குழந்தை வளர்ப்பு

baby 1

குழந்தை வளர்ப்பு என்பது சாதாரணமான விசயம் இல்லை. கவனமாகவும், சரியான முறையிலும் குழந்தைகளை வளர்ப்பதென்பது உண்மையில் ஒரு கலை. தவறான முறையில் வளர்க்கப்பெறும் குழந்தைகள் பிற்காலத்தில் பலவிதமான பாதிப்புக்களை அடைவதுடன், மாறுபட்ட நடத்தை கொண்டவர்களாகவும், சமூக விரோதிகளாகவும் மாறி விடுகின்றனர் என்பது உளவியல் வல்லுனர்கள்  தெரிவிக்கும் செய்தி. எனவே மிகுந்த கவனத்தோடும், பொறுப்புக்களோடும் குழந்தைகளை வளர்ப்பது அவசியம் அவற்றிற்கான சில வழிமுறைகள்..

1.            குழந்தைகளை எக்காரணம் கொண்டும் அடிக்காதீர்கள். அடித்துக் குழந்தையை வளர்ப்பதென்பது வன்முறைக்கு வித்திடுவதாகும். அவ்வாறு அடித்து வளர்க்கப்பெறும் குழந்தைகள் எதிர் காலத்தில் மிகவும் கோழைகளாகவோ அல்லது யாருக்கும் அடங்காத பிடிவாத குணம் கொண்ட முரடர்களாகவோ மாறி விடுகின்றனர். எனவே குழந்தைகளைக் கண்டியுங்கள். ஆனால் தண்டிக்காதீர்கள்.

2.            உங்களுடைய சொந்தப்பிரச்னைகளையோ கோப தாபங்களையோ குழந்தைகளிடம் காட்டாதீர்கள். அவ்வாறு விரோதத்துடன் வளரும் குழந்தைகள் பிற்காலத்தில் வலியச் சென்று வம்புக்கு இழுப்பவர்களாகவோ, அனைவருடனும் விரோத மனப்பான்மையைப் பாராட்டுபவர்களாகவோ இருப்பர்.

3.            குழந்தைகள் தவறு ஏதெனும் செய்யாத பொழுது அவர்களை தண்டிப்பதோ கண்டிப்பதோ கூடாது. அவ்வாறு தவறு செய்யாத போழ்தே தண்டிக்கப்படும் குழந்தைகள், தவற்றைச்  செய்தால் தான் என்ன என்ற அலட்சிய மனப்பான்மைக்கும் விரக்தி மனப்பான்மைக்கு ஆளாகி தவறு செய்ய ஆரம்பித்து விடுவர். அத்தகைய குழந்தைகள் குற்ற உணர்வோடு, தாழ்வு மனப்பான்மையோடு வளர்வதுடன், மற்றவர்கள் மீது தேவையில்லாமல் பழி சுமத்துபவர்களாக, தாங்கள் தப்பிக்க அடுத்தவரை மாட்டி விடுபவர்களாக என மாறுபட்ட குணத்துடன் இருப்பர்.

baby 2

4.            குழந்தைகளிடம் எதிர்மறை எண்ணங்களை உருவாக்காதீர்கள். “ இதனை உடைத்து விடுவாய்”, “இதனை உன்னால் செய்ய முடியாது”, “நீ வேஸ்ட்”, “ஔன்றுக்கும் உதவாதவன்”, போன்ற வார்ததைகள் குழந்தைகளின் தன்னுணர்வைப் பாதிப்பதுடன், தோல்வி மனப்பான்மையும், குற்ற உணர்ச்சியும் கொண்டவர்களாக மாற்றிவிடும். மாறாக அவர்களை ஊக்கப்படுத்துங்கள். நம்பிக்கையூட்டுங்கள். அவ்வாறு ஊக்கப்படுத்தி வளர்க்கப் பெறும் குழந்தை தன்னம்பிக்கையைக் கற்றுக் கொள்வதுடன், சாதனைக் குழந்தைகளாகவும் மாறி விடுகின்றனர்.

5.            குழந்தைகளிடம் எடுத்துச் சொல்லுங்கள். அவர்கள் புரிந்து கொள்வார்கள். அவர்களின் பலம் என்ன பலவீனம் என்ன, அவர்களால் எது செய்ய முடியும், எது செய்ய முடியாது, முடியாது என்றால் ஏன்? போன்றவற்றை விளக்கிக் கூறுங்கள். அவர்கள் கற்றுக் கொள்வதுடன், எதிர் காலத்தில் எங்கு, யாரிடம் ,எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற நடத்தை முறையையும்  உணரத் தலைப்படுவார்கள்

6.            குழந்தைகளுக்கு ஒழுக்க விதிகளைக் கற்றுக் கொடுங்கள். உண்ணும் முன் கை, கால்களைக் கழுவுவது, நகம் கடிக்காமல் இருப்பது, பணிவோடு நடந்து கொள்வது, ஷூவையோ செருப்பையோ கழற்றினால் அங்கொன்றும் இங்கொன்றுமாக வீசி எறியாமல் அழகாக அடுத்தடுது வைப்பது என எல்லாமே ஒரு வகை ஒழுக்கம் தான். இவ்வாறு வளர்க்கப்பெறும் குழந்தைகள் எதிர்காலத்தில் நேர்மையோடு வாழவும்,  பிரச்னைகள் வந்தாலும், அவற்றை எதிர் நோக்கிப் போராடவும், வெற்றிபெறவும் செய்கின்றன.

7.            குடும்ப உறுப்பினரகள் குழந்தையின் முன் சண்டை போட்டுக் கொள்ளுதல் கூடாது. தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்கள், ஆபாசப் பேச்சுக்கள் கூடவே கூடாது. சான்றாக.. “நான் எங்காவது ஓடிப்போறேன்”, “ நான் இருக்கறதுக்கு சாகலாம்”, “நான் வாழறதே வேஸ்ட்” போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் குழந்தையின் மனதில் ஆழப்பதிந்துவிடும்.. நாம் சில சமயத்தில் கண்டிக்கும் பொழுது கூட குழந்தைகள் இந்த வார்த்தைகளைக் கூறலாம். நாமும் விளையாட்டாய் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இவை பிற்காலத்தில் எந்தச் சூழ்நிலையில், எப்படி வெளிப்பெறும், நடத்தை முறையில் என்ன என்ன  மாற்றங்களை ஏற்படுத்தும்  என்று கூற இயலாது. எனவே வார்த்தைப் பிரயோகங்களில் மிகுந்த கவனம் தேவை.

8.            குழந்தைகளுக்கு உலக நடப்புக்களை நம்மைச் சுற்றி நிகழ்பனவற்றை சொல்லிக் கொடுங்கள். வங்கி, தபால் அலுவலகம், ஏ.டி.ம். செல்லும் பொழுது உடன் அழைத்துச் செல்லுங்கள். அங்கு நிகழ்வனவற்றைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளட்டும். அவர்கள்  பொது அறிவு வளர்வதுடன், சிந்தனைத் திறனும் வளர்ச்சியுறும்.

baby 3

9.            வீட்டைப்பற்றி., வீட்டின் முகவரி, வரும் வழி, தொலைபேசி, கைப்பேசி எண், வீட்டிற்கு அருகில் வசிக்கும் முக்கியமான, பிரபல மனிதர்கள் அருகாமையில் உள்ள முக்கிய இடம் போன்றவற்றை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.  அவ்வாறு சொல்லிக் கொடுத்தை அடிக்கடி நினைவு கூரச் செய்யுங்கள். ஏனெனில்  குழந்தை காணாமல் போதல் போன்ற விபரீதப் பிரச்னை ஏற்படும் பொழுது இவை உதவும்.

10.          குழந்தைகளுக்கு வெறும் பாடம் மட்டும் இல்லாமல் நுண்கலைகள், விளையாட்டு போன்றவற்றில் ஆர்வத்தை உண்டாக்கி ஈடுபடச் செய்யுங்கள். சான்றாக கராத்தே, செஸ், ஓவியம், நாட்டியம், இசை போன்றவற்றைக் கற்றுக் கொடுங்கள். இவை மனதிற்குப் புத்துணர்ச்சி தருவதுடன் வாழ்க்கையில் ஏதெனும் பிரச்னை போன்றவை ஏற்படின் நல்ல மாற்றாக (Diversion) திகழும்.

11.          நிறையப் புத்தகங்களை வாங்கிப் படிக்கப் பழக்குங்கள். படிக்கக் கற்றுக் கொள்ளும் குழந்தை சிந்திக்கக் கற்றுக் கொள்கிறான். சிந்திக்கக் கற்றுக் கொள்பவன் சிறப்பாகச் செயாலாற்றக் கற்றுக் கொள்கிறான். சிறப்பாகச் செயலாற்றுபவன் வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றான்.

12.          குழந்தைதானே என நினைத்து அவர்கள் முன் பாலுணர்வுச் செயல்கள், காம விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடாதீர்கள். அது விபரீத விளைவை ஏற்படுத்துவதுடன், உங்கள் செயல்களையே பார்த்து குழந்தைகள் சிலசமயம் திருப்பிச் செய்யமுற்படுவதால் உங்களுக்கு உங்கள் உறவினர், நண்பர்கள் முன் அவமானத்தையும் தேடித் தரலாம். ஜாக்கிரதை.

13.          வளர்ந்த உங்கள் குழந்தைகளுக்கு குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு, பாலியல் உறுப்புக்கள் பற்றியும் அதன் தேவைகளைப் பற்றியும் ஓரளவிற்காவது எடுத்துச் சொல்லிப் புரிய வையுங்கள். இது பிற்காலத்தில் ஏற்படும் பருவ மாறுதல்களுக்கு தங்களைத் தயார் படுத்திக் கொள்ள உதவுவதுடன், குழந்தைகள் மீது செய்யப்படும் பாலியல் ரீதியான பலாத்காரங்களைத் தவிர்க்கவும் உதவும்.

baby 5

14.          கீழ்க்கண்டவற்றை மறக்காதீர்கள்

விமர்சனங்களோடு வளரும் குழந்தை, தண்டிக்கக் கற்றுக் கொள்ளும்

விரோதத்துடன் வாழும் குழந்தை சண்டையிடக் கற்றுக் கொள்ளும்

கேலிச் சூழலில் வாழும் குழந்தை வெட்கத்தைக் கற்றுக் கொள்ளும்

அவமானத்தில் வாழும் குழந்தை குற்ற உணர்வைக் கற்றுக் கொள்ளும்

சகிப்புத்தன்மையுடன் வாழும் குழந்தை பொறுமையைக் கற்றுக்கொள்ளும்

ஊக்குவிததலுடன் வாழும் குழந்தை தன்னம்பிக்கையைக் கற்றுக்கொள்ளும்

புகழ்ச்சியுடன் வாழும் குழந்தை பாராட்டுதலைக் கற்றுக்கொள்ளும்

நேர்மையுடன் வாழும் குழந்தை நீதியைக் கற்றுக்கொள்ளும்

பாதுகாப்புச் சூழலில் வாழும் குழந்தை  நம்பிக்கை கொள்வதைக்  கற்றுக்கொள்ளும்

மகிழ்ச்சியோடு வாழும் குழந்தை சாதிக்கக்கற்றுக் கொள்ளும்.

baby 6

15.          கீழ்கண்டதைப் பற்றிச் சிந்தியுங்கள். செயல்படுங்கள்.

“குற்றவாளிகள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகின்றார்கள்.” – உளவியல் அறிஞர்கள்.

“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே! அவன் நல்லவனாவதும் தீயவானாவதும் அன்னை வளர்ப்பினிலே! அன்னை வளர்ப்பினிலே!”

******************************

Advertisements

3 thoughts on “குழந்தை வளர்ப்பு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.