‘இல்லை, இல்லை, உன் பிள்ளை மிக நல்லவன். மிகவும் பிரியத்திற்க்குரிவன்’ என்று சொல்லிச் சமாளித்தார்.

  யஸோதாம்மா சொன்னார்கள், ‘துறவிக்கு என்னவாயிற்று? கொஞ்ச நேரத்திற்கு முன்னால் நன்றாகத் தானே இருந்தார்? ப்ரசாதத்தைத் தலையிலும், உடம்பிலும் பூசி மொழுகிக் கொண்டிருக்கிறாரே?’

  நந்தகோபர் சொன்னார், ‘உனக்குப் புரியாது. துறவிக்கு காலையிலிருந்தே பசி. சாயங்காலமாகி விட்டது. இப்போது கிடைத்தது என்று மேலிருந்து கீழ் வரைச் சாப்பிட்டு விட்டார்.
  தன் பக்தர்களின் மனோரதத்தை பூர்த்தி செய்ய நம் கோவிந்தன் என்ன வேண்டுமானாலும் செய்வார்.

  கோகுலத்தில் எல்லோருடைய மனோரதத்தைப் பூர்த்தி செய்த அந்த கிருஷ்ணன் நம்முடைய மனோரதத்தைப் பூர்த்தி செய்ய மாட்டாரா என்ன?

  அவருக்கு நம்மிடம் என்ன விரோதமா?

  அவர்கள் எவ்வளவு பிரியமாக நெய்வேத்யம் செய்தார்களோ, அதே பிரியத்துடன் நாமும் செய்வோமே.

  *****

  இந்தப் பதிப்பு சில வலைத்தளங்களில் விஷ்ணு முராரி என்கிற புனைப் பெயரில் வந்திருக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.